போகாத இடந்தனிலே

உலகநீதிபாடலில் அடுத்தது: ‘போகாத இடந்தனிலே போக வேண்டாம்’ இதை விளக்கும் கதையைப் பார்ப்போம்.

‘போகாத இடந்தனிலே போகவேண்டாம்’

[சித்திரம்: திரு.கிறிஸ்டி நல்லரத்னம்,மெல்பேர்ன்,ஆஸ்திரேலியா.]

ஒரு பெரிய காட்டில் நிறைய விலங்குகள்  இருந்தன. அதுல யானை, புலி, மான், முயல், குரங்கு, சிறுத்தை,கரடி, நரி, காட்டெருமை இன்னும் நிறைய விலங்குகள் எல்லாம் இருந்திச்சு. அந்த காட்டில விலங்குகள் வழக்கமா நடந்து போகிறதால வழித்தடம் உண்டாகியிருந்திச்சு. அந்த வழித்தடம் பல கிளைகளாக பிரிந்து காடு முழுக்க இருந்திச்சு.   அதனால விலங்குகள் எல்லாம் வழித்தடம் வழியே எளிதா நடந்து போகும்.  ஆனால்  ஒரு திசையில மட்டும் அந்த தடம் காட்டோட   கடைசி வரைக்கும் தொடராம தடைபட்டிருந்திச்சு. அதாவது எந்த விலங்குமே அந்த எல்லையைத் தாண்டி போனதில்லைங்கறதால அதோட முடிஞ்சி போயிருந்திச்சு.

ஒருநாள் ஒரு முயல் தன்னோட குட்டியோட அந்த வழியில வந்திச்சு. அவங்க கூட பேசிக்கிட்டே குட்டி முயலோட நண்பன்  குரங்கும் வந்திச்சு. அம்மா முயல் அந்த பாதை முடிஞ்ச இடத்தோட திரும்பி வர ஆரம்பித்தது. அப்போ அதனுடைய குட்டி முயல் , ‘ அம்மா, ஏன் திரும்பிட்டீங்க; வாங்க காட்டோட கடைசி வரைக்கும் போகலாம்” அப்படின்னு சொல்லிச்சு. அதற்கு அம்மா முயல்,
“பாதை இதோட முடிஞ்சு போச்சு; இதத்தாண்டி போகக் கூடாது”ன்னு சொல்லிச்சு.

குட்டி முயல், “பாதை முடிஞ்சா என்ன நாம் போவேமே”ன்னுச்சு. “இதுக்கப்பறம் ஏதோ ஆபத்து இருக்கும்னு நெனைக்கிறேன்; அதனாலதான் ரொம்ம காலமா யாருமே இதத்தாண்டி போகலே; யாருமே போகாத இடத்துக்கு போகாம இருக்கறதுதான் நமக்கு நல்லது” அப்படின்னு சொல்லி குட்டி முயல கூட்டிக்கிட்டு திரும்பிடுச்சு;அவங்க கூடவே குரங்கும் திரும்பிடுச்சு.
குட்டி மட்டும் அரை மனசோட திரும்பி திரும்பிப் பார்த்தபடியே வந்திச்சு.  அந்த எல்லைக்கு அப்பால என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கனும்னு அதுக்கு ரொம்ப ஆசை.

அடுத்தநாள் குட்டி முயலும் குரங்கும் ஒன்னா விளையாடிக்கிட்டு இருந்தன. திடீர்னு முயல் வேகமா அந்த தடைபட்ட பாதையில குதிச்சு குதிச்சு ஓட ஆரம்பிச்சது.
குரங்கு , “நில் நண்பா,நில்”ன்னு கத்திக்கிட்டு கூடவே ஓடிச்சு. பாதை முடியிற இடத்துக்கிட்ட வந்து முயல் குட்டிய தடுத்து நிறுத்திய குரங்கு, “இந்த எல்லைய தாண்டி போகக் கூடாதுன்னு உன் அம்மா நேற்றுதானே சொன்னாங்க; வா,திரும்பிப் போயிடுவோம்” ன்னுச்சு.

ஆனா முயல் குட்டி , “என்னத் தடுக்காத நண்பா” ன்னு  தொடர்ந்து குதித்து ஓடிச்சு.
சில அடிகள் போனபின்னே முயல் எவ்வளவோ முயற்சி செஞ்சும் அதோட கால்களை அசைக்க முடியல.
“நண்பா என்னோட கால்கள அசைக்க முடியல,மண்ணுக்குள்ள யாரோ கால்களை  கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருக்காங்க”ன்னு சொல்லி அழுதுச்சு.

நண்பன் ஆபத்திலிருப்பதை தெரிந்து கொண்ட குரங்கு ஒரு மரத்தின் மேல ஏறி,
“ஆபத்து,முயல்குட்டிய வந்து காப்பத்துங்க” அப்படின்னு சத்தம் போட்டிச்சு. இதக்கேட்ட விலங்குகள் எல்லாம் வேகமா ஓடிவந்தன. அதிலும் ஆபத்து என்றவுடனே உதவிட யானைகள் கூட்டமா வந்துவிட்டன. முன்னால் வந்த யானை நிலைமையை புரிஞ்சுக்கிட்டது. “முயல் குட்டி புதை மணலில் கிக்கியிருக்கு;எல்லாரும் தள்ளிப்போங்க”ன்னு விரட்டுச்சு.

யானை ரொம்ப கவனமா தள்ளி நின்றபடியே தன்னோட தும்பிக்கையை நீட்டி லாவகமாக முயல் குட்டிய தூக்கி மெல்ல பின் பக்கமாவே நடந்து  தரையில் முயல்குட்டியை விட்டது;அதற்குள் முயல் குட்டிக்கு மயக்கமே வந்து விட்டது. முகத்தில் தண்ணீர் தெளித்து அதை முழிக்கவைச்சாங்க. ஆளாளுக்கு அதுக்கு அறிவுரை சொன்னாங்க. எல்லாரும் சொன்னது ஒரே கருத்தைத்தான்;”போகாத இடந்தனிலே போகவேண்டாம்” என்பதுதான் அது.
ஒரு இடத்தில் ஆபத்து இருப்பதை அறிந்துதான் பெரியவர்கள் அங்கு போகக் கூடாது என்கிறார்கள்.நாமும் அதைத் தெரிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑