கிடை

(வாசித்ததில் ரசித்தவர்:அன்புமொழி)

வாசித்தது:- கிடை
ஆசிரியர்:- கி.ராஜ்நாராயணன்
பதிப்பகம்:- காலச்சுவடு
பக்கங்கள்:- 61
வகை:-கிளாசிக் குறு நாவல்
விலை:- ரூபாய் 75

‘கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை’  இதைவிட வேறென்ன புதிதாக கி.ராவைப்பற்றி நான் சொல்ல?
சிறுவயதில் கிடை மாடுகள் சாலையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். தொலைவிலிருந்தே  கேட்க தொடங்கும்  மாட்டின் கழுத்திலிருக்கும் மணியின் டிங் டிடிங்டாங் சத்தமும் டக்டக் குளம்படிச் சத்தமும் சாலையின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு செல்லும் வரையிலும்  குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் வரையிலும் தாளம் தப்பாத இசையாக  கேட்கும். கடந்து சென்ற பிறகும் சிறது நேரம் காதில் சுகமாக ரீங்காரிக்கும்.

‘கிடை’ கதையில் ஆட்டுக்கிடை பற்றியும் அதனோடு சேர்ந்த ஒரு சம்பவத்தைச் சுற்றியுமாக கதை என்பதைவிட கிராமத்தின் நிகழ்வுகளை  அப்படியே  கரிசல்காட்டின் தந்தையுடன் நாமும் காணலாம்.

ஒருவிதவைப் பெண்ணின் பருத்திக்காட்டை ஆட்டுக்கிடை ஒன்று தின்று அழித்துவிட ,அது யார் பொறுப்பிலிருந்த கிடை என்பதை ஆராய , கிராமத்தின் நிபுணர் இருவர், திம்மநாயக்கர்  என்ற மகா நிபுணரின் தலைமையில் மூவர் குழுவாக புறப்படுகிறது. திம்ம நாயக்கர் தடங்களையும் தடயங்களையும் கண்டு கொண்டு யாரென்பதை அடையாளம் காண்கிறார்.
நிபுணர் அல்லவா?.

ஆனால் அவர் அதனை பொது வெளியில் சொல்லாது  சம்பந்தபட்டவருக்கு ரகசியமாக  தெரிவிக்கச் செய்கிறார்.
கிராமத்தினர் சிலர் குறிகேட்டு ஒன்றல்ல மூன்று இடங்களுக்கு செல்கின்றனர். ஆனால்  கிராமத்தின் வழக்கப்படி அவர்கள் தாங்கள் கேட்டதை ஊர் கூட்டத்தில்தான் அறிவிக்க வேண்டும்.

இன்னொரு புறம் இரவெல்லாம் பேய் உலவுவதாக பொன்னுசாமியும் அவன் மனைவியும்(காஞ்சனா, காஞ்சூரியன் ரேஞ்சுக்கு)  அளந்துவிட்டு இரவில் ஊரில் உள்ளவர்களின் காடு கழனியில் திருடியே பணக்கார்களாகிறார்கள்!.

ஊர்கூட்டத்தில்  பாரபட்சமின்றி தவறிழைத்த பெரிய மனிதர்களையும் கேள்விகேட்க கூடியவர் என்பதால்’ கலெக்டர் நாயக்கர்’ என கிராமத்தினரால் அழைக்கப்பட்டவரின் தலைமையில்  ஊரே ஆவலாக யார் என்பதை அறிய காத்திருக்கிறது .

பருத்திக்காட்டின் அழிவுக்கு  பொன்னுசாமிதான் காரணமென ஊரார் முடிவு செய்கிறார்கள். ஆனால் பொன்னுசாமி தான் செய்யவில்லை என்கிறார். திம்மநாயக்கர் கண்டுபிடித்த உண்மை என்ன?
குறிகேட்டு வந்தவர்கள் சொல்லியது யாரை? உண்மை குற்றவாளி யார்? கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

 ரசித்தது:-  திம்ம நாயக்கரை எப்படிப்பட்ட ‘மந்திரவாதி’ என்பதை விளக்குவது. கதையின் ஆரம்பத்தில் முன்னாள் கீதாரி(கிடையின் தலைவன்) நுன்னு கொண்ட நாயக்கரை அவர் பொடி போடுவதை , ராம சுப்பா நாயக்கரின் குசும்பு, பொன்னுசாமி கட்டிவிடும் பேய் என்று கதை முழுக்க கிடை வாசனையுடன் கதை அருமை.
ஆடுகளின் பெயர்கள், ஆட்டுப்பால் கிராமத்தின் மருந்தாக, உணவாக இருப்பது.

‘கிடை மறிப்பது’ என்பது , கிராமத்தில் பெண்ணுக்கு பேய் பிடித்திருப்தாகச் சொல்வதன் பிண்ணனி, மீசை பற்றிய அவரின் கருத்து மீசையில்லாத சம்பந்தக்காரரை சந்திக்க நேர்ந்தால் “என்ன மாப்பிளை நாடகத்தில் பொம்பளை வேஷம் கட்டுறிங்களா?” என்று கேட்பார்களாம்.இதுபோன்று படிக்க நிறைய  கிராமத்தின் சுவையான உரையாடல்கள் கதையில் விரவி ‘கிடை’ க்கின்றன.

இதுநாள்வரையில்  கி.ரா வின் இப்படிப்பட்ட ஒரு கிராம இலக்கியத்தை  படிக்காததற்காக மானசீகமாக கி.ரா அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். 

அம்மா கையால் வைக்கும் பாசம் கலந்த வெறும் ரசம் சாதத்திற்கு முன்னால் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்ணும் வகைவகையான உணவும் ருசி குறைவாகிடும்.    எத்தனை விதமான எழுத்துகள், படைப்புகள் படித்தாலும் , அம்மாவின் ரசம் போல எளிமையும், சுவையும் ,மண்ணின் மனம் கலந்தவை இதுபோன்ற படைப்புகளே  என்றால் மிகையில்லை. உண்டபின் மீண்டும் அசைபோடும்  ஆடு மாடுகளைப் போல மீண்டும் மனதில் அசைபோடக் கூடியதாய் சிறப்பாக கி.ரா அவர்கள்  அமைத்திருக்கிறார்கள். நன்றிகள்  ஐயா.

பதிப்பித்த காலச்சுவடுக்கும் கதைக்கு பொருத்தமாக  கோட்டோவியங்கள் வரைந்த  எம்.கணேசன் அவர்களுக்கும் நன்றிகள். 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑