The Secret

வாசித்தது:- The Secret
தமிழில் :-கதாநாயகன்
ஆசிரியர்:-ரோண்டா பைரன்
பதிப்பகம்:- மஞ்சுள் பப்ளிங் ஹவுஸ்
விலை:- ரூ599
வகை:-தன்னம்பிக்கை நூல்
மொழிபெயர்ப்பு:- P.S.V.குமாரசாமி

இரகசியம் என்பது பொதுவாக வெளியில் சொல்லாது ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் கனவு ,ஆசை ,கோபம், காதல், இன்னபிற என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் உள்ள ரகசியம் , ஒருவர் தன் இலக்கு நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும் பூட்டிய கதவு, எழும்பி நிற்கும் சுவர், தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சன்னலையும் சாத்திவிடும் உள்நுழையும் பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் ,திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்று (வெற்றிபெற்ற அல்ல) சாதனை படைத்தவர்களை உங்களால் எப்படி சாத்தியமாயிற்று? என விழிவிரிந்து ,வியந்து பார்த்து, கேட்கும் கேள்விக்கு பதிலே இந்த இரகசியம்.தமிழில் ‘கதாநாயகன்’ என்ற பெயரில் P.S.V.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையாக இருக்கிறது.

இனி(ய)இரகசியம் :-
ஆசிரியர் ரோண்டா பைரன் இந்த இரகசியத்தில் தேர்ந்தெடுக்கபட்ட, தற்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னிரெண்டு   சோதனையாளர்கள் தாங்கள் சாதனையாளர்களாக சாதித்ததை, அவரவரின் குறிப்பேடுகள் வழியாக அவர்களின் எழுத்து மொழியாக வாய்மொழியாக தொகுத்துள்ளார்.இடையிடையே நாம் எவ்வாறு முயற்சிக்க வேண்டும். எந்த நிலையிலிருந்தாலும் காலம் கடந்ததாக நினைக்க வேண்டாம்  இன்றே தொடங்குங்கள் உங்கள் முயற்சியை என்று கிட்டதட்ட புத்தகம் முழுவதுமே திரும்ப திரும்ப வருகிறது.ஆனால் அது சலிப்பை ஏற்படுத்தாமல் நம்மை  சந்தோஷத்துடன் மேலும்மேலும்   வாரந்தோறும் காத்திருந்து படிக்கும் தொடர்கதையைப் போல ஆர்வத்துடன் படிக்க வைத்திருக்கிறார் ரோண்டா பைர்ன்.அதற்கு அவருக்கு வாழ்த்துகள்.

கதாநாயனாக ஆவதற்குமுன்:-
ரகசியத்தை அறிந்து வெற்றி பெற்றவர்கள் பலரில் பகிர்ந்து கொண்ட சிலர்.கதாநாயகனாக ஆவதற்கு முன்
எந்த குடும்ப சூழலில் வளர்ந்தார்கள்,  படிப்பு , பார்த்தவேலை,  அவர்களின் கனவு அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி,அதனால் கற்ற பாடங்கள், பாடத்தினால்  முழுவதுமாக அல்லது சற்றே  மாற்றியமைத்துக் கொண்டு  தொடர்ந்த பயணம், அதிலும் வெற்றி பெறும் நேரத்தில் திரைப்படத்தில் வரும் இறுதி காட்சிபோல திடீர் திருப்பம் சோர்ந்து விடாது  அந்நிலையிலும் அயராது கதாநாயகன் எடுக்கும் துணிவான  நடவடிக்கைகள்,  அதனால் பெற்ற வெற்றிகள்.   

வெற்றியினால் வரும் மகிழ்வு, பெயர், புகழைத் தாண்டி அவன் மனதாலும் முழுமையான கதாநாயகனாக ,கல்லிலிருந்து வேண்டாததை உளிகொண்டு நீக்கி  அழகான சிற்பம் உருவாவது போல தன்னைத் தானே செதுக்கிக் கதாநாயகனாகிறான்.

பன்னிருவர் யார்?:-
லிஸ்முர்ரே,ஜி.எம்.ராவ்,லைர்டு ஹாமில்டன்,அனஸ்தேசியா சோரே, பால் ஆர்ஃபாலியா, பீட்டர் பர்வாஷ்,மாஸ்டின் கிப்,
பீட் கேரல்,மைக்கேல் ஆக்டன் ஸ்மித்,லேன் பீச்லீ, ஜான்பால் டிஜோரியோ ,பீட்டர் ஃபோயோ ஆகியோரே இந்த பன்னிருவர்.
இவர்கள்(ஆழ்வார்கள்அல்லர்) அயராத முயற்சியால் தங்களின் கனவை நனவாக்கியவர்கள்.

லிஸ்முர்ரே:-பள்ளிகல்வியைக் கூட தொடர முடியாத லிஸ்முர்ரே போதைப் பெற்றோரை இழந்து, இடும்பை கூர் வயிற்றுக்கு உணவகத்தில் திருடித்தின்று வாழ்ந்தவர் நினைவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற கனவு தோன்றியது. இதைப் படிக்கும் நமக்கே அடேங்கப்பா என்றிருக்க ஆனால் நான்கு வருடங்களில் அவர் கனவு நனவானது. தன் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதால் மிகச்சிறப்பாக விற்பனையாகும் ஒரு புத்தகத்தின் ஆசிரியராகவும், உலகெங்கிலும் உள்ளவர்கள் விரும்பிக் கேட்கும் மிகச் சிறப்பான ஊக்குவிப்பு பேச்சாளராகவும் அவர் ஆகியுள்ளார்.

ஜி.எம்.ராவ்:-மின்சாரமோ தொலைபேசியோ இல்லாத இந்திய கிராமத்தில் பிறந்து இடைநிலை கல்வியில் முதல் முயற்சியில் வெற்றிபெறாதவர் .ஆனால் தனக்கென சொந்த வீடும் நல்ல ஒரு தொழிலும் வேண்டுமென கனவு கண்டவர். முதலில் ஒரு சணல் ஆலையைத்  தொடங்கினார், இன்று விமானநிலையங்கள், மின்சார நிலையங்கள், நெடுஞ்சாலை உருவாக்கம் , பெரு நகரவளர்ச்சித் திட்டம்  என சணல்ஆலையில் உருவாகும் சணலாலும் கூட கட்டமுடியாத அளவுக்கு வர்த்தகம்  வளர்ந்துவிட்டது.
ஓயாத அலைகள் போல  குடும்ப உறவுகள் சரியில்லாது தான் கரையோரம் ஒதுக்கப்படுவது  போன்ற குடும்பத்தில்  பிறந்த லைர்டு ஹாமில்டன் மனதில்  அலைச்சறுக்கு வீரராக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. தன்னுடைய நிலையில் சறுக்காதிருந்து , ஆனால் பலமுறை சறுக்கி, அதனால் ஏற்பட்ட எலும்பு முறிவுகள், காயங்களால் தன்  கனவை மாற்றாது மற்றவர்களுக்கு கனவு நாயகனாக அவரைப்போன்று அலைச்சறுக்கு வீரராக வேண்டுமென்று  நிலையில்லாத அலையில் நிலைத்த வீரரானார்.

மற்றவர்களைப்பற்றி நீங்கள் புத்தகத்தைப் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற மனதை உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்று மன அமைதிப்படுத்த அல்ல 
ஊக்கமது கைவிடேல் என்றே

ஊழை உட்பக்கம் காண்பவராக  முயற்சி !முயற்சி !முயற்சி!  என்றிருந்தால் அதன் பலன் உலகம் உங்களை கதாநாயக(ள்)ன் என்று தானே சொல்லும்!
புத்தாண்டில் உங்கள் நல்ல  கனவுகள் நினைவுகளாகி வெற்றிபெற வாழ்த்துகள். 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: