வாடி வாசல்(Vaadi vaasal)

ஆசிரியர்:-சி.சு.செல்லப்பா
பதிப்பகம்:-காலச்சுவடு
வகை:-நாவல்

சி.சு. செல்லப்பா 1959-ல் வெளியிட்டு தனது எழுத்து இதழ் சந்தாதார்களுக்கு எல்லாம் இலவசமாகக் கொடுத்துள்ளார். என்னிடத்தில் இருப்பது காலச்சுவடு பதிப்பகத்தின்  27வது பதிப்பு. இதுதான் உண்மையிலே விருதுகள், பரிசுகளைவிட ,படைப்பாளி சி .சு.செல்லப்பாவிற்கும் அவரின் படைப்புக்கும் கிடைத்த வெற்றி.

காளைகள், தன்னை வளர்ப்பவரின் குழந்தைகள், (நடை கூட சரியாக  வந்திருக்காது)கயிற்றை பிடித்து நடக்க, அவர்களையும் விடக் குழந்தையாக அவர்களின் நடைக்கு ஏற்ப நடந்து செல்லும் இதுபோன்ற காணொளியை முகநூலில் ரசித்திருப்போம். ஆனால் அதே காளை, களம் வேறாக, ஆட்கள் மாறாக, தன் பலத்தை, பாய்ச்சலை உணர்ந்து, மற்றொரு காளையான மாடுபிடி வீரனிடம்  அகப்படாமல் நின்று ஆட்டம் போடுவதை தொலைக்காட்சியில்  ரசித்திருப்போம்.

சல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆசை கொண்டு, பார்க்க சென்று, கூட்டத்தில் நின்றிட, அங்கே எதேச்சையாக  காதில் விழுந்த, ஜமீன்தார் காளையைப் பற்றியும் , ஒவ்வொரு வருடமும் அந்த காளை பிடிபடாமல் இருப்பது, பிடிக்க முயற்சிப்பவர்கள் கதி பற்றியும் கேள்விப்பட்டு  நானும் கூடுதல் எதிர்பார்ப்பில் ‘வாடி வாசல் ‘  கதவு(புத்தகம்) திறக்க , மாமன் , மச்சானான, பிச்சியும், மருதனும், மாடுபிடி வீரர்களாக , செல்லாயி சல்லிக்கட்டுக்கு வருகிறார்கள்.  பலகாலமாக சல்லிக்கட்டு பார்க்க வரும் பழமான கிழவனார், மருதன், பிச்சியிடம் பேச்சுக்கொடுக்க , கதை க(கா)ளை  யுடன் ஆரம்பமாகிறது.

பிச்சியின் அப்பா அம்புலி பிரபலமான மாடுபிடி வீரன். ஒருமுறை சல்லிக் கட்டில்  தேவரின் காளையான காரியை பிடிக்க முயல அது முட்டித் தள்ளியதில் உடல் நிலை பாதித்து  மூச்சற்றுப்போகிறான்.  ஜெயித்த காளையை ஜமீன்தார் ஒருவர் வாங்கிவிடுகிறார்.

அசகாய சூரனான அம்புலி தான் சாவதற்கு முன்பு வயசுக்காலத்தில் அந்தக் காரியைப் பார்த்திருந்தால் அதனை அடக்கியிருப்பேன். இப்போது  ,’மொக்கையத்தேவர் காரி கிட்ட அம்புலித்தேவன் உலுப்பி  விளுந்தான்கிற பேச்சுல்ல சாகறப்போ நிலைச்சுப் போச்சு ‘  என்ற ஆதங்கத்துடனே  இறக்கிறான் .

மகன் தந்தைக்காற்றும் உதவியைச் செய்ய வந்திருக்கும் பிச்சி. தன்னை எதிர்ப்பவனை விடாக்கூடாது என பழக்கப்படுத்தபட்ட காரி இருவருக்குமான போராட்டமே கதை.

காரி மனிதனுக்கு நிகராக யோசித்து, யோசித்து, வளைத்து, வளைத்து தன்  போராட்டத்தை நடத்துகிறது. பிச்சிக்கு தன் கண் எதிரே தன் அப்பாவை காரி கொம்பினால் குத்தியது  நினைவுக்கு வர ….வெற்றி வாசல்  யாருக்கு? படித்து ரசியுங்கள்!!!
கூடுவிட்டு கூடு பாய்வது போல  செல்லப்பா ‘காரி’யாகவே மாறிவிட்டாரோ எனச் சொல்லும் அளவுக்கு அதன் உணர்வுகளை, உடல்மொழியை , வார்த்தைகளாக்கி ‘டேய் நான் காரிடா !’என்று  சொல்லாதது தான் குறை  என்பதாக கதை முழுக்க காரியின் ஆதிக்கம் அதகளம்தான்.

சி.சு.செல்லப்பா இந்த கதையை ஒரு  சிறந்த இயக்குனரைப்போல்  கதைக்களம் பற்றிய வர்ணனை, கதாநாயகன் காரியின் அறிமுகம், சாதாரணமாக அறிமுகமான இரண்டாவது கதாநாயன் பிச்சியின்  சிறப்பு,  எந்தெந்த காளைகள் என்ன செய்யும் என்ற தாத்தாவின்  அனுபவ வார்த்தைகள், சல்லிக்கட்டை காணும் மக்களின்  உணர்வுபூர்வமான பேச்சுகள் என அழகாக கொண்டு சென்றிருக்கிறார்.

ரசித்தது:- தாத்தாவின் நெற்றிச் சுருக்கத்திற்கு உழவு செய்த வயல் போல என்பது தங்கள் ஊரின் சல்லிக்கட்டை குறைத்து பேசியதாக நினைத்து கோபப்படும் தாத்தாவை சமாதானப்படுத்தும் நோக்கில்  பேசும்  பிச்சியிடம் அப்படியெல்லாம் பேசி இந்த கிளவனைக் குளிப்பாட்டிட முடியாது என்பது சல்லிக்கட்டு நடந்து  வரும் காரியை அதன் அலங்காரத்தை வர்ணித்து ஒரு நாட்டியக்காரி  மேடைக்கு வருவது போல என்பது (வைஜெயந்திமாலா, சில்க் என அவரவர்க்கு பிடித்தவர்களை யோசித்துக்கொள்ளலாம்)  இன்னும் சொல்வதைவிட படித்து ரசியுங்கள். எங்கள் வீட்டிலிருந்த காளைக் கன்று ஒன்று யாரிடமும் பிடிபடாது ஓடும். பெரிய பில்லா(ரஜினிபில்லா வந்த புதிது) இவரு பிடிக்க முடியாது என அண்ணன்  சொல்ல பில்லாவே அதன் பெயரானது. மாடு என்றால் செல்வம் அப்படிப்பட்ட செல்வத்தை, அதன் தொடர்பான பாரம்பரியமிக்க  வீர விளையாட்டை  வாடி வாசல்  என்ற  அழியாத கால்நடை சுவட்டை பதிப்பித்த ‘காலச் சுவடு’க்கு நன்றிகள். 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑