கான்ஃபிடன்ஸ் கார்னர்

(வாசித்ததில் ரசித்தவர்:அன்புமொழி)

ஆசிரியர்:- மரபின் மைந்தன் முத்தைய்யா
வகை:-கட்டுரைகள்
பதிப்பகம்:-விஜயா

தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்பது அந்தகாலத்தில் பொருள்வேண்டி புலவர்கள் மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வருவது வழக்கம். அவ்வாறு பரிசில் பெற்றுத் திரும்புபவர் தம்மைப்போன்றோரை ஆற்றுப்படுத்தி தான்பெற்ற பரிசினை எடுத்துரைத்து அவ்வாறே அவர்களும் சென்று மன்னனைப் பாடி  பரிசுகள் பெற்று  மகிழும்படி எடுத்துக்கூறுவர்.

மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள் தற்போதைய தேவையான வாழ்வதற்கான நம்பிக்கை, வெற்றி பெறுவதற்கான உறுதி, அதற்கான முயற்சி என ‘கான்பிடன்ஸ் கார்னர்’  புத்தகத்தில் 100  கார்னர்கள் கொடுத்திருக்கிறார். அவரவர்  சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்துப்  பயன்பெறலாம். அவரின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

ரசித்தது:- மலையின் மடியில் அமர்ந்த குழந்தை மேகங்கள், ‘பாட்டி! உன்காடுகளுக்கு மழை கொண்டு வரட்டுமா?என்று  கேட்க மலையோ  ‘எங்களுக்கு போதும். மனிதர்கள் தான் ஏதேதோ பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் அவர்களுக்காக தூதுசொல்லுங்கள்’ என்றது.
சிறிதுகாலம் சென்று குழந்தை மேகங்கள், ‘நாங்கள் தேவதையிடம் கூறினோம், அவர்களோ மனிதர்கள்  நம்பிக்கையுடன்  ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தால் நாங்கள் வேண்டியதை வழங்குவோம் என்றனர். மனிதர்கள் நம்பிக்கை கொள்ளத்தான் வழி தெரியவில்லை’ என்றன.

“துளியளவு நம்பிக்கை துளிர்த்தாலும் மலையளவு நன்மைகள் காத்திருக்கின்றன.”

சலவைத் தொழிலாளியிடம் சுறுசுறுப்பான கழுதை ஒன்று இருந்தது. பொறாமைக்காரர்கள் கழுதையை கொல்ல நினைத்து குழிவெட்டி வைத்தனர். குழியில் விழுந்த கழுதை மேல் மண்ணை அள்ளிப்போட்டனர். கழுதை மேலே விழுந்த மண்ணை ஒவ்வொரு முறையும் உதற ,உதறப்பட்ட மண் மேடானது  கழுதை அதன் மீது ஏறி வெளியே வந்தது.

வாழ்க்கையில் எந்த நேரத்திலும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை புரிய வைத்த கதை.உணவகம் ஒன்றில் தனியே அமர்ந்து இருந்து ஹென்றி போர்டிடம்  பத்திரிக்கையாளர் ஒருவர் நெருங்கி தனிப்பட்ட முறையில் “உங்களின் மிகச்சிறந்த நண்பர்?”  என்று கேட்க ஒரு நிமிடம் யோசித்த ஹென்றி போர்டு ,மேசை விரிப்பின் மேல் பெரிய எழுத்தில “உங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த அம்சத்தை யார் வெளிக்கொண்டு வருகிறாரோ அவர்தான் மிகச்சிறந்த நண்பர்? என்று எழுதினார்.அப்போ உங்களின் மிகச்சிறந்த நண்பன் யார்?

ஒருவிமானம் விழுந்துவிடும்படி  காற்றில் அலைபாய்ந்தது. பயணிகளின் பிரார்த்தனைகளும், கூக்குரலுமாக  ஆங்காங்கே  எழ  ஒரு சிறுமி மட்டும் எந்தவித கவலையும் இன்றி காமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில்  விமானம் சீராக பறக்க அப்போதும் அந்தச் சிறுமி சலனமில்லாமல்  இருக்க இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர்,  “விமானம் விழுவது மாதிரி அலை பாய்ந்ததே உனக்கு பயமாக இல்லையா? என்று கேட்க, சிறுமி நிதானமாக “விமானத்தை  ஓட்டுகிறவர் என் அப்பா. என்னை பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவார்” என்றாளாம்.
அப்பா பெண் பாசம் எப்போதும்  அப்படித்தான்!

பகவான் ராமகிருஷ்ணரின் ஆசிரமத்தில் ஒருவிழாவிற்காக  நூற்றூக்கணக்கில் லட்டு செய்யப்பட்டிருந்தது எறும்பு வந்தால் என்ன செய்வதென்று யோசிக்க, பரமஹம்சர் லட்டுக்குவியலை  சுற்றி  சர்க்கரையால் வட்டம் போட்டார். வந்த எறும்புகள் சர்க்கரையைத் தின்று போயின.
பரமஹம்சர் சொன்னார், “மனிதர்களும்  இப்படித்தான் பெரிய லட்சியங்களை விட்டுவிட்டு சின்ன விஷயங்களில்  சமாதானமாகி விடுகிறார்கள்.”

ஷங்கரின் ‘சிவாஜி’ பட ரஜினி சொல்வது போல  இது வெறும் சாம்பிள் மட்டுமே. மீதியை புத்தகத்தை படித்து உங்களுக்கான கார்னரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

“கான்பிடன்ஸ் கார்னர்” தந்த மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு மீண்டும்  நன்றிகள். 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑