சிநேகிதி

திருமதி.அன்புமொழி அவர்களின் நூல்நயம் ‘வாசித்ததில் ரசித்தது’

வாசித்தது : சிநேகிதி
வகை: நாவல்
ஆசிரியர்: அகிலன்
பதிப்பகம்: தாகம்
விலை      : ரூபாய் 110
பக்கங்கள் : 176

மேனிலைப் பள்ளி இறுதித் தேர்வில் “பிடித்த எழுத்தாளர்” தலைப்பில் கட்டுரை வரைக என்றகேள்விக்கு ராணிமுத்து வரிசையில் வாசித்த அகிலனின் நாவல்களால்   அவரின் ரசிகையான நான் சந்தோஷத்துடன் அகிலனைப் பற்றியும் அவரின்  ‘துணைவி ‘ நாவலைப்பற்றியும் எழுதினேன்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னுடைய பார்வையில் சொல்வதுபோல் கதையை அமைத்திருப்பார். சீதா, சந்திரன் நாயகன் நாயகி இவர்களுக்கு இடையே சந்திரனின் தவறான புரிதலால் வரும் மற்றொரு பெண். அந்தகாலத்து கதையாக துணைவி என்பவள் யார்? என புரியவைத்திருப்பார்.

இனி சிநேகிதி:-
நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் வாசித்த ‘சிநேகிதி’. யார் யாருக்கு சிநேகிதி ?   செந்தாமரை பத்திரிக்கை ஆசிரியரின் மகள் காந்தா.  கதாசிரியன் துரைராஜை தன்னுடைய கல்லூரி விழாவில் பேசுவதற்கு அழைக்கிறாள்.  பலவிதமாகவும் துரைராஜை விரும்புவதை  அவள் கோடிட்டுக்காட்ட ஆனால் அவன் தன்னை அண்ணன் என்று அழைக்கும்படிச் சொல்லி  தன் மனநிலையை எடுத்துக்காட்டி விடுகிறான்.

கல்லூரி விழாவுக்கு தலைமை ஏற்க வரும் அறுபது வயது நாராயணசாமியும் இளைஞன் துரைராஜூவும் நண்பர்களாகிட  என்மனைவிஒரு புத்தக விரும்பி வீட்டிற்கு வாருங்களேன் எனநாராயணசாமிஅழைக்க, அங்கு அவரின் மனைவியாக இருபதுவயது லலிதா அறிமுகமாக, அவன் அதிர்ச்சியுற , அவளோ இயல்பு போல தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை தொடர்கிறாள்.

துரைராஜின் அறையில் கல்லூரி நண்பன் சாமிநாதன் வந்து தங்குகிறான். லலிதாவின் அத்தைமகன் சேதுராமன் கதாசாரியன்  என்ற பெயரில் ஆபாச கிறுக்கல்களை , பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதை கொச்சைப்படுத்தி எழுதுவதை தொழிலாகக் கொண்டவன்.

துரை தன் கதையை(?) நிராகரித்தால் அவன்மீது கோபமாகிறான். ஒருநாள் நாராயணசாமி துரையை வீட்டிற்கு அழைத்துவர,அதேநாளில் சேதுராமன் லலிதாவிடம் வாலாட்ட, அவள் அவனை  அடித்து அவமானப்படுத்த, இடையில் தன்பெயர் அடிபடுவதை கவனித்த துரை சொல்லாமல் கொள்ளாமல் வந்தவழியே திரும்புகிறான். அன்றுமுதல் அவர்கள் வீட்டிற்கு செல்வதைத் தவிர்க்கிறான். முதியவர் தன்இளவயது நண்பனை வீட்டில் தேடி அல்லாட கால் இடறி  அடிபட்டுக் கொள்கிறார்.

நாராயணசாமி வீட்டிலிருந்து வரும் அழைப்புகளை தவிர்க்கிறான். இறுதியில் லலிதாவே நேரில் வந்து விபரம் சொல்ல அதனால் மீண்டும் அங்கு செல்கிறான். சேதுராமன்  துரையையும்  லலிதாவையும் வைத்துக் கதை  ஒன்றை எழுத, அதை நாராயணசாமி படித்திருப்பாரோ என்று மனக்கிலேசம் அடைகிறான். சேதுராமன் எழுதிய கதையால் முதலாளிக்கும் துரைக்கும் பிரச்சனையாக அவன் வேலையை விடுகிறான்.

தான் பம்பாய்க்கு சென்று நண்பனுடன் தங்கவிருப்பதாக லலிதா குடும்பத்திடம் சொல்ல,  நாராயணசாமி தம்பதிகள் பர்மாவில் உள்ள   தம்பியுடன் அங்கேயே வாழப்போவதாகவும் அதற்கு முன் சென்னையில் ஒருமாதம் தங்கி கடற்கரை காற்றை சுவாசித்துவிட்டு செல்ல இருப்பதாகவும்   கூறுகிறார்கள். லலிதா துரையை சென்னைக்கு ஒருமுறை வந்துபோகச் சொல்கிறாள்.அவனோ வரமுடியாதென மறுக்க அவளோ கடலைத் தாண்டிதானே பர்மா செல்ல வேண்டும் ? என்கிறாள். ஆனால் அவர்கள்குடும்பத்தில் தன்னால் பிரச்சனை வேண்டாமென  தவிர்த்து பம்பாய்க்கு ரயிலேறுகிறான். ஆனால் அகிலன் அவர்கள் விடுவதாக இல்லை. துரைராஜ் சென்னை வருவதான நிகழ்வும் அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதை  முடிகிறது.

துரைராஜின் பக்கத்துவீட்டு  மூன்றுவயது மூத்த கஸ்தூரி இளவயது சிநேகிதியாக ஒரு பாத்திரத்தை அகிலன் படைத்திருக்கிறார். லலிதா காந்தாவின் கல்லூரி சிநேகிதி.காந்தா  முதலில் சாமிநாதனின் சிநேகிதியாகி பின்பு மனைவியாகிறாள். நாராயணசாமியின் மனைவி என்ற உரிமை லலிதாவுக்கு ஆனால் அவரின் சிநேகிதியாக வாழ்கிறாள்  துரைராஜுக்கு வாசகி, சிநேகிதி ,பின் மனைவி ?எப்படி ?கதையைப் படித்துதெரிந்து கொள்ளுங்கள்.

அப்பா எத்தனை விதமான சிநேகிதிகள் !!
மலரினும் மெல்லியது என்றும் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்றும் சொல்வதான உணர்வை, எந்தவிதமான  முகம்சுளிக்கும் வார்த்தைகள், வர்ணனைகள் இல்லாமல், கதையை நேர்த்தியாக அவரின் இயல்பில்,  மூடிவைத்த சிப்பிக்குள் முத்தாக, தாமரையிலைத் தண்ணீராக துரைராஜ்  லலிதா இருவரும் ஒருவர் மனதில் ஒருவராக வார்த்தைகளில் வெளியிடாது எண்ணங்களால் மனதிற்குள் வாழ்கிறார்கள்.

பிறன்மமை நாடா தன்மை (துரை) , நாராயணசாமியின் மனைவி என்ற முன்னிலை லலிதா.  படர்க்கையில் உள்ள நாராயணசாமி இருவருக்கும் சிநேகிதராகி உயர்ந்து விடுகிறார்.

ரசித்தது:- சாமிநாதன் தான் செய்யும் தவறுக்கு சப்பை கட்டாக பெண்களுக்கு காசு கொடுத்து  உதவினேன் என்று கூறுவது. லலிதா பல இடங்களில் கதைகள் எல்லாம் உங்களது கதைதானே! என்று கேட்க  அதற்கு அவன் மறுமொழியாக, “வாசகர்கள் சிலர் தவறாக கற்பனை செய்து கொள்கிறார்கள். எழுத்தாளனை விட இந்த விஷயத்தில் அவர்களுக்குத்தான் அதிக கற்பனை உதயமாகிறது” என்கிறான். முகத்தில் புன்னகைவர  உண்மைதானே  என்றே தோன்றுகிறது. அகிலாக, அகிலமாக , அகிலன் புகழ் என்றென்றும் அவரின் படைப்புகளால் வாழ்ந்திருக்கும்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑