புத்தகத்தின் பெயர்:- கண்ணதாசன் கவிதைகள்.(ஆறாவது தொகுதி)
ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
பதிப்பகம்:- வானதி பதிப்பகம்.
கவிஞர் அவர்கள் “கண்ணதாசன் கவிதைகள்” என்ற கவிதைத் தொகுதியின் முன்னுரையில் அவரே எழுதியிருப்பதை அப்படியே தருவது இந்தபுத்தகத்தைப்பற்றி தெரிந்து கொள்ளவும், படிக்கவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். இனிஅவரின் வரிகள்உங்கள் பார்வைக்கு,
“நினைப்பதை எல்லாம் எழுதுவது என்று முடிவு கட்டி விட்டால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல விஷயங்கள் வெளிவரும். அவை அனைத்தையும் இத்தொகுதியில் காண்கிறீர்கள். முன்னுரை என்ற பெயரில் இதற்குமேல் சொல்ல வேறு என்ன இருக்கின்றது?”. என்று எழுதியிருப்பது இதுதான் நம் கவிஞர் என்று சொல்ல வைக்கிறது. அலங்கார வார்த்தைகளைப் போடாமல், நான் இப்படித்தான் என்று தன் பலம், பலவீனத்தை போட்டுடைத்து நாம் அவரை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அவரின் தனிச்சிறப்பு!
ரசித்தது :- “நினைக்கத்தெரிந்த மனமே” என்ற தலைப்பில் “கனவுகளே!கனவுகளே! கலைந்துவிட மாட்டீரோ? நினைவுகளே!நினைவுகளே நின்று விடமாட்டீரோ” ? என்று இரவு பகல் என்னை நீர் வதைப்பதனால் உறவுகளை விட்டே ஓடத்துணிகிறேன் என்கிறார்.
“பொன்னம்மா என் மனைவி ” என்பதில் தாழையாம் பூ முடித்து தடம்பார்த்து நடைநடந்து வாழை இலை போல எந்தன் வாசலுக்கு வந்த தங்க மயில் மானமே ஆடைகளாய் மரியாதை அணிமணியாய் நாணமாம் காலெடுத்து நடந்து வந்த வண் மலர்! என்று மனைவியை ஆராதிக்கிறார். இதில் உள்ள ஒவ்வொரு வரிகளைப் படிக்கும்போதும் தன் மனைவியை மனதில் கொண்டு நிறைய திரைப்பாடல்கள் எழுதியிருக்கிறாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
தான் குடிப்பதற்கும், தன் உடம்பில் குத்திக்கொள்ளும் ஊசிகளுக்கும் தன் மனைவி காரணமல்ல என்று மனைவிக்கு மகுடம் சூட்டிவிடுகிறார். அத்தை மகளல்ல அந்நியந்தான் செவிகள் பழுதானாலும் சேவைச் சிறப்பால் கவிதைகள் பழுதாகமல் காத்து நின்ற ராசாத்தி என்று தன் மனைவியின் குணநலன்களை பாராட்டி மகிழ்கிறார் .
“கால மகள் கோலம்” என்ற தலைப்பில் உள்ள கவிஞரின் அத்தனை வரிகளுமே மிகவும் ரசிக்கத்தக்கவையே!
இருப்பினும் மிகவும் ரசித்ததை பகிர்கிறேன்.
எவனோ ஒருவன் உனை ஏமாற்றிப்
புகழ்வதுண்டு
மகனே உன் தலைஎழுத்தாய் மாற்றம்
பெறுவதுண்டு!
கவிஞரின் இந்த வரிகளை வீட்டினுள் அனைவரின் கண்களிலும் படும்படியாக எழுதி வைக்கலாம்.
புகழ்வது யார்? எதற்காக புகழ்கிறார்கள் என்று அன்னப் பறவையாய் மாறி யோசிப்பவர்கள் தன் குறிக்கோள் எது? அதற்கான முயற்சிகள் என்ன? அடைவதற்கான வழிகள் எவை? என்று புகழ்ச்சியையும் உயர்வதற்கான படிகளாக மனதில் கொண்டு பாலை மட்டும் அருந்தும் அன்னமாக வெற்றி பெற்று விடுகிறார்கள். மாறாக மது மாதுவில் மயங்காதவர்களும் கூட புகழ்போதையில் மயங்கி புதைசேற்றில் மறைந்து போகின்றனர்.
பழிகாரன் கூடஉந்தன் பாதம்
பணிவதுண்டு
பலகாலம் தின்றவனே பகையாகிப்
போவதுண்டு!
இந்த வரிகளுக்கான அனுபவம் அனேகம் பேர் வாழ்கையில் ஏற்பட்டிருக்கும்.
எதிரி கூட தன் நேர்மை திறத்தால் வெற்றி பெறுபவனைப் பார்த்து தலை வணங்குவான். துரோகி கூடவே இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்து சரியான நேரத்தில் காலை வாரிவிட்டு் உள்ளுக்குள் சந்தோஷிப்பான்.
வளமான ஊருணிநீர் வற்றாமலே
இருந்தால்
புதிதான நீர் உனக்குப் பூமியிலே
கிடைக்காது
இந்த வரிகள் நேரடியாக நீரை சுட்டினாலும் எனக்கு தோன்றிய வரையில் எந்த ஒரு பொருளுமே இல்லை எனும் போதுதான் மாற்றை தேடுகிறோம். புதிய பாதை திறக்கிறது!! என்ற கருத்தை சொல்வதாகவே உணர்கிறேன்.
கடல்நீரே குடிநீராயக் கடவுள்
படைத்திருந்தால்
அடிநீரைத் தேடிஎந்த அரசாங்கம்
செலவுசெய்யும்?
நூற்றுக்கு நூறு உண்மை!
சந்திக்கும் விழிகளெலாம் சந்தோஷ
விழிகளெனில்
சிந்திக்க தேவையில்லை; தினமும்
திருநாள்தான்!
குரோதம் ,பொறாமை, கள்ளத்தனம் என பலர் தன்விழிகளில் வெளிப்படையாகவே காட்டிவிடுகின்றனர். எல்லார் விழிகளும் அன்பு பாசம் கருணை என்றிருந்தால் வாழ்வில் என்றும் சந்தோஷமே நிறைந்திருக்கும். அப்படி இல்லா விழிகள் ஊமை விழிகளாகவே இருக்கலாம். முடியுமா?
சட்டியிலே வேகின்ற சரக்கெல்லாம்
சத்தானால்
மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு
வேலை என்ன?
இந்த கால கட்டத்திற்குமட்டுமல்ல எந்த காலத்திற்கும் இந்த வரிகள்பொருத்தம் “சரிவிகித உணவு”என்பது அளவு மட்டுமல்ல எப்படி பக்குவபடுத்த வேண்டும் என்பதுதில்தான் விஷயமே இருக்கிறது. ஆஸ்பத்திரியில் இருக்கும் டாக்டரைவிட அடுப்படியில் இருக்கும் சமையற்காரர் முக்கியம் என்கிறது ஒரு பழமொழி. மேற்கண்ட வரிகளுக்கு இதுதான் பொருத்தம் என்று தோன்றுகிறது.
நினைத்தவுடன் அத்தனையும் நேரில்
கிடைக்குமெனில்
முயற்சிஎனும் ஒன்றைநீ முழுதும்
மறந்திருப்பாய்!
அதனாலே தான் காலம் அடிமுடியை
மாற்றி வைக்கும்.
அதனாலே சோர்வடைந்தால் அடுத்த கடை
திறக்காது!
அதி அற்புதமான நான் மிக ரசித்த வரிகள் என்றே சொல்லலாம்.
கால நேரம் சரியில்லை; நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்து நல்ல பல வாய்ப்புகளை தவறவிட்டு சோர்ந்து நொந்து போனவர்களுக்கு இந்த வரி சரியான சம்மட்டி அடி!
ஞாலத்தில் நீ ஒருவன் நடத்து உந்தன்
நாடகத்தை
காலத்தின் சிந்தனையில் கனவெனவோ
நனவெனவோ?
இந்த கவிதையின் கடைசி வரிகள் அழகோ அழகு!
எத்தனையோ கோடிப் பேர்களில் நாமும் ஒன்று என நினைத்து அடுத்தடுத்து நாம்செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டிருந்தாலே மெய் வருத்தக் கூலியாய் நிச்சயமாய் ஒருநாள் பலன் கிட்டும் என்கிறது என்றும் எதிலும் பொய்க்காத பொய்யாமொழி !!! அன்புமொழியும் அப்படித்தான் நினைக்கிறேன்.!
கவிஞருக்கே உரித்தான பலப்பல ரசனை வரிகள் அவரது முன்னுரையில் குறிப்பிட்டது போல் பல தலைப்புகளில் உள்ளன.
கல்கண்டு என்றால் இனிப்பு! காற்று என்றால் தென்றல்!
கவிஞர் என்றால் கவியரசர்தான்!!!
கண்ணதாசன் திரைப்பாடல்களின் அழகை “நதியில் விளையாடி கொடியில் தலை சீவி”, “இயற்கை எனும் இளைய கன்னி”, “ஒரு ராஜா ராணியிடம்” எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் கவிஞர் என பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் வியந்து பகிர்ந்து என்னை கவிஞரின் எழுத்துக்களையம் படிக்க வைத்த குரு என் தந்தை.
இளையவளான இயற்கையுடன் சேர்ந்து நடந்த இளந்தென்றலும் ராஜாக்கள் ராணி பற்றி பாடிய கவியரசரின் புகழை உலகம் உள்ளளவும் சொல்லிக் கொண்டிருக்கும்.
இந்த வரிகள் நேரடியாக நீரை சுட்டினாலும் எனக்கு தோன்றிய வரையில் எந்த ஒரு பொருளுமே இல்லை எனும் போதுதான் மாற்றை தேடுகிறோம். புதிய பாதை திறக்கிறது!!
என்ற இடத்தில் ஊகித்து உணர்ந்துகொள்ளத்தூண்டுவதும்,
எதிலும் பொய்க்காத பொய்யாமொழி !!! அன்புமொழியும் அப்படித்தான் நினைக்கிறேன்.! என்ற வரிகளில் மொழிநடை இயல்பாகவும் அழகாகவும் வெளிப்பட்டிருப்பதும் நன்று. முயற்சிகள் தொடரட்டும். சிந்தனையும் இழையோடட்டும். வாழ்த்துகள்
LikeLike
நன்றிகள்
LikeLike
இப்புத்தகத்தின் அனிந்துரை அருமையாக இருக்கிறது…. இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று….. நினைக்கும் முன் ….. இந்த அனிந்துரையைப் படித்ததனால்…. புத்தகத்தையே வாசித்து முடித்தது போல உணர்கிறேன்…..
LikeLike