ஆசிரியர்:-இரா.முருகவேள்
பக்கங்கள்:-80
பதிப்பகம்:-காக்கைக் கூடு
புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் இலக்கியம் பற்றியதாக இருக்கும் என நினைத்து படிக்கத் தொடங்க சூழல் மாற்றங்களால் தமிழகம் சூழப்பட்டு எவ்வளவு ஏ)மாற்றமடைந்திருக்கிறது என்பதைச் சொல்கிறது கட்டுரைத் தொகுப்பான இந்நூல்.
முதலில் இருக்கும் ஆறு தலைப்புகள் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் அடுத்த நான்கு தலைப்புகள் பக்கத்து மாநிலமான கேரளாவின் சுற்றுச்சூழலைப் பற்றியது.
புள்ளி விபரங்கள் , போதனை போன்ற விளக்கங்கள், என்றில்லாமல் பட்டு கத்தரித்தாற்போல, அதேநேரம் சுரீரென உறைக்கும் விதமாக கட்டுரைகளை வடிவமைத்த இரா .முருகவேள் அவர்களுக்கு பாராட்டுகள்.
நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது , அதிலிருக்கும் அரசியல், வணிகத்தன்மை ,பெரும் பணக்காரர்களுக்காகவும், வெளிநாட்டு முதலீடுகளுக்காகவும் , நாம் எப்படி எல்லாம் மாற்றப்படுகிறோம் , நம் உடைமை, உரிமைகள் மாற்றப்பட்டிருக்கின்றன என்று இந்த புத்தகத்தை படித்ததும் மனம் வேதனைப்படுகிறது.
காவிரி உற்பத்தியாகும் குடகுமலைப் பகுதியிலேயே குடிக்கவும்,விவசாயத்திற்கும் நீரின்றி அல்லல் பட , ஹராங்கி நகரின் அணையால், பணக்கார விவசாயிகளுக்கும் , பெருநகரங்களின் தொழிலுக்குமாக, புல்வெளிகள் ,சதுப்புநிலங்கள் பாழாகிறது. நீரின் ஆதாரமான இடத்திலேயே இப்படி என்றால்? நகரமயமாக்கலால், மணல் திருட்டு, காடு அழிப்பு, விவசாய புறக்கணிப்பு ,கருவேலமரங்கள் நடுவது என்பது ஒன்றொன்று தொடர்புடையதாக சொல்லப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு நம் வளங்களை இயற்கை விவசாயத்திலிருந்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டதை அதற்கு கையாண்ட வழிமுறைகளை படிக்கும்போது அடப் பாவிகளா! என்று சொல்லத் தோன்றுகிறது.
காற்றின் மாசடைவை குறைக்க கொண்டுவரப்பட்ட திட்டமான கார்பன் டை ஆக்ஸைடும் கூட வியாபார பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.
மாடித்தோட்டம் பெண்களுக்கான அடுத்த கட்ட சுமை என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டும் எனக்கு உடன்பாடில்லை. அழுகை தொலைக்காட்சி தொடர்களைவிட்டு உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கொடுக்கும் சிறிய உடற்பயிற்சியாக மாடித்தோட்டம் இருக்கும் என்பது எனது கருத்து.
அரசு செய்ய வேண்டியதை, உழவர்கள் நமக்காக விளைவித்து தருவதை நாம் முழுமையாக செய்து விடமுடியாது என்கிறார் இதற்கு மாற்றுக்கருத்தில்லை.
உலகமயமாக்கல் என்ற பெயரில் உருவாகும் பெருநகரங்களும், அணுமின் நிலையமானாலும், எடுக்கப்படும் காவரி மணலோ, ஹைட்ரோ கார்பனோ சந்தைப்படுத்தவே தவிர நமக்காக அல்ல என்ற கருத்தை முன்வைக்கிறார். முற்றிலும் உண்மையே.
சுற்றுச்சூழல்வாதிகள் விடுக்கும் எச்சரிக்கை காவிரியில் இருந்து இதேவேகத்தில் மணல் எடுக்கப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்று சொல்வதை குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்து சூழலியளாளர்கள் கோவைவாசிகளிடம் எழுப்பும் கேள்வி “நாளையிலிருந்து சிறுவாணித் தண்ணீர் வரவில்லை என்றால்…?” நாளை உங்களுக்கும் இதே நிலைதான் என்பதை சொல்லாமல் சொல்வது கூடங்குளத்தைவிட பீதியூட்டக்கூடியது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மலைகளை மொட்டையடித்து டீ, காபி, ரப்பர் தோட்டங்கள் போடுவது டஸ்ட் டீ குடிக்கும் நமக்காகவா வெளிநாட்டு வாடிக்கையாளருக்காகவா? இதுவும் நூலாசிரியரின் கேள்வி.
மலைமேல் இருக்கும் பழங்குடிமக்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் திருமண உறவுகள் பற்றி அவரின் விளக்கம் வியப்புடன் நம்மை உண்மை தான் என தலையாட்டவைக்கிறது.
இறுதியாக “கற்பனைத் தீர்வுகள்”என்ற தலைப்பில் அவரின் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.
மின்சாரப் பற்றாகுறை, தண்ணீர் தட்டுப்பாடு அதனை ஈடுசெய்ய கொடுக்கும் தீர்வுகளான சூரியஔித்தகடு, சாணஎரிவாயு ,காற்றாலை முதலியவற்றை பயன்படுத்தி மின்சாரம் என எளிய தீர்வுகள் சொல்லப்பட்டாலும் இவை தொழில் நுட்பம் நிறைந்தவையே.
மின்சாரப்பற்றாக் குறையை தீர்க்க மாற்று வழியில் சூழ்நிலையை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்யவேண்டும். இப்போது உற்பத்தி செய்யும் மின்சாரம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறதா இலவச மின்சாரமும் முழுமையாக வழங்கப்படுகிறதா? பெருநிறுவனங்கள் பாதிப்படைவதில்லை சிறிய கடைகளும் மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள்.
பெரிய நிறுவனங்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடே இருப்பதில்லையே என்கிறார்.
இதில் எதையும் மறுக்க முடியாது . மேற்சொன்ன கருத்துகளுக்கு ஆங்காங்கு மற்றவர்களின் ஆய்வுகள், கட்டுரைகளை எடுத்துக்காட்டியுள்ளார். தமிழகத்தின் மக்களை சூழ்ந்திருக்கும் அத்துனை சூழலியல் சீர்கேடுகளை நிகழ்வுகளை நமக்கு மேலோட்டமாக தெரிந்தவற்றை ஒவ்வொரு பிரச்சனையின் ஆணிவேரை எடுத்துக்காட்டி குறுகத்தரித்த குறளாக இந்நூலை படைத்த முருகவேளுக்கும் பதிப்பித்த காக்கை கூடு பதிப்பகத்திற்கும் நன்றிகள்.
சூழலியல் சீர்கேடு எப்படியெல்லாம் உருவாகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதுடன் நம் சந்ததியினரை எச்சரிக்கவும் இந்த நூலை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும்.
Leave a Reply