வாகன மண்டபம் (அத்யாயம் 2)

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)

முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்தியாயம் 1,

வாகன மண்டபத்தில் ஒரு குடும்பம் தங்கி சில வருடங்களாக பொங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்த கோவில் கட்டியதில் முக்கியமான கொத்தனார் முத்துசாமியும் அவர் மகன் துரைராஜூவும்தான் அவர்கள். வேறயாரும் அவர்களுக்குக் கிடையாது. துரை அண்ணா எஸ்எஸ்எல்சி யோடு நிறுத்தி விட்டு கும்பகோணம் போய் ரேடியோ மெக்கானிசம் படித்து வருவார்; அதுவும் அரை நாள்தான். மற்றபடி மாமிகள் படிப்பதற்காக எல்லா வார, மாத பத்திரிக்கைகள், சிறப்பிதழ்கள் எல்லாம் வாங்கி  சர்க்குலேஷனில்  கொடுப்பார். அப்புறம் பம்ப் ஸ்டவ் வைத்து சமையல். நான் அங்கு போவது புத்தகம் படிக்கத்தான்; இன்னும் சில பசங்களும் வருவார்கள். அந்த ஊரில் அதுதான் எனக்கு சரியான பொழுது போக்கு.

அப்பாவுக்கு டெல்லிக்கு மாறுதல் வந்தபின் அந்த அரையாண்டு விடுமுறை சந்தோஷம் இல்லாமல் போய்விட்டது. கோடை விடுமுறையில் வந்தால் கூட இரண்டல்லது மூன்றுநாள்தான்; எல்லார் வீட்டுக்கும் போகனுமே. இப்போது நீட் தேர்வு எழுதிவிட்டு வந்திருக்கிறேன். சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில்தான் சேரப்போகிறேன். அதுவரை பாட்டி வீடும், பெருமாள் கோவிலும், வாகன மண்டபமும்தான். வாகன மண்டபத்தில் துரை அண்ணா இல்லை; கல்யாணம் ஆகிவிட்டதால் வெள்ளாளத் தெருவில் ஒரு வீட்டில் குடியேறிவிட்டார். .

பாட்டி கொடுத்த முறுக்கையும் காபியையும் குடித்துவிட்டு பெருமாள் கோவில் நோக்கிப் போனேன். பட்டாச்சாரியார் சேஷாத்ரியும் மடைப்பள்ளி ரங்கனும் டெல்லி காற்று மாசு பற்றிக் கேட்டார்கள். கோவில் மெய்க்காவல் கோவிந்தசாமி அப்படியேதான் இருக்கிறார்; தான் உண்டு, தன் எண்ணெய் தூக்கு உண்டு என்று. கோவில் நடை திறப்பதும் பூட்டுவதும் அவர் வேலை. எல்லா சன்னதியிலும் விளக்குகளை பராமரிப்பது அவர் வேலை. அன்றாடம் காலையிலும் மாலையிலும் மங்கல வாத்யம் வாசிக்க வேண்டும். சாமிப் புறப்பட்டின் போது முன்னே எடுத்துச் செல்லும் ஒற்றை தீவிட்டிகள், மூன்று பந்தம் எரியும் சூல தீவிட்டிகள் எல்லா வற்றுக்கும் அவ்வப்போது பார்த்துப் பார்த்து கருகாமல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

இரவு ஏழரை மணிக்கெல்லாம் அர்த்தஜாமம் முடித்து நடை சாத்தத் தொடங்கினார்கள். பெரிய சாவிக் கொத்துகள் இரண்டு, கேள்விக் குறி போன்று வளைந்த ஒரு கம்பி சகிதம் கோவிந்தசாமி தொடர ஒவ்வொரு சன்னதியாக ரெங்கன் மணியோசை யோடு போய் பட்டர் அந்த வேலையை செய்தார். வரிசையாக  ஒவ்வொன்றாக பூட்டிக் கொண்டே வந்து கடைசியாக ராஜகோபுரத்தையும் பூட்டிவிட்டு கிளம்பினார்கள். ராஜ கோபுர கதவு சாவியை ரங்கன் பத்திரமாக இடுப்பில் சொருகிக் கொண்டு போனார்.

அரைகுறை நிலவொளியில் வாகனமண்டபப் படிகளில் உட்கார்ந்து பழைய நினைவுகளை அசை போட்டேன். வாகன மண்டபத்தின் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. எனக்கு குழப்பம்; யாராக இருக்கும். 

படிளில் ஏறிச் சென்று காது கொடுத்து கேட்டேன். இந்தியில் அவர்கள் பேசியதைக் கேட்ட எனக்கு தலை சுற்றியது.

இரவெல்லாம் அந்த இந்திப் பேச்சு திரும்பத் திரும்ப நினைவில் வந்து கொண்டே இருந்தது. இந்த குக்கிராமத்தில் வாகன மண்டபத்தில்  எப்படி இந்திக்காரர்கள் வந்தார்கள்; இவர்களுக்கு இங்கு என்ன வேலை என்பது எனக்குத் தெரிய வில்லை. ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டிருந்தது போல சதித்திட்டத்தோடுதான் வந்தார்களா.

அவர்கள் பேசியதை தமிழில் மொழி பெயர்த்தால் இதுதான்.

” ராம், நமக்கு இங்கு அறுவடை எந்திர வேலை இன்னும் மூன்று நாள்ல முடிஞ்சிடும், அதுக்குள்ள நம்மளோட திட்டத்த முடுச்சிடனும். சரியா மூனாவது நாள் நாம கௌம்பிடனும்”

“நாளைக்கு எப்படியும் மோல்டு எடுக்க அச்சு ரெடி பண்ணிடலாம். கும்பகோணத்துல போய் அதை செய்து வந்திட்டால் முக்கால் வாசி வேலை முடிஞ்சா மாதிரி. அப்பறம் ஐட்டத்த கைப்பத்திட்டு கிளம்ப வேண்டியதுதான்”

இது ஒன்னும் முழுசா புரியலைன்னாலும் ஏதோ சதின்னு மட்டும் தெரியுது.

மறுநாள் பஜனை முடிந்து பொங்கல் சாப்பிட்டதும் காவிரியில் குளிக்கப் போகுமுன் வாகன மண்டபத்தில் நுழைந்தேன்.  யானை, குதிரை, சிம்மம்
வாகனங்கள் இடது பக்கமும் வலதுபக்கமும் வரிசை கட்டி இருந்தன. நேரெதிரே கருடாழ்வார் வாகனம் மண்டிபோட்டு இரு கைகளையும் முன்னே ஏந்தியபடி இருந்தது. 
ஒரு படுக்கை விரிப்பு மடித்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு தலையணைகள், மடிக்கப்பட்ட போர்வைகள் இருந்தன. ஒரு சார்ஜபிள் எமர்ஜென்சி விளக்கும் இருந்தது. பூட்டப்பட்ட ஒரு தகரப் பெட்டி, சில இந்தி செய்தித்தாள் ஸ்கெட்ச் பேனாவால்  வரைபடங்கள் வரையப்பட்டு கிடந்தது. வேறு எதுவும் அங்கில்லை. இதை வைத்து அவர்கள் யாரென்று கணிக்க முடிய வில்லை.

மடைப்பள்ளி ரங்கனிடம் இவர்களைப் பற்றி கேட்டேன்.

” ரங்க மாமா, வாகன மண்டபத்தில் இருக்கறது யாரு”

” கோவில் தர்மகர்த்தாவுக்கு வேலை செய்ய வந்திருக்காங்க. அவரோட நெல் அறுவடை எந்திரம் ரிப்பேராயிடுத்து; இவங்க கம்பெனியோட ஆளுங்க. தர்மகர்த்தா செல்வாக்கைப் பயன்படுத்தி இவங்களை கூட்டியாந் திருக்கார். பழுதான பாகத்தை கும்பகோணத்தில் போய் லேத்து பட்டறைல குடுத்து தயார் செஞ்சிகிட்டு வந்து மாட்டி ஓட விடுவாங்களாம்”

” மாமா, சும்மா யாருன்னு கேட்டதுக்கு ஒரு பெரிய படமே ஓட்டிட்டிங்க”

எனக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ள வில்லை. ஆர்வத்தை அடக்க முடியாமல் உண்மையைக் கண்டு பிடிக்க மீண்டும் வாகன மண்டபத்துக்குள் போனேன். 

அவர்களின் பொருட்களை ஆராய்ந்தேன். இந்தி செய்தித்தாள்களை புரட்டினேன். வட்டவில் போல பெரிதாக வரைந்து வைத்திருந்தார்கள். அரை வட்டத்தை விட கொஞ்சம் பெரிசு. சிவப்பு  ஸ்கெட்ச்  பேனாவினால் கிறுக்கல்கள் ; அறுவடை எந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம்; ஒன்றும் தோன்றவில்லை.

தகரப் பெட்டி பூட்டியிருந்ததால்  நகர்த்திப் பார்த்தேன்; கனமாக இருந்தது. அது ஒரு டூல்ஸ் பெட்டியென்று தோன்றுகிறது. ஒரு களிமண் உருண்டை இருந்தது. ஒன்று மட்டும் எனக்கு நன்றாகத் தெரிந்தது; ஏதோ தப்பாகத் தெரிகிறது.

சாயங்காலம் கடைத்தெருப் பக்கம் போனேன். சாம்பு ஐயர் ஹோட்டலுக்குப் போனேன். சாம்பு மாமா பாசமாக என் அப்பா அம்மா பற்றி விசாரித்தார். அவர் மகன் பாபு என் வயதுக்காரன்; 

“மாமா பாபு என்ன படிக்கப் போறான்” 

“இன்னும் சித்த நாழியில வந்திடுவான் நீயே கேட்டுக்க”

உள்ளே போனேன்; சரக்கு மாஸ்டர் ஸ்ரீதர் மாமாவிடம் நலம் விசாரித்தேன்.

“மாமா, என்ன ஸ்வீட் இன்னைக்கு ஸ்பெஷல்”

“அஸ் யூஷுவல்”

“அதே ரவா கேசரிதானா? எத்தனை வருஷமானாலும் மாத்தவே மாட்டீங்களா?”

கேட்காமலேயே ஒரு கரண்டி கேசரியும் கொஞ்சம் காராசேவும் ஒரு டிபன் இலையில்  வைத்து  கொண்டு வந்தார்.

” சாப்பிடு ரகு” என்று டேபிளில் வைத்து உபசரித்தார்.’ வேண்டாமென்றாலும் விடவில்லை. அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாபு வந்து விட்டான். அவனிடம் படிப்பை பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு வேறு விஷயத்துக்குத் தாவினேன்.

“பாபு, நாளைக்கு ராத்திரி ஒரு துப்பறியும் வேலை இருக்கு; நீயும் சேர்ந்துகிறியா”

“என்னடா புதிர் போட்டு பேசறே”

” நாளைக்கு ராத்திரி எட்டரை மணிக்கு சாப்டுட்டு ரெடியா இரு”
அதற்குமேல எதுவும் அவனுக்கு தெரியக்கூடாது.

இந்த நேரத்தில் அந்த இந்திக்காரர்கள் வந்தார்கள். வரும் போது கையில் மூன்றடிக்கும் அதிக நீளத்தில் பத்து எம்எம் கனத்தாலான இரும்புக் கம்பி வைத்திருந்தார்கள்.  கேசரி ஆர்டர் செய்தார்கள்; பேசிக் கொண்டே  சாப்பிட்டார்கள்.
இன்றிரவுக்குள் கம்பியை வைத்து செய்ய வேண்டியதை செய்து முடித்திட வேண்டும். நேரத்தை வீணாக்காமல் சீக்கிரம் காபியைக் குடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். நான் கேசரியை சாப்பிட்டபடியே அதைக் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

இரவு சாப்பாட்டுக்கு பார்சல் இட்லியும் தோசையும் ஆர்டர் செய்தார்கள். வாங்கிக் கொண்டு போய் வாகன மண்டபத்தில் வைத்து சாப்பிடுவார்கள் போலிருக்கிறது.

சாம்பு மாமாவிடம் தெரியாத மாதிரி கேட்டேன், 
” யாரு மாமா இவா இந்திக்காரங்களா இருக்கா”
“ஆமான்டா ரகு, இந்திக்காராதான். கோவில் தர்மகத்தாவோட அறுவடை எந்திரத்த ரிப்பேர் பண்ண வந்து கோவில் வாகன மண்டபத்தில தங்கியிருக்கா. காலை டிபனும், இரவு டிபனும் நம்ம ஹோட்டல்ல; மதியானம் வெளியில எங்காவது சாப்பிடுவாவங்க போல. எப்பபாத்தாலும் லொட லொடன்னு பேசிண்டே இருப்பா”. மடைப்பள்ளி ரங்கன் சொன்னதையே இவரும் சொல்றார்.

சாம்பு ஐயர் ஹோட்டலிலிருந்து ஏழுமணியளவில் கிளம்பினேன். பாபுவிடம் மீண்டும் நினைவு படுத்தி விட்டு சாம்பு மாமாவிடமும், ஸ்ரீதரிடமும் விடை பெற்று வீட்டுக்கு கிளம்பினேன். காபிகூட சாப்பிடாமல் எங்கே போய்விட்டாய் என்று பாட்டி கோபித்துக் கொண்டார். சாம்பு மாமாவை பார்க்க போனதாக சமாதானம்  சொன்னேன்.

இரவு டிபன் எட்டு மணிக்குள்ளாக முடிந்து விட்டது.  பக்கத்தில் நண்பர்களிடம் பேசுவது போல வெளிக்கிளம்பினேன். நேரே கோவிலுக்குத்தான் சென்றேன். நடையடைத்துவிட்டு பட்டரும் ரங்கனும் போய்விட்டார்கள். மறைந்திருந்து வாகன மண்டபத்தில் நான் பார்த்தது என்னையறியாமல் “ஐயய்யோ” என்று முனக வைத்தது.

நாளை தொடரும்…..

Advertisement

2 thoughts on “வாகன மண்டபம் (அத்யாயம் 2)

Add yours

  1. மார்கழி பஜனையில் ஆரம்பித்து துப்பறியும் சாம்பு கதை போல் சென்று கொண்டிருக்கிறது நாளை பார்ப்போம்…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: