(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
“இந்த கலியமூர்த்தி பயலால நாம மாட்டிக்கிட்டோம்” என்று முருகன் புலம்பினான். அதற்கு சுப்பிரமணி தலையசைத்து தன் ஒப்புதலை தெரிவித்தான்.
கிராமங்களில் உள்ள வீடுகளில் பின்புறம் பெரிய கொல்லைப் பக்கம் இருக்கும். தென்னை, மா, பலா இன்னும் பல வகை மரங்கள் நிறையவே இருக்கும். கொல்லைக் கடைசியில் ஆறடி ஆழத்துக்கு பெரிய எருக்குழி வெட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்கு ஒட்டினாற் போலவே மாட்டுக் கொட்டில், அதில் எல்லா மாடுகளும் கட்டியிருப்பார்கள். மொத்த கொல்லையையும் பெருக்கி இலை தழை எல்லாவற்றையும் எருக்குழியில்தான் கொட்டுவார்கள்; மாட்டுக் கொட்டாயையும் பெருக்கி சிந்திய வைக்கோல், புல், மாட்டுக் கழிவுகளனைத்தையும் கூட அள்ளிக் கொண்டு போய் அதில் நிரப்புவார்கள்.
கேடைகாலமாதலால் வீடுகளில் இருக்கும் எருக்குழியில் இருந்து எருவை பார வண்டியில் ஏற்றி வயல்களுக்கு எருவடித்துக் கொண்டிருந்தான் கலியமூர்த்தி. வண்டி மாட்டை அவிழ்த்துவிட்டு வண்டியை பின் பக்கமாக குடையடித்து எருவை சரித்து விடுவார்கள். அதைத்தான் கலியமூர்த்தி செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் மருதையா தோப்பில் மத்தியான உச்சி உரும நேரத்தில் ஏதோ ஆள் நடமாட்டம் இருப்பதைப் பார்த்தவன் நாட்டாமைக்காரரிடம் சொல்ல, அவரோ இவர்களைப் போய் என்ன வென்று பார்த்துவர அனுப்பிவிட்டார்.
மருதையா தோப்பு ரொம்பப் பெரிசு. ஆயிரக்கணக்கில் தென்னை உள்ளது. எப்போதாவதுதான் தேங்காய் பறிப்பார்கள். தோப்பு முழுக்க காய்ந்து விழுந்த தென்னை மட்டை, கூறாஞ்சி, தேங்காய்களாகக் கிடக்கும். பெரிய பெரிய மாமரங்கள் நிறைய இருக்கும். காய்ந்த மாவிலைச் சருகுகளும், அணில் கடித்து காய்ந்து வற்றலாகிப்போன மாங்காய்களும் கிடக்கும். தோப்பில் திருட்டுத்தனமாக யாரும் நடந்திட முடியாது; கால் வைத்தால் காய்ந்த சருகுகள் ‘கரக்..சரக்’ என்று சப்தமெழுப்பி காட்டிக் கொடுத்திடும். சில நேரங்களில் காய்ந்த தென்னை மட்டைகள் கால் வைக்கயில சறுக்கி விட்டுடும்.
மருதையா தோப்பில் பகல் நேரத்திலேயே சூரியன் அடங்கிய ஆறு மணி போன்ற இருட்டாக இருக்கும். அணில், ஓணான், மரநாய், பாம்பு மாதிரியான உயிரினங்களின் நடமாட்டடம் எழுப்பும் சருகு சத்தம் அடி வயிற்றில் புளியைக் கரைக்கும் . பகல் நேரத்தில்கூட தனியாக யாரும் வருவதற்கு முன்வரமாட்டார்கள்.
வடமேற்கு மூலையில் ரொம்பப் பெரிய மாமரம் இருக்கும். நாண்கு பேர் சேர்ந்து கைகோர்த்து நின்றால்தான் அணைத்துப் பிடிக்க முடியும், அவ்வளவு பெரியது. அந்த மரத்து மாங்காய் புளிக்கவே புளிக்காது; பச்சரிசி மாங்காய், ஊறவைத்த பச்சரிசியை தின்பதுபோல இருக்கும். ஒரு கல் விட்டால் போதும் நாலு மாங்காயாவது விழும்.
முருகனும் சுப்பிரமணியும் புலம்பிக் கொண்டே அந்த மாமரத்தை நெருங்கி வந்தார்கள். ஏற்கனவே பயப் பிராந்தியமான தோப்பில் உச்சக்கட்ட பயத்தை ஏற்படுத்தும் இடம் இதுதான். மாமரத்தினடியில் கையில் வீச்சரிவாளோடு மருதையா இடுப்பை வளைத்தபடி நிற்கும் ஐந்தடி உயர சிலை இருக்கும். அதன் இருபுறத்திலும் ஐந்தடி உயரத்தில் வேல்; வேலின் இரண்டு பக்கமும் மணி ஆடிக் கொண்டிருக்கும். இதைத் தவிர நிறைய வேல்கள் வெவ்வேறு உயரத்தில் நின்று கொண்டிருக்கும். சில வேல்களில் அந்த இலை போன்ற பகுதிக்குக் கீழ் ஒரு அடி சதுரத்திற்கு தகடு இருக்கும். அதில் நாண்கு மூலைகளிலும் மணி தொங்கிக் கொண்டிருக்கும். காற்றில் அவை எல்லாம் ஆடி சப்தமெழுப்புவது ரத்தத்தை உறைய வைத்துவிடும். நேர்த்திக் கடனாக கொண்டு வந்து வைத்த குதிரை சிலைகள் வரிசையாக அணிவகுக்கும். அத்தோடு அடுத்து உள்ள மூங்கில் குத்தில் உள்ள மூங்கில்கள் காற்றில் உரசுவதால் வரும் ‘கிர்ர்ரக்….கிராக் ‘ ஓசையும் சேர்ந்து கொண்டு இன்னும் பீதியை அதிகமாக கிளப்பும். தோப்பை ஒட்டி ஒரு சிறு வாய்க்காலும் அடுத்து வயல்களும் இருந்தன. இரண்டு வயல்களைத் தாண்டி ஒரு பெரிய திடல் உண்டு. அதில் சவுக்குமரம்தான் அதிகமான நேரங்களில் பயிர் செய்வார்கள். அதுவும் இப்போது வளர்ந்து மூன்று வருட மரமாக நிற்கிறது. மரங்களினூடே காற்று புகுந்து வீசும் சப்தம் ‘ஓ’ என்று திரைப்பட திகில் காட்சி விளைவை கொடுக்கும்.
ஆனால் இந்த பயம் தரும் பிராந்தியத்தில் ஒரு கும்பல் தைரியமாக நுழைந்து தன் வேலையை நடத்தியது.
தொடரும்….