(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்தியாயம் 1, அத்தியாயம் 2
சார்ஜபிள் லைட்டின் வெளிச்சம் தெரிந்தது. அந்த இந்திக்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த கம்பியை வைத்து ஏதோ வளைத்துக் கொண்டிருந்தார்கள். டூல் பெட்டியிலிருந்து சுத்தியல், கொரடு எல்லாம் எடுத்துவேலை செய்து கொண்டிருந்தார்கள். சுத்தியலால் அந்த கம்பியை தட்டித்தட்டி வளைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எனக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்ததால் முற்றிலும் சரியாகப் பாரக்க முடியவில்லை. அவர்கள் பேசியதிலிருந்து வேலை முடிந்து விட்டதாகத் தெரிந்தது. அதற்குமேல் அங்கு நிற்பது சரியில்லை யென்பதால் விறுவிறு என்று நடந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். மறுநாள் காலை வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு காலை டிபனுக்குப் பிறகு வாகன மண்டபம் போய்ப் பார்க்க வேண்டும்.
மறுநாள் பஜனைக்குப் பிறகு காவிரிக் குளியல், காலைச் சிற்றுண்டி எல்லாம் முடித்து நான் மீண்டும் கோவிலுக்குப் போனேன். நான் கோவிலுக்குள் போகும் போது இரண்டு இந்திக் காரர்களும் சாமி தரிசனம் முடித்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அரைகுறையாக காதில் விழுந்தது இதுதான்: அறுவடை எந்திரத்தின் வேலை நேற்றே முடிந்துவிட்டது. இன்றைக்கு ஒருவன் இருந்து ஓட்டிக்காண்பிப்பது; அடுத்தவன் கும்பகோணம் போய் எந்நேரமானாலும் சொந்த வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டியது; அவர்களின் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து வரச் சொல்லி அவர்களின் வேனிலேயே விடியற்காலையில் ஊருக்குக் கிளம்புவது.
உற்சவ மூர்த்திகள் உள்ள அறையின் கிரில் கதவுக்கு கீழே அந்த கதவு, அர்த்த மண்டபம் கதவு சாவிக் கொத்தும் மடைப்பள்ளி கதவு சாவிக் கொத்தும் இருந்தது. பட்டாச்சாரியாரும், ரங்கனும் கிடந்தகோல ஆதிமூலப் பெருமாளுக்கு உச்சிகால பூஜைக்கு முன்னதாக செய்யும் அபிஷேகத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். சுவாமிக்கு முன்பு சம்பிரதாயப்படி நாமம் சங்கு சக்கரம் கூடிய திரை விடப்பட்டிருந்தது.
“பட்டர் மாமா என்ன சாவிக் கொத்தெல்லாம் இங்கே வச்சிருக்கேள்” என்றேன்.
“அது எப்பவும் நடை பூட்டும் வரை அங்குதான் இருக்குமடா” என்று பதில் சொன்னார்.
“மாமா ..” என்று நான் தொடங்கும் முன் அவரே தொடர்ந்தார்,
“சும்மா..சும்மா உள்ள வச்சு எடுத்திண்டு இருக்க முடியாதுடா அம்பி, வேற வேலை இருக்கோன்னா”
நான் கோவிந்த சாமியைத் தேடிப் போனேன். அவர் பிரகாரத்தில் ஆங்காங்கு முளைத்திருந்த புல் மற்றும் சிறு செடிகளை பிடுங்கி கூடையில் அள்ளிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து சிரித்த அவர், “அடிக்கடி பிடுங்காம விட்டா காடு மாதிரி மண்டிவிடும்” என்றார். நானும் அவருக்கு ஒத்தாசை செய்தேன். அந்த நேரம் ரங்கன் வந்து உச்சிகால பூஜைக்காக அவரை அழைத்தான். உள்ளிருந்த கிணற்றில் நீர் இறைத்து நானும் அவரும் கை கால் கழுவிக் கொண்டு சன்னதிக்குப் போனோம். அங்கிருந்து திரும்பிப் பார்த்ததில் இந்திக்காரர்கள் கோவிலிலிருந்து வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். ஒயர்க் கூடையில் எதையோ பத்திரமாக கொண்டு போனார்கள்.
“ரங்கா மாமா இந்திக்காரர்கள் இன்று மாதிரி தினமும் காலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத்தான் வெளியே போவார்களா” நான் கேட்டேன்.
“இல்லை ரகு, இன்றைக்குத்தான் வந்தார்கள். அதுவும் இன்றைக்கு ராத்திரி சாப்பிட பிரசாதம் வேண்டுமென்றார்கள்; சரி நடைசாத்துவதற்குள் மடைப்பள்ளிக்கு வந்து வாங்கிக்கோன்னு சொன்னேன்” இது ரங்கனின் பதில்.
என்னவோ சந்தேகப் படும்படி இருக்கிறது; என்னவென்று திட்டமாகச் சொல்ல முடிய வில்லை.
வாகன மண்டபத்தில் மீண்டும் நோட்டமிட்டேன். அவர்கள் கொண்டு வந்திருந்த கம்பியை வட்டமாக வளைத்து வைத்திருந்தார்கள். இடத்தை சுத்தமாக பெருக்கி வைத்திருந்தார்கள். அந்த களிமண் உருண்டையைக் கூட காணோம்; தூக்கி எறிந்துவிட்டார்கள் போலும்.
மாலை ஒருவன் மட்டும் திரும்பி வந்தான். அர்த்தஜாமம் முடித்து விட்டு வந்து தித்தியோன்னம் தருவதாக ரங்கன் சொல்லி வைத்திருந்தான். அவன் ராஜ கோபுர கதவருகிலேயே காத்திருந்தான். ரங்கன் கூப்பிட்டதும் மடைப்பள்ளியில் போய் இரண்டு பெரிய உருண்டைகளை வாங்கிக் கொண்டு போய் மூடிவைத்து விட்டு கோவிலுக்கு வெளியே வந்து தெருவில் நின்று தன் சகாவின் வரவுக்காக காத்திருந்தான்.
நான் போய் இரவு டிபன் சாப்பிட்டு விட்டு பாபுவை அழைத்துக் கொண்டு வந்து நாற்சந்தி மின் விளக்குக்கம்பம் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த இன்னொரு இந்திக்காரன் ஒயர்க் கூடையில் எதையோ வைத்து பத்திரமாக எடுத்து வந்தான். இரண்டுபேரும் வாகன மண்டபத்துக்குள் சென்றார்கள். நானும் பாபுவும் கொடிமரம், பலிபீடம் இடையில் இருட்டடித்திருந்த இடத்தில் பதுங்கியபடி அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தோம். எங்கள் பொறுமையை சோதித்து விட்டார்கள். ஒருவழியாக பத்து மணிக்கு வளைந்த இரும்புக்கம்பி, ஒயர்க் கூடையுடன் வெளியே வந்தார்கள்.
ராஜ கோபுர திட்டி வாசலை சிறிது பலத்துடன் தள்ளியதுடன் திறந்து கொண்டது. அவன் அவ்விடத்தில் காத்து நின்றது இதற்குத்தானா? அங்கு நின்று திட்டிவாசலின் இரண்டு உள்தாழ்ப்பாளையும் விலக்கி விட்டு, மெல்லிய நூல் கொண்டு கட்டி வைத்திருக்கிறான், படுபாவி; தள்ளியதும் கதவு திறந்து கொண்டது.
நானும் பாபுவும் கதவுக்கு வெளியே நின்று கொண்டு திட்டி வாசல் வழியே பார்த்துக் கொண்டிருந்தோம். இந்திக்காரர்கள் அர்த்தமண்டபக் கதவை சாவி போட்டு கஷ்டப்படாமல் திறந்தார்கள். ஓ..கோ..இவர்களின் அந்த களிமண் உருண்டை சாவியை அச்செடுக்கத்தானா? அதை வைத்துத்தான் கும்பகோணத்தில் போய் கள்ளச்சாவி செய்திருப்பார்களோ? அவர்கள் செய்து வைத்திருந்த அந்த வட்டவில் கம்பியை கதவு துவாரத்தின் வழியே விட்டு திருப்பினார்கள். கதவின் நடு தாழ்ப்பாள் விலகி கதவு திறந்தது. உள்ளே சென்று பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் இருக்கும் அறைக் கதவைத் திறந்தார்கள்.
உள்ளே சென்று உற்சவமூர்த்தி வரதராஜப் பெருமாள், தாயார் சிலைகளை எடுத்து, கொண்டு வந்திருந்த சாக்குக்கோணிகளில் திணித்து வாயை சணல் கயிற்றால் கட்டினார்கள். இதுதான் சமயமென்று நாங்கள் உள்ளே பாய்ந்து கிரில் கதவை சாற்றி பூட்டு போட்டோம். இந்திக்காரர்கள் கதறினார்கள். கிரல் கேட்டை உடைத்து விடுவது போல உலுக்கினார்கள். பாபு உதவிக்கு ஆட்களை கூப்பிட வெளியில் ஓடினான். திபுதிபுவென ஆட்கள் உள்ளே வந்தார்கள். ஒருவன் சைக்கிளில் வேகமாக போலிஸ் நிலையத்துக்கு பறந்தான்.
சிலை கடத்த திட்டமிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மறைந்திருந்த போலிஸ்காரர்கள் அதிகாலையில் வேனில் வந்த கூட்டாளிகளை சுற்றி வளைத்துப் பிடித்தார்கள்.
பெருமாளும் தாயாரும் இந்த இளைஞர்களால் காப்பாற்றப் பட்டார்கள்.
முற்றும்
சிலைத் திருட்டை தடுத்து விட்டார்கள். கதையின் கருவைக் காட்டிலும் கோவில் பற்றிய விவரங்கள் மற்றும் கோவிலில் நடைபெறும் நித்திய செயல்பாடுகளை அந்த பாஷையில் அப்படியே கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக இருந்தது.
LikeLike
சிறு வயதில் நான் கண்ட என் சிற்றூரை எல்லோரும் காண வேண்டுமென்ற பேராசையே காரணம். நன்றி.
LikeLike