போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

ஓவியம்: திரு.கிறிஸ்டி நல்லரத்னம், மெல்பேர்ன்,ஆஸ்திரேலியா.

ஒரு கோவிலுக்கு அருகில் பெரிய குளம் இருந்தது. அந்த குளத்திலே ஒரு பக்கம் தாமரைக் கொடிகளும் எதிர்பக்கம் அல்லிக் கொடிகளும் வளர்ந்திருந்தன. அந்த குளத்திலே கெண்டை, கெளுத்தி, விரால், குரவை, தவளை, நண்டு, நத்தை, aஆமை, தண்ணீர் பாம்புகள் என்று நீரில் வாழும் உயிரினங்கள் நிறைய இருந்தன. அதில் விலாங்கு என்கிற மீனும் இருந்தது.

இந்த விலாங்குமீன் தந்திரம் தெரிந்த மீன். இதன் தலை பாம்பு போல இருக்கும்; வால் பகுதி மீன் போல இருக்கும். பாம்புகளிடமிருந்து தப்பிக்க பாம்புகளிடம் தலையைக்காட்டி தப்பித்துவிடும். மீன் கூட்டத்திற்கு தன் வாலைக்காட்டி மீன் கூட்டத்தில் சேர்ந்துகொள்ளும். இந்த தந்திரத்தாலே இது மீன் கூட்டத்திலும்,பாம்பு கூட்டத்திலும் 

சேர்ந்து இருக்கும். இதனால் தன்னை ஒரு அறிவாளியாக எண்ணிக் கொண்டு நீரில் வாழும் மற்ற உயிரினங்களை பற்றி அவை இல்லாதபோது மிகவும் தாழ்வாக பேசும். பெரும்பாலும் சேற்றில் மறைந்து கொள்ளும். 

ஏதாவது பாம்பைக் கண்டால், 

“அண்ணே, வணக்கம்”என்று கூழைக் கும்பிடு போடும். அந்த பாம்பு நகர்ந்து சென்றதும்,

” இது கொஞ்சமும் நஞ்சு இல்லாத தண்ணீர்ப் பாம்பு; இது கடித்தால் யாரும் சாகவே மாட்டார்கள்; ஆனாலும் பாம்புங்கிற  பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை” என்று அதைப்பற்றி இழிவாகப் பேசும்.

கெளுத்தி மீனைப் பார்த்தால்,

“எல்லா மீனையும் கொத்தி சாப்பிடும்  நாரை, கொக்குயெல்லாம் உனக்குத் தாடையில் முள் இருக்கறதால  

உன்னைக் கொத்தாமல்  பயந்து ஓடிடும்” என்று புகழ்ந்து பேசும். அது நகர்ந்து போனதும்,

“இதெல்லாம் கொக்கு கூட விரும்பாத ஒரு பிறவி” ன்னு  மற்ற மீன்களிடம் கேலி பேசும்.

எதிரே நண்டு வருவதைக் கண்டால்,

“நண்டு நண்பா, உன்னைப்போல். எனக்கும் கொடுக்கு இருந்தால் எல்லாரும் என்னைப் பார்த்து பயப்படுவார்கள்” என்று பயப்படுவது போல கூறும். அது சென்றதும்,

“கொடுக்கு இருந்தால் மட்டும் போதுமா? இது தலையே இல்லாத முண்டம்தானே;தலையில்லாட்டி மூளை எப்படி இருக்கும்” ன்னு அதன் உருவத்தைக் கேலி பேசும்.

ஆமையைக் கண்டால்,”நண்பா,உன்னைப்போல் பாதுகாப்பான ஓடு யாருக்குமே இல்லை; ஆபத்து வந்தால் ஓட்டிற்குள் 

பதுங்கிக் கொள்வாய்;உன்னை கொல்லவே முடியாது” ன்னு பாராட்டிப் பேசும். அது அகன்றதும்,”இதெல்லாம் நீரிலிருந்து தரைக்குச் சென்றால், இதைத் திருப்பிப் போட்டு ஒரு அடி கொடுத்தால் ஆள் அதோடு காலி’ ன்னு ஏளனம் பேசும்.

விரால் மீனைப் பார்த்தால், “அண்ணே,நீதான் இந்த குளத்துக்கே ராசா. உனக்குத்தான் அதிக விலை தருகிறாங்க; நீதான் பணக்கார மீன்” ன்னு பாராட்டும்.அது போனதும்,”என்ன பெரிய விரால்? என்னோட சதைசுவைக்கு முன்னாடி நிற்கமுடியாது”ன்னு ஏளனமாகப் பேசும்.

இதுபோல எல்லா உயிரினங்களையும் எதிரில் புகழ்ந்து பேசி, அவற்றை போகவிட்டு பறம் பேசுவதைேயே வழக்கமாக 

வைத்திருந்தது.

ஒருநாள் தூண்டில்காரர் ஒருவர் போட்டு வைத்திருந்த தூண்டிலில் இந்த விலாங்கு மீன் மாட்டிக் கொண்டது. குளத்திலிருந்த எல்லா உயிரினங்களையும் கூப்பிட்டு காப்பாறும்படி கெஞ்சியது.

பாம்பு,” நான் நஞ்சு இல்லாத வெறும் தண்ணீர்ப் பாம்பு” ன்னும்,

கெளுத்திமீன்,”என்னோட தலையில் உள்ள முள் உன்னைக் காப்பாற்றாது” ன்னும்,

நண்டு,” எனக்கு

தலை இருந்தால்தானே உன்னைக் காப்பாற்ற மூளை இருக்கும்”ன்னும்,

ஆமை,”நானே ஓட்டுக்குள் ஔிந்து கொண்டு இருக்கேன்” ன்னும்,

விரால்,”உன்னைக் காப்பாற்ற நான் வந்து மாட்டிக் கொண்டால், உன்னை விட்டுவிட்டு பணக்கார மீனுன்னு என்னைப் பிடிச்சுக்கிட்டு போய் 

விடுவர்”ன்னும் பதில் சொல்லி  யாருமே காப்பாற்ற முன்வரவில்லை.

“போகவிட்டுப்  புறம் சொல்லி” விலாங்கு மீன் எல்லாரிடமும் கெட்டபெயர் வாங்கியதால் எல்லாரும் ஒதுக்கிவிட்டார்கள். எனவே, நாமும் இந்த தவறை செய்யாமல் நேர்மையாக வாழ்வோம்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑