கலைஞரின் நகைச்சுவை நயம் (5 ஆம் பாகம்)

ரசித்து வாசித்தது:- கலைஞரின் நகைச்சுவை நயம்.(5 ஆம் பாகம்)
தொகுத்தவர்:- கவிஞர் தெய்வச்சிலை அவர்கள்.

“பூக்கடைக்கு விளம்பரமா?” என்பார்கள். அதுபோல கலைஞரின் நகைச்சுவை நயம் பற்றி  நான் புதிதாக என்ன சொல்ல?
கலைஞரின் நகைச்சுவை நயம் என்பது  உலகமறிந்த ஒன்றுதானே!

இந்த புத்தகத்தில் 50 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். ஒன்றை ஒன்று  மிஞ்சும் வண்ணம் ரசிக்க வைக்கிறது. எல்லாவற்றையும்  பதிவிட ஆசைதான்! என்னைப்போல் நீங்களும் முழுமையாக  ரசிக்க வேண்டுமானால் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

2020 ஆண்டு புத்தகக் காட்சியில் தான் வாங்கினேன்.

என் தந்தை முரசொலியில்  வரும்  கலைஞரின்  உடன்பிறப்புகளுக்கு  எழுதும் கடிதம், கலைஞர் சட்டமன்றத்தில், தொண்டர்களின் திருமண விழாக்களில், பொதுக்கூட்டங்களில்  பேசியது என தான் படித்தவற்றை எல்லாம்  தினமும் பள்ளியிலிருந்து வந்ததும் சொல்லச் சொல்ல  நானும்  முரசொலி படிக்க ஆரம்பித்தேன். அதுவரை கதைகளையும், திரைப்பாடல்களையும் மட்டுமே பொழுதுபோக்காக கருதியது மாறி ரசித்து படிக்கத் தொடங்கினேன்.

‘கலைஞரின் நகைச்சுவை நயம்’ புத்தகத்தில் நான் ரசித்த சில நிகழ்வுகள் உங்களுக்காக:-

சிறுவயதில் தன்பிறந்த நாளுக்கு  முதல் நாள் தனக்கு  வேண்டிய பொருளை  வாங்கிக்கொள்ளுவதற்காக சாமியிடம் சத்தமாக  கோரிக்கை வைக்கிறார் அவரின் அக்கா வந்து ‘சாமி உன் எதிரில் தானே இருக்கு, ஏன் கத்தி சொல்ற’ என்கிறார். அதற்கு கலைஞர் ‘யாருக்கு கேட்கணுமோ அவங்களுக்கு கேட்கணுமே’ என்று திண்ணையில் இருக்கும் தன் தந்தையே குறிப்பிடுவதில் இருக்கும் குறும்பும்..

நான் வைணவ சொற்பொழிவு ஏதும் ஆற்றியதில்லை இருந்தாலும் நெடுமாலை அடைந்தேன் என்று, தனக்கு அணிவித்த நெடிய மாலையை திருமாலுடன்  தொடர்புபடுத்தியது..

மணவிழா ஒன்றில்  மணமக்களை வாழ்த்துவதற்கு  தந்தை பெரியாரும்  சுயமரியாதையும்போல என பட்டியலிட ஆரம்பித்து, இறுதியில் சுலபமாக புரிய வேண்டுமானால் அரசு ஊழியர்களும் கோரிக்கைகளும் போல என்று அவர் சொல்லும் உதாரணமும்…

புதிதாக நாடகம் போட்ட ஒருவர், கலைஞரை தன் நாடகத்தை பார்த்து கருத்து சொல்லும்படி கேட்க, நாடகத்தை பார்க்க சென்ற கலைஞர் நாடகம் தொடங்கிய சிறிது நேரத்திலே தூங்கிவிட்டு, நாடகக்காரரிடம் தூங்குவது கூட ஒரு விமர்சனம் தான் என்று பதியளிக்கும்போதும்..

விழா நடத்துபவர் நேரம் கருதி சீக்கீரம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றநோக்கில் வாழ்த்து மடலை வாசித்ததாக கருதிக் கொள்ளவும் என்று கூற, பின்பு பேச எழுந்த கலைஞர் மலர் கீரீடத்தை சூடிக் கொண்டதாகவும், தான் பேசியதாகவும் கருதிக் கொள்ளவும் என்று கூறிவிட்டு, தனக்கு வழங்க வேண்டிய பணமுடிப்பை வழங்கிவிட்டதாக கருதிக்கொள்ளாமல் கொடுத்துவிடுமாறு சொல்லி  முடிக்கும் விதமும்.. 

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய பிறகு  தேர்தல் கூட்டத்தில்  பேசும்போது கலைஞர் பொய்  சொல்கிறார் அவரை நம்பாதீர்கள் என்கிறார்; கலைஞரோ ‘இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் பெண்கள் எல்லாரும் அழகானவர்கள் என்று சொல்கிறேன், இதைத்தான் எம் ஜி ஆர் பொய் என்கிறார்’ அவரது பாணியில் அழகாக திருப்பிவிடும்போதும்…

“விலை மதிக்க முடியாதது” என்பது இந்த புத்தகத்தில் உள்ள முதல் தலைப்பு; இதை படிக்கும் அனைவருமே உண்மை என ஒப்புக்கொள்வோம். தமிழர்கள் பேரவைகளின் சார்பான அழைப்பை ஏற்று கலைஞர் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா  சென்று தாயகம் திரும்பினார்கள்.  முதன் முதலாக வெளிநாடு சென்று வந்ததால் தலைவரிடம் விலை மதிப்புள்ள பொருட்கள் நிறைய இருக்குமென  நினைத்த சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவர், 

“தங்களை சோதனை இ்டலாமா ?” என கேட்க 
“தாராளமாய் “என கலைஞர்
“உங்களிடம் விலைஉயர்ந்த  பொருட்கள் உள்ளனவா ?”அதிகாரி
“ஆம்”கலைஞர்
“நீங்களே பட்டியலிட்டு சொல்லிவிட்டால் நல்லது”அதிகாரி

“பட்டியலிடத்தேவையில்லை, ஒன்றே ஒன்றுதான்  உள்ளது அதுவும் விலை மதிக்க முடியாதது”

“என்ன சார் அது?”

என்னிடம் உள்ள தமிழ். ஒன்றுதான்”.

உண்மைதானே!

தற்போது அவ்வையார்  இருந்தால்  கலைஞர் என்றால் தமிழ் !!! தமிழ் என்றால் கலைஞர்!!! என்றுதான் சொல்லியிருப்பார்.

கலைஞரின் பிறந்த நாளில் இந்த பதிவை பகிர்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். என் தந்தை விண்ணிலிருந்து பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார் என நம்புகிறேன்! 

4 thoughts on “கலைஞரின் நகைச்சுவை நயம் (5 ஆம் பாகம்)

Add yours

  1. கலைஞரின்….. தமிழ்ப்புலமையை பாராட்டும் போது ஔவையார் இருந்திருந்தால்…. தமிழ் என்றால் கலைஞர் என்று கூறுவார் என்று சுட்டி இருப்பது…. சிறப்பு…. அதுபோல அவரின் நகைச்சுவை…. சிலேடை பேச்சு…. அவருக்கு நிகர் அவரே…. அன்று படித்த முரசொலி….அதை அப்பா நம்மிடையே பகிர்ந்த நினைவுகள்.,… மறக்க முடியாத பசுமையான நினைவுகள்….

    Like

Leave a reply to அன்புமொழி Cancel reply

Create a website or blog at WordPress.com

Up ↑