அறிவியல் விளையாட்டு

(வாசித்ததில் ரசித்தவர்:அன்புமொழி)

வாசித்தது:-அறிவியல் விளையாட்டு
ஆசிரியர்:-எடையூர் சிவமதி
பதிப்பகம்:-கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்:-128

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆராய்ந்து அறியும் இயல் அறிவியல். வள்ளுவர் வாய்மொழியில் சொல்வதானால்,

 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

ஆன்மீகமோ,அறிவியலோ, கருத்துகளோ ,கணிதமோ, கதையாக, பாட்டாக, விளையாட்டாக குழந்தைகளிடம்  கற்றலை விதைத்தால் அது அவர்களை அறியாமலே மனதில் ஆழப்பதிந்துவிடும். மீண்டும் மீண்டும் எதைச்செய்ய சொல்கிறார்களோ அதிலிருந்து அவர்கள் எந்தத்துறையை விரும்புகிறார்கள் என்பதை  அறியவும், அதை ஊக்குவிக்கவும் எளிதாகிடும்.

‘அறிவியல் விளையாட்டில்’ நூலாசிரியர்  எடையூர் சிவமதி  அறிவியல் கருத்துகளை அதன் நிரூபணங்களை வீட்டில் இருக்கும் எளிமையான பொருள்களான பேப்பர், கண்ணாடிதம்ளர், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டேபிள், மெழுகுவர்த்தி, கண்ணாடி புனல், அளவுகோல், தீக்குச்சி, பேனாரீபில் , பழையபோஸ்ட் கார்டு , ஈர்க்குச்சி இவை போன்றவற்றைக் கொண்டு  சின்னச்சின்ன செய்முறையில் விளையாட்டாக கற்பித்திருக்கிறார். அதற்காக அவருக்கு பாராட்டுகள்.

புத்தகத்தை குழந்தைகளுக்காக என்ற முறையில் எழுதியுள்ளார். எளிதில் புரியும்படி தகுந்த விளக்கப் படங்களும் இணைத்துள்ள ஆசிரியருக்கு நன்றிகள்.

சிறுவயதில் படித்ததை நினைவூட்டலும் பாடமாக மட்டுமே அறிந்ததை  அதன் செயல்பாடுகளின் வழியே உண்மைகளை அறியும் போது அறிவியலை அறிவதன் அவசியத்தை அறியவைத்தற்கு நன்றிகள். அறிவியல் விளையாட்டில்  55 தலைப்புகள் இருக்கின்றன.

நான் ரசித்த தலைப்புகள் சில:- முதல் தலைப்பே சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை ரசிக்கும் ‘வானவில்லின் ஏழுநிறங்கள்’ என்பதாகும். 

‘பைனாகுலர்‘ – திரைப்படங்களில்  கதாநாயகனை வம்பிழுக்க கதாநாயகி பயன்படுத்துவதாக காட்டப்படுவது.

‘அந்தரத்தில் ஆடும் விரல்’ – எப்படி? என்பதை புத்தகத்தை வாசித்து  தெரிந்து கொள்ளுங்கள்.

‘பாம்புமாத்திரை’ – தீபாவளிக்கு தவறாமல் வாங்குவோமே அதேதான்.

‘நீருக்குஅடியில் தொழிற்சாலை’   – எப்படி சாத்தியம் என்பதை  விளக்கத்துடன் கொடுத்திருக்கிறார்.

‘எட்டிப்பார்க்கும் குட்டிப்பூனை’ – பூனையைப் பிடிக்காத சிறு  குழந்தை இருக்குமா?

‘குதிக்கும் பனிக்கட்டி’ – பனிக்கட்டி கரைவதுதான் இயல்பு .ஆனால் எப்படி குதிக்கும்?

‘நீரில் மூழ்கிய தீக்குச்சியும் எரியும்’ – நீரில் விழுந்தால் தீக்குச்சி அணையத்தானே செய்யும்! எரியும் அதிசயம் எப்படி? எளிய விளக்கத்துடன்.

‘பூவாக மாறும் குச்சிகள்’ – செடி ,கொடி கி்ளையில் பூ பூப்பதுசாத்தியம் குச்சிகள்  பூவாக மாறுவது அழகு.

‘தானாக மேலேறும் மை’ – உறிஞ்சியின் வழியாக பேனாவிற்கு மை போடலாம் ஆனால் எவ்விதம் தானாக மைமேலேறும்.?

‘இரண்டு ஸ்ட்ரா போட்டு நீரைக் குடித்தல்’ – இருமனமும் இணைந்தவர்கள் இரண்டு ஸ்ட்ராபோட்டு ஒரே குளிர்பானம்  குடிப்பதாக கதையில் திரையில்  காட்டப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இது  வேறு சோதனை.

‘காதை அடைத்தாலும் கடந்து வந்த டிக்…டிக்’ – படமல்ல. செவியை மூடினாலும் கேட்கும் சத்தம் எப்படி?

‘வாயுவைப் பயன்படுத்தி செயற்கைத் தீ’ – இதுபோன்ற சோதனைகளை ஆசிரியர் அல்லது ஆசியர் முன்னிலையில் மாணவர்கள் செய்யலாம் என தேவையான எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.

‘ரகசிய எழுத்து’ – இதையும் திரைப்படத்தில் பார்த்திருப்போம். குறியீடு அல்ல.

‘கையில் ஈரம்படாமல் நீருக்குள் இருக்கும் காசை எடுக்க முடியுமா’ – சுவாரசியமாக விளக்கப்படுகிறது.

இறுதி தலைப்பு – அடிபட்டது சேரும்,ஓரத்தில் இருப்பது ஓடும்’ -சுஜாதாவின் கதைகளில் வருவதுபோல் ‘ஙே’ என்று விழிக்கத் தோன்றுகிறதா?

‘அறிவியல் விளையாட்டு’ – நூலிலிருந்து உதாரணத்திற்கு ஒரு தலைப்பும் அதன் செயல்முறை விளக்கமும்.

தலைப்பு :- ‘பேப்பரை மூன்று துண்டாக கிழிக்க முடியுமா?’

எடையூர் சிவமதி- பேப்பரை மூன்று துண்டாக கிழிக்க முடியுமா?

நோக்கம்:- படத்தில் உள்ளது போல் இருக்கும் பேப்பரை மூன்றாகக் கிழிக்க முடியுமா?
தேவைப்படும் பொருள்கள்:- அரை அங்குலம் அகலுமுள்ள இரண்டு  அங்குலம் நீளமுள்ள பேப்பர்.
செய்முறை:-படத்தில் காட்டியுள்ளதுபோல் பேப்பரை  இரண்டு இடங்களில் கிழித்து தொடுக்கிக் கொண்டிருக்கும்படி வைக்கவும்.
அடுத்து இரண்டு ஓரங்களில் உள்ள துண்டுகளைப் பிடித்து மூன்று துண்டுகளாகும்படி பேப்பரை வேகமாக இரு கைகளாலும் இழுக்கவும். இரண்டு துண்டுகளாக மட்டுமே கிழியும்.எத்தனை தடவை முயன்றாலும் மூன்றாக கிழிபடுவதில்லை.

விளக்கம்:-பொதுவாகவே பலவீனமான இடத்தில்  உடைவதென்பது இயற்கை.பேப்பரில் இரண்டு இடங்களில் கவனமாகக் கிழித்தாலும் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்காது. மிகச்சிறப்பான மைக்ராஸ்கோப்பினில்  உதவியால் பார்த்தால் மட்டுமே இந்த வித்தியாசம் தெரியும். அதாவது இரண்டு கிழிசல்களில்  ஒன்றுமட்டும்  எப்போதும் பலவீனமாக இருக்கும். அதனால் இரண்டு பக்கம் பிடித்துக்கொண்டு இழுக்கும்போது பலவீனமான இடத்தில் அறுந்துகொள்கிறது. ஆகவேதான் மூன்றுக்கு பதிலாக இரண்டு துண்டுகளாகின்றன.

அறிவது:-  கிழிக்கப்பட்ட புள்ளிகளில்  ஒன்று எப்போதும் பலவீனமாக இருக்கும். அந்த இடத்தில் கிழிபடுவதால் மூன்றிற்கு பதிலாக இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கின்றன.

ஓன்றே முக்கால் அடியில் ஏழே வார்த்தைகளைக் கொண்ட  திருக்குறள்தானே உலகப்பொதுமறையானது. சிறியவர்களுக்கு கற்றல் திறனை  அதிகரிக்க அதன் செயல்முறை விளக்கங்களை அவர்களுடன் நாமும் இணைந்து விளையாட்டாய் செய்து அறிவோம் அறிவியலை! 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑