ஆஸ்திரேலியா: தேசம் வளர்ந்த கதை! பகுதி 2

( 20 மணி நேரம் தூங்கும் கோலாக்கள் வளர்ந்த கதை!)
ஒரு நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வதன் மூலம் அந்நாட்டின் நிகழ்கால பாரம்பரியம், அரசியல், கலாச்சாரம் மற்றும் அதன் சமூக மாற்றங்கள் எப்படி அதன் எதிர்கால சந்ததியை வழிநடத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும். 
ஆஸ்திரேலியாயின் முதல் பிரித்தானிய தளபதி கப்டன் ஆத்தர் பிலிப் தான் வந்து இறங்கிய இடத்தை ஒத்த பிரதேசங்களை நியு சவுத் வேல்ஸ் என்ற மாநிலமாக பிரகடனப்படுத்தி அதன் கவர்ணர் ஆகவும் தன்னை ஆக்கிக் கொண்டான். வாழ வந்தவன் ஆள நினைப்பது ஒன்றும் புதிதல்லவே!ஆஸ்திரேலியாவின் முதல் மாநிலம் இப்படித்தான் உருவாகிற்று.அக்காலத்தில் நியுசிலாந்து நாடு கூட இம்மாநிலத்தின் ஒரு பகுதியாகவே  கணிக்கப்பட்டது என்பது ஒரு விசித்திரமான உண்மை!

விக்டோரியா மாநிலத்தில் தங்கம் இருப்பது 1823 இல் கண்டறியப்படவே சிட்னிஇல் இருந்து சனத்தொகை இங்கும் மெதுவாய் கசியத் தொடங்கிற்று. 1856 இல் மட்டும் 94,980 கிலோ தங்கம் இங்கு எடுக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?1851 இல் 437,600 ஆக இருந்த ஆஸ்த்திரேலியாவின் சனத்தொதை 1861 இல் 1,151, 900 ஆக பெருகிற்று. 

விக்டோரியா மாநிலத்தில் உள்ள பலராட், பென்டிகோ நகரங்களில் கூடாரமடித்து அனேகர் கட்டுப்பாடற்ற தங்க வேட்டையில் ஈடுபட்டனர். இதனோடு பல சட்ட விரோத செயல்களும் இங்கு முளைவிடத் தொடங்கிற்று.அப்போதய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட தங்க தேடுதலில் ஈடுபட்டோர்க்கான  வரிகளை எதிர்த்து “யூரேக்கா கலவரம்” 1854 இல் பலராட்  நகரில் வெடித்து. இதன் கோர விளைவாக நான்கு சிப்பாய்களும் 24 தொழிலாளர்களும் மாண்டனர்.  இந்த அனர்த்தத்தை இன்றும் நினைவு கூரும் வகையில் மெல்பேர்ணில் உள்ளஆஸ்திரேவியாவின் அதி உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான யூரேக்கா டவர் வெளிப்புறத்தில் தங்க முலாம் பூசப்டட்ட பின்னணியில் பதித்த ஒரு சிவப்பு இரத்த கறை நிற பட்டி அந்த இருண்ட சரித்திரத்தை நினைவூட்டும். 

சரிதான், இந்த தங்க சுரங்க தொழிலாளிகளின் வாழ்வு முறை எப்படி அமைந்து என அறிய ஆவலா?  உங்களை அந்த உலகுக்கு அழைத்துச் செல்வதற்காகவே மெல்பேர்ண் அருகே உள்ள Sovereign Hill என்ற நகரத்தில் ஒரு பெரிய மாதிரி தங்க நகரத்தையே அமைத்துள்ளனர். இங்குள்ள எல்லோரும் அன்றய காலத்திற்கேற்ற நடை, உடை பாவனையுடன் பவனி வருவது நம்மை அந்த உலகத்திற்கே கொண்டு சென்று விடும். நீங்களும் தங்க வேட்டையில் ஈடுபடலாம் – கிடைத்தால் அவை உங்களுக்கே!  மெல்பேர்ண்க்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகள் இங்கு விஜயம் செய்ய தவறுவதில்லை. இது தொடர்பான இந்த வலைத்தளத்தை தட்டிப் பாருங்களேன்:https://sovereignhill.com.au/sovereign-hill-from-home

அஸ்திரேலியாவின் மாநிலங்களின் பரிணாம வளர்ச்சி அதன் சனத்தொகை விகிதாசாரங்களை பிரதிபலித்தது.முதலில் இரு மாநிலங்களாக தோன்றி பின்னர் படிப்படியாக கூர்ப்படைந்து இன்று ஆறு மாநிலங்கள் மற்றும் மூன்று பிரதேசங்கள் என கிளை பரப்பி நிற்கின்றன. மாநிலங்களை நிர்வகிக்கும் அரசியல் தலைமை மாநில பாராளுமன்றத்திற்கும் அதன் தலைவரான premiere க்கும் உண்டு. நாட்டின் பிரதமரின் கீழ் ஒரு Federation அமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் மூலம் மாநில ஆட்சிகள்  ஆட்சி புரிவது  ஒரு சிறந்த அரசியல் அமைப்பு முறையாக கணிக்கப்படுகிறது. 

கொரோனா நோய் காலங்களில்  மாநில அரசுகளும் மத்திய அரசும் (அவை வேறு வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவையாக இருந்தாலும்) ஒரு சிறந்த புரிந்துணர்தலுடன் ஒரே இலக்கில் பயணித்து மக்கள் தேவையுணர்ந்து செயல்பட்டது அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது. 

ஆஸ்திரேலியாவின் 7.7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 25.7 மில்லியன் மக்கள் மட்டும் வாழ்வது ஒரு வியப்பே!  ஒரு ஒப்பீட்டுக்கு சொல்வதானால் 65 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவான இலங்கையின் சனத்தொகை ஏறக்குறைய 23 மில்லியன்!  இப்போது புரிகிறதா? 

இந்த பரந்த பூமியை பல நாட்டைச் சேர்ந்தவர்கள் குடிபெயர்ந்து “நம் நாடு” என்ற பெருமையுடன் அரவணைத்து தங்கள் கலாச்சாரங்கள், சமய வழிபாடுகள், உணவு வகைகள் போன்றவற்றினால் மெருகூட்டி உள்ளார்கள். எனினும் 1901 முதல் 1973 வரை வெள்ளையரல்லாத இனத்தவர் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட White Australia policy ஐ ஆஸ்திரேலிய அரசு கைப்பிடித்தது. 1973 இல் இக் கொள்கை முற்றாக ஒழிக்கப்பட்டு 1975 இல் இனவாரியாக தொழில்களுக்கு தெரிவு செய்யப்படுதல் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது.இன்று பல தேசங்களைச் சேர்ந்த பல இன மக்கள் இந்த மண்ணை வளம் பெறச் செய்வதை கண்கூடாக காணலாம்.பானும் தேனும் ஓடும் இந்த அழகிய தேசத்திற்கு நீங்கள் முயற்சி எனும் பசுவையும் உழைப்பு எனும் தேனீயையும் உங்களுடன்  கொண்டு வந்தே ஆக வேண்டும்! 

ஆஸ்திரேலியா என்றதும் முதலில் நினைவிற்கு வருவது இங்குள்ள விசித்திரமான பிராணிகள். கங்காரு, கோலா, பிளாட்ட புஸ் போன்ற பிராணிகள் இந்நாட்டிற்கு மட்டும் சொந்தமானவை. 
சுதந்திரமாக ஆஸ்திரேலியாவின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் கங்காரு மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பாய்ந்து ஓடக் கூடியது. பாதையின் குறுக்கே பாய்ந்து கனவாகனங்களில் மோதி உயிர்மாய்க்கும் கங்காருக்களையும் வாகனங்களையும்  பாதுகாக்கும் பொருட்டு ஆஸ்திரேலிய நெடுஞ்சாலைகளில் எச்சரிப்பு அறிவித்தல் பலகைகளை காணலாம்.

பிறக்கும் போது ஒரு நிலக்கடலை அளவே உள்ள joey எனும் குட்டி கங்காரு தன் தாயின் வயிற்றில் உள்ள பையை கண்டறிந்து ஊர்ந்து அங்கு குடிபுகுந்து 235 நாட்கள் வரை பைக்குள் உள்ள முலைகளில் பால் அருந்தி வாழ்வது தாய்மையின் ஒரு அதிசயம் அல்லவா? ஆஸ்த்ரேலியாவிற்கு மட்டுமே சொந்தமான இப் பிராணி இந்நாட்டின் coat of arms என அழைக்கப்படும் நாட்டின் தேசிய சின்னத்திலும் ஏறி தேசிய மிருகமாக குத்திக் கொண்டது அதிசயம் அல்லவே! 

அடுத்து வருவபவர் யாரோ?ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யும் எந்த சுற்றுலாப் பயணியும் இவருடன் படம் எடுக்க தவறுவதில்லை. ஆம், திருவாளர் கோலாவைத்தான் சொல்கிறேன்! கோலா கரடி என சிலர் இவரை அழைத்தாலும் இவர் கரடி இனத்தவர் அல்ல! அமைதியின் உருவமான இவர் யூகலிப்டஸ் இலைகளை  அசை போட்டபடி மரத்திலேயே தூங்கிப்போவார். ஒரு நாளில் 20 மணி நேரம் வரை தூங்குவார் இந்த தூங்குமூஞ்சி!  எல்லா யூகலிப்டஸ் இலைகளையும் அசை போடாமல் சில குறிப்பிட்ட வகை யூகலிப்டஸ் மரங்களை மட்டுமே இவர் நாடுவதால் இவரை மகிழ்ச்சிப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல! கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஏற்பட்ட காட்டுத் தீயின் கோரத்தால் அனேக கோலாக்கள் மரணத்தை தழுவியது சோகமே. மற்ற மிருகங்களைப் போல் அல்லாது  காட்டுத் தீயை கண்டதும் ஓடித் தப்பும்  யுக்தி இந்த கோலாக்களுக்கு இல்லை.  தங்கள் இருக்கும் மரத்தின் உச்சிக்கு ஏறி கிளைகளில் தங்கிக் கொண்டு தீயில் வெந்து உயரை மாய்க்கும்.இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக  அரசும் விலங்கு விரும்பிகளும் அரும்பாடு படுகின்றனர். 

ஆஸ்திரேலியாவின் மத்திய, மேற்குப் பகுதிகளின் செம்மணவில்  கால் பதித்து அசை போட்டபடி மெதுவாய் நடந்து செல்லும் அந்த ஒட்டகங்களை இனி சந்திப்போமா?19ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் இருந்து போக்குவரத்துக்காகவும் கட்டுமான வேலைகளுக்காகவும் இவை இங்கு அழைத்து வரப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பை ஆராய்ந்து கண்டறிய பயணித்த அனேக ஆராட்சியாளர்கள் பாதைகள் இல்லாத  பற்றைக் காடுகளையும் பாலைவனங்களையும் ஒட்டகங்களின் உதவியுடனேயே கடந்தனர். மேலும் பருத்தி வயல்களில் இருந்து பொதிகளை துறைமுகங்களுக்கு சுமந்து செல்வதில் இவை பெரும் பங்குவகித்தன. 

மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இவற்றின் தேவை முடிவுக்கு வரவே இவை ஆஸ்திரெவியாவின் பாலைவனங்களுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சுதந்திரமாய் அலைந்து திரியும் இவற்றின் (feral camels) எண்ணிக்கை ஒரு மில்லியனையும் எட்டியதாய் சொல்லப்படுகிறது. இவை பல கலன்கள் நீரை ஒரே மூச்சில் குடித்து முடித்து புல்தரைகளை மேய்ந்து தரிசு நிலங்களாக மாற்றிவிடும். இதனால் இவை விவசாயிகளின் எதிரியாக கருதப்படுகிறது. எனினும் இவற்றிற்கு இயற்கை (மிருக) எதிரிகள் ஒன்றும் இல்லாததனால் இவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டே போகிறது எனலாம்.அண்மைக்காலங்களில் உணவுக்காக ஒட்டகங்களின் இறைச்சியும் பாலும் ஐரோப்பிய, அமரிக்க, யப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

சுற்றுலாப் பயணிகள் ஒட்டகச் சவாரியையும் ஒட்டக ஓட்டப் போட்டிகளையும் “செய்ய வேண்டியவை” பட்டியலில் சேர்க்க தவறுவதில்லை! 
ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஒட்டக ஓட்டுனர்களை நினைவூட்டும்   48 மணி நேர சொகுசு ரயில் பயணத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போமா?
(தொடரும்)

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: