உமா என் அம்மா

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)

காலையில் கண்விழித்தது முதலே மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. செல்லவில்லை யென்றாலும் வயிறு நிரம்ப வேண்டுமே யென்று சிற்றுண்டியை சாப்பிட்டேன்; அதேபோலத்தான் மதிய உணவும்.

என் மனம் அலைபாயக் காரணமுண்டு. இன்று என் அக்காவுக்கும் அத்தானுக்கும் எண்பதுக்கு எண்பது கல்யாணம். திருவையாறில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு என்னால் போக முடியவில்லை. என் அக்கா ஒரு தியாகி. எனக்காக தன் படிப்பைத் தியாகம் செய்தவர்.

எனக்கு நாண்கு வயதிருக்கும் போது என் அம்மா இறந்து போனார்; அப்போது என் உமாக்கா எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். தாயில்லாத இந்த தம்பிக்காக என் உமாக்காவின் படிப்பு நின்று போனது.

எனக்கு பல் துலக்குவது, காலைக்கடனுக்கு உதவிடுவது, குளிப்பாட்டுவது, ஊட்டிவிடுவது (ஆறு வயது வரை) என எல்லாமே உமாக்காதான். சில மாதங்களிலேயே தன்னை என் தாயாக பாவிக்கத் தொடங்கி விட்டார்.

என்னுடைய சாப்பாட்டில் பெரிய அக்கரை காட்டுவார். காய்ச்சிய பாலை அப்படியே சிறிது நேரம் ஆறவிட்டால் , மேலே ஆடை கட்டியிருக்கும். பூண்டு சட்னி அக்காவுக்கு மிகவும் பிடிக்கும். அதை  இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு, அடுத்து சூடாக காபியை குடிப்பார்.  நாக்கை வெளியே மடித்து  ‘உஸ்..உஸ்..’ என்று அந்த காரத்தை ரசிப்பார்.

“பூண்டு சட்னியா எனக்கு வேண்டாம்; ஜீனி குடு” என நான் முரண்டு பண்ணுவேன்.
“இதோ பார் ஒனக்கு என்னான்னு.”
என்று எனக்கு பாலின் மேலிருந்து ஆடையை எடுத்து போடுவார்.
பூண்டு சட்னி பால் ஆடை கூட்டணி அருமையாயிருக்கும்.

அரிசி உப்புமா செய்வார். அது பெரிய இரும்பாலான கடாயில் செய்வார். கடைசியாக அதிகம் கிளறி விடாமல் விறகு அடுப்பிலேயே விட்டு வைத்தால் சட்டியில் அடிப்பிடித்து முருகலான தோசைபோல் ஆகிவிடும். 
“உமா ..எனக்கு உப்புமா வேண்டாம். வேற ஏதாவது தா” என்பேன். சட்டியில் மொறுமொறு வென்று தோசை போலிருக்கும் அடிப்பிடித்த உப்புமாவை பெயர்த்தெடுத்து தருவார். எனக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதுதான் உணவுப் பட்டியல்.

ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலத்தில் குளிர் தாங்குவதற்காக என் அப்பாவின் பழைய கோட் எடுத்து போட்டுக் கொள்வேன்.  மழை நேரத்தில் திண்பதற்காக,
” உமா..ஏதாச்சும் திங்கறதுக்கு வேணும்” 
என்று கேட்டால் சோளம், பச்சைப் பயறு, உளுந்து, பொரி அரசி எல்லாம் வறுத்து தருவார். நான் எல்லாவற்றையும் ஒன்றாக கோட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் மழைக்கு இதமாக சாப்பிடுவேன்.

எனக்காக என் உமாக்கா இரவுத் தூக்கம் தொலைத்து கண்விழித்து இருந்த சமயங்கள் எத்தனை யெத்தனையோ. எனக்கு அம்மை வார்த்திருந்தது. அப்போது இரவில் கண்விழித்தபடியே உட்கார்ந்து கொண்டு  நான் சொறிந்து விடாமல் பார்த்துக் கொண்டிருப்பார். என் படுக்கையைச் சுற்றிலும் வேப்பிலைக் கொத்தாகக் கிடக்கும். இரண்டு பெல்லாரி வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி அறையில் நாண்கு மூலைகளிலும் வைத்திருப்பார். வெங்காயம் பாக்டீரீயாக்களை ஈர்த்துக் கொள்ளுமாம்.

அதுபோலவே ஏதோ ஒரு பூச்சி கடித்து அதனால் உடம்பெங்கும் அரிப்பு; சொரிந்தால் தடித்துவிடும். காணான் கடி என்று சொன்னார்கள். 
” ஐயோ.. அரிக்குதே..தாங்கலையே”
என நான் அழுத போதெல்லாம்
“ராஜால்ல..கொஞ்சம் பொறுத்துக்க; விடிஞ்சதும் அப்பா மருந்து வாங்கி வந்துடுவாங்க”
என்று சொல்லி திருநீற்றை உடம்பெல்லாம் பூசி மெதுவாக தடவிக் கொடுத்தபடியே இருந்தார். மறுநாள் காலை அப்பா நாட்டு வைத்தியரிடம் மருந்து வாங்கிக் கொடுத்ததும் சரியானது.

ஒரு முறை எனக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு விட்டது. வயிறு மந்தமாகி உப்பிவிட்டது. மூச்சு முட்ட ஆரம்பித்து விட்டது.
“தம்பி..ராஜா அப்படியே படுத்துக் கொள்” 
என்று என்னைப் படுக்க வைத்து வயிற்றில் நல்லெண்ணெய் தடவி, சாம்பிராணி போடும் தூபக்காலில் அடுப்பு தணல் எடுத்து வந்து,  நல்லெண்ணெய் தடவிய தன் கைகளை தணலில் காட்டி அந்த வெப்பத்தை என் வயிற்றின் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தார்.  மிதமான சூடுதான் என்றாலும் நான் கத்தினேன்,
“ஆ…அம்மா..சுடுதே “
“செல்லம்..கொஞ்ச நேரத்துல சரியாயிடும் பாரேன்”
மெல்ல மெல்ல உப்புசம் குறைந்து மலக்கட்டும் சரியானது.

ஊரில் பெருமாள் கோவில் ஒன்றுண்டு. ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் அங்குதான் விளையாடுவோம். கோவிலின் வெளிமதில், சுமார் பன்னிரண்டு அடி உயரம்.  அகலம் மூன்றடி இருந்தாலும்  மேலே முக்கோணமாகி ஐந்து அங்குல அகலமே இருக்கும். அதன் மீது ஏறி ஓடுவோம். என்னைத் துரத்தி வந்தவனின் கையில் சிக்காதிருக்க கீழே குதித்து தப்பினேன். குதிக்கும் போது உள்ளங்கை ஊன்றியதில் இடது கை மணிக்கட்டு பிசகி விட்டது எனக்குத் தெரியவே இல்லை. வீட்டுக்கு வந்ததும் மணிக்கட்டு வீங்கிவிட்டது. எல்லாரையும் படுத்தி விட்டேன். விடிய விடிய,
” ஆ..அப்பாடி.. வலி தாங்கலையே. நான் என்னா செய்வேன்” 
என்று இரவெல்லாம் அக்காவை தூங்க விடவில்லை. காலையில் கட்டுகட்டும் வைத்தியரிடம்  போய் கட்டுகட்டி பத்துநாளில் சரியாகிவிட்டது. ஆனாலும் மணிக்கட்டு லேசாக வளைந்திருக்கும். கையில் கட்டு போட்டிருந்த அந்த நாட்களில் எனக்கு எல்லாமே உமாக்காதான்.

கோடைகாலத்தில் நீர் வற்றிய காவேரி ஆற்று மணலில்தான் மொத்த பசங்களும் விளையாடுவோம். கபடி, பே பந்து அல்லது முதுகு பங்சர், பட்டம் விடுதல், கிச்சு கிச்சு தாம்பாளம் (அம்மாயி வீடு எங்கேருக்கு) இன்னும் எதேதோ விளையாட்டுகளும் விளையாடுவோம். காவேரி கரை அரிப்பை தடுக்க ரிவிட்மென்ட் என்ற செங்கல், சிமென்ட் ப்ளாக்குகளை சரிவாக கரையில் அடுக்கிக் கட்டியிருப்பார்கள். அதில் ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் கால் வைத்து உச்சிக்கு ஏறிப்போவோம். கரை மீது அடர்த்தியாக வளர்ந்திருக்கும் கொடுக்கா தட்டை என்ற செடியை ஒடித்து கட்டாக வைத்து அதன் மீது உட்கார்ந்தபடியே மேலிருந்து கீழே சறுக்கிக் கொண்டே வருவோம். என்னதான் கொடுக்கா தட்டை மீது உட்கார்ந்து சருக்கினாலும் ட்ரவுசர் பின்பக்கம் தேய்ந்து கிழிந்துவிடும். அதைப்பார்க்கும் உமாக்கா,
” ஏன்டா பின்னாடி என்னா அருவா மனையவா வச்சிருக்க. இந்த கிழி கிழிச்சிருக்க ” 
என்றவாறே கிழிசல் தெரியாதபடி தைத்துக் கொடுப்பார். அப்படி ஆற்றில் விளையாடும் போது ஒருவனுடன் வந்த  சண்டையில் இரண்டு கையிலும் மணலை அள்ளி எதிரியின்  முகத்தில் வீசிவிட்டு ஒரே ஓட்டமாக வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் அவனும் அவன் தோழர்களும் வீட்டுக்கு வந்து உமாக்காவிடம் புகார் செய்தார்கள்.
“அக்கா ஒங்க தம்பி ராஜு இவன் கண்ணுல மண்ணள்ளி போட்டுட்டு ஓடியாந்துட்டான்” 
உமாக்கா அவன் கண்ணை ஆராய்ந்தார். பெரிதாக ஒன்றுமில்லை எனத் தெரிந்து கொண்டு,
“டேய் , தெரு சண்டை தெருவோடுதான். எடுத்துக்கிட்டு வீட்டுக் கெல்லாம் வரக்கூடாது.”
“இல்லக்கா…”
” என்னாங்கடா இல்லக்கா. நொல்லக்கா ன்னுகிட்டு. அவன் தெருவுக்கு வெளையாட வர்ரப்ப தெருவுல பார்த்துக்கங்கடா”
வந்த கூட்டம் தோல்வியோடு திரும்பிவிட்டது. உமாக்கா என் பக்கம் திரும்பி, 
” ராஜூ வீட்ல திண்ணுபுட்டு, ஊர்ல அடிவாங்கிக்கிட்டு வரக்கூடாது. என்னா புரியுதா; தவறிப்போய் அடி வாங்கிக்கிட்டு வந்தே, இங்க என் கிட்டயும் வாங்குவே” 
என்று என் வீரத்தை தட்டி எழுப்பி விட்டார்.

ஒரு தீபாவளி தருணம். வெடிக்காத வெடிகளை பொறுக்கி அதன் மருந்தையெல்லாம்  எடுத்து அணைந்து போயிருந்த பழைய புஸ்வாணத்தில் நிரப்பி மத்தாப்புக் குச்சியால் கொளுத்தினேன். அது குப்பென்று பற்றிக் கொண்டதில் என் கையில் நெருப்பு அடித்து மணிக்கட்டு வரை பாதரச முலாம் பூசியது போல ஆகிவிட்டது.
“அடப்பாவி என்னா வேல செஞ்சிட்ட ” 
என்று அக்காதான் உடனே அதன் மீது  தோசை மாவு வைத்து பற்று போட்டார். நான் செய்த அலப்றையில் அன்றைக்கும் உமாக்காவுக்கு தூக்கம் கோவிந்தா.

எங்கள் தெருவில் குரங்குகள் அட்டகாசம் அதிகம். வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் தென்னை மரங்களில் ஏறி இளந் தேங்காய்களை பறித்து தின்று விடும். தேங்காயைத் திருகி எடுத்து கண் உள்ள பக்கத்தில் ஓட்டை போட்டு கையை விட்டு இளநீரும் இளந்தேங்காயுமாக அள்ளித் திண்ணும். தேங்காயைப் பறிக்கயிலே கை தவறி கீழே விழுந்துவிட்டால் கீழிறங்கி வந்து எடுக்காது. ‘தொப்’ என்று தேங்காய் விழும் ஒலி கேட்டால் ஓடிப் போய் எடுத்து வருவோம். அப்படி ஒரு முறை நான் எடுக்க ஒடி வந்தபோது மரத்தின் உச்சியிலிருந்து இறங்கிய குரங்கு என்னைத் துரத்தியது. நான்,
“உமா…உமா….” 
என்று அலறிக் கொண்டே ஓடிவந்தவன் வழியில் கிடந்த தென்னைமரம் தடுக்கி விழுந்து விட்டேன். பக்கத்தில் வயலில் நடவு நட்டுக் கொண்டிருந்த பெண்கள் ‘கொல்’ என்று சிரித்துவிட்டார்கள். கீழே கிடந்த குச்சியை எடுத்து குரங்கை விரட்டியபடியே என்னைத் தூக்கி அணைத்து ஆறுதல் படுத்தினார் உமாக்கா. பின் அந்த நாற்று நடும் பெண்களிடம், 
“என்னாங்கடி சிரிப்பு. புள்ள பயந்து போய் அலறிக்கிட்டு ஓடியாரான் நீங்க சிரிக்கிறீங்களா” ன்னு சண்டையிட ஆரம்பித்து விட்டார்.
அந்த பெண்கள் இதை எதிர் பார்க்காததால்,
“ஐயய்யோ..அக்கா நாங்க அதுக்கு சிரிக்கல. இவ ஒரு சினிமா தமாசு சொன்னா” 
என்று ஒரு பெண்ணைக் காட்டி  கோரசாக பாடினார்கள். ஆனாலும் அவர்களை ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் வந்தார்.

நினைவு தெரிந்தவரையில் நான் அக்கா என்று கூப்பிட்டதே இல்லை. ‘உமா’ என்றுதான் கூப்பிடுவேன்.

‘ உ’  ஓசை குறைந்து ‘மா’ ஓசை மட்டும் அதிகமாக ஒலிக்கும். அது அடுத்தவர் காதுகளுக்கு ‘அம்மா’ என்பது போல் கேட்கும்.
அக்கம் பக்கத்து ஜனங்களெல்லாம் உமாக்காவிடம் , 
“உன் தம்பி உன்னை அம்மா என்றுதான் கூப்பிடுவானா” என்று பல தடவை கேட்டிருக்கிறார்கள்.

என்னுடைய சேட்கைள் எல்லாவற்றையும் தாயுள்ளத்தோடு தாங்கிக் கொண்டார். காலையில் தேங்காய் சட்டினி அரைக்க தேங்காய்ப்பூ திருகி வைத்திருப்பார். வேறு வேலையாக அவர் நகரும் சமையத்தில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் பொட்டுக் கடலை, கொஞ்சம் ஜீனியையும் போட்டுக் கொண்டு வாயை அநுமார் மாதிரி வைத்துக் கொண்டு ஓடிவிடுவேன். உமாக்கா வந்து பார்த்ததும்,
” கொஞ்சம் அசந்தாலும்  போதும் இவங்கிட்ட.  கரெக்டா இவன்ட்ட இருந்து எதை காப்பாத்த நெனைக்கிறேனோ அத அபேஸ் பண்ணிடுவான்” 
என்றவாறே மீண்டும் தேங்காய் திருகத் தொடங்கிடுவார். என்னிடமிருந்து தேங்காய் துருவலைக் காப்பாற்ற உடனே அதனோடு கல்லுப்பு கலந்து வைத்து விடுவார். உப்பு கலந்தததை யார் தின்பது.

ஒருநாள் இருந்த ஒரு மூடி தேங்காயை தூக்கிக் கொண்டு போய் பெருமாள் கோவிலில் உட்கார்ந்து தின்றுவிட்டு சாவகாசமாக வீட்டுக்கு வந்தேன்.
அப்பா  சாப்பிட்டுவிட்டு அப்போது வெளியில் கிளம்பி விட்டார்கள்.
” என்ன ராஜூ..காலையிலேயே ரொம்ப பிஸியா. போய் கை கால் கழுவிட்டு சாப்பிடுப்பா” என சொல்லிவிட்டு அப்பா போய் விட்டார்.
அக்கா என்னை நோக்கி வந்தார். இரண்டு விரல்களால் தொடையைப் பிடித்து திருகிய படியே, 
” இனிமே தேங்கா மூடி திருடித் திம்பியா. மாட்டேன்னு சொல்லு “
என்று கேட்டு பலமாக திருக ஆரம்பித்தார். நான்,
” ஆ…ஐயோ….வலிக்குதே….” என்று கத்த ஆரம்பித்தேன்.
“மாட்டேன்னு சொல்லு விட்டுடுரேன்..சொல்லுடா…”
வலி பொறுக்க முடியததால் அந்த காலை தரையிலிருந்து தூக்கியபடியே, 
” ஐயோ..அப்பா… யாராவது வந்து என்ன சாவாம காப்பாத்துங்க..” என்று ஓலமிட்டேன்.
ஒரு அளவுக்கு மேல அக்காவுக்கு கை வலிக்கவே விட்டு விட்டார்கள்.
” சீய்… போடா..கல்லுளி மங்கா..”
அப்பாவுக்கு தேங்காய் சட்டினி அரைக்க தேங்காய் இல்லாமல் இட்டிலி மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிட நேர்ந்து விட்டது. அந்த கோபம் தான் உமாக்காவுக்கு. 
என் ஆயுசுக்கும் என் உமாக்கா என்னை கண்டித்தது அந்த ஒரு தடவைதான்

நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் உமாக்காவுக்கு கல்யாணம் நடந்தது. 
“அக்காவுக்கு கல்யாணம் ஆனப்புறம் எப்ப பார்த்தாலும் ‘உமா உமா’ ன்னு பேரச் சொல்லி கூப்பிடக் கூடாது. மரியாதையா ‘அக்கா’ ன்னுதான் கூப்பிடனும்” 
என என் அத்தை கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். அதனால் நான், 
” அக்கா”
என்று கூப்பிட்டால் அதற்கு உமாக்கா,
” என்னாடா ‘அக்கா கொக்கா’ ன்னு புதுசா கூப்பிடுர. அப்டி கூப்பிட்டா ஏன்னே கேக்க மாட்டேன்”
என்று கராராக கூறிவிட்டார்.

நான், அப்பா, சின்னன்னன் மூவர் மட்டுமே; பெரியண்ணன் சென்னையில் வேலையில் இருந்தார். உமாக்காவுக்கு ஒத்தாசை செய்து வந்த ஆயா எங்களுக்கு சமையல் செய்து வைத்து விட்டு போய்விடும். நான்,அப்பா,சின்னன்னன் மூவரும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு நாங்களே எடுத்துப் போட்டு சாப்பிடுவோம்.

என் அத்தான் கள்ளக்குறிச்சி பக்கத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். காலாண்டு , அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறையில் அவர்களின் சொந்த ஊர் திருவையாறுக்கு வருவார்கள்.

எங்கள் ஊர் கபிஸ்தலத்தில் இருந்து திருவையாறு முக்கால் மணிநேர பஸ் பயணம்தான். நான் தனியாகவே பஸ் ஏறிப் போய்விடுவேன் அக்காவைப் பார்க்க. போகும் போது பாபநாசம் ஜாலி ரெஸ்ட்டாரென்டிலிருந்து முக்கோணமாக இருக்கும் கிரீம் வைத்த பப்ஸ் வாங்கிப் போவேன். உமாக்காவுக்கு பிடித்ததென்று அப்பா அடிக்கடி அதைத்தான் வாங்கி வருவார்கள்.

நான் படித்துக் கொண்டிருந்தேன். சின்னன்னன் படித்து ஒரு வங்கியில் வேலையில் சேர்ந்தார். அவர்தான் உமாக்கா பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய தேவைகளை யெல்லாம் செய்து வந்தார். நானும் சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்து விட்டேன். உமாக்கா பெண்பிள்ளைகளின் சடங்குகள், கல்யாணம் எல்லாவற்றுக்கும் நான் தவறாமல் கலந்து கொண்டு தாய்மாமன் சீர் செய்து வந்தேன். ஒருமுறை உமாக்கா மகன் கேட்டான், 
” மாமா , அது என்ன மாமா, எங்க அம்மா அப்படி சொல்றாங்க, நீங்க தான் அவங்களுக்கு முதல் பிள்ளையாம்; நாங்க எல்லாம் அப்பறம் தானாம் “
நான் சிரித்துக் கொண்டே நழுவிவிட்டேன்.

என் கல்யாணம் மட்டுமின்றி என் மகளின் கல்யாணத்துக்கும் தாலி கட்டும் போது தாலியை பிறழாமல் நெஞ்சுக் குழிக்கீழ் சரியாக பிடித்துக் கொண்டு இருந்தது என் உமாக்காதான்.

அப்படிப்பட்ட அக்காவுக்கு எண்பதுக்கு எண்பது கல்யாணம். அக்கா சொல்லிவிட்டது,

“இந்த விசேடத்துக்கு பட்டுப் புடவை பட்டு வேஷ்டி  சீர் எல்லாம் நீ அங்கிருந்து வாங்கி தூக்கிக் கிட்டு வரவேணாம். நனே இங்க வாங்கி வச்சிடறேன். நீ வரும் போது உன்னால முடிஞ்சத கொடு போதும்.”
நானும்  இரண்டு நாள் முன் கூட்டியே போகும்படி டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் போக முடியாமல் போய்விட்டது. இன்னும் மூன்று மாதங்களுக்கு போக முடியாது. ஆமாம் , மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து என் மேல் விழுந்ததில் இடுப்பெலும்பு உடைந்து விட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து ஸ்டீல் ராடு வைக்கப் போகிறார்கள். இரண்டு நாட்களாக மருத்துவ மனையில்தான் இருக்கிறேன். இந்த செய்தியை யாருக்கும் தெரிப்படுத்தவே இல்லை. என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசி பெற முடியவில்லை என்று நினைக்கையில் மனம் அமைதி யடைய மறுத்தது.

மதியம் இரண்டு மணியளவில் என் அக்காவிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. துக்கம் தொண்டையை அடைக்க 
“அக்கா”
என்றேன்.
“ராஜூ என்னப்பா, உடம்புக்கு ஏதும் முடியலையா? உன்னைத் தவிர எல்லாரும் வந்திருந்தார்கள். என் குடும்பத்தில் நீ கலந்துக்காத ஒரே விசேடம் இதுதான்டா. எந்ந நிகழ்ச்சியையும் விட்டுக் கொடுக்காதவன் நீ. அப்படிப்பட்டவன்  வரவில்லை என்றால் ஏன் என்று கேட்டு உன்னை சங்கடப்படுத்த மாட்டேன். நான் வாங்கி வைத்திருந்தது எல்லாத்தையும் உன் பெயரில் முறை செய்து விட்டேன். அது பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதென்னடா புதுசா ‘அக்கா’ ன்னு கூப்பிடுற”
” இனிமேல உன்ன ‘அக்கா’ ன்னுதான் கூப்பிடுவேன். என்னை நீ சரியா புரிஞ்கிட்டதே சந்தோஷம். நாளை அல்லது மறுநாள் பேசறேன்”

இது  போதும், என் தாய் என்னை சரியாகப் புரிந்து வைத்திருப்பதே எனக்கு பெரிய  சந்தோஷம்.

Advertisement

4 thoughts on “உமா என் அம்மா

Add yours

  1. தெரியாதவர்களுக்கு கற்பனை புரிந்து கொண்டவர்களுக்கு …..
    சிறு வயது சம்பவங்கள் அப்படியே நேரில் பார்ப்பது போல் இருந்தது. தாயார் நோய்வாய் பட்டிருந்தாலும்
    மறைந்தாலும் தமக்கை தான் தாயாகிறார்.

    Like

  2. பாசமுள்ள அம்மாவுக்கு நிகரான…அக்கா….துரு துருப்புடனும்…குரும்புடன் ….. ஒரு தம்பி..,..சிறுபிராயம் முதல் 80 வயது பூர்த்தி ஆனவரை .., உணர்வுகள் எதார்த்தங்கள்….பாசம் பரிவு அனைத்தும் அருமையான கையாளப் பட்டுள்ளது….. வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை சம்பவங்கள் என்பதால் கதையில்……விறு…விறு…விருப்பு….

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: