தேனி மலை மாடுகள்

கதை சொல்கிறேன்.காம்  வலைதளத்தில் தமிழக நாட்டு மாடுகள் பற்றிய பதிவை வெளியிட்டிருந்தோம். அதில் உம்பளச்சேரி, புலிக்குளம், காங்கேயம், பர்கூர் மலைமாடுகள், ஆலம்பாடி இன மாடுகள் இடம் பெற்றிருந்தன. இவற்றைத் தவிர்த்து வேறுசில மாடுகள் பற்றியும் சுவையானவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் 87 வகை நாட்டுமாடுகள் இனம் இருந்ததாக அறிய முடிகிறது. தற்போது அழிவின் விளிம்பில் உள்ள சில மாடுகள் இனத்தை அடுத்தடுத்து கண்போம்; முதலில் தேனிமலைமாடுகள் பற்றிப் பார்ப்போம்.

தேனி மலை மாடுகள்

இலட்சக் கணக்கில் இருந்த தேனி மலை மாடுகள்  இப்போது பதினைந்தாயிரத்துக்கும் கீழ் எண்ணிக்கை குறைந்து விட்டது.

தேனியைச் சுற்றியுள்ள கூடலூர், கம்பம், போடி, பெரியகுளம், எறசக்கநாயனூர், நாராயணதேவன்பட்டி, KK பட்டி, முத்தம்பட்டி, ஓடம்பட்டி, சுருளிப்பட்டி, ஐயம்பட்டி,  பல்லவராயன்பட்டி உட்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப் படுகின்றன. சின்னமனூர்  மாடுகள் மேக மலையில் மேயும். இந்த மாடுகள் மலையில் மேய்ச்சலுக்குப் போவதால் மலைமாடுகள் எனப் பெயர் பெற்றன.

கரும்போர்
செம்போர்


கரும்போர், செம்போர் என உடலில் உள்ள நிறம் இவற்றின் தனிச்சிறப்பு. மலைமாடுகள் என்பதால் ஏர் உழவுக்கும், ரேக்ளா ரேசுக்கும் மட்டும் பயன் படுத்தப்படுகிறது. மலையில் நாள்தோறும் அதிக தொலைவு பயணிப்பதால் இவற்றுக்கு ரேக்ளா ரேசு என்பது இலகுவானது; மலையில் வளர்வதால் சீறிப்பாயும் குணம் கொண்டது.

ஜல்லிக்கட்டில் தேனி மலை மாடு

தேனி மலை மாடுகள் அண்மைக் காலமாகத்தான் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றன. இதற்கு முன்னர் உள்ளூரில் மஞ்சுவிரட்டு மட்டுமே நடைபெற்றன. ஐயம்பட்டி, பல்லவராயன்பட்டி காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயிற்சியளிகப்படுகின்றன; மற்றவை ரேக்ளா ரேசுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற பல ஊர் மாடுகள் தேனி மலைமாடுகளே. இதன் காரணமாக கன்றுகளுக்கு தற்போது நல்ல விலை கிடைக்கிறது. மூன்றுமாத கன்று ரூபாய்  பத்தாயிரத்துக்கும் மேல் விலை போகிறது.

மலையில் மேயும் மாடுகள் மழை பொழிவைப் பொருத்து கீழிறக்கப்படும். வருடத்தில் பாதி நாட்கள் மலையிலும், மீதிநாட்கள் நிலத்திலும் மேய்கின்றன. மழையில்லாத காலத்திலும் மலையில் உணவும், சுணைகள் மூலம் நீரும் கிடைத்துவிடும்.
மலையில் மேய்ப்பவர்கள் மலையிலேயே சமைத்து ஒருவேளை மட்டுமே உண்டு, இரவிலும் அங்கேயே சில தினங்கள் தங்கி கீழிறங்குவார்கள். வேறுசிலர் அன்றாடம்  காலையில் மலைமேல் மேய்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில்  திரும்பிவிடுவார்கள்.
மாடுகளுக்கு வரும் எந்த நோய்க்கும் இவர்கள் நாட்டு மருந்துதான் கொடுக்கிறார்கள். இன்னமும் மாட்டுக்கு சூடு போடும் பழக்கத்தை சிலர் தொடர்கிறார்கள் என்கிறார்கள்.
புலி, சிறுத்தை, செந்நாய், நரி போன்ற விலங்குகளை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவை. மலையில் வளர்வதால் காட்டு மாடுகளின் குணம் கொண்டவையாக உள்ளன.

மலைச்சரிவுகளில் அனாயசமாக நடந்து சென்று மேயும் வல்லமை கொண்டது. இவற்றின் சாணம் வாங்கப்படுவதால் கிடைமாடுகள் வளர்க்கிறார்கள். கேரளாவிலிருந்து விவசாயிகள் வந்து லாரியில் சாணத்தை  விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள்.

லாப நோக்கு இன்றி இவ்வின மாடுகளை காப்பாற்றவே, செலவு ஆவதைப் பெரிதாகக் கருதாமல் வளர்க்கிறார்கள்.

பசுக்கள் மிகக் குறைந்த அளவான  ஒரு லிட்டர் அளவே பால் கொடுக்கும்; அதையும் வீட்டுத் தேவைக்காகவே கறக்கின்றனர். கன்று இல்லால் பால் கறக்க விடாது; முட்டிவிடும். இவ்வகை மாடுகள் 25 ஆண்டுகள் வரை வாழும். மலையில் மூலிகைகளை தின்று வளர்வதால் ஆயுள் அதிகம் என்கிறார்கள்.
மலையில் வளர்வதனாலேயே இவற்றில் உடம்பில் கரும்போர்,செம்போர் என்ற வண்ணங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

இவ்வகை மலை மாடுகளின் எண்ணிக்கை குறையக் காரணங்களில் ஒன்று மேய்சல் வசதி இல்லாதது. வெள்ளைக்காரர் காலத்திலேயே மலையில் மாடு மேய்க்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறையினர் அதிக கெடுபிடி செய்கின்றனர். மாடு வளர்ப்போர் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தை நாடியதால், வனத்துறையினர் ஆட்சியர் மூலம் ஜுன் மாதம் முதல் மலையில் மேய்ச்சலுக்கு செல்ல ‘பாஸ் ‘ எனும் அனுமதி வழங்குகிறார்கள். சிலநாட்கள் மலையிலேயே தங்கி திரும்பிட ‘பட்டிப்பாஸ்’ என்றும், அன்றாடம் சென்று திரும்ப ‘மேய்ச்சல் பாஸ்’ என்றும் வழங்கப்படுகிறது. அதுவும் நாண்காயிரத்திலிருந்து இரண்டாயிரமாகக் குறைந்த விட்டது. ஒரு மாட்டுக்கு இரண்டு முதல் நாண்கு ரூபாய் வரை  கட்டணம்  பெற்று இந்த ‘பாஸ்’ வழங்கவும் தாமதப் படுத்துகிறார்கள் என்கிறார்கள்.
மாடு வளர்ப்போர் அதிக இன்னலை அனுபவிக்கிறார்கள். பொய்த்துப் போன விவசாயம், பெருந்தொற்றுக்கான ஊரடங்கு  காரணமாக  தீவணப் பற்றாக்குறை உள்ளது; அதிக விலை கொடுத்து வாங்க இயலாது.
இம்மாடுகளை வளர்ப்பவர்கள் இதை ஒரு பெருமைக்காகவே வளர்க்கிறார்கள்.
இவர்களுக்கு இம்மாதிரி இன்னல்கள் தொடருமேயானால் நாட்டு மாடுகள் இனத்தைக் காப்பாற்ற முடியாத நிலை வந்திடும். எனவே மாடு வளர்ப்போரின் கோரிக்கையான மலைகளில் மாடு மேய்க்க இலவச பாஸ், கூடுதல் மாடுகள் மேய்க்க அனுமதி என்பது நிறைவேற்றப்பட்டாலே மலை மாடுகளையும் நம் பழம் பெருமையையும் காப்பாற்ற முடியும்.

பொங்கல் நேரத்தில் மீண்டும் நாட்டு மாடுகள் பற்றிய பதிவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தன் தேவையைக்கூட கேட்கமுடியாத வாயில்லா உயிர்களுக்கு நாம்தான் வாயாக இருந்து அவற்றின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Pic Credits :

Maalai Madu : https://www.facebook.com/828295930656823/posts/1631613380325070/

தமிழரின் வீர மரபு: https://youtu.be/FozGUbcyXk4

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑