மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

( சித்திரம்: கிறிஸ்டி நல்லரத்னம், மெல்பேர்ன்,ஆஸ்திரேலியா.)

உலகநீதி புராணத்தின் மூன்றாவது வரி’மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் ‘ என்பதாகும். இதை ஒரு கதை வடிவில் காண்போமே!
      ஒரு ஊரில் ஒரு பெண்மணி மிகவும் உழைத்து தன் மகனை பேணி வளர்த்து வந்தார். அந்த சிற்றூரில் இருந்த பள்ளியில் ஆரம்பக் கல்வியும், அருகில் இருந்த பேரூரில் உயர் கல்வியும் கற்க பெரிதும்  உழைத்து சம்பாதித்து தன் வாழ்க்கையை மகனுக்காக அர்ப்பணித்தார்.   மின்வசதியும்,பேருந்து வசதியும் என்வென்றே தெரியாத அந்தகாலத்தில்  குக்கிராமத்திலிருந்து தன் மகனை கல்விமானாக்கினார்.
    கல்வி பெற்ற மகன், தான் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை அந்த கிராமத்தில் கிடைக்காது என்று எண்ணினான். அவன் அம்மா,  “கல்வியென்பது அறிவு வளர்ச்சி பெறத்தான்; பொருள் சம்பாதிப்பதற்கு அல்ல; நம்மிடம் இருக்கும் நிலத்தில் உழைத்தாலே நிறைய சம்பாதிக்கலாம்” என்று தன் மகனுக்கு எவ்வளவோ எடுத்துக்கூறி விளக்கினாலும் மகன் அதைக் கேட்டு நடக்க மறுத்தான்.
        தொலை தூரத்தில் இருக்கும் தலைநகரத்திற்கு சென்று மன்னரிடத்தில் வேலை தேடப்போவதாக பிடிவாதமாகக் கூறினான். “வயதான காலத்தில் எனக்கு துணையாக இங்கேயே இருடா மகனே”என்று எவ்வளவோ மன்றாடினார். ஆனால் மகனோ தன் முடிவை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை.

ஒரு நாள் பார்த்து தலைநகரத்துக்குக் கிளம்பினான்.கண்ணீருடன் தாயார் தன்மகனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.”சரி மகனே,உன் விருப்பப்படியே போய்வா. நீ கால்நடையாக நடந்து போகின்ற போது இளைப்பாற வேண்டுமென்றால் புளிய மரத்து நிழலில் தங்கி இளைப்பாற வேண்டும். ஒருவேளை நீ அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் திரும்பி வரும் வழியில் வேப்பமரத்து நிழலில் தங்கி இளைப்பாற வேண்டும். உன்னுடைய மாதாவின் இந்த வேண்டுகோளை மட்டும் தட்டாதே” என்று மகனிடம் உறுதி வாங்கிக் கொண்டார்.

     மாதாவிடம் உறுதி வழங்கியபின் கட்டுச்சோறு மூட்டையுடன் மகன் கிளம்பினான். மாதாவின் சொற்படி புளிய மரத்து நிழலிலேயே இளைப்பாறினான். புளிய மரம் உடல் வெப்பத்தை தூண்டிவிட்டதால் சில தினங்களிலேயே அவன் உடல் நலிவடையத் தொடங்கியது.

  ஒருநாள் அவன் ஓய்வெடுத்த மரத்தடியில் ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது  குஞ்சுகளை கவர வேகமாக ஒரு பருந்து பறந்து வந்தது; தாய்க்கோழி எச்சரிக்கை ஒலி எழுப்பவே குஞ்சுகள் எல்லாம் ஓடிவந்து தாய்க்கோழியின் இறக்கைக்குள் ஔிந்து கொண்டன. இந்த காட்சியைக் கண்ட மகனுக்கு தன் தாயின் நினைவு வந்தது. பெற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அம்மா படும்பாடு அவன் மனதை மாற்றியது. ஊர் திரும்பி தன் மாதாவைக்காண முடிவெடுத்து திரும்பினான்.


    மாதா கூறியபடி வழியில் இளைப்பாற வேப்பமர நிழலில் தங்கினான். வேப்பமரக் காற்று அவன் உடல் நலிவை நீக்கியது; அவன் வீடு வந்து மாதாவைக் காண்பதற்குள் பூரண குணமடைந்து விட்டான்.

     மகன் திரும்பி வந்ததால் மாதா மகிழ்ந்தார். “அம்மா, கோடி கொடுத்தாலும் உன்னை மறந்து, தனியே விட்டு எங்கும் போக மாட்டேன்”என்று மகன் சத்தியம் செய்து கூறினான்.

   உண்மையான அன்பும், பாசமும், தியாக குணமும் கொண்ட மாதாவை நாமும் மறக்காமல் இருப்போம்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑