குறிஞ்சி மலர்

வாசித்தது:-குறிஞ்சிமலர்
ஆசிரியர்:-நா.பார்த்தசாரதி
பதிப்பகம்:-பாவை பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்:-470

பல பதிப்பகங்கள் குறிஞ்சிமலரை வெளியிட்டுள்ளார்கள்.ஓவியர்கள் திரு.கோபுலு,திரு.ம.செ போன்றோரும் சித்திரம் தீட்டியுள்ளார்கள். நமக்காக திரு.கிரிஸ்டி நல்லரெத்தினம் அவர்கள் “ஓவிய வடிவமைப்பு” செய்திருக்கிறார்கள்.

காதல்  எல்லா  உயிரினங்களுக்கும் பொதுவானது.  புல்லுக்கு தான் வேரூன்றி நிற்கும் மண்மீது  காதல். பசுவுக்கு தன் கன்றின் மீது காதல் . மனிதனுக்கோ  தன் தொழில் மீது, கொண்ட தோழமை ,மீது  படிக்கும் புத்தகங்கள் மீது ,பிடித்த கலைகளின் மீது என்று…. சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் காலம் காலமாக ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பு  பற்றிய காதலே, கதைகளில், கலைகளில்  ,கவிதைகளில் , மொழியை ,காலத்தை கடந்தும் பேசப்படுகிறது .

நாயகன் நாயகி நேரடியாக வார்த்தைகளால் தங்கள் காதலை பேசாக் காதலாக குறிஞ்சி மலர்  கதையை முழுவதுமாக  நா.பார்த்தசாரதி கொண்டு சென்றிருப்பார்.
அன்பு ,அழகு,அறிவு நிறைவான (பரி)பூரணி கதாநாயகி. மனத்துக் கண் மாசிலனாக கதாநாயகன் அ(ற)ரவிந்தன். வழக்கமாக காதலுக்கு எதிரியாகும் அந்தஸ்த்து, திருமணத்திற்கு தடையாகும் அங்காரகன்  (செவ்வாய் தோஷம் )  என்றில்லாமல்  அறிவெனும் பண்பே  அவர்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்த தடையாகிறது. கதையின் எந்த இடத்திலும் பண்பு   தவறாதவர்களாகவே நா.பா.அழகாக சிறப்பாக கொண்டு சென்றிருப்பார்.

கதை:- தமிழறிஞரும் பேராசியருமான பூரணியின் தந்தை அழகிய சிற்றம்பலம் ஒருநாள் திடீரென  சிவனடி சேர்ந்திட,குடும்பத்தை காப்பற்ற வேண்டிய  நிலைக்கு ஆளாகிறாள் பூரணி.

தன் அப்பாவின் புத்தகங்களை வெளியிடும் புதுமண்டப அச்சகத்தாரிடம் பணம் கேட்க அவரோ புத்தகங்கள் விற்பனை ஆகவில்லை என  ஏமாற்றுகிறார் . பல இடங்களில் வேலை தேடி அலைந்து ,பசியும் ,களைப்புமாக சாலையில் மயங்கி விழுகிறாள். மங்களேஸ்வரி என்பவர் தன் காரில் தன் வீட்டுக்கு தூக்கிச்சென்று மயக்கம் தெளிவித்து  தன் காரிலேயே வீட்டுக்கு அனுப்பிவைக்க பூரணிக்கு அவர் குடும்பத்துடன் நட்புறவு ஏற்படுகிறது.
மீனாட்சி அச்சகத்தின்  சார்பில் புத்தகங்களை வெளியிட வரும் அரவிந்தன் பூரணியின் அறிவால், பண்புகளால் , கவரப்பட ,பூரணியோ அரவிந்தனி்ன் ஏழைகளுக்கு இரங்கும் பண்பு ,அகழ்வாரைத் தாங்கும் நிலமான குணம்,எந்த நிகழ்வையும் கவிதையாக்கும் திறம்  என்று  அவன் மீது  அன்பாகிறாள்.

மங்களேஸ்வரியின் மகள் வசந்தா சினிமா ஆசையால் ஓடிப்போக   அரவிந்தன்,  பூரணியை மங்கையர்  கழகத்தில்  தினமும் பண்பாட்டு சொற்பொழிவு செய்வதாய் சொல்கிறாய்?இந்த தலைமுறை  பெண் இப்படி இருக்கிறாளே? என்கிறான். தன் சொற்பாழிவை  கேட்பவர் பின்பற்றுமாறு ஆற்றலுடையதாக்க வேண்டும் என   பூரணி யோசிக்கிறாள்.

பூரணி அரவிந்தனிடம்  பேசும் ஒவ்வொரு முறையும் தன் அப்பா சொல்லிய இலக்கிய  சுவைகள்,
தகவல்கள் ,குட்டி கதைகள் என சொல்லச் சொல்ல அவளின் அறிவை
வியக்கிறான்.

அரவிந்தனின் முதலாளி பூரணியைத் தேர்தலில் நிறுத்தலாம் என  கூற அவன் மறுக்கிறான்.
புதுமண்டபத்துக்காரர் அரவிந்தனை மிரட்ட , அராஜகத்திற்கு பணியக் கூடாதென மனம் மாறி பூரணியை தேர்தலில் நிற்கச் சொல்கிறான்.
வசந்தாவும் முருகானந்தமும் விரும்புகிறார்கள் என்பதை பூரணியும் அரவிந்தனும் மங்களேஸ் வரியிடம் சொல்கிறார்கள் . அரவிந்தனின் முதலாளியும், மங்களேஸ்வரியும்  ,அரவிந்தனுக்கு பூரணியை திருமணம் செய்வித்திட நினைத்துக் கேட்க  அவனோ “இன்னும் சிறிது காலத்திற்கு எங்களை மனதால் வாழ அனுமதியுங்கள்”  என்று சொல்லிவிடுகிறான்.

பூரணி  தன் இலக்கியக் சொற்பொழிவுகளால் புகழ்பெற்று இலங்கைக்கு சென்று தமிழ்மணம் பரப்பி பாரட்டுப் பெறுகிறாள். மலேயாவுக்கு வரச்சொல்லி அழைப்பு வருகிறது.
புதுமண்டபத்துக்காரின் உச்சபட்ச தொல்லையாக அரவிந்தனை மீனாட்சி அச்சகத்தை விட்டு வெளியேற்றிவிடுகிறார். பக்கத்து ஊரில் பரவிவரும் விஷக்காய்ச்சலால் துன்புறும் மக்களுக்கு உதவிட என்று  அவன் கிளம்பிடுகிறான். தேர்தல் நேரத்தில் அரவிந்தன் பக்கத்து ஊருக்கு செல்வது பாதுகாப்பனதே  என முருகானந்தமும்  நினைக்கிறான். பூரணிகல்கத்தாவிலிருந்து வந்ததும் அரவிந்தனை அச்சகத்திலிருந்து  நீக்கியதை  அறிந்து  வருந்துவதோடு அவன் சமூகசேவை செய்ய சென்றிருப்பதுமாக   அவளின் உள்ளுணர்வில் பயத்தை உண்டாக்க மிகவும்  துன்பப்படுகிறாள்.

காய்ச்சலுடன் கவனிப்பாரற்று இருக்கும் அரவிந்தனை முருகானந்தம் அழைத்து வருகிறான்.
தேர்தல் முடிவு நாளில் எலலாரேும் சென்றிட பூரணியும் அரவிந்தனும் மட்டுமே வீட்டில்
வெற்றிபெற்ற பூரணியை  கொண்டாடும் விதமாக அலங்காரம் செய்யப்பட்ட குதிரை வண்டி வீட்டை நெருங்குகிறது….. மீதியை படித்து அறிந்துகொள்ளவும்.

ரசித்தது:-  நா. பா. அவர்கள் மலர், பூ என்ற வார்த்தையை சொல்லும் போது  நம் உதடுகள் பூ மலர்வது போல மலர்ந்து பிரியும் என்று சொல்லியிருப்பது தமிழ் மொழியின் அழகை வியக்க வைக்கிறது.
நிறைய பிள்ளைகளைப் பெற்ற தாய் வளர்த்து ஆளாக்கி தகுதியான இடங்களுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் தாய்மைப் பெருமிதத்தோடு இருந்த இடத்திலேயே தெய்வமாக மாறிக்கொண்டிருப்பது போல  உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தன் மக்களை வாழ்வதற்கு அனுப்பியிருக்கிறாள் தமிழ் தாய்.
என்னே! அழகான பெருமை மிகு உவமை !

அரவிந்தன், தேர்தலுக்காக அனாயசமாக செலவு செய்யப்படும்  தொகையை நினைத்து மனம் நொந்து காந்தீய  வழியில்  பூரணி வெற்றி பெறட்டும் என யோசித்து அச்சிட்ட சுவரொட்டிகளை தீயிட்டு அழிக்க, “சுத்த அசட்டுத்தனம்” என முருகானந்தம் கடிந்து கொள்கிறான். அதற்கு அரவிந்தன் “இப்படிப்பட்ட அசட்டுத்தனத்தை தொடர்ந்து செய்யும் மகாத்மாக்கள் காந்திக்குப் பின் இல்லாததால்தான் இந்த நாடு இப்படி போய்க் கொண்டிருக்கிறது”  என்று  கூறுகிறான். அரசியல்  இப்படியிருந்தால் நன்றாயிருக்குமே என்று மனம் நடக்காத ஒன்றை நினைக்கிறது.
ஆசிரியர்  நா.பார்த்தசாரதி அவர்கள் பூரணியையும் அரவிந்தனையும்  தமிழால் அருச்சனை செய்தாரா, அபிஷேகம் செய்தாரா என்று சொல்லும் அளவுக்கு அவர்களின்  அழகை செயலை, இருக்கும் இடத்தை, எண்ணங்களை,   உரையாடலை ,உவமைகளாக உருவகமாக  எழுதி  இவ்வளவு தூரம் கதாபாத்திரங்களை  நேசிக்க முடியுமா என வியக்க வைக்கிறார்.

தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருவிருத்தம், புறநானூறு, நற்றிணை ,திருவருட்பா, குண்டலகேசி, பரிபாடல், திருக்குறள் போன்ற இலக்கியங்களில் இருக்கும் வரிகள், அது தவிர பாரதியார், பாரதிதாசன், கவிமணி  ஆகியோரின் கவிதை வரிகள்  என  கதைக்கு தேவையான இடங்களில் சேர்த்து நம்மை முற்ற முழுக்க  தமிழ் நூல்களால் நிறைந்த ஒரு தமிழ்நூலத்திற்கு சென்ற வந்த பரவச நிலையை ஏற்படுத்திவிட இதெல்லாம் படிக்க…! படிக்க…!
நாம் தமிழச்சி என்ற பெருமை!!!
அறுசுவையில் எந்த சுவை கூடினாலும் உடலுக்கு தீங்கு.
திகட்டாத தீஞ்சுவை தமிழை எவ்வளவு பருகினாலும் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியே!
சைவ சமயக் குரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார்  திலகவதி – கலிப்பகையார்  உறவின் நிகழ்வே இந்த கதைக்கு அடிப்படை. பூரணி, அரவிந்தன் படைப்பு. 
பெயர் மாறினாலும் தமிழ் சமூகத்தில் என்றும் மாறாதது உயர்ந்த பண்புகளே !!!
நா.பா. குறிஞ்சி மலராக  பூரணியைச் சொல்கிறார். தமிழை ஊட்டி வளர்த்த தமிழாசிரியர் மகள் அதனால் பண்பு நலன்கள் நிறைந்தவளாக இருப்பது ஆச்சரியமில்லை.
வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான். 
மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!
நா. பா. எடுத்தாண்ட வரிகளில் கதைக்கு பொருத்தமாக நான் ரசித்தது:-
“பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிற்று” 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: