Image Source: zeenews
கலைகள் மக்களின் உணர்ச்சியை வெளிக்காட்டப் பிறந்தன. அவை பாடல்களாகவும் ஆடல்களாகவும் விளங்கின. சில நேரங்களில் தற்காப்பு நடவடிக்கைகள் போர் தந்திரங்கள் கூட கலை வடிவில் இடம் பிடித்தன. இது பற்றி அறியப் புகுந்தால் மலைப்புதான் ஏற்படுகிறது. இப்போது இக்கலைகளில் ஆடல்களை பற்றி பார்ப்போம். ஆட்டங்கள் ஏராளமாக உள்ளன. தேடத் தேட நிறைய கிடைக்கின்றன; கிடைத்த சில இதோ:
கும்மியாட்டம் | ஒயிலாட்டம் | பொய்க்கால் குதிரையாட்டம் |
சேவையாட்டம் | கழியல் ஆட்டம் | வேதாள ஆட்டம் |
பூத ஆட்டம் | வர்ணக்கோடங்கி | பகல் வேஷம் |
கணியான் ஆட்டம் | கூத்து | கழிக்கூத்து |
தோற்பாவை கூத்து | காவடியாட்டம் | மயிலாட்டம் |
கோலாட்டம் | பின்னல் கோலாட்டம் | தேவராட்டம் |
சக்கையாட்டம் | சிம்ம ஆட்டம் | பொடிக்கழி ஆட்டம் |
கரடி ஆட்டம் | புலி ஆட்டம் | பேய் ஆட்டம் |
வில்லுப் பட்டு | தெருக் கூத்து | பாவை கூத்து |
சிலம்பாட்டம் | கரகாட்டம் | பறையாட்டம் |
உறியடி ஆட்டம் | பாம்பாட்டம் | உறுமி ஆட்டம் |
காளி ஆட்டம் |
எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இப்போது இரண்டு ஆட்டங்களை மட்டும் பார்க்கலாம்; வரும் நாட்களில் மற்றவற்றையும் படிப்படியாகப் பார்க்கலாம்.
கும்மியாட்டம்

(Image source : shanmugaart.weebly.com )
கும்மி பல காலமாக நம் மக்களிடையே ஆடப்பட்டு வருகிறது. பெண்கள் மட்டுமே சேர்ந்து ஆடும் ஆட்டம். கும்மி வட்டமாக நின்று ஆடப்படும்; அதைப்போலவே சரிசமமாக எதிர் எதிராக நின்றும் ஆடப்படும். பாடலிசைக் கேற்ப கைகளால் தாளம் தட்டியும் கால்கள், இடுப்பு, தலை எல்லாமும் அதற்கேற்ப வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், நிமிர்ந்தும் ஒய்யாரமாக அழகு மிளிர ஆடுவதாகும். இதைக்காண மனம் பரவசமடைந்திடும். ஆடுபவர் அணிந்திருக்கும் உடையும் அங்க அசைவும் கவரும் விதமாகவும் நளினமாகவும் இருக்கும். இன்றளவும் இது கோவில் திருவிழாக்களில் ஆடப்படுகின்றது. காவிரிப்படுகை மாவட்டங்களில் ஆடிப் பெருக்கு, காணும் பொங்கல் அன்று மகளிர் காவிரிக் கரையில் மகிழ்வுடன் ஆடுகிறார்கள். தேர்ந்த ஒருவர் பாட மற்றவர்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். வட்டமாக ஆடும் போது நடுவில் குழந்தைகளை உட்கார வைத்து இருப்பார்கள்.
கொங்கு மண்டலத்தில் கும்மியடித்தல் எனப்படுகிறது. அதுபோல் வள்ளி கும்மியென்றும் ஆடப்படுகிறது.
குரவைக் கூத்தில் இருந்து கும்மி வந்ததாகக் கூறுவர். சிலப்பதிகாரம், அகநானூறிலும் கும்மி பேசப்படுகிறது.
மெல்ல நடந்து நடந்து அடித்தல் நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிர்ந்து அடித்தல், குதித்து குதித்து அடித்தல், தன் கையைக் கொட்டி அடித்தல், எதிரிலுள்ளவர் கைகளுடன் கொட்டி அடித்தல் என்பவை கும்மியடிக்கும் முறைகளாகும்.
டாக்டர்.சு.சக்திவேல் அவர்கள் தம் நாட்டுப்புற இயல் ஆய்வில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். குஜராத்தின் கர்பா, ராஜஸ்தானின் கும்மார், ஆந்திராவின் கொப்பி, கேரளாவின் கைக்கொட்டிக்களி எல்லாமும் நம் கும்மியை ஒத்தவை என்கிறார்.
எஸ் பாலாஜி என்பவர் கும்மிப் பாடல்களைத் திருடி நிறைய சினிமாப் பாடல்கள் வந்திருப்பதாகக் கூறுகிறார். அது குறித்து தனி நூல் எழுதலாமென்கிறார்.
எடுத்துக்காட்டாக: ‘ஆனை வாரதப் பாருங்கடி-அது அசைத்து வாரதப் பாருங்கடி’ என்பதுதான் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஆனந்தக் கும்மிகொட்டுங்களேன்’ என்ற பாட்டை கூறலாம்.
ஒயிலாட்டம்

(Image source : News7 )
ஒயிலாட்டம் ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம். ஒரே நிறத்தில் தலைப் பாகையும், ஒரே நிறத்தில் சிறு துண்டு கையில் வைத்து இசைக்கேற்ப அழகாக ஆடுவதாகும். அழகு, சாயல், அலங்காரம், ஒய்யாரம் என்று பொருள் படும் ஒயில் என்பதே இவ்வாட்டத்திற்கு பெயராக அமைந்தது.
ஆண்மையின் கம்பீரத்தை வெளிப்படுத்துவதால் மகளிர் ஆடுவதில்லை.
ஆடுபவர்கள் சிவப்பு துணியை பயன்படுத்தினால் தலைமையாளர் பச்சை துணியை பயன்படுத்துவார். வெள்ளை வேட்டி தார் பாய்ச்சி கட்டியிருப்பார்கள்.
தொடக்கத்தில் கைகூப்பி, ஒரு காலை தட்டி, கடவுள் வணக்கம் செய்து தரையை தொட்டு வணங்கி அடவு பிடித்து ஆடத்தொடங்குவார்கள். இடையிடையே இளைப்பாற அண்ணாவி விசிலடித்து நிறுத்தவார். பெரும்பாலும் பாடும் வாத்தியாரேதான் அண்ணாவியாக இருப்பார். கடைசியில் அண்ணாவி நன்றி கூறி பாடுவார்; அனைவரும் பூமியைத் தொட்டு வணங்குவர்.
இதில் பத்து முதல் பன்னிரண்டு பேர் வரிசையாக நின்றோ எதிரெதிராக நின்றோ ஆடுவது. பானைத்தாளம், தவில், சிங்கி, சோலக் போன்ற தாளவாத்தியக் கருவிகளை இசைப்பார்கள். இவற்றுடன் காலில் அணிந்துள்ள சலங்கையும் அடவுகளுக்கு ஏற்ப ஒலிக்கும். பாடலுக்கு ஏற்ப அடவு வைத்து ஆடுவார்கள்.
ஆட்டத்தின் வேகம் தக்கு, காலம் எனப்படும். அடவு வேகம் அடி, சாரி, தட்டு எனப்படும். தக்கு என்பது மெதுவான ஆட்டத்துக்கு இலக்கணம். வேகமான அடவுகளுக்கு காலம் என்று பெயர். வாத்தியார் பாடுவதை திரும்பப் பாடுவார்கள். மெதுவாக தொடங்கும் அடவுகள் உச்சம் பெறும். ஆனால் கம்பீரம் குறையாமல் இருக்கும். இராமாயணக் கதைகள், பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதை, முருகன் கதை, சிறுத்தொண்டர் கதை, வள்ளி திருமணக் கதை, பாடலாகப் பாடி ஆடுவார்கள். கிருத்துவத்துக்கு மாறிய சிலர் கிருத்துவ ஆலயங்களில் பைபிள் கதைகளை பாடி ஆடுகின்றனர்.
“ஆளோடு ஆளு உரசாமல்
உங்கள் ஆளிலே ஒருமுழம்தள்ளி நின்று
காலோடு கால் உரசாமல்
உங்கள் கைப்பிடித்துணி தவறாமல்
மேலோடு மேலு உரசாமல்
உங்கள் வேரூவ தண்ணி சிதறாமல்”
என்ற பாடல் ஒயிலாட்ட இலக்கணத்தை விளக்கும்.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை மாவட்ட கோவில் திருவிழாக்களில் ஒயிலாட்டம் ஆடப்படுகின்றது.
Leave a Reply