வாசித்தது:- கல்கியின் சிறுகதைகள் (kalkiyin sirukathikal) தொகுதி-1
ஆசரியர்:- கல்கி
பதிப்பகம்:- நக்கீரன்
வகை:- சிறுகதை தொகுப்பு
பொங்கல் என்றாலே மகிழ்ச்சிதானே! ஆகவே இந்த பதிவில் நகைச்சுவை கதையை பற்றி பதிவிட்டு எனது வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். கல்கியின் சிறுகதைகள் தொகுதி-1 இதில் 12 சிறுகதைகள் உள்ளன. இந்த புத்தகத்தில் மிகச்சிறியதான மிக ரசித்த கதையான ‘இமயமலை எங்கள் மலை’ என்ற கதையைப் பற்றியது எனது இந்தப் பதிவு.
சுதந்திர போராட்டத்தை அடிப்படையாக் கொண்டு இந்த தொகுப்பில் சில கதைகள் இருக்கின்றன. பாரதியின் வரி இந்த கதையின் தலைப்பானதால் சரி இதுவும் விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு கதை என நினைத்து படிக்க தொடங்க, பழைய கால சினிமா போல பணக்கார பெண் ஹேமாவதிக்கும் ஏழை இளைஞன் எஸ்.பி சிவனுக்கும் காதல்வர அந்தஸ்த்தை காரணம் காட்டி பெண்ணின் அப்பா யக்ஞசாமி வில்லனாகி அவர்களை விலக்கி வைக்கிறார். பிறகு அவரே அதே ஏழை சிவனிடம் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள சொல்கிறார். எப்படி? எதனால்? அதுதான் கதை. கல்கி தன் எழுத்துகளின் வழி முழுக்க நகைச்சுவையைக் கொட்டி ஆரம்ப வரியிலிருந்து இறதிவரை முகம் மாறா புன்னகையுடன் படிக்க வைத்திடுகிறார்.
அரசு அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் யக்ஞசாமியின் மகள் ஹேமாவதி கர்நாடக சங்கீதத்தை கொலை செய்யும் அளவுக்கு சங்கீதஞானம் பெற்றவள். அவ்வப்போது ரேடியோ நிலையத்திற்கு சென்று அந்த கொ(க)லைப் பணியை சிறப்பாக நிகழ்த்துகிறாள்.
யக்ஞசாமியின் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை செய்யும், சிவன் ரேடியோ நாடகங்களில் எந்த பாத்திரமும் கிடைக்காவிட்டாலும் பலபேர் சேர்ந்து, சிரிப்பது கைதட்டுவது என்ற வகையிலாவது தன் கலையார்வத்தை வெளிப்படுத்தக் கூடியவன்.
சிவனும் ஹேமாவும் ரேடியோ நிலையத்தில் சந்திக்க கலையார்வம் காதல் ஆர்வமாக மாறிவிடுகிறது.யக்ஞசாமிக்கு தெரிந்ததும் சங்கீத சேவை போதுமென மகளை வீட்டில் நிறுத்தி வைக்கிறார். அதைத் தெரிந்த சிவன் வெந்நீரில் விழுந்தமீனாக துடிக்கிறான் என்றாலும் அவரிடம் நேரே வந்து பெண் கேட்க, அவர் அவனை நேர்முகத் தேர்வு போல் என்ன படித்தாய்?, என்ன பாஸ் செய்தாய்?என்றெல்லாம் கேட்க நாயகன் கலையின் குசும்போடு படிப்பில் ஷேக்ஸ்பியர் ஆரம்பித்து பாஸ் செய்ததில் டைப்ரைட்டிங் என ஏடாகூடமாகவே பதில் சொல்ல சொத்து எவ்வளவு? என்ற கேள்விக்கு “மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்று பாரதியார் பாடியிருக்கிறார் அதனால் அது என்னுடையது என ஒரே போடாக போட யக்ஞசாமி சளைக்காது “இன்னறு நீர்கங்கை ஆறெங்கள் ஆறே” என்று கூட பாரதியார் சொல்லியிருக்கிறார் எனவே அதில் போய் விழுந்து விடு” என்கிறார். மணந்தால் ஹேமாவதி மரணித்தால் கங்காநதி என்று அது உருவாகும் (அவனுடைய) இமயமலைக்கு தன் வேலையை விட்டுவிட்டு கிளம்புகிறான். இமயமலையின் இயற்கை அழகு அவனின் எண்ணத்தை மாற்ற மெல்ல ரசித்தபடியே காஷ்மீருக்கு வந்துவிடுகிறான். பாரதிதான் இமயமலையை நமக்கு பட்டயம் செய்துவிட்டாரே என்று தன் உயிரைத்துறக்கும் முடிவைத் துறந்து ஹேமாவதிக்கு இதையெல்லாம் ரசிக்க கொடுத்து வைக்கவில்லை என்று நினைக்கிறான்.
யக்ஞசாமி பதவி உயர்வில் எல்லைப்பகுதியான ராவல்பிண்டிக்கு குடும்பத்துடன் வர, அடுத்த கொஞ்ச நாட்களில் கலவரம் ஏற்பட ,உயிர்பிழைத்தால் போதும் என காரில் குடும்பத்துடன் புறப்பட்டு , பின் கால்நடையாக நடந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு நலிந்து, மெலிந்து, அகதிகளுடன் ஸ்ரீ நகருக்கருகில் வந்து சேர்கின்றனர். அகதிகளுக்கு தொண்டு செய்யும் குழுவில் கதையில் ஹீரோ ரீஎன்ட்ரீ ஆகிறான். யக்ஞசாமி தானே அவனிடம் சென்று அறிமுகம் செய்துகொண்டு ‘நாங்கள் பிழைப்போமா? என்று தெரியவில்லை ‘நீயே என்மகளை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்று நாள் பார்த்து திருமணம் செய்துகொள்’ என்கிறார். நாளும் கடக்க வேண்டாம் நகருக்கும் போகவேண்டாம் என்னுடைய இமையமலை தான் இங்கிருக்கிறதே அதனால் இங்கேயே திருமணம் செய்யலாம் என நூறு ரூபாயில் திருமணத்தை முடிக்கிறான்.
அகதியான நிலையிலும் யக்ஞசாமி (யாசகசாமியாக)திருமண செலவு மிச்சம் என்று யோசிக்கிறார்.
ஆறுமாதம் கழித்து, பத்திரிக்கையில் காஷ்மீரத்தின் மீது படையெடுத்து வந்தவர்களுடன் போராடியதில் சிவன் காயம்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என செய்திவருகிறது. தன் குலதனத்தைக் காக்க போராடியது வியப்பில்லை தானே என்று முடித்திருப்பார்.
ரசித்தது:- தந்தைக்கு தன் புதல்வியின் சங்கீத ஞானத்தைப் பற்றி மகா பெருமை. தன் வண்டியின் ஹாரன் சத்தத்திற்கு அடுத்து பெண்ணின் குரல்தான் அவருக்கு மிகப் பிடிக்கும். அப்படிப் பட்ட சங்கீத பூசணியை தானே ரேடியோ நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுவார். இல்லாவிட்டால் மரியாதைக் குறைவாகாதா!!(ஆல்இன்ஆல் அழகு ராஜாவில் காஜலின் கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது). கச்சேரிக்கு செல்வதற்கு ஒருவாரம் முன்பிருந்தே ஹேமாவின் குரல்வளத்தை பாதுகாக்க காலில் செருப்பில்லாமல் நடக்காதே, cold வாட்டர் குடிக்காதே என்று எக்ஸ்ட்ரா அலட்டல்களால் வீடு ரகளையாகிறது.
அப்பாவுக்கும் காதலனுக்குமான பேச்சை கதவின் மறைவிலிருந்து கேட்கும் ஹேமா தன்கண்ணீருக்கு 12 கர்ச்சீப்புகளை பாழாக்கினாள் என்று இன்னும் கூட இந்த கதையிலேயே ரசிக்கும் இடங்கள் இருக்கின்றன,மற்ற கதைகளை நீங்கள் படித்து ரசியுங்கள்.
நட்சத்திர உணவகமோ, நடுத்தர குடும்பமோ சர்க்கரைப் பொங்கல் என்றாலே, பச்சரிசியை குழைய வேகவைத்து பக்குவமாய் சேர்க்கும் வெல்லமுமே. மற்றபடி அதில் சேர்க்கக்கூடிய முந்திரி, நெய் என்று எதுவானாலும் அவரவர் வாய் ருசிக்கும் வசதிக்கும் ஏற்ப சேர்ப்பதே. பதிப்பகங்கள் – பச்சரிசி, கல்கியின் புத்தகங்கள்- வெல்லம் அதற்கான தள்ளுபடிகள் விகிதம் அந்தந்த பதிப்பகங்கள் விருப்பத்தில் புத்தகத் திருவிழாவிலோ அல்லது மற்ற நாட்களிலோ வாசகர்களாகிய நமக்கு சுவைக்கத் தருகின்றனர். பொங்கலன்று தான் பொங்கல் சாப்பிட வேண்டுமா? மற்ற நாட்களிலும் சாப்பிடலாம் தானே! விரும்பிய போது சாப்பிடும் பொங்கலாக கல்கியின் படைப்புகளை சுவைத்து மகிழ்வோம் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கல் உவமை நன்று.
LikeLiked by 1 person
நன்றிகள்
LikeLike