ஆசிரியர்:-கபிலன் வைரமுத்து
வகை:- நாவல்
பதிப்பகம்:-டிஸ்கவரி புக் பேலஸ்
விலை:-ரூ200
காலமும் இசையும் மனதை மா(ஆ)ற்ற கூடியது என்பார்கள். இந்த புத்தகம் வாங்கியும் ஒரிரு பக்கங்கள் வாசித்த பின் இளவயதினர் படிப்பதற்குத்தான் சரியாக இருக்கும் போல என்று நினைத்து அதனுடன் வாங்கி வந்த மற்ற புத்தகங்களைப் படித்தேன். மன அழுத்தம் உள்ள ஒரு நாளில் இந்த புத்தகத்தை படித்துத்தான் பார்ப்போமே என்று கையிலெடுக்க என்னை மறந்துவாய்விட்டு சிரிக்க சிறிது நேரம் கழித்துத்தான் உணர்ந்து கொண்டேன். காலமும் இசையும் மட்டுமல்ல காலங்களை கடந்து நிற்கும் புத்தகங்களுக்கும் அந்த ஆற்றல் உண்டென்று ‘மெய்நிகரி’யினால் புரிய வைத்த கபிலன்வைரமுத்துக்கு நன்றிகள்.
சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் போட்டியாளர் தேர்வு , போட்டியாளர் எதற்காக இந்த துறையைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு சாெல்லும் காரணம், நிகழ்ச்சியின் நடுவர்கள் என்ன பேசவேண்டும் ,வெற்றியாளர் யார் என்பதுவரை தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் அந்த நிகழ்ச்சியின் அனைத்திலும் தம் விருப்பப்படி காசுக்காக ஆட்டி வைக்கிறார்கள் . இதில் பார்வையாளர்களாக வருபவர்களையும் விடுவதில்லை என்பதுதான் வியப்பு!
கதை:-
எடிட்டிங் துறையில் இருக்கும் டெரன்ஸ்பால் என்ற இளைஞன் தான் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் வேலை செய்த மாடப்புறா தொலைக்காட்சியில் தன் சக ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோ பதிவுகளின்பின்னணியில் தன்னை பாதித்தவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதாக கதை அமைந்துள்ளது. டெரன்ஸ் பால்,மானசா,பெனாசிர் ராகவன்,நிலா சுந்தரம் இவர்கள் ஐவரின் பொறுப்பில் சுந்தரம்பிள்ளை என்பவரின் தலைமையில் ‘ரியாலிட்டி ஷோ’வாக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. ஆனால் அவர்கள் ஷூட் செய்ததை எல்லாம் நிர்வாகம் மாற்றி மாற்றி போட இதற்கு காரணம் என்ன? யார் இதைச் செய்கிறார்கள்? என்பதை சுவாரசியம் குறையாமல் இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார்.
கதையின் சூழ்நிலையை விளக்க ஒவ்வோர் இடத்திலும் ஒரு நிகழ்வைச் சுட்டி அதுபோலத்தான் இதுவும்என்ற வகையில் கதைமுழுக்கவே கொண்டு சென்றிருப்பது தனிச் சிறப்பு.
ரசித்தது:-
‘வீடியோ கேம்’ ஆடும் சிறுவன், அவனின் திரையில் தெரியும் பொம்மை அவன் அதைக்கையாளும் விதத்தை ஒப்பிட்டு இப்படித்தான் தொலைக் காட்சி தயாரிப்பாளர்கள் சில நேரங்களில் திரையில் தெரியும் பொம்மைகளாக தவிக்கின்றார்கள். டி.ஆர்.பி என்பதுதான் இலக்கு என்றாலும் அதை எப்படி அடைவது என்ற கேள்வியும் குழப்பமும் எல்லா தனியார் தொலைக் காட்சியிலும் உள்ளதுதான் என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒப்பீடு நன்றாக இருக்கிறது.
‘காதலித்தால் நிறைய கவிதை எழுதுவார்கள் என்பது பொய்’ நிறைவான காதலைச் சந்திக்காதவர்கள்தான் அதனை மொழியில் தேடுவார்கள். காதலை முழுமையாக உள்வாங்கும் ஒவ்வொருவரும் மொழியிழந்து போவார்கள். அவளின் எஸ்.எம்.எஸ் நான் பெற்ற அனைத்து கல்வியையும் என்னிடமிருந்து பறித்தது. தாயின் அசைவுகளால் கருவில் தொடங்கும் அறிவு காதலின் நெகிழ்வில்தான் புதுப்பிக்கப்படுகிறது.
காதலைப்பற்றியதான அவரின் இந்த கருத்தைப் படித்ததும் இதழோரத்தில் புன்னகை எட்டிப்பார்கக அட! இப்படி கூட சொல்லாமோ? என்றே தோன்றியது. சிலர் மட்டுமே சினிமாவில் மேடை நாடகத்தில் சிறிது நேரமே வருவதான போஸ்ட்மேன் ,டெலிவரி பாய் போன்ற கதாபாத்திரத்தினால் பார்வையார் அனைவரின் கைதட்டலையும் பெற்றுவிடுவார் இந்த கதையில் வரும் பாட்டியும் அப்படித்தான்.
டெரன்ஸின் நண்பன் வழக்கமாக டீ குடிக்கும் கடையின் அகிலாண்டம் பாட்டி பிளாஸ்டிக் சேரை வாடைக்கு விடுவது தெரியாமல் எடுத்துப்போட்டு டீ குடித்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்ப, பாட்டியோ ‘1/2மணிக்கு ஐந்து ரூபாய் ‘என்று சொல்ல அவனோ, ‘என்ன பாட்டி இது?’ என்று காசை எடுத்துக் கொடுத்தபடி கேட்க பாட்டி சொல்லும் பதில் ‘என்ன தம்பி பண்றது இப்படியெல்லாம் சம்பாரிச்சாதான் ரிசஷன்ல மாட்டாம தப்பிக்க முடியும்!’

பாட்டியின் எதிர்பாராத பதிலால் அங்குள்ளோர் மட்டுமல்ல நாமும் சிரித்துவிடுகிறோம். வாழ்க்கையோட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யறத்துக்காக நாம பாக்கற வேலைக்கும் நம்ம உடம்புல இருக்கிறஒவ்வோர் அணுவும் பரவசப்படற மாதிரி நாம செய்யற வேலைக்கும் வித்தியாசம் இருக்கு.இது ஆன்மாவோட சம்பந்தப்பட்டது. உரிமைகொண்டாடுவது முக்கியம் இந்த கருத்துக்கு இசைவாக அவர் பாரதியின் வாழ்வின் நிகழ்வை எடுதத்தாண்டிருக்கிறார்.
“பாரதியார் தன் கவிதையை ஒருவரிடம் படித்துக்காட்டும்போது சரியான ரியாக் ஷன் வர்லனா மறுபடி சத்தம் போட்டு படிப்பாராம் அப்பவும் ரியாக் ஷன் இல்லன்னா எதிராளிய பளார்னு அறைஞ்சிட்டு போவாராம்”. பாரதியைப் பற்றிய படைப்பின் அங்கீகாரத்தை எதிர் பார்க்கிற இந்த செய்தியும் அழகுதான்!
இதைப்போல கதை முழுக்க முழுக்க ரசிக்கத் தகுந்த இடங்கள் நிறைய இருக்கின்றன. கதை தொடங்கிய போது கதைகளம் அதன் ஆரம்ப அத்தியாம் நமக்கு இந்த கதை சரிபடாது என்ற யூகத்தின் அடிப்படையில் படிக்காமல் இருந்தேன். கதையை படிக்க படிக்க இந்த கதையை இவ்வளவு நாட்களாக படிக்காமல் போனோமே? என்ற ஆதங்கத்தையும் மீறி ‘மெய் நிகரி ‘ மெய்யான மகிழ்வை மனதிற்கு தந்த(து)கபிலன் வைரமுத்துவுக்கு மீண்டும் நன்றிகள்!
Leave a Reply