எம் ஆருயிர் நண்பர் திரு.அரசு-தமிழ்ப் பேராசிரியர் அவர்கள் தந்த குறிப்பின் அடிப்படையில் தேடியவை. அன்னாருக்கு நன்றி.
************************
தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எத்தகையது என்பதை நாம் இலக்கியங்களின் வழி நன்கு அறிய முடிகிறது. தமிழர்களின் சிறப்பான வாழ்க்கைக்கு தமிழ் இலக்கணங்களிலும் ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன
உலக மொழிகளில் பொருள் இலக்கணம் உள்ள மொழி தமிழ் மட்டுமே. தொல்காப்பியத்தில் பொருளிலக்கணத்தில் நான்கு வகை நிலமே பேசப்படுகிறது. பின்னர் குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைக்கு இடைப்பட்ட பாழ் நிலம் பாலை நிலம் என சேர்த்து ஐவகை நிலமாக வழங்கப்படுகிறது.
ஐவகை நிலத்துக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று கூறப்பட்டுள்ளன. இதில் கருப்பொருளில் உள்ள பதினான்கனுள் ‘உணவு’ பற்றி மட்டும் நாம் பார்ப்போம்.
எந்த பெரிய மருத்துவமனைகளும், மருத்துவர்களும்,மருந்துகளும், பரிசோதனைக் கூடங்களும் இல்லாத அக்காலத்தில் தமிழர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்கள் உண்ட உணவே காரணமாகும்.
இன்றைய ஆரோக்கிய சிக்கல்களை பார்க்கும் போது நாம் சங்ககாலத்துக்கு போய்விட மனம் விரும்புகிறது.
ஐவகை நிலங்களில் முதலில் ‘குறிஞ்சி’ நில உணவு பற்றி பார்ப்போம்.
சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கு விற்று மீனையும், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் சிறப்பு நாள்களில் நெய்யுடை உணவு உண்டார்கள்
சவ்வாது மலை மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள்.உடும்பு, கடமான், பன்றி இறைச்சியையும் உண்டனர். பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பையும் மூங்கிலரிசிச் சோற்றையும் உண்டனர். மலைநாட்டைக் காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.
குறிஞ்சி நில மக்கள் மலைநெல், தினை, மூங்கிலரிசி ஆகியவற்றை உணவாக உண்டார்கள்.
மலைநெல்/ Mountain Paddy
குறிஞ்சி நில நெல்லை ‘குள நெல்’ என்பர். மலை நெல்லை சங்க இலக்கியங்கள் ‘ஐவன(ம்) நெல்’ எனக் குறிப்பிடுகின்றன.அடர்ந்த சோலையை ‘வன்புலம்’ எனவும், வேளாண்மைக்கான பகுதியை ‘புரிய புனம்’ எனவும் அழைத்தனர்.

குறிஞ்சி வாழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக மலை நெல்லையே தங்களது உணவாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் மலைநெல் விவசாயம், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டதாக கொடைக்கானல் மேல்மலை கிராம மக்கள் கூறுகின்றனர். மலை நெல்லில் இருந்து கிடைக்கும் சிவப்பு அரிசி அதீத சத்துக்கள் நிறைந்தது கார்த்திகை மாதம் நடவுசெய்து ஒன்பது மாதங்கள் கழித்து ஆடி மாதம் தான் அறுவடை செய்யமுடியும். அதனால் இந்த மலைநெல் விவசாயத்தை யாரும் விரும்பி செய்வதில்லை. அதேபோல மலைநெல் விவசாயத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். மழையை நம்பி இந்த விவசாயத்தை செய்ய முடியாது. அழிந்துவரும் இந்த மலைநெல்லுக்கு நாட்டுமாட்டின் சாணத்தை மட்டுமே உரமாக பயன்படுத்துகிறார்கள். இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி சிவப்பு நிறத்தில் கேரளா அரிசிபோல இருக்கும். கொஞ்சமாக சாப்பிட்டாலே நாள்முழுதும் நல்ல சக்தி இருக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் வடித்த கஞ்சியைகூட கீழே ஊற்றாமல் குடித்துவிடுவார்கள்.
சத்துமிக்க இந்த மலை நெல் தந்த சக்தி குறிஞ்சி நில மக்களை ஆரோக்கியமாக வைத்திருந்தது.
கொடைக்காணல் பூண்டி மலைக் கிராமத்தில் ஒரு குடும்பம் மலை நெல்லை மீட்டெடுக்க முயன்று வருகிறது.
தினை/FoxTail Millet/Setaria Italica

தினை குறிஞ்சி நில மக்களின் முதன்மை உணவு. தேனும் தினை மாவும் சிறந்த இணை. தினை பயிரிட்டு கதிர் பிடிக்கும் நேரத்தில் தேடி வரும் பறவைகளை விரட்ட பரண் அமைத்து மகளிர் தினைப்புனம் காக்கச் செல்வர். அப்படி சென்ற வள்ளி மீதுதான் குறிஞ்சிக்கிழான் மையல் கொண்டான்.
தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு
ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். தினைக்கதிர் என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இது பாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது. இது இட்டாலியன் மில்லட் எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
தினை அரிசியில் உள்ள சத்துக்கள்
தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.
அரிசி உணவுகள் அதிகம் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.
மூங்கில் அரிசி

குறிஞ்சி நில மக்களின் இன்னொரு உணவு மூங்கில் அரிசியாகும்
நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்… தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள்.
காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இருக்கும், மூங்கில் அரிசியானது சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கும் பிடித்தமான உணவு. பழங்குடி மக்களிடம் இருந்து நாட்டுக்குள்ளும் பரவத் தொடங்கிய மூங்கில் அரிசி, முக்கிய இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குறிஞ்சி நிலப் பகுதிகளில் வாழும் மக்களிடையே மூங்கில் அரிசி மிகப் பிரபலமாக இருக்கிறது. இயற்கை அங்காடிகள், பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களில் மூங்கில் அரிசியும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
மூங்கில் மரம் 40 ஆண்டு முதல் 60 ஆண்டுவரை உயிர் வாழும். அதன் ஆயுள் முடியும் காலத்தில், பூத்துக் காய்க்கும்.
இதில் மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தையமின், ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது. பசியைக் குறைக்கும். ஆற்றலைப் பெருக்கும். உடல் எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும். இதை, தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றோடு கலந்து சமைத்து சாப்பிடலாம். தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு சுகமளிக்கும். உட லில் இருக்கும் கொழுப்பைக் கரைத்து எடுக்கும் திறன் இந்த அரிசிக்கு உண்டு. இதை உண்டால் கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாம் சரியாகும்
பழந்தமிழர் உணவுதான் நம் உடல் நலத்துக்கு நல்லது. நாகரிக உலக உணவுகளை குறைத்துக் கொண்டு நம் பாரம்பரிய உணவுகளை அதிகம் உண்பதால் நம் உடல்நலம் மீட்டெடுக்கப் படும் என்பது திண்ணம்.
குறிஞ்சி நிலத்தை அடுத்து இன்னொரு நிலத்தின் உணவு விரைவில் பதிவிடுவோம்.