இன்பநினைவு

(வாசித்ததில் ரசித்தவர்:அன்புமொழி)

வாசித்தது :- இன்பநினைவு
ஆசிரியர்:- அகிலன்
பதிப்பகம்:-தாகம்
பக்கங்கள்:-136

அகிலன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து வரிசையில் வாழ்வு எங்கே? நெஞ்சின் அலைகள், துணைவி, சிநேகிதி பால்மரக் கட்டினிலே இந்தகதைகள் எல்லாம் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. இதில் பால்மரக்காட்டினிலே ரப்பர் மரத்தோட்டங்களில் வேலை செய்பவர்களைப் பற்றியது.

இந்த புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன. அகிலன் அவர்களின் முதல்கதை ‘சந்திப்பு’ என்றும் அடுத்து மற்றொரு கதை இன்ப நினைவு.

இதுவரை எந்த இதழிலும் பிரசுரமாகாத  கதைகள் என்று முகப்பிலேயே தெரிவித்துவிடுகிறார்கள்.
இரண்டு கதைகளுமே எளிதில் கதையின் முடிவை தெரிந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. ராணிமுத்து வரிசையில் படித்த புத்தகங்களின் வழியே அவரின் எழுத்துக்கு ரசிகையானேன். இருப்பினும் அவர் எழுதிய முதல் கதை என்ற பெருமையுடன் இந்த புத்தகத்தை வைத்திருக்கிறேன்.

‘மங்கியநிலவு’என்ற பெயரில் முதல் தொகுப்பில் வெளியிட்டு பிறகு ‘இன்பநினைவு’ என்ற பெயரில் சில மாற்றங்களுடன் வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த கதையானது சுதந்திர போராட்டமும் அதனால்  ஈர்க்கப்படும் இளைஞன் ஒருவன் வாழ்வில்  உண்டாகும் மாற்றங்களைக் கொண்டு எழுதப்பெற்றது. சுதந்திரதினம் நெருங்கிவரும் நாளில் இந்தப்புத்தகப் பதிவு பொருத்தமென நினைக்கிறன்.

ரசித்தது:- புத்தகத்தில் அகிலன் அவர்களைப் பற்றிய தகவல்களில் எழுத்தாளர், வாசகர் பற்றி அவர் சொல்லியிருக்கும் கருத்து:- ‘வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதைஎழுவது எழுத்துப் பணியாகாது எதுபிடிக்கவேண்டுமென்று ஆசிரியர் நினைக்கிறாரோ, எதைவெளியிட வேண்டுமென்று  அவர் உள்ளம் துடிக்கிறதோ, அதை வாசகர்களுக்கு பிடிக்கும்வகையில் எழுதவேண்டும்.’ இந்த கருத்தை ரசித்ததால் இதையே வாசித்ததில் ரசித்ததாக பதிவிட்டிருக்கிறேன். கதையில் ரசித்ததைதான் எழுதவேண்டுமா என்ன? 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑