வாசித்தது:தொல்காப்பியப் பூங்கா
ஆசிரியர்:கலைஞர் மு.கருணாநிதி
பதிப்பகம்:பூம்புகார் பதிப்பகம்
பக்கங்கள்:560
விலை: ரூபாய் 480
ஆசிரியரைப்பற்றி ஒரேவரியில் சொல்வதானால் இலக்கியத்திலிருந்து இலக்கணம் என்பார்கள் அதுபோல முத்தமிழறிஞர் என்ற அவருடைய பெயரே அவரின் சிறப்பை சொல்லி நிற்கிறது.
பூங்காபற்றி:
பூங்காவுக்கு, குழந்தைகள், பெரியவர்கள், காதலர்கள்,தம்பதிகள் வருவார்கள் தானே!.
குழந்தை போன்று இலக்கணத்தை முதலில் கற்க தொடங்குபவர்க்கும்,
தமிழின் மீது ஆர்வம்(பாண்டித்தியம்) கொண்டவர்கள் மீண்டும் ஒருமுறை நினைவூட்டிக்கொள்வதற்கும், காதலர்களின் செல்லச் சண்டை போன்று இலக்கணத்துடன் போராடுவோர்க்கும், தம்பதிகள் குடும்ப விஷயங்களை விவாதிப்பது போன்று இலக்கணம் பற்றி விவாதிப்போர்க்கும் என்று அனைவருக்குமான வகையில் பூங்கா என்ற பெயர் மிகப் பொருத்தமே!.
தொல்காப்பியத்தின் வழிநூலான நன்னூலே பலருக்கு கற்பதற்கு கடினமாக இருக்கிறது என்பர்.
இலக்கணத் தமிழில் தொல்காப்பியமே முதன்மையானதாக உள்ளது. அதனை மிக மிக எளிமையாக இதைவிடவும் எளிமையாக யாராலும் சொல்லவே முடியாது எனும் அளவுக்கு அவ்வளவு எளிதாக கலைஞரவர்கள் எழுதியுள்ளார்கள்.
இந்த நூல் வாங்கி பல வருடங்கள் ஆனது இருப்பினும் இலக்கணம் என்பதால் படிக்க ஆர்வமின்றி வைத்திருந்தேன். இப்போது படித்தபின்னர் (இதை படிக்காது வைத்திருந்த காலம்) காலருகில் இருக்கும் மூலிகையின் அருமை தெரியாது என்பார்களே அதைத்தான் நினைவுபடுத்தியது.
நூறு பா (பூ)க்களை தேர்வுசெய்து அதனை குட்டிக் கதைகள் அல்லது வரலாற்று நிகழ்வுடன் இணைத்து அருமையாக விளக்கியுள்ளார்.
எல்லாப் பூக்களும் பிடித்தாலும் ஒருசில பூக்கள் மிகப்பிடிக்கும் அல்லவா?.
1.எழுத்துகள் (பூக்கள்)பிறப்பு :
தொல்காப்பியர் ‘எழுத்து’ எனத் தலைப்பு எழுதிவிட்டு சிந்தனை உறக்கத்தில் கண் மூட, (இங்கு கலைஞர் சொல்லும் உதாரணம் அழகானது நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்)மொழி முழுவதுமே அடங்கும் அடிப்படையான முதலெழுத்துகள் முப்பதும் ஒவ்வொன்றாக வந்து தொல்காப்பியருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்கிறது.
அப்போது சுவர் ஓரமாக தோன்றிய இரண்டு நிழல்கள் (எழுத்துக்கள்.)
ஒன்று ‘இ’கரம் என்கிறது.
மற்றொன்று’ உ’கரம் என்கிறது.
ஒலிசற்று குறுகி ஒலித்ததால் நீங்கள் குற்றியலிகரம் குற்றியலுகரம் வரிசையில் இடம்பெறுவீர்கள் என்கிறார்.
அடுத்தாக கையில் கம்புடன் தோன்றிய மற்றொரு எழுத்துருவம் என்னை முதலெழுத்தின் முப்பதோடு ஒப்புகிறீர்களா?. என்று கேட்கிறது.
நீ ஆயுதமேந்தி வந்தால் பயந்து நான் உன்னை முதல் எழுத்தாக வைத்துவிடுவேன் என்கிறாயா ?. என்று கோபமாக கேட்க,
அய்யனே! முதலெழுத்தாக எனக்கு இல்லாவிட்டாலும் தகுந்த இடத்தில் நான் உதவிக்கு வருவேன் என்கிறது.
தொல்காப்பியரோ கேலியாக சிரித்துவிட்டு நீ எனக்கு உதவிக்கு வருகிறாயா?. என்று புன்னகைக்கிறார்.
“ஆம்! நீங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்திருக்கிறீர்களே என்று மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்தது.
உடனே தான் எழுதிய முதல்நூற்பாவை கவனிக்கிறார்.
அந்த நூற்பா,
“எழுத்தெனப் படுப
அகர முதல் னகர விறுவாய்
முப்பஃ தென்ப
சார்ந்து வரன் மரபின் மூன்றலங்
கடையே”
என்றிருக்கிறதை சான்று காட்டிவிடுகிறது.
2.வேற்றுமை (பூ )உருபு:
திருமணத்திற்கு பத்திரிகை அச்சடிக்க வரும் தந்தையிடம் அச்சக மேலாளர் “எனது மகன்” என்று எழுதியிருக்கிறீர்களே அதுதவறு என சுட்டிக்காட்ட, ‘அதில் என்ன தவறு அவன் எனது மகன் தானே ?’என்று தந்தை கோபமாக,
‘அதுதான் தவறு’ என்று மேலாளர் கூற
‘கொடுமய்யா அந்தத் தாளை ‘என தந்தை பிடுங்க,
மன்னிக்கவும். எனது மகன் என்று எழுதும்போது ‘அது’ என்ற ஆறாம் வேற்றுமை உருபால் திணை தவறுதலாகும். எனவே நான்காம் வேற்றுமை உருபான’ கு’ உருபை இணைத்து ‘எனக்கு மகன் ‘என்று தான் எழுதவேண்டும் என்று கூற,
வந்தவர் சிரித்தபடி சமாதானமாகி ‘நீர் சொன்னால் சரி ‘என்றிட, நான்சொல்லவில்லை தொல்காப்பியம் சொன்னது என்கிறார்.
3.இறைச்சி(பூ)உணவு:
விரதநாட்களில் யாரேனும் அடியவர்க்கு உணவளிப்பது ஒரு சைவ அன்பருக்கு
வழக்கம்.அதன்படி மகா சிவராத்திரி அன்று ஒருஅடியவரை உணவுஉண்ண அழைக்க அடியவர் ‘சைவ உணவா?” எனக் கேட்கிறார்.
‘என்ன இப்படி கேட்கிறீர் இன்று சிவனுக்குரிய நாள் எனவே சைவ உணவுதான் ‘ என்கிறார் அன்பர்.
முன்னமே ஐயத்தை தீர்த்துக் கொள்வது நல்லது தானே என்கிறார் அடியவர்.
அன்பரின் வீட்டு வரும் அடியவர் உணவு தயாராகும்வரை வெளித் திண்ணையில் காத்திருப்பதாகக் கூறுகிறார்.சிறிது நேரம் கழித்து வீட்டின் உள்ளிருந்து ‘இறைச்சி! இறைச்சி!’ என்ற ஒலி மட்டுமே கேட்க அதனுடன் இணைந்த வேறெந்த வார்த்தைகளும் அடியவர்க்கு தெளிவாகக் கேட்கவில்லை .
என்ன இது பேச்சு ஒருமாதிரியாக இருக்கிறதென குழம்புகிறார்.
திரும்பவும் வீட்டின் உள்ளிருந்து ‘இறைச்சி ‘என்ற பேச்சொலி எழுந்தது.
சிவனடியார் கோபமாகி தன்னை விருந்துக்கு அழைத்துவிட்டு ஏமாற்றியதாக கருதி அங்கிருந்து ஓடியே விடுகிறார்.
உண்மையில் தன்மகனுக்கு இலக்கணத்தில் வரும் ‘இறைச்சி ‘ எனும் குறிப்புக்கான விளக்கத்தை கூற அதற்கான தந்தை மகன் உரையாயாடலை முழுமையாக் கேட்காமலும் விளக்கத்தை வீட்டாரிடம் பெறாமலும் சென்றுவிடுகிறார் அடியவர்.
பாடலில் வரும் நேரடிக் கருத்தைத் தாண்டி அதனால் உணர்த்தப்படும் குறிப்புப் பொருளே இறைச்சி என்பதாகும். அதனை திறமையுடையோர் அறிந்து கொள்வர்.
இலக்கண இலக்கிய சுவையறியா அன்பர் உணவையும் சுவைக்காது சென்றுவிட்டார் பாவம்!.
இப்படி சொல்லித்தந்தால் உறக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் இலக்கணத்தை
பிழையின்றி எழுதுவார்கள் தானே!.
(பூங்காவுக்கு)வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பக் கூடாதென நூறு மலர்களை நூலாக தொகுத்தளித்திருக்கிறேன் என்கிறார் பூங்காவை அமைத்தவர் .
பூங்காவுக்கு வந்து இளைப்பாறியோர் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதல் தமிழின் பல்வேறு ஆளுமைகள் இன்புற்ற இளைப்பாறிய அனுபவங்கள் நூலி்ல் இணைக்கப்பட்டுள்ளது.
இலக்கணத்தை எளிதில் கற்கவும் பிறருக்குக் கற்பிக்கவும் விரும்புவோர்க்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.
Leave a comment