எம் ஆருயிர் நண்பர் திரு.அரசு-தமிழ்ப் பேராசிரியர் அவர்கள் தந்த குறிப்பின் அடிப்படையில் தேடியவை. அன்னாருக்கு நன்றி.
நெய்தல் (திணை)
நெய்தல் நிலம் என்பது ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், பரதவர், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
நெய்தல் நிலத்தின் பொழுதுகள்
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: வருணன்
- மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர், வலைஞர், வலைஞ்சியர்
- பறவைகள்: கடற்காகம், நீர்பறவைss
- விலங்குகள்: சுறா, முதலை
- மரங்கள்: கண்டல், புன்னை, ஞாழல்
- மலர்கள்: நெய்தல், தாழை, கடம்பு
- பண்: மீன்கோட் பறை, விளரி யாழ்
- தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல், கடல்கடந்த வணிகம், முத்துக் குளித்தல்
- உணவு : மீன்
- நீர் நிலை : கேணி, கடல்
நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இரங்கல்
- புற ஒழுக்கம் : தும்பை
நெய்தல் திணைக்கு உரிய உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். இரங்கல் என்றால் வருந்துதல் என்று பொருள். கடலுள் மீன் பிடிக்கச் சென்ற தலைவனை நினைத்து, காற்றும் மழையும் தொடர்வதால் அவனுக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்துக் கரையில் உள்ள தலைவி வருந்திக் கொண்டிருப்பாள். தலைவன் தலைவியை மணந்து கொள்ளக் காலம் நீட்டித்தல், தலைவியைக் காண வராதிருத்தல் போன்றவையும் தலைவியின் இரங்கலுக்குக் காரணங்கள் ஆகும். இத்தகைய வருத்தம், அல்லது வருத்தம் தொடர்பான செய்திகளே நெய்தல் திணையின் உரிப்பொருள் ஆகும்
நெய்தல் நில உணவு
நெய்தல் நில மக்கள் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர்.தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்து மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர்.. பனங்கள்ளையும் ,நெல்லரிசிக் கள்ளையும் பருகினர். கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும் விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன.
மீன் உணக்கல்
மணற்பரப்பில் மீன்களை வெயிலில் காயப் போடுவதை மீன் உணக்கல் என்று சொல்வதுண்டு. தம் உணவுக்காகவும், விற்றுப் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தவும் மீன் உணக்கல் தொழிலைப் பரதவர் செய்வர்.
மீன்கறி ஆக்கல்
பிற நிலப் பகுதி மக்களை விட, நெய்தல் நிலப் பகுதி மக்களுக்கு அதிக அளவு உணவாவது மீன். மீனைச் சமைத்து உண்பது பற்றி நெய்தல் திணைப் பாடல்களில் செய்திகள் உள்ளன. குடவாயிற் கீரத்தனாரின் பாடலில் மீன் உணவு வகைகள் இடம் பெறுகின்றன. ‘பரதவனின் மகளான தலைவி அவனுக்கு உணவு எடுத்து வருகிறாள். உப்புக்கு விலையாகப் பெற்ற நெல்லினது அரிசியால் ஆன வெண்சோற்றின் மீது அயிலை (ரை) மீனை இட்டுச் சமைத்த அழகிய புளிக்கறியைச் சொரிந்து கொழுவிய மீன் கருவாட்டுப் பொறிக்கறியுடன் தந்தை உண்ண அவள் தருவாள்’, புளிக்கறி என்பது புளிக்குழம்பைக் குறிக்கின்றது. அயிரை மீன் புளிக் குழம்பும், கொழுமீன் கருவாட்டுப் பொறியலும் பரதவரின் உணவு வகைகள் எனத் தெரிகின்றது.
கடல் தொழிலில் மீன்பிடத்தல், உலர் மீன் தயார்ப்பு, பசுமீன் அல்லது உலர்மீன் விற்றல், உப்பு தாயாரித்தல் மற்றும் விற்றல் போன்றவைப் பெருந் தொழில்களாக நிகழ்ந்துள்ளன..மீன், உப்பு, முத்து போன்றவற்றை விற்று நெல், அரிசி, பருப்பு போன்ற பொருள்களைப் பண்டமாற்றாக பெற்றுள்ளனர்
மீன்தொழிலில் வல்லமை பெற்ற ஆண்களுக்குத் தங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
உலர் மீன் தொழிலைப் பெண்கள் செய்துள்ளனர்..
பாலை

பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் ஐந்து வகை நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர். “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” – சிலப்பதிகாரம்
பாலை நிலத்தின் பொழுதுகள்
இளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும்
நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
பாலை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: கொற்றவை
- மக்கள்: எயினர் (வேட்டுவர்) ,விடலை, காளை, மறவர், மறத்தியர்
- பறவைகள்: பருந்து, கழுகு, புறா
- மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
- மலர்கள்: மராம்பு
- பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
- பறை : ஆறலை, சூறைகோள்
- தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
- உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
- நீர்: கிணறு
- விலங்கு: வலியிலந்த புலி, செந்நாய்
- யாழ்: பாலையாழ்
- ஊர்: குறும்பு
பாலை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : பிரிதல்
- புற ஒழுக்கம் : வாகை
- பாலைவனம் என்பது தமிழகத்தில் இல்லை. ஆயினும், குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் தமது இயல்புகளில் இருந்து மாறுபடுவது உண்டு. இங்ஙனம் மாறுபட்ட நிலப் பகுதி பாலை என்று அழைக்கப்பட்டது.
- பாலை நிலத்தின் இயல்பு
- விரிந்து பரந்த நெடிய மணல் பரப்பு.
- பொதுவாக உயிரினங்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற சூழல்.
- நீர் அற்ற வறண்ட பகுதி.
- வெப்பம் மிக்க நிலப் பகுதி.
- சுழல் காற்று (சுழன்று வேகமாக வீசும் காற்று) மிகுந்த பகுதி.
- வழிப்பறிக் கொள்ளையர்கள் (வழிப் போக்கர்களைத் தாக்கி அவர்களின் பொருள்களைக் கவர்ந்து செல்வோர்) வாழும் பகுதி.
தமிழ் நில வரைவியலில் பாலை என்றொரு தனி நிலப்பகுதி இல்லை. திணையொழுக்க வாழ்வியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை முறைமைகள் வகுக்கப்பட்டுள்ளன.குறிஞ்சி நிலமோ அல்லது முல்லை நிலமோ, வெயில் மற்றும் வறட்சியின் காரணமாக வளம் குறைந்துபோனால், அவை பாலை என்றொரு கோர வடிவம் ஏற்கும். அப்போது அங்கு வாழும் மனிதர்களும், அவர்தம் வாழ்விடமும், ஏற்கும் தொழில்களும், வாழ்வியல் முறைமைகளும் மாறிப்போகின்றன.
பாலை நிலம், கடந்து செல்வதற்கு அரிய தன்மை கொண்டது. மழையின்மையாலும் வெயில் கொடுமையினாலும் அங்குள்ள மரம், செடி, கொடி யாவும் காய்ந்து கருகி, தீப்பிடித்தது போலக் காணப்படும். அதனை இலக்கியங்கள் சுரம் என்று கூறுகின்றன.பாலை நிலத்தில் உணவோ, தண்ணீரோ எளிதில் கிட்டிவிடாது.
எயினரும் எயிற்றியரும்
பாலை நில மக்கள், எயினர், மறவர் என்றழைக்கப்பட்டனர். பாலை நிலப் பெண்கள் எயிற்றியர் ஆவர். இவர்கள், ‘ஆறலைக் கள்வர்’ என்று அழைக்கப்படுவர். ஆறு என்றால் வழி; வழிப்பறி செய்வதையே தொழிலாக உடையவர்கள். இவர்கள் வழியில் வருவோரிடத்தில் பொருளைப் பறித்துக்கொண்டு, அதற்குப் பரிசாக அவர்களின் உடம்பில் புண்களை அளித்துவிட்டுச் செல்வராம். இரவு நேரத்தில் பன்றிகளை வேட்டையாடுவர்; பகலில் முயல்களை வேட்டையாடுவர். சில வேளைகளில் ஆடு, மாடுகளைக் கவரும் தொழிலையும் மேற்கொள்ளுவர்.
பெண்களாகிய எயிற்றியர் புல்லரிசி எடுத்து வந்து சமைத்துப் பரிமாறும் அழகைப் பெரும்பாணாற்றுப் படை காட்டுகிறது. புல்லரிசி என்பது, எறும்புகள் தமது புற்றுக்களில் சேகரித்து வைத்துள்ள அரிசியாகும். பாலை நிலத்தில் வாழும் எயிற்றியர் புல்லரிசி எடுக்கக் கையில் சிறு கடப்பாரையுடன் செல்வர். அது நுனியில் இரும்புப் பூண் கொண்டு, புற்றைக் குத்தித் தோண்டுவதற்கு ஏற்றவாறு கூர்மைப்படுத்தப்பட்டிருக்கும். புல்லரிசி இருக்கும் புற்றுக்களில் தோண்டி அரிசிகளைச் சேகரித்தபின், வீட்டுக்குக் கொண்டு வந்து, முற்றத்தில் விளா மரத்தினடியில் உள்ள நிலவுரலில் (பூமியோடு புதைக்கப்பட்டுள்ள உரல்) போட்டுக், குறுகிய உலக்கையால் குற்றித் தூய்மைப்படுத்துவர். பிறகு ஆழமான கிணற்றில் சிறிதளவே ஊறியுள்ள நீரை முகந்து வந்து விளிம்பு உடைந்துபோன பானையில் உலையேற்றி, அரிசிபோட்டு உணவு சமைப்பர்.அங்கே சென்றால் தாம் சமைத்த புல்லரிசிச் சோற்றைக் கருவாட்டோடு சேர்த்து, தெய்வத்துக்குப் படைக்கும் பிரசாதம் போலத் தேக்கிலையில் வைத்து, பசி போகுமாறு எயிற்றியர் தருவராம்..
ஓய்மானாட்டுப் பாலைநில மக்களான வேட்டுவர், இனிய புளிங்கறி எனப்பட்ட சோற்றையும் சூட்டிறைச்சியையும் உண்டனர். தொண்டைநாட்டுப் பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டார்கள். விருந்தினர்க்கு தேக்கு இலையில் உணவு படைத்தார்கள்.
மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டார்கள்.
நண்பர் அரசு, தமிழ் பேராசிரியர் கொடுத்த ஊக்கத்தாலும், உள்ளுக்குள் தோன்றிய உந்துதலாலும் இயன்றவரை இயம்பி விட்டேன். இதுவே தமிழ் கற்றறிந்தவர். எனில் இன்னும் சிறப்பாக படைத்திருப்பார். எப்படி இருப்பினும் என்பால் அன்பு கொண்ட நல் உள்ளங்கள் தந்த ஊக்கமும் எனில் இன்னும் சிறப்பாக படைத்திருப்பார். எப்படி இருப்பினும் என்பால் அன்பு கொண்ட நல் உள்ளங்கள் தந்த ஊக்கமும், எழுதிய பின்னூட்டமும் எனக்கு மகிழ்வை தந்தது என்பது உண்மை.. மீண்டும் தமிழர் பெருமை பேசும் செய்தி ஒன்றுடன் செய்திச் சாரலில் சந்திப்போம்; வணக்கம்.
Leave a Reply