வாசித்தது:- துளசி
ஆசிரியர்:- மகரிஷி
மணியன் மாத இதழ் 1987
ராணிமுத்து வரிசையில் மகரிஷியின் பத்ரகாளி சிறுவயதில் படித்தது. இந்த புத்தகமும் கூட மீள் பார்வை தான். வீடு மாறி வீடு மாறி வந்தது, பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களின் புத்தகங்கள் ஷெல்பிலும், நான் சேகரித்திருந்த புத்தகங்கள் எல்லாம் லாப்டிலும்,(நவீன பரண்) காலம் உருண்டோட எனது புத்தகங்கள் எல்லாம் ஷெல்பிலும் பிள்ளைகள் புத்தகங்கள் எல்லாம் லாப்டிலுமாக ஆக எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
பிடித்தவரை சந்திப்பதற்காக வளைவுகளற்ற நீண்ட நெடுஞ்சாலையில் வாகனங்களின் குறுக்கீடின்றி மனதிற்கு பிடித்த இசையை சுழலவிட்டு ரசித்துக்கொண்டு காரில் இரவில் தனியே பயணம் செய்யும்போது அவ்வப்போது நெஞ்சின் ஓரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால்…என்று ஊருக்குச் சென்று சேரும் வரை தோன்றிக்கொண்டேயிருக்கும்.
மகரிஷியின் எழுத்தும் அப்படித்தானிருக்கிறது. எடுத்துக்கொண்ட கதையும் கருவும் மாறாமல் ஒரே நேர் கோடாக கொண்டு சென்றிருக்கிறார். கதையின் இறுதிவரை என்னவாகும் என்ற எதிர்பார்ப்போடு நம்மைக் கூட்டிச் செல்கிறார்.
துளசியும் மகாதேவனும் காதலர்கள். இது தெரிந்தும் ஞானசம்பந்தம் என்பவன் துளசியைக் காதலிப்பதாக சொல்ல (ஒருவனுக்கு ஒருத்தி காதலுக்கும் பொருந்தும் தானே) அவள் மறுக்க, அதனால் ஒருமுறை துளசியும் மகாதேவனும் சாலையில் நடந்து செல்லும்போது ஞானசம்பந்தம் காரினால் அவர்களை இடிக்க துளசி காதலனை காப்பாற்ற ஓரமாகத் தள்ளி விடுகிறாள்.
இருப்பினும் அவனுக்கு கால் முறிந்துவிடுகிறது. காதலன் கால்முறிந்ததால் பழிவாங்க நினைக்கும் துளசி ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து தந்திரமாகப் பேசி அவனது அறையிலேயே சந்திக்கிறாள். அப்போது மேஜை மீதிருக்கும் பூ ஜாடியினால் அவனைத் தாக்கிவிடுகிறாள்.
சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறான். திட்டமிட்டு கொலை செய்ய வரவில்லை, தாக்க வந்தது உண்மை என்ற துளசியின் வாக்குமூலத்தையே வக்கீல் தன் வாதமாக்க அவளுக்கு 7வருடம் சிறைத் தண்டனைக் கிடைக்கிறது.
வேறோர் உலகமான சிறை, அதன் நடவடிக்கைகள், அங்குள்ள பெண்களின் தலைமைப் பதவி, கோஷ்டிப்பூசல், இன்னும் சில புற விரும்பத்தகாத விஷயங்கள் எதுவும் பாதிக்காதவாறும் மன உறுதியுடன் காதலனின் நினைவொன்றையே ஆதாரமாக்கி சிறையிலிருந்து முதுகலைப் படிக்கிறாள்.
துளசி தந்தை இறப்புக்குக்கூட செல்ல மனமின்றி தானே காரணம் என்று 3 நாட்களுக்கு உபவாசம் இருக்கிறாள். காதலனோ அவரின் குடும்பத்தினரோ தன்னைப்பார்க்க வராமல் இருப்பது நெருட சிறைக்கு வரும் அண்ணனிடம் கேட்க ஆளுக்கொன்றைச் சொல்கிறார்கள் என்கிறான்.
கையில் எம்.ஏ பட்டத்தோடு தானும் ஒரு பட்டமாக மாறி பறக்கும் சந்தோஷத்தோடு சிறையிலிருந்து விடுதலையாகிறாள்.
மகாதேவன் ஏன் பார்க்கவரவில்லை? துளசி மகாதேவனைச் சந்தித்தாளா?
கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் துளசி என்ற பெயருக்கு ஏற்ப மன(ண)ம் மாறாமல் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பு!!!
துளசி போன்ற பெண்கள் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். பாவேந்தரின் வரிகளைப் பாவையருக்காக சற்றே மாற்றி காளையரின் கடைக்கண் பார்வைக் காட்டிவிட்டால் கன்னியர்க்கு சிறைக்கூடமும் பூங்காவாகும் என்று சொன்னால் தவறில்லை தானே!!!
.“பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களின் புத்தகங்கள் ஷெல்பிலும், நான் சேகரித்திருந்த புத்தகங்கள் எல்லாம் லாப்டிலும்,(நவீன பரண்) காலம் உருண்டோட எனது புத்தகங்கள் எல்லாம் ஷெல்பிலும் பிள்ளைகள் புத்தகங்கள் எல்லாம் லாப்டிலுமாக ஆக எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.” வாழ்த்துக்கள் , மென் மேலும் எழுத..
LikeLike
நன்றிகள்
LikeLike
வாழ்த்துக்கள்
LikeLike