யாம் சில அரிசி வேண்டினோம்

திருமதி.அன்புமொழி அவர்களின் நூல்நயம் ‘வாசித்ததில் ரசித்தது’

வாசித்தது:- யாம் சில அரிசி வேண்டினோம்
ஆசிரியர்:- அழகிய பெரியவன்
பக்கங்கள்:- 205
பதிப்பகம்:- நற்றிணை
விலை:- 250

வானொலியில் அழகிய பெரியவன் பேட்டி ஒன்று கேட்டு அவரின்  நூல்களைப் படிக்க ஆர்வம் வந்தது. நூலுக்கு முன்னுரை  திருவள்ளுவர், ஆம் உலகப் பொதுமறையிலிருந்து கதைக்குப்பொருத்தமான ஒருகுறளை இணைத்திருப்பது இந்தநூலுக்கு கூடுதல் சிறப்பு.

இனி அரிசி வேண்டி:- 
ஏழ்மை நிலை, அரசு ஆசிரியப்பணி (யாம் சில அரிசி வேண்டினோம்) என்ற  எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாயகன் கவசிநாதன்.  செய்தித்தாளின் வழியாக 5000 ஆசிரியர்கள்  பதிவு மூப்பு அடிப்படையில்  நியமிக்க இருப்பதற்கான அரசாணையை அறிகிறான். 

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகவல் அறிய வருவதற்கே  தன்மனைவியின் செருவாட்டுக்காசை எடுத்துக் கொண்டு வருகிற செல்வ நிலை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கிட்டதட்ட வரிசையின் இறுதியில் நின்றிருக்கும் அவன், தன்முறை  வரும்போது அதிகாரியிடம், எந்த ஆண்டு வரை உள்ளவர்களுக்கு பதிவுமூப்பு எனக்கேட்கிறான்.

பேப்பரில் பாத்துக்கொள் என்று அதிகாரியின் அலட்சிய பதில்.

கவசி மீண்டும் அடுத்தடுத்து கேட்க தொடர் கேள்விகளைத் தொல்லையாக நினைக்கும் அதிகாரம் ஆத்திரமாகி அவனை ‘யூஸ்லெஸ் எத்தனை முறை சொல்வது? ‘

என அடுக்குத்தொடராக அதே வார்த்தையை பயன்படுத்த ஏழை நடுத்தரவர்க்கத்தின் பலம், பலவீனமுமான ரோஷத்தால் தகவலறியும் சட்டப்படிதானே கேட்டேன் என்க அதிகாரம் மூர்க்கமாகி கவசியை தாக்கியதுடன், குடித்துவிட்டு  பலருடன் வந்து தன்னை பணியாற்ற விடாது தடுத்ததாக ?! கவசி மீதே பொய் புகார் கொடுத்துவிட, அதுவழக்காக பதியப்பட்டு அவனைத்தேடி கோர்ட் ஆர்டர் வருகிறது.

மாவட்ட வேலை  இல்லாத பட்டதாரிகள் சங்க நண்பன் முனிரத்தினத்தின் உதவியை கவசி நாட, அவன் ஏழைகளுக்கு  இதுபோன்ற தருணங்களில் உதவிடும்  பெரியவர் என்று  சொல்லப்படும் செங்குட்டுவன் என்பவரிடம் அழைத்துச் செல்கிறான். அவரின் துணையுடன் அதிகாரிமீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க, புகார் கொடுக்க, தன் சார்பில் வழக்காட வக்கீல் , என அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை பெரியவர் சொல்கிறபடி செய்கிறார்கள்.

வாய்தா மேல் வாய்தா  சாட்சிகள் வராதது என வழக்கு வழக்கம்போல் இழுக்கிறது.

ஒருநாள் சாட்சி வருவதாக தகவல் வர கவசி  எதிர்பார்ப்புடன் இருக்க,  அதிகாரத்தின் ஜால்ராக்கள் பொய்யை உண்மை போல் அடித்துவிட, வக்கீல் முருகையன் கேள்விகளால்   ஜால்ராக்கள் சத்தமிழக்கின்றன.  சம்பவத்தன்று அதிகாரி சொல்ல சொல்ல பொய் புகாரை டைப் செய்த ஸ்டெனோ கோர்ட்டில்  சாட்சியாகி தனக்கு கவசி வயதில் மகன் இருப்பதாகக்  சொல்லி அன்றைய தினம் உண்மையில் நடந்ததை கூற, உண்மையால் விசாரணை அரங்கமே சில கணங்கள் அமைதி காக்கிறது.  

தன்னுடன்  தேர்தல் காலத்தில்  சுவரில்  விளம்பரங்கள் எழுதும் நண்பனான கரிகாலன் கோர்ட்  வளாகத்தில் கவசியை காணவே “என்ன இங்கே ?” எனகேட்டு விபரமறிந்து  திடுக்கிடுகிறான். “இவர்கள் எல்லாம் மனிதர்களா?” என்பதுடன் தன்னைப் பற்றி  ஏதும் சொல்லாது  மழுப்பிவிடுகிறான்.

நாம்யூகித்தபடி அவன் சாட்சிக் கூண்டில் ஏறி, தான் கவசியுடன் ரொம்ப காலத்திற்கு முன்புசுவர் விளம்பரங்கள் எழுதியதாவும் மீண்டும் இப்போது தான் பார்ப்பதாகவும், இந்தவழக்கில் என்னை எப்படி சேர்த்தார்கள் என்றே தெரியவில்லை என்று உண்மையைக்கூற அடிமேல் அடியாகிட இறுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரியை விசாரிக்கும் போது  வக்கீல் வஞ்சப் புகழ்ச்சியாக தாெடங்கி அவர் வாயினாலேயே உண்மையை வரவழைத்துவிடுகிறார்.[வாதாடும் வக்கீல் வீரபாண்டிய கட்டபொம்மனாக கேள்வி கேட்பதாகவும், பதிலளிக்க தடுமாறும் அதிகாரி ஜாக்ஸன் துரையாகவும் என் மனத்திரையில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.] நமக்கு அப்படிபோடு என்று சொல்லுமளவுக்கு கேள்விகளால் அதிகாரியை வக்கீல் புரட்டிஎடுப்பார்.

அப்புறமென்ன  ‘உங்களுக்கு விடுதலை நீங்கள் போகலாம்’ என கவசிக்கு நீதி கிடைக்கிறது.

ஆசிரியர் அழகிய பெரியவன் கதையை அதோடு முடிக்காமல் அடுத்ததாக ஒரு இழையைக் கொண்டு எதார்த்தம் இதுவென புரியவைக்கிறார். அது என்ன என்பதை  நூலைப்படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரசித்தது:-

1. ஒருமுறை பெரியவரைக் காணவரும் கவசி, வழமைக்கு மாறாக அவர் தோட்டத்து வேலை செய்வதைப் பார்த்து வியக்க, “மனிதர்களுடன் பேசறதைவிட மண்ணோடு பேசறது பிடிச்சிருக்கு. இதுங்க பேச்சு ரொம்ப அழகானது. ஆனா கொஞ்சம் காத்திருக்கனும்” என்பது. மலர்களாக,  காயாக, கனியாக செடிகள் பதில் சொல்ல நாட்களாகும் தானே!
2. தீர்ப்பு வந்தபின் சில நாட்கள் கழித்து கவசி மீண்டும் பெரியவரைப் பார்க்கச் செல்லும் போது  தக்காளி செடிகளை நடவு செய்துகொண்டிருக்கிறார்.

கவசியின் மனதில்  இருக்கும் கேள்விக்கு பதிலாக, நாம் நட்ட செடியின் பூர்வீகம் தென் அமெரிக்கா, அது எவ்வளவு காலத்தை ,தூரத்தை, மனிதர்களை  கடந்து போராடி இங்கு வேர் பிடிக்க வந்திருக்கிறது. நீயும் தக்காளி செடியைப்போல  வேர் ஊன்றப் பழகு கவசி. முயற்சியோ, போராட்டமோ செய்யலன்னா நம்மோட உயிர் அறுபடும். இதுதான் நம்முடைய நிலைமை என்கிறார்.

” வேர் ஊன்றிட்டேங்கைய்யா.     அதனாலதான் நிக்கிறேன் . இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்பேனோ தெரியாது.வேர் ஊன்ற ஊன்றத்தான் களைகளோட அழுத்தம் தெரியுது. களைப்பான மாதிரி தெரியுது. கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன். நாம் கட்டாயம் முயற்சிக்கலாம்” என்கிறான்.

பதிந்தது:- 1.தன் அப்பா அம்மா தம்பிகள் பீடி புகையிலை சுற்றுவதை,தோல் பதனிடும்  இடத்தை விபரித்து அதில் வேலை செய்யும் தன் தந்தையின் நிலைபற்றியும் , கிடைக்கும் எந்த வேலையையும் அவர்  செய்வதையும், தன் பள்ளியின் விடுதி வாழ்க்கையை விவரித்து சொல்கையிலும்  படிக்கவே பலஇடங்களில் மனம் கனக்கிறது. ஆனால் தானும் தந்தை போல் கிடைக்கும் வேலையை செய்ய விடாமல் தன்னை தடுப்பது எதுவென தெரியவில்லை என தன்னைத்தானே கேள்வி கேட்பது.கேள்வி கேட்டால் போதுமா? தந்தைக்கும் குடும்பத்திற்குமாக உதவிட  வேண்டும் என்று தோன்ற வில்லையா? என நம் மனது கவசியை எதிர்கேள்வி கேட்கிறது. பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

2. பலவருடங்களுக்கு முன்பு ஒருநாள் பெரியவர் கலவரம் நடந்த இடத்தில் தற்செயலாக இருந்ததை  போலீசார்  கைது செய்ததையும் அப்போது நடந்த நிகழ்வுகளை கொடுமைகளை தான் கடந்து வந்தததை சொல்ல சொல்ல, இப்படியும் கூட நடக்குமா?  என்றே மனம் பதைக்கிறது. கவிஞர், கலைஞர், ஓவியர், சிற்பி என எந்த படைப்பாளியும்  இயற்கையை, ரசித்ததை மட்டும் பதிவிட்டிருந்தால் அது யாரிடமும் எந்த தாக்கத்தையும்  ஏற்படுத்தாமலே போயிருக்கும்.  மாறாக அவர்கள் மனதில் ஆழபதிந்த அன்பு, பாசம், அவமானம், நிராசை ஏமாற்றம்,  விடாப்பிடியாய் நின்று பேராடி சாதித்த தருணம் என்று தன் படைப்புகளினூடே  வெளிப்படுத்தும் போதுதான் அது முழுமையாகிறது.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑