படகோட்டியின் பயணம்(padagotiyin payanam)- பகுதி – 3

ஆசிரியர்:- பாவண்ணன்( pavannan)
பதிப்பகம்:- நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்
வகை:- கட்டுரை

பாரதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவுக்கானது எனது இந்த பதிவு.
‘படகோட்டியின் பயணம்’ என்ற நூலில் ‘ஆறுஆண்டு காலத் தவிப்பு’ என்ற தலைப்பின் கீழ் உள்ளது பாரதியைப் பற்றிய இந்தப்பதிவு.
‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா’  என்று புகழப்பட்ட பாரதியாரும் கவிதை எழுதமுடியாமல்    தவித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
பாரதியின் கவிதையைப் படித்த பாரதி கிருஷ்ணகுமாருக்கு தோன்றியகேள்விக்கான பதிலை ‘அருந்தவப் பன்றி சுப்ரமணிய பாரதியார்’  என்ற ஆய்வுநூலாக வெளியிட்டிருக்கிறார்.

பாரதியின் ஆரம்பகால கவிதையில் ஒன்று கவிதாதேவி அருள்வேண்டல் ‘வாராய் கவிதையாம் மணிப்பெயர் காதலி’ என்று கவிதையின் ஆரம்ப வரிகள் தொடங்கி பின்பு ‘பன்னாள் பன்மதி ஆண்டு பல கழிந்தன, நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே’என்று எழுதிச் செல்கிறார். நம்மில் பலர் அதைப் படித்து கடந்திருப்போம்.

கிருஷ்ணகுமார் அந்த வரிகளை படித்தும் யோசித்ததில்  பல ஆண்டுகளாக தன்னோடு பழகிய  கவிதை என்ற காதலியைப் பார்க்காமல் பலமாதங்கள் ஓடிவிட்டது என்று வேதனைபடச் சொல்கிறார் பாரதியார். கவிதையில்  கரைந்திருந்த மனம் தன்னைவிட்டு அகன்றதை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அப்படி எனில் எத்தனை ஆண்டுகள் பாரதியார் கவிதை எழுதாமல் இருந்தார் ?என்ற கேள்வி கிருஷ்ணகுமாரின் நெஞ்சில் எழுகிறது.

சாதாரணமாக கவிதை எழுதத் தொடங்குபவர்கள் ஆரம்பகாலத்தில் கற்பனையும் உணர்ச்சி வேகமும் பீறிட்டெழ எழுதுவார்கள். ஆனால் பாரதியின் வாழ்வில் கவிதை எழுதத் தொடங்கிய  ஆரம்ப காலத்திலேயே சில ஆண்டுகள் கவிதை எழுத வராது தவித்திருக்கிறார். அப்படியானால் அவர்  எங்கு இருந்தார்?,என்ன செய்தார்?  கவிதாதேவியை விட்டு பிரிவதற்கு முன்பு கடைசியாக எழுதிய கவிதை எது?மீண்டும் வந்த பிறகு எழுதிய கவிதை எது?  என்று கிருஷ்ணகுமார் தவித்து யோசித்து பாரதியைப் பற்றிய ஆய்வு நூல்களை வேகமாகஆராய்ந்தும் அதற்கான விடை ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை.

பாரதி துயருற்றதாக அவர் கண்டறிந்ததற்கு காரணம்  பாரதியாரின் கவிதையில் சொல்லப்பட்ட ஒரு  கதையாகும்.
ஒருமுறை  ஒரு முனிவர்  சாபத்திற்கு ஆளாகி பன்றியாக மாற  தவமுனி  அருந்தவப்பன்றி ஆகிறார்.
முனிவர் உருமாறுவதற்கு முன்பாக தம் மகனை அழைத்து  தாம் பன்றியாக  மாறியதும் தன்னை வாளால் வெட்டிக் கொன்றுவிடச் சொல்கிறார். அதன்படி பன்றியாக மாறியவரை  கொல்வதற்கு மகன் வாளுடன் வர முனிவரோ  மகனைத் தடுத்து தன் பன்றி வாழ்விலும் சில இன்பங்கள் இருப்பதாகவும்  அதனால் சிறிது காலம் சென்று தன்னை வெட்டலாம்  என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.

காட்டுக்குள் ஒற்றையாக அலைந்த பன்றி பின்பு    பன்றிக் குடும்பமாகிட  மகன் மீண்டும் வாளோடு வர அப்போதும் முனிவருக்கு மனமில்லாமல் தனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருப்பதாகவும் தன்னை வெட்ட வேண்டாமென்றும் சொல்லிவிட்டு தன்  குடும்பத்துடன் பன்றி ஓடிவிடுகிறது.

பாரதியார் கவிதை எழுதமுடியாமல் தவித்ததற்கு காரணத்தை தாமும் முனிவரைப்போல தன் நிலை தாழ்ந்து இழிந்த பன்றி போன்று வாழ்ந்ததாக வரும்  குறிப்பிலிருந்து கிருஷ்ணகுமார் தெரிந்து கொள்கிறார். தான் சேகரித்த வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்ததின் வழி, பாரதியின் தந்தை தொடங்கிய நூற்பாலை எதிர்பாராத விதமாக நடத்த முடியாமல் போக,  சுற்றமும் நட்பும் வற்றிய குளத்து நீர் பறவைகளாக விலகிட  ,தான் முதலீடு செய்த பங்குகளைக் எட்டயபுரம் மன்னர் கேட்காவிட்டாலும் அவரின் ஆதரவும் குறைந்து போகிறது. தந்தையால் தன் படிப்புக்கும் பணம் அனுப்ப முடியாத சூழல்  இந்நிலையில் பாரதியே  உதவி கேட்டு மன்னரைப் போற்றி கவிதை வடிவில் கடிதம் எழுதியும் அவருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை தந்தையின் மறைவினால்   வறுமையைப்போக்க அரண்மனை வேலைக்குச் செல்கிறார். சில மாதங்களில் குடும்பத்தின் வறுமை சற்று குறைந்த நிலையில் மீண்டும் கவிதா தேவியைத் தேடிச் செல்ல அவளோ அவரை விட்டு மறைந்து போகிறாள். 

கல்வியைத் தொடரகாசிக்குச் செல்ல அங்கு அத்தையார் அக்கால வழக்கப்படி தன் ஏழுவயதேயான மகளை திருமணம் செய்விக்கிறார். காசியில் படித்து முடித்து தங்கியிருந்த வேளையில் அங்கே எட்டயபுரம் மன்னருடன்சந்திப்பு நிகழ மீண்டும் அவரை ஜமீனுக்கு வரச்சொல்கிறார் . பாரதி மனம் ஒப்பாமல் கசப்புடன் வேலையில் இருக்க, விடுப்பில் சென்ற ஆசிரியருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியராக  ஒரு பள்ளியில் 102 நாட்கள் வேலை பார்க்கி்றார். பிறகு சென்னைக்கு வரும் பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியைத் தொடங்குகிறார். இதன் பின்பே கவிதாதேவி தன்னிடம் வந்ததாக  பாரதி உணர்கிறார்.

தான் எழுத முடியாமல் பட்ட துன்பத்தை ஔியில்லாத வாள்போல, உவகையற்ற மனம்போல,சுதந்திரம் இழந்த தொண்டர்கள்போல,சத்தியம் மறந்த ஒரு சாத்திரக் குப்பைபோல இடையறாது இருண்டு கிடந்தது என்   வாழ்க்கை என்று உவமைகளினால் தன் மனநிலையை உணர்த்துகிறார்.  பாரதியார் கவிதை எழுத முடியாமல் தவித்தது ஏறத்தாழ ஆறு ஆண்டுகள். அதற்கு காரணம் வறுமை, அதனால் தான் செய்த புன் தொழில் ,அதன் விளைவாக கவிதாதேவி தன்னை விட்டு விலகியதையும் சொல்கிறார்.  பாரதி கவிதையின்றி வாழ்ந்ததை பன்றியின் இழிந்த வாழ்க்கையுடன்  ஒப்பிடுகிறார்.

ஆழ்ந்து படித்ததில் கவனித்த  கவிதையின் வரிகளை ஆராய்ந்து பாரதியின் ஆய்வு நூல்களைத் தொகுத்து அதன் வழி பாரதியின்  பார்க்கப்படாத பக்கத்தை பார்க்கச் செய்த கிருஷ்ணகுமாரின் முயற்சி பாராட்டத்தக்கது. 

ரசித்தது:- “மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்; பாதகீ! நீ என்னைப்  பிரிந்து மற்று அகற்றனை” என்கிறார்.தனக்கு பிரியமானவர்களின்  தவறை சுட்டிக்காட்ட முதலில் அவரின்  நற்குணத்தை சொல்லிய பிறகு அடப்பாவி ஏனிப்படி செய்தாய்? என்று கேட்போம் பாரதியாரும்   வராத கவிதா தேவியை  ‘மறைந்த மருந்துடைபொற்குடம்’ என்று பாராட்டி  பிறகு ‘பாதகீ ‘!என்று தன் ஆற்றாமையைக் கொட்டுகிறார் என்றே தோன்றுகிறது.

சாகுந்தலம் தந்த  காளிதாசன், சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ, இராமாயணம் இயற்றிய கம்பர் ஆகியோருக்கு உனது நெஞ்சை முழுமையும் அள்ளிக் கொடுத்தது போல என்று கூட கேட்கவில்லை. கனிவான ஒரு சொல்லும், உன் மலர் கரங்களால் என் தலையை வருடினாலே போதும் அந்த அனுபவத்தால் நான் வாழ்ந்து விடுவேன்.எளியவனான நான் மீண்டும் உன்னிடம் ஆட்பட அருள் கூர்ந்து என்னருகே வந்திடவேண்டும்,என்று கல்லும் கரையும்  வண்ணம்  மன்றாடுகிறார்.

எல்லாம் சரி. ஆனால் காதலனன்றோ(பாரதி) காதலியை விட்டுச் சென்றுவிட்டான். காதலியை எத்ததனை பேர்(கவிகள் ரசிகர்கள்) வேண்டுமானாலும் பார்க்கலாம், ரசிக்கலாம், புகழலாம் அணிமணிகள் தரலாம் என்றாலும் தன்னோடு உரிமையுடன் சண்டையிட்டு மன்றாடி கொஞ்சிய காதலன்(பாரதி) வரும் நாளை எதிர்பார்த்து ஏக்கத்துடன் பார்த்திருக்கிறாள் கவிதா தேவி!

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑