அனாதை மரங்கள்

( நண்பர் திரு.கிறிஸ்டி நல்லரத்னம் அவர்கள் படைத்த மனதைப் பாதிக்கும் கதை.)

அம்மாவை என்றும் நான் புரிந்து கொண்டதில்லை. எங்களுக்குள் ஏதும் பிணக்கோ பிளவோ
என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எங்கள் வீட்டில் அவள்தான் எல்லாம்.
இதைக் கேளுங்கள்……
அக்காவை பெண் பார்க்க எங்கள் வீட்டிற்கு அத்தானின் குடும்பம் வந்திருந்த சமயம் அது.
“சத்தியன்….. சத்தியன்” என அம்மா என்னை அழைக்கிறாள். நான் தலைவாரி புது சட்டை
அணிந்து அவர்கள் முன் வந்து ‘ டிப் டாப்’ ஆக நிற்கிறேன். அம்மா என் தோளைப் பற்றி
“இவன்தான் மகன் சத்தியன். ஹி இஸ் எ டாக்டர்” என்கிறாள். எல்லோர் கண்களும் என்னில்
ஆணி அடிக்கின்றன. ஆம், அவர்கள் நம்பவில்லை. பத்தாவது படிக்கும் அரும்பு மீசை கூட
முளைக்காத நானா ‘டாக்டர்’? ‘இவனை டாக்டராக ஆக்க வேண்டியதே என் கனவுணு’
சொல்லியிருக்கலாமில்லையோ?

அப்பாவிற்கு இந்த நாடக வாழ்க்கையில் நாட்டமில்லை. ஆறடி உயரம்… கிளி மூக்கு… துறு துறு
என எதையோ தேடும் கண்கள்.. அநாதரவாய், புறக்கணிக்கப்பட்ட, சீவாத தலைமுடி … இதுவே
அப்பா. அவர் எங்கள் வீட்டில் ஒரு பார்வையாளனே… ஒரு உருவம்! அதிகம் பேச மாட்டார்.
வானிலை அறிவிப்பாளனின் வார்த்தைச் சிக்கனம் அவருக்கு. பேச்சில் எப்போதும் ஒரு
உண்மைத்தனம்.

நான் காலேஜ் பாடங்களை படித்துக் கொண்டிருக்கும் போது அப்பா அருகில் வந்து என்
தோள்களை பற்றி “படிடா மகனே படி….. நல்லாப் படி…. கல்வி ஒண்ணத்தான் ஒருத்தனும்
உன்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது தெரியுமோ?’ என்று சொல்லி நகர்வார். அவர்
வார்த்தைகள்தான் எத்தனை உண்மையானவை?

அப்பாவின் ஒரு காலில் வாதம். இதனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே றிட்டாயர்
ஆகிவிட்டார். ‘விசுக் விசுக்கென’ நடந்தாலும் இடது கால் சிறிது இழுத்து கொள்ளும்.
பத்து வருஷத்திற்கு முன்னால்……அப்பா திடீர்னு மயக்கம் போட்டு விழ அம்மாதான் டாக்சியில
அப்பாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் செஞ்சாங்க. அப்புறம் என்ன…. ட்றீட்மென்ட், றீ ஹாப் என்று
இரண்டு மாசம் ஆனது. அம்மா அப்பாவின் இந்த ‘மைல்ட் ஸ்ரோக்’ பற்றி பேசுவதே இல்லை.
அடுத்த வீட்டு பங்கஜம் மாமிதான் முதலில் இதை கவனித்தாள். “ஜானகி, என்னா? அவருக்கு
காலு கொஞ்சம் இழுத்திட்டாப் போல……”. அம்மா மாமியின் பேச்சை ஒரே பேச்சில் அடித்துப்

போட்டுவிடுவாள்….. “இழுக்கவும் இல்ல மண்ணும் இல்லை…. வயசு… வயசு” என்று மாமியின்
ஊகத்தை வெட்டிப்புதைத்தாள்.

அப்பா என்றுமே சாது. அவர் கோபத்தை அவரே சாந்தப்படுத்திக் கொள்வார்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னால “பொடவ…. ஜாக்கட்…. பாவாட துணி வேணுங்களோ” என்று
கூவிக்கிண்ணு மீரான் லெப்பை தலையில் துணிக்கட்டை சுமந்து கொண்டு கேட்டை திறந்து
அம்மாவின் அனுமதிக்காய் காத்து நிற்கிறார். அம்மா மலர்ந்த முகத்துடன் ‘வாங்க நானா…
என்ன இந்தப் பக்கம் ஆளே காணல?”
“துணி வில முன்னமாதிரி இல்லம்மா… சீனாக்காறன் மார்க்கட்டில துணி துணியா
கொட்டுறானில? அதான் நம்ம கைத்தறி படுத்திடிச்சு….. இப்போ யாரு தறி அடிக்கான். அதான்
இருக்கிற கொஞ்ச நஞ்ச கைத்தறி துணிமணியும் விலையேறிடிச்சு” என தனக்குத் தெரிந்த
பொருளாதார அறிவில் ‘சப்பிளை – டிமாண்ட்’ பாடம் நடத்தி பின் தலையில் சுமந்த துணி
மூட்டையை மெதுவாய் எங்கள் வீட்டு மண்டப வாசல்படியில் இறக்கி வைத்து அருகில்
சம்மாணமிட்டு அமர்ந்து கொண்டார்.

மீரான் லெப்பைக்கு பெண்களின் உடை ரசனை பற்றி அபிரிமித அறிவு. ஜாக்கெட், பாவடை
என மேட்சிங்காக தேர்ந்தெடுப்பது முதல் ஜாக்கெட் டிசைன் எல்லாம் அவருக்கு அத்துப்படி.
“முழு நீளக் கை வைத்து ஜாக்கெட் தைப்பது பழைய கால பேஷன்னு சொல்லாதீங்கம்மா.
இப்போ இதுதான் லேட்டஸ்ட் பேஷன்.
முன்னெல்லாம் லோ நெக் ஜாக்கெட் அணிஞ்சாங்கல்ல? இப்போது நோ நெக்தான் ஃபேஷன்.
எந்தந்த புடவைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் அணியலாம்ணு ஜென்ரல் நாலெஜ் இருந்தால்
சேலை ஸ்பெஷிலிஸ்ட் ஆகிடலாமில்லையோ?” என தன் ஆங்கில அறிவையும் புகுத்தி
கடைவிரிப்பார் லெப்பை. வண்ண வண்ண கோரா பட்டுப்புடவைகளை விரித்துப் போடும்
போது அம்மாவின் மனது ஐஸ் கட்டியாய் உருகும். ” ஈரோடு, திருப்பூர் ஒரிஜினல் அம்மா…..
நம்மக்கிட்ட சுத்துமாத்து இல்லீங்களே…” என்பார் லெப்பை.
ஆனாலும் அம்மாவும் லெப்பையின் பேச்சில் அடங்கிப் போவதில்லை.
” லெப்ப… போன தடவ உங்ககிட்ட எடுத்த துணியில் உள் பாவாட தச்சனில்ல. என்ன
கைத்தறியோ கால்தறியோ, காலெல்லாம் ஒரே அரிப்பு . தொடைபெல்லாம் செவந்து….” அம்மா
அடுக்கிக் கொண்டே போனாள்.

உள்ளே அம்மாவின் சம்பாஷணையை அப்பா ஈர்ப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அம்மா
அப்பாவித்தனமாக தனக்கு நேர்ந்த துணிப் பாதிப்பை லெப்பையுடன் பகிர்ந்து கொண்டது
அவருக்கு உடன்பாடில்லை என்பதை சில செருமல்கள் மூலம் காட்டியாயிற்று. கையிலிருந்த
அன்றய ‘ஹிந்து’ பத்திரிகையை சுருட்டி மடித்து முறுக்கி ஒரு சிறு தடியாக மாற்றி அதை ஓங்கி
தன் உள்ளங்கையில் அடித்துக் கொண்டார். அடியின் உக்கிரம் அவர் கோபத்தின் அளவுகோல்.
அடி வாங்கிய உள்ளங்கை சிவந்து விடும். ஹாலின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டே
‘டப், டப்’ என ஒலியெளிப்பியபடி இந்த சுயசித்திரவதை தொடரும்.

அம்மாவிற்கு இது பழகிப்போனதொன்று. அதனால் அவள் அலட்டிக் கொள்வதில்லை. அடுக்கி
வைத்த ‘ஹிந்து’ பத்திரிகையில் இல்லாத பிரதிகள்தான் அப்பா கோபப்பட்ட நாட்கள். அப்பா
கையில் சுருண்டு மடிந்த ‘ஹிந்து’க்கள் யன்னலூடே வெளியேறி கொல்லைப்புறத்தில் வீழ்ந்து
சமாதியாகும்.
அம்மாவும் அப்பாவும் சத்தம் போட்டு சண்டையிட்டுக் கொண்டதை நான் கண்டதில்லை.
அம்மாவின் பூர்வீக சொத்து அப்பாவின் குமாஸ்தா சம்பள கர்வத்திக்கு
பூட்டுப்போட்டுவிட்டதாய் நான் எண்ணுவதுண்டு. இதனால் எங்கள் வீட்டில் எரிமலைகள்
வெடிப்பதில்லை.

அப்பா உறவினர் திருமண, மரண வீடுகள், ஊர் விசேஷங்கள் என ‘பிசி’யாகவே இருப்பார்.
ஒன்றையும் தவறவிடுவதில்லை. சுழலும் இசைத் தட்டில் இளைப்பாறும் ஈயின் வாழ்கை
அவருக்கு. அவரைச் சுற்றி வேகமாக காட்சிகள் மாறினாலும் அவருக்கோ ஒரு அங்குலம் கூட
நகராத வாழ்க்கை.

அம்மா ஊர்வம்பு பேசி நாட்களை நகர்த்துவதில்லை. அடுத்த வீட்டு பங்கஜம் மாமிதான்
தினமும் மாலையில் செய்திச் சிதறல்களுடன் வந்து “இத கேட்டியாடியம்மா…..” என
தொடங்குவார். அம்மா “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” நாய்க்குட்டியாகி பங்கஜம் மாமி
சொல்வதை காது கொடுத்து கேட்பாள். அம்மா கருத்துச் சொல்வதில்லை…. கதை கேட்பதோடு
சரி. அப்பாவிற்கு இந்த விடுப்புப்பகிர்வில் உடன்பாடு இல்லை. மேலும் சில ‘ஹிந்து’க்கள்
சுருண்டு மடியும்.

அம்மாவிற்கு வீட்டுத் தோட்டத்தில் மிகுந்த நாட்டம் அதிகம்.. பங்கஜம் மாமியுடன் அன்று தன்
வீட்டுத் தோட்டத்தில் பறித்த கத்தரிக்காயில் வைத்த கடையல் ருசி பற்றி ஒரு வியாக்கியானமே
செய்வாள். பங்கஜம் மாமி தன் வீட்டில் வளரும் முருங்கை, பலா, மாமரங்களைப் பற்றி
பெருமையாய் பேசிக்கொள்வாள்.

நத்தார் விடுமுறைக்கு மாமா கொண்டு வந்த “அவகாகோ” …. அதுதான்…. வெண்ணைப் பழம்
அம்மாவிற்கு பிடித்துப் போனதொன்று. சப்பாத்தி செய்யும்போது மாவுடன் பழத்தின் சதையை
சேர்த்து பிசைந்து பூப்போல மிருதுவான சப்பாத்தியை வேறு செய்து பரிமாறுவாள்.

வெண்ணைப் பழம் பனி குறைந்த குளிர் பிரதேசங்களிலேயே வளர்வதுண்டு. அதன் அடர் ஊதா
நிறமும் முதலைத்தோல் ‘மென்மையும்’ எந்த சுவைப்பட்டியலிலும் சேராத வெற்றுச் சுவையும்
அம்மாவை கவர்ந்தவை. கொடைக்கானல் காலநிலையில் வளரும் இவை எம் ஊரில் வளருமா
என்பது எனக்கு சந்தேகமே.
பங்கஜம் மாமிக்கு கேரளாவில் பத்து வருடம் வாழ்ந்த அனுபவம் உண்டு. எனவே இம்மர
வளர்ப்பு பற்றிய அறிவு கொஞ்சம் உண்டு.

பங்கஜம் மாமி ‘இதை இங்கு பதியம்போட்டு வளர்க்க முடியவே முடியாது’ என்று
அடித்துக்சொன்னபோது அம்மாவின் முகம் சுருண்டுகொண்டது. ‘பழம்’ என்று முடியாத எந்தப்
பழத்திலும் பங்கஜம் மாமிக்கு நாட்டமில்லை. ‘பட்டர் புருட்’…… என்ன பேர்
அது…ஆனைக்கொய்யாப் பழமிணு சொன்னா கொறைஞ்சிடுமோ? அதோட எல்லா மரமும்
பழம் தராது தெரியுமோ? அதுல கூட ஆண் மரம் பெண் மரமுணு இருக்குதோ இல்லையோ?
ஏழு, எட்டு வருஷம் போனப்புறம்தான் பொட்ட மரமோ இல்லையோணு தெரியுமாக்கும். முதல்
மூணு வருவும் அங்குலம் அங்குலமா வளர்ந்து அப்புறம்தான் உருப்படியா வளருமாக்கும். “
என்று வேறு புலம்பிவைத்தாள்.

பங்கஜம் மாமியின் பேச்சுக்களை சலித்தெடுத்து நல்லதை பொறிக்கிக் கொள்ளும்
மனப்பக்குவம் அம்மாவிற்கு நிறைய உண்டு. ஆனாலும் வெண்ணைப் பழத்தை வீட்டில்
வளர்த்தாக வேண்டும் எனும் அவளின் உறுதியில் அப்பா வேறு மண்ணைப் போட்டார்.
“ஜானகி, அது வளந்து பழம் தர பத்து வருஷமாவது ஆகும் தெரியுமோ இல்லியோ…..அதோட
வேரு வேற சிலந்தி வல போல பரவி நம்ம வீட்டு அதிவாரத்தையே ஆட்டிப்போட்டிடும்…..
மாமரம் போல இல்ல….. புரிஞ்சதோ இல்லையோ?”

கொல்லைப்புறத்தில் அம்மா புதைத்த ஆறு வெண்ணைப் பழ விதைகளில் ஐந்து வெடித்து
முளைவிட்டன. மாமா கொண்டு வந்த பழங்களின் வாரிசுகள் இவை. மாமரக்கன்று போல் ஒரு
குச்சியாய் வளர்ந்து மெதுவாய் பசும் இலைகள் இருமருங்கிலும் குடை விரித்தன. அம்மாவின்
குதூகலிப்பிற்கு எல்லையில்லை. ஒரு குழந்தைக்கு பாலூட்டும் தாயின் கவனத்துடன் தினமும்
காலையில் அவற்றிற்கு அம்மா நீர் தெளிக்கத் தவறவில்லை. ஒரு ஆட்டுக்குட்டியின்
காதுகளைப் போல் அவற்றின் இலைகள் நீண்டு வளர்ந்து நிலத்தை தொட்டன. அம்மாவிற்கு
ஒரே பெருமை….. குதூகலம்…. செடிகளை தோளில் போட்டு தட்டாத குறை.
வெண்ணைப் பழக் கன்றுகளைப்பற்றிய பேச்சு வீட்டில் பல கலகங்களுக்கு வித்திட்டன.
அப்பாவின் சிவந்த கைகளும் மடிந்த ‘ஹிந்து’க்களும் இவற்றிற்கு சுதி சேர்த்தன.

இறுதியில் தீர்ப்புச் சொன்னது மாமாதான். அம்மாவிற்கு மாமாவின் பேச்சில் மதிப்புண்டு.
”அக்கா, இந்த மரம் பெரிசா வளர்ந்து அஸ்திவாரத்தில கைய வைச்சிடும். நமக்குத்தான் மாமரம்
நெறையாவே நிக்குதில? இதுதான் வேணுமிணு நிண்ணா எப்பிடி அக்கா? இந்த வீடு நம்ம
தாத்தா காலத்தில கட்டினதில்லையோ? மரதோட வேரு அத்திவாரத்தையே விழுங்கிடுமோ
இல்லையோ?” என்று சம்பாஷணையை மூடி இறுதி ஆணியை அடித்தார்.

தம்பி இப்படிச் சொல்லிவிட்டானே என்ற ஆதங்கம் அம்மாவிற்கு. மாமாவுடன்
சொற்சிலம்பத்தில் ஈடுபட அம்மாவிற்கு மனதில்லை. வார்த்தைகளை விரையப்படுத்தாத
அக்கணங்களை அம்மாவின் மெளனம் ஆட்கொண்டது.

அம்மாவிற்கு இத்தீர்ப்பில் இணக்கமில்லை. ஆனால் இதையும் மீறி தன் வழி சென்றால் ” நான்
சொன்னேனோ இல்லையோ” என்ற பல சொற்கணைகளுக்கு அவள் கேடயம் தாங்க வேண்டி
வரும் என்பதையும் அறிவாள்.

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை.
அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது
உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .

இப்பேச்சுக்கள் நடந்து ஒரு வாரம் இருக்கும். எங்கும் பல நாட்களாய் அடை மழை. வெள்ளம்
வராத பருவம். மழை மெதுவாய் தூற்றலாகி நின்றே விட்டது. வானம் மெதுவாய் வெளுத்து
இளவெய்யில் காயத்தொடங்கிய நாட்கள் வரத்தான் செய்தன.

எவரும் பழ மர கன்றுகளை பற்றிய பேச்சையே எடுக்கவில்லை …. கொல்லைப்புறம் சென்ற
அப்பா “எங்க ஜானகி மரக்கண்டெல்லாம்?” என்ற கேள்வி எழுப்பும் வரை!
“நீங்க ஒவ்வொருத்தரும் இளக்காரமா ஒரு கேள்விய கேட்கணுமாம். அதுக்கு நான் யோசிச்சி
யோசிச்சி உங்க திருப்திக்கு ஒரு காரணம் சொல்லணுமாம். ஆசையாய் நா ஒண்ணு செஞ்சன்..
அதுக்கு என்னா எதிர்ப்பு… என்ன புகைச்சல்.. அதான் முளச்ச எல்லா கன்றுகளையும் நம்ம
கோயிலடியில கொண்டு போய் நாட்டப்பானு நம்ம முத்துலிங்கத்திட்ட
கெடுத்தனுப்பிற்றனாக்கும்.”
“ஆரு, நம்ம மாட்டுக்கார பயல்கிட்டையா? ஓ! அதான அந்த பய பூன மாதிரி வீட்ட சுத்தி சுத்தி
வந்தானோ?”
அம்மாவின் பொசுக்கப்பட்ட ஆசைகளுக்கு புத்துயிர்கொடுத்தது ஊர்க் கோயில். அவளின்
வார்த்தைகளின் வலிமைக்கு முன்னால் கோயில் தர்மகத்தா துவண்டு போயிருப்பர் என
எண்ணிக்கொண்டேன்.

அம்மா சொன்ன ஸ்ரீ திரெளபதியம்மன் கோவில் எங்கள் வீட்டில் இருந்து இரு தெருகள்
தள்ளியே இருந்தது. வருடாந்த கோயில் உற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். 18 நாட்கள்
நடைபெற்ற பாரதப்போரைக் குறிக்கும் வகையில் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். பாரதப்
போரினதும் மகாபாரதத்தினதும்
பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்திக்காட்டப்படுவதுடனான சடங்குடன் கூடிய வணக்கமுறை
நடைபெறும். இறுதி மூன்று தினங்களும் முறையே அருச்சுனன் பாசுபதம்
பெறுதல் மற்றும் தீமிதிப்பு என்பன நடந்து முடியும்.

மழை விட்ட கையோடு அம்மாதான் கோயில் தர்மகத்தாவுடன் பேசி இந்த மரக்கன்றுகளை
கோயிலடியில் ஒதுக்குப்புறமான, ஜன நடமாட்டம் இல்லாத, பகுதியில் நடுவதற்கு ஏற்பாடு
செய்தாள் என அறிந்து கொண்டோம்.

முத்துலிங்கத்தின் கடமை அத்துடன் முடிந்தபாடில்லை. “முத்து…… கண்டுங்க நல்லா வளருதோ
இல்லையோ…. மாலையில் கொஞ்சமா தண்ணி அடிச்சி எருவும் போட்டா நல்லதில்லையோ “
என ஞாபகமூட்டுவாள் அம்மா. கோயிலடிக்கு மேச்சலுக்கு வரும் மாடுகளின் வாய்களில்
இருந்து கன்றுகளை தப்புவிக்க ஒரு சிறு குச்சி வேலியும் எழும்பிற்று.

எங்கள் வீட்டில் பல விசேஷங்கள் நடந்து வருடங்கள் கழிந்தாலும் கோயிலடியில் செழித்து
வளர்ந்த அந்த ஆறு மரங்களுடனான தொப்புள் கொடி உறவை அம்மா என்றும் திவ்வியமாக
பேணி வளர்த்தாள். நிராகரிக்கப்பட்ட அந்த வேர்களை அம்மாவின் கருணையே அடைகாத்தது.

அம்மாவின் இந்த விசித்திர முயற்சி பற்றி ஊர் வாய்கள் பேசத்தான் செய்தன. ஆனால் இந்த
முகமற்ற மனிதர்களின் சமுதாயச் சிணுங்கல்களை கேட்கக்கூடாதென அம்மாவின் காதுகள்
மூடிக்கொண்டன.

X. X. X. X. X. X

காலம்தான் என்னமாய் உருண்டோடிவிட்டது?

அம்மா எம்மை விட்டு பிரிந்து பதினைந்து வருடங்களாகிவிட்டன. அம்மாவின் கனவை
நனவாக்க நான் டாக்டராகவில்லை. கம்பியூட்டர் என்ஜினியரிங் என்னை கலிபோர்னியாவில்
கொண்டுவந்து கரைசேர்த்தது. பிறகென்ன…. மனைவி… மகன் விதூஷன்.

இன்று ஒரு மாத விடுமுறையில் ஊர் திரும்பி பிறந்த மண்ணில் கால்பதித்து அந்த ஊர்க் காற்றை
உள்ளிழுத்து நீண்ட மூச்சாய் விடுகிறேன். அதில்தான் எத்தனை சுகம்!

விதூஷனுக்கு இவை எல்லாம் விசித்திரமே. ‘சிலிக்கன் வலி’யில் புழுதிபடாத அவன் கால்கள்
ஊர் மண்ணில் குளித்து கரிய திட்டுக்களுடன் கவறை போட்டுக்கொண்டது. வீட்டின் முன்
படியில் அமர்ந்து தன் சின்ன விரல்களால் அந்த புழுதியும் வியர்வையும் சேர்ந்த கறையை
அழுத்தித்தேய்து அகற்றினான். அவை பல்லி மிட்டாய் உருவில் உருளைகளாய் மாறி புழுதி
மண்ணுடன் கலந்து மறைந்தன.

ஐந்து வருடங்களுக்கு முன் அப்பாவின் வலது காலும் இழுத்துக்கொண்டது. அவர் அம்மாவுடன்
பகிர்ந்து கொண்ட நினைவுகள் துயிலும் எங்கள் வீட்டைவிட்டு எங்கும் அகல மறுத்துவிட்டார்.
அப்பாவின் நிலப்பரப்புகள் இன்று குறுகிவிட்டன. சக்கரங்கள் உருளும் இடங்கள் மட்டுமே
அவர் ராஜ்யம் என்றாகிவிட்டது. முத்துலிங்கமும் சக்கர நாற்காலியும்தான் அவர் துணை.

விதூஷன் இன்று காலையில் இருந்தே கோயிலடிக்கு போவதைப் பற்றிய பேச்சாகவே
இருந்தான். இது அப்பா பற்றவைத்த திரி என எனக்குத் தெரியும். அப்பாவிடம் போனில் பேசும்
போது “அம்மா நாட்டின மரமெல்லாம் பெருசா வளந்து காய்குது தெரியுமோ” என்று
ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பார்.
காலை உணவை முடித்துக் கொண்டு கோவிலடியை நோக்கி நடந்தோம். முத்துலிங்கம்தான்
அப்பாவின் சக்கர நாற்காலியை அந்த கரடுமுரடான வீதியில் தள்ளிக் கொண்டு வந்தான்.
சக்கரங்களின் அதிர்வில் அப்பாவின் உடல் நடுங்கியது. தன் இரு கைகளாலும் நாற்காலியின்
கைப்பிடிகளை இறுக பற்றிக்கொண்டார். அவரின் உடல் தோல் போர்த்திய எலும்புக் கூடாய்
அந்த நாற்காலியில் அமிழ்ந்து அதிர்ந்தது. அவரின் விரல் மொளிகளை வெளித்தள்ளிய நரம்புக்
கோலங்கள் அலங்கரித்தன. அம்மா வளர்த்த செடிகளை எனக்கு காட்டியே ஆக வேண்டும்
என்ன வைராக்கியம் அவர் கண்களில் தெரிந்தது. அம்மாவின் நிழலில் என்றும் ஒதுங்கி வாழ்ந்த
அப்பாவின் மெலிதான உணர்வுகள் இன்று பொங்கி எழுவதைப் பார்க்கிறேன்.

எங்கள் பரிவாரம் வீதியைவிட்டு இறங்கி கோயில் மண் திட்டை தாண்டி கோயிலில் இருந்து
ஒதுக்குப் புறமான மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதியை வந்தடைந்தது. முத்துலிங்கம் தன்
முதிர்வயதில் அப்பாவின் சக்கர நாற்காலியை மண் பூமி மீது தள்ளிச்செல்ல சிரமப்படுவதை
கண்டு நானே அப்பாவின் தேரோட்டியானேன்.

மரங்களின் அடர்த்தியாலும் இளம் தென்றல் காற்றின் வீச்சிலும் நாங்கள் நின்ற இடம் குளு
குளு என்று இருந்தது. அப்பாவிற்கு இந்த இடம் புதிதல்ல. மாதத்தில் இரு முறையாவது
முத்துலிங்கம் அப்பாவை அங்கு கொண்டுவருவானாம். மூன்று பெரிய மாமரங்களுக்கு நடுவே
வளரும் அந்த ஐந்து வெண்ணைப்பழ மரங்கள்தான் அப்பாவிற்கு அம்மாவின் நினைவிற்கு
உருவங்கொடுக்கும் தூண்கள். அவர் முழுமைத்துவம் அடையும் இடம் இது. ஒன்றை
இழந்தபின்தான் அந்த இழப்பு உருவாக்கும் வெற்றிடம் மாந்தருக்கு புரிகிறது.
அத்தருணங்களில் அந்த சூனியத்தின் இருளும் நிசப்தமும் எந்தத் தனியனையும் மெதுவாய், ஒரு
மலைப்பாம்பின் வாய்க்குள் நசிந்து தீனியாய் மறையும் மந்திக்குரங்கைப் போல், மென்று
விழுங்கிவிடும்.
அப்பா மெதுவாய் என் பக்கம் திரும்பி “இன்னும் ஒண்ணு ரெண்டு பழங்க தப்பி
இருக்குதுமவனே.. …கோவிலடியில்ல? பசங்க ஒண்ணையும் விட்டு வைக்கமாட்டானுங்க……
முத்து, தம்பிக்கு ஒண்ணாவது பறிச்சு தர முடியுமானு பாரு…….”.
முத்துலிங்கம் கோவிலடியில் விளையாடிக்கொண்டிருந்த சில சிறுவர்களை அழைத்து மரத்தில்
ஏறி பழங்கள் கிடைக்குமா என பார்க்கச் சொன்னான். அவனுக்கு மரமேறும் வயது
மலையேறிவிட்டது.
தங்கள் சேவையை நாம் எதிர்பார்த்தது சிறுவர்களுக்கு ஒரு குதூகலத்தை
அளித்திருக்கவேண்டும். ஒவ்வொரு மரமாக ஏறி இலைகளை விலக்கி வெண்ணைப் பழ
வேட்டையில் இவரும் மூழ்கினர். “ஒண்ணும் இல்லீங்க …..போன வெள்ளி சும்மா பழங்க
கொட்டோ கொட்டுணு கொட்டிடிச்சி….ஐயா லேட்டுங்க” என்று அங்கலாய்த்தான் ஒருவன்.

“நல்ல பாருங்க தம்பிமாரே….உச்சங்கொப்பில மறைஞ்சுண்டு இருக்குமோ இல்லியோ?” என்ற
என் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது.
ஒரு சிறுவன் உச்சங்கிளையை வளைத்து அங்கு நீண்ட காம்பில் தொங்கும் அந்த கடைசிப்
பழத்தை மெதுவாய் பறித்து “இந்தாங்க….. புடிச்சுக்குங்கோ” என கவனமாய் என் கைகளுக்குள்
வீசினான். அது மணலில் வீழ்ந்து சிதறிவிடாமல் நான் மெதுவாக பற்றிக்கொண்டேன்.
அம்மா என்னமாய், முழுக் குடும்பமுமே எதிர்த்தும், ஒரு வாஞ்சையுடன் இதை வளர்த்தாள்.
சொந்த வீட்டில் இருந்து அனாதையாக்கப்பட்ட இந்த மரங்கள் ஒரு வேட்டையுடன் வளர்ந்து
இன்று கம்பீரமாய் நிற்பதைப் பார்க்க அம்மாவிற்கு கொடுத்து வைக்கவில்லை. பசுமைப்
புரட்சிக்கு அம்மாவின் பங்களிப்பு இது என எண்ணத் தோன்றிற்று.

மரத்திலேயே முற்றிப்பழுத்த அந்த வெண்ணைப்பழம் இன்றோ நாளையோ நிச்சயம் தனக்கு
அந்த தாய்மரத்திற்கும் இடையே இருந்த உறவுகளை அறுத்துக் கொண்டு அந்த மண்ணில்
வீழ்ந்திருக்கும். அது மண்ணில் புதைந்து மீண்டும் ஒரு செடியாக மாறி ஒரு புதிய சந்ததியை
உருவாக்கியிருக்கலாம் அல்லது யாரோ ஒரு பையனின் பசிக்கு இரையாகி எங்கோ
அனாதரவாய் வீசப்பட்டு தன் வாழ்வை கரைத்திருக்கும்.
என் கையிலிருந்த வெண்ணைப்பழத்தின் ஸ்பரிசம் என்னை அந்த நாட்களுக்கு இழுத்துச்
சென்றது. அம்மாதான் எத்தனை சமாளிப்புகளுக்கு மத்தியில் ஒரு தீர்வைக் கண்டடைந்தாள்!
எதிர்புகளின் வலியை அவள் மட்டுமே ஸ்பரிசித்தாள். அப்பாவும் மாமாவும் பங்கஜம் மாமியும்,
ஏன் நானும், அந்த நிகழ்வின் வெறும் பார்வையாளர்களே.
அப்பாவை திரும்பிப் பார்க்கிறேன். பெட்டியிலடைத்த பொம்மையை பிரித்து தன் கைகளில்
திணிக்கும்வரை காத்திருக்க முடியாத ஒரு குழந்தையின் பரபரப்பு அவர் கண்ணில். பழத்தை
மெதுவாக அவர் கைகளில் பாரம்கொடுக்கிறேன். ஒரு அதீத பக்தியுடன் இரு கைகளாலும்
வாங்கிக்கொள்கிறார். நடுங்கும் கைகளில் பொத்திய பழத்தை மெதுவாய் தன் முகத்தருகே
கொண்டு வந்து முகர்ந்து ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுக்கின்றார். ஆத்மார்த்தமான அந்த
கணங்களை அமைதி ஆட்கொள்ளுகிறது. அவர் கண்கள் பனிக்கின்றன. கண்களை இறுக மூடி
ஒரு தியான நிலையில் அவர் அம்மாவை நினைத்து மெதுவாய் “ஜானகி” என்கிறார். இறுக
மூடிய கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது.

அப்பாவின் நடுங்கும் கைகளில் அடங்கி இருந்த வெண்ணைப்பழம் உருகிற்று!

கல்கி 07-10-2022 இதழில் வெளிவந்தது

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑