வாசித்தது:-சாயாவனம்(sayavanam)
வகை:- நாவல் (சாகித்திய அகாடெமி விருது பெற்றது.)
ஆசிரியர்:-சா.கந்தசாமி
பதிப்பகம்:-காலச்சுவடு
பக்கங்கள் :- 200
ராணிமுத்து வரிசையில் சா.கந்தசாமி (துறைவன் என்ற பெயரில்) எழுதிய நாடகக்காரி என்றொரு நாவல் படித்திருக்கிறேன். கதையோ கதைமாந்தர்களோ எவ்வளவு யோசித்தும் சிறிதும் நினைவிலில்லை. அதுஒரு மனக்குறையானது. தேடிக்கொண்டிருக்கும் புத்தகங்கள் வரிசையில் அதையும் சேர்த்திருக்கிறேன்.
இனி வனத்திற்குள் :-
கதாநாயகன்:- சிதம்பரமா , சிவனாண்டித்தேவரா, காடா என்றால் ஐயமின்றி காடுதான்.
கதை:- சிதம்பரம் குழந்தையாக இருக்கும்போதே அவன் அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்று விடுகிறாள். உருவத்திலும் செல்வத்திலும் வளர்ந்தவனாக திரும்பிவரும் சிதம்பரம், சாம்ப சிவத்திற்கு சொந்தமான சாயாவனத்தை விலைக்கு வாங்கி கரும்பாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று எண்ணத்துடன் வருகிறான்.
தோப்பின் மேற்பார்வையாளர் சிவனாண்டித்தேவர் ஒருவகையில் சிதம்பரத்திற்கு மாமா முறை அவரின் துணையோடு அந்த தோப்பை அழித்து தான் கொண்டுவர இருக்கும் கரும்பாலைக்கான அத்தனை வேலைகளையும் செய்துகொள்கிறான்.
சாயாவனத்தை கரும்பாலையாக மாற்றம் செய்ய எடுக்கும் முயற்சிகளின் ஊடே கதையை அழகாக தோப்பில் உள்ள கொடிகளைப் போல பின்னி கொண்டு சென்றிருக்கிறார் சா.கந்தசாமி .
கிராமத்தின் குணாதிசயங்கள் என்று சில இருக்கும். அதை அப்படியே கதையின் இடையிடையே சின்னச்சின்ன உரையாடல்களாக போகிற போக்கில் தெளித்துவிட்டாற் போல இறுதிவரை அழகாக கொண்டுசென்றிருக்கிறார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் கதையின் முதல் பத்தியில் சிதம்பரம் காட்டின் முகப்பில் நின்று வானத்தை ஊடுருவி நோக்க, பறவைகள் தனியாக, கூட்டமாக பறந்து சென்றிட சிறிது நேரத்தில் வானம் நிர்மலமாகிறது . அடுத்துஅவன் தன் வேலை நிமித்தமாக காட்டை ஆராயத்தொடங்க…
நாம் இனி அவன்செயல்களை உற்று நோக்குவோமே, காட்டை அழித்து கரும்பாலை அமைக்கும் தன்னுடைய நோக்கத்திலிருந்து மாறாதவனாக, தன்னுடைய செயலால் வரும் விளைவுகளால் அவ்வப்போது சற்றே மனம் தடுமாறினாலும் பார்வையாளனாக மட்டுமே எல்லாவற்றையும் கடந்து போகிறான். கதையை இந்த நேர்கொண்ட பார்வையுடன் படித்தால் கருமமே கண் ஆயினார் என்று நாம் சிறப்பாக கொள்ளலாம்.
ஆனால் யாரும் பராமரிக்காமல் தானே வளர்ந்த தோப்பில் மாடுமேய்க்கும் சிறுவர்கள், ஊரில்உள்ளோருக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருமரத்தின் புளி(ருசிக்காக) விதவிதமான புளிய மரங்கள், மூங்கில் குத்துகள், மாமரங்கள், தூங்குமூஞ்சிமரங்கள் ,நொச்சி,காரை ,கொய்யா இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அங்கு வாழும் சின்னஞ்சிறு வண்ணத்துபூச்சி, குருவி, காகம், அணில் , குரங்கு , நரி இவற்றின் வாழிடங்களாக பல தலைமுறைகளைக் கடந்த ஒரு தோப்பை அழிக்கமுயல அவற்றுடன் போராடும் சிதம்பரத்தின் போராட்டகுணம் இயற்கையை அழிக்கிறானே என்ற கோபத்தை தாண்டி அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதாகவே நம்மை யோசிக்க வைக்கிறான்.
ஒருவரிடமும் சொல்லாமல் சிதம்பரத்தின்அம்மா ஊரை விட்டு சென்றதற்கான காரணம், பிழைக்கச்சென்ற இடமான இலங்கையிலும் இல்லாமல், பிறந்த ஊரான திட்டக்குடியிலும் இல்லாமல் அவன் சாயாவனத்தை வாங்கவும் , ஊரில் குலத்திலும் , பணத்திலும் , உயர்ந்தவர்கள் என்று தங்களை கருதுபவர்கள் முன் தானும் உங்களுக்கு சமமானவன் என்று சொல்லாமல், செயலால் நடந்துகொள்ளும் விதம் இதற்கான காரணங்களை அங்கங்கு மறைபொருளாக, ஒரு சிலவார்த்தைகளாக கோடிட்டிருப்பார்.
வனத்தில் ரதித்தவை :- மரங்களை வெட்ட உதவிக்கு வரும் மாடுமேய்க்கும் சிறுவர்களின் அப்பாவிடம் தன்னிடமே தங்கவைத்து அதிக கூலியும் தருவதாகச்சொல்ல கூலிஎன்னங்க கூலி என்று மறுத்து தன் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்துவது வீடுபற்றியெரிந்த நிகழ்வைச் சுட்டி அதோடு சிவனாண்டித் தேவர் சொல்லும் புராண உதாரணம்.
பண்டமாற்றாக இருந்த கிராமத்தின் வியாரத்தை சிதம்பரம் பணவர்த்தகமாக்க, மாற்ற ,பணத்தை எண்ணி கணக்கிடத் தெரியாததால் கடைக்கார்கள் மறுக்க , கிராமத்தினர் அவனிடம் சண்டைக்குவர அதற்காக அவனே ஒரு கடையைத் திறப்பதும் படிப்பதற்கு சுவாரசியமாகிறது.
வெட்டிய மரங்கள் கொடிகள் மலையாக குவிந்திட அதனை தீயிட்டு அழிக்கும் வேளையில் தோப்பில் வேலை செய்வதற்கென கட்டபட்ட சிறிய வீடும் சேர்ந்து எரிந்துவிட தான்செய்த தவறால்தான் என அவன் மனது ஏற்கமறுத்து தன்திட்டத்தின் சிலஅம்சங்கள் தன்னை மீறிக்கொண்டு நடந்துவிட்டன அவ்வளவுதான் என்றே நினைப்பதை என்ன சொல்ல!
கதையின் முடிவில் ஆற்றுக்கு குளிக்க வரும் ஆச்சி ஒருவர் சிதம்பரம் அனுப்பிய கடை புளி சரியில்லையென சொல்ல, வேறு தருகிறேன் என இவன் விடையிறுக்க ஆச்சியோ எல்லாவற்றையும் தான் கருக்கிவிட்டாயே எனச் சொல்லிக்கொண்டே ஈரப்புடவையை பிழிந்தபடியே ஆற்றோரமுள்ள கோயிலுக்குள் சென்றுவிடுகிறார்.
சிதம்பரம் அவரைப் பார்த்தபடி நின்றுவிடுகிறான். சிதம்பரம் சாய்த்த வனம் வனம் (சாயா) நிழல் ஆலை நிஜமாகிறது! வானத்திலிருந்து ஒலித்தால் அசரீரி ஆச்சியின் வார்த்தைகள் வனத்தின் அசரீரி சரிதானே!
Leave a Reply