ஆசிரியர்:- பாவண்ணன்(pavannan)
பதிப்பகம்:- நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்
‘படகோட்டியின் பயணம்’ நூலில், ‘காந்தி நினைவுகள்’ எனும் தலைப்பில் உள்ளது எனது இந்தப் பதிவு. காந்தியுடன் ஆசிரமத்தில் இருந்தவர்கள், அரசியல் போராட்டங்களில் பங்குகொண்டவர்கள், என ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் காந்தியைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர்.
குழந்தையிலிருந்து காந்தியைப் பார்த்து அவருடனே வளர்ந்து பெரியவனான ஒருசிறுவனின் பார்வையில் காந்தியைப்பற்றிய புத்தகம் ‘மகாத்மாவுக்குத் தொண்டு’. நாமும் பார்க்கலாமே.
ஆசிரமத்தில் காந்தியின் குடிசைக்கு அருகிலேயே உள்ள காந்தியின் செயலாளர் மகாதேவ தேசாயின் மகன் நாராயண்தேசாய். காந்தியின் பேரக் குழந்தைகளுடனும் ஆசிரமத்துக் குழந்தைகளுடனும் குழந்தையான நாராயண் தேசாய் வளர்ந்தார். காந்தி பிரார்த்தனை செய்யும் நேரத்தில், தான் பெரியவனாக வளரும் வரை அவர் மடிமீது அமரும் வாய்ப்புப் பெற்றார்.
ஒருமுறை இன்னொரு குழந்தை அமரக்கூடிய சூழலில் காந்தி இருவரையும் இருதொடைகளிலும் அமர வைத்துக்கொள்கிறார். காந்தியை ஒரு தலைவராகக் கண்டதை விட, தன்விளையாட்டுத் தோழனாக, தனக்காகப் பரிந்து பேசக்கூடியவராக நண்பராக நடைப்பயிற்சியின்போது தன் தோள்பற்றி நடக்கும் ஒருவராக நாராயண் தேசாய் காண்கிறார்.
காந்திக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். உணவு உண்பதற்கான மணி அடிக்கப்பட்டு அந்த அறையின் கதவு மூடப்படும். அதன் பிறகு யாரும் உள்ளே வரமுடியாது. ஒருமுறை குழந்தை தேசாய் வெளியில் இருக்க கதவு மூடப்படுகிறது. பசியுடன் இருக்கும் தேசாய் ‘கருணைக்கடலே கதவைத் திறவுங்கள், மங்களகரமான கோவிலின் கதவைத் திறவுங்கள்’ என்று பாடத்தொடங்கிவிடுகிறார். விதிவிலக்காக கதவு திறக்கப்பட்டு தேசாய் உள்ளே செல்கிறார்.
தண்டி யாத்திரைக்காக மக்கள் முதல் நாளிலிருந்தே பக்கத்து ஊரிலிருந்து எல்லாம் வந்து காத்திருக்கிறார்கள். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 79 பேருடன் யாத்திரை கிளம்பிவிடுகிறது. தேசாய் தன் வயதொத்த பிள்ளைகள் அனைவருடனும் கொடிபிடித்துக்கொண்டு பெரியவர்கள் முழக்கிய அதேமுழக்கங்களை முழங்கியபடி ஊர்வலம் சென்றதிசைக்கு எதிர்திசையில் சிறிது தூரம் சென்றுவிட்டு திரும்பி வந்து தாங்களும் ஊர்வலம் சென்றுவந்ததாக சந்தோஷமாகின்றனர்.
ஒருமுறை தேசாய்க்கு ஒருவர் விளையாடுவதற்கு பார்சலில் பொம்மைகளை வாங்கி அனுப்புகிறார். அவை வெளிநாட்டு பொம்மைகளாக இருப்பதால் கொடுக்காமல் காந்தி அவற்றை அலமாரிக்குள் வைத்துவிடுகிறார். இதுதேசாய்க்கு தெரியவர மற்ற சிறுவர்களைக் கூட்டிக்கொண்டு தனக்கான பொருளைத் தராமல் மறைத்திருப்பது அநியாயம் என்ற ரீதியில் பொம்மையை கொடுக்கும்படி கேட்க, காந்தியோ மறைக்காமல் பொம்மை எங்கு இருக்கிறது என்பதைச் சொல்வதுடன் ‘தேசத்திற்கே சுதேசிப் பொருட்களை உபயோகிக்கச் சொல்லும் ஆசிரமத்தில் இருந்துகொண்டு நாம்வெளிநாட்டுப் பொம்மைகளுடன் எப்படி விளையாட முடியும்? ‘என்கிறார். நாம் என்ற சொல்லைப் பயன்படுத்தி குழந்தைகள் அணியில் தன்னையும் சேர்த்துக்கொள்ள சிறுவன் மனம் கரைந்து பண்படுகிறது.
ஆசிரமத்திலேயே இருந்தாலும் சிறுவர்கள், காந்திக்கு, தங்களுடைய தேவைகளை வெளிப்படையாக கடித்திலேயே விரிவாக எழுதுகிறார்கள். காந்தியோ அவர்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் போடுகிறார்.
சிறுவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.’பாபுஜி, நாங்கள் அனைவரும் பெரிய பெரிய கேள்விகளைக் கேட்கிறோம். நீங்கள் துண்டுக்காகிதத்தில் ஓரிருவார்த்தைகளில் பதில் எழுதுகிறீர்கள். ஆசிரமத்தில் கேட்கும் கதையில் அர்ஜூனன் ஒருசிறு கேள்வியைக் கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஒரு அத்தியாயமே பதிலாகச் சொல்கிறான். நீங்களோ ஏன் இத்தனை சிறிய பதில்கள் எழுதுகிறீர்கள்? எனபிள்ளைகளின் பிரதிநிதியாகக் தேசாய் கேட்க ‘உன் கேள்வி நன்றாக இருக்கிறது’ என்று பாராட்டும் காந்தி ‘கிருஷ்ணனுக்கு ஒரு அர்ஜுனன்தான் இருந்தான். என்னிடமோ உன்னைப்போல பல அரஜுனன்கள் இருக்கிறார்களே’ என்கிறார்.
இதுபோன்று இந்த புத்கத்தில் நிறைய நிகழ்வுகள் இருக்கின்றன. குழந்தையின் பொக்கைவாய் சிரிப்புடன் படத்தில் நாம் பார்க்கும் அண்ணல் குழந்தைகளிடம் குழந்தையாக மாறி அவர்களைக் கையாண்ட நிகழ்வுகளைப் படிக்கும் போது நாமும் அந்த நிகழ்வில் இருந்த உணர்வைத் தருகிறது.
காந்தி பிறந்தநாடு என்று உலக அரங்கில் பெருமையைத் தந்த தேச தந்தையின் பிறந்தநாளையொட்டி இந்த பதிவினை வெளியிட்டு அண்ணலை வணங்குகிறேன்.
G.u.சுப்ரமணியன் தான் எழுதிய ‘சுதந்திர சுடர்கள்’ என்ற புத்தகத்தில்தான் முதலில் காந்தியடிகளை மகாத்மா என்று குறிப்பிடுகிறார்.
தகவல்:- சென்ற 28.9.21 அன்று திருநெல்வேலி வானொலியின் ‘இலக்கியம் பேசுவோம்’ நிகழ்ச்சியி்ல் முனைவர் சங்கர சரவணன் அவர்கள் தெரிவித்தது.
நல்ல பல தகவல்கள்.
LikeLiked by 1 person
நன்றி
LikeLike