ஆளண்டாப் பட்சி

வாசித்தது: ஆளண்டாப் பட்சி
ஆசிரியர்:   பெருமாள் முருகன்
வகை:   நாவல்
பதிப்பகம்: காலச்சுவடு
பக்கங்கள்: 247
விலை: 275ரூபாய்

 நூலாசிரியர் பற்றி  :   
                        ராணிமுத்து வரிசையில்  வாசித்த ஆர்.சண்முக சுந்தரம் எழுதிய ‘சட்டி சுட்டது’  எனக்கு பிடித்த நாவல்.  நற்றிணை பதிப்பக வெளியிடாக  வந்துள்ள அந்நாவலுக்கு   பெருமாள் முருகன்  மதிப்புரை வழங்கியிருந்தார்.
                முகநூல் தளத்தில் அவரது நாவல்கள் பற்றி பலரும்  எழுதிய பதிவுகளைப் படித்திருக்கிறேன். ‘ஆளண்டாப் பட்சி’  நாவல்தான்  அவரது எழுத்தில் நான் வாசித்த முதல் நாவல்.

பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி பற்றி:
எந்த நூலாயினும் முன்னுரை, பதிப்புரை ,மதிப்புரை  படித்தபின்பே  மைய நூலைப் படிப்பேன். அது ஒரு வழிகாட்டியாக  நூலைப் புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில்  ஆசிரியரின் முன்னுரையால்  ஒருவித பதற்றத்துடன் கதையைப் படிக்கத் துவங்க ….

 சின்னஞ்சிறு பறவை:
ஊர் நடைமுறைப் பழக்கப்படி பாகப்பிரிவினையில்  மூத்தவனுக்கு திருமண வயதில் பெண் குழந்தைகள்  இருப்பதால் நிலம் ,மற்றும் வீட்டில் அதிகப்பங்கும்,  நீர்பாசனத்திலும் முதன்மை ( ஊற்றுப் பாசனம்) ,   இதே முறையில்  மற்ற இருவருக்கும் பங்கிட,  இளையவனான கடைக்குட்டி முத்தண்ணனுக்கு  வாரடை போல் நிலமும்  நீர்பாசனமும் கடைசியாகிறது. வழக்கமான நடைமுறை என்பதால்  குறையாகவோ, கேள்வி கேட்கவோ முத்துவுக்குத்  தோன்றவில்லை. ஆனால் அதுவரை தன்னை பிள்ளை போல் பார்த்தவர்கள் பங்காளியாக  பார்ப்பதால்  இப்படிகூட கூடப் பிறந்தவர்கள் மாறுவார்களா?. என்று மனதிற்குள் குமுறுகிறான்.

வேற்றிடம் தேடும் பறவை:
                   அண்ணன்கள் இரவெல்லாம் ஊற்றுநீரை இறைத்தபின் பாசனம் செய்ய  நீர் கிடைக்குமா?. மனைவி பெருமா மற்றும் தன் மூன்று குழந்தைகளுடன் பாசனத்தை ஒட்டிய நிலத்திலேயே கொட்டகை போட்டுக்கொண்டு வாழ நொந்து போகிறான்.  தோழன் ஒருவன்  பாரவண்டி ஓட்டலாம்  என்று வழிகாட்ட,  வாழ்க்கை (பாரமின்றி)வண்டி  ஓட…
திடீரென தட(டு)மாறும் சூழலாக, முத்து வண்டி  ஓட்டிச்சென்ற ஒருநாளின்  இரவில்  மூத்தவன்  வந்து பெருமாவிடம் தவறாக நடக்க முயல  , தன்னைக் காத்துக்கொள்ள குத்தீட்டியால் அவன் காலில்  குத்திவிடுகிறாள்.  தன்நிலையை  நினைத்து அழுது கொண்டிருக்கும் அவளை ஓரகத்திகள் வற்புறுத்தி அழைத்துச் சென்று ,  மாமியாரிடம்   முறையிட ,வெந்தபுண்ணில்  வேலைப் பாய்ச்சுவதாக  இவர்களையே  அவமானப்படுத்துவதால், தாய் வீட்டிற்குச்  சென்ற  , பெருமாவைத் தேடி வரும் கணவனிடம்  நடந்ததைக் கூற,  கோபமாய்  கிளம்பும்  அவனைத் தடுத்து, இனி  அவர்கள் முகத்திலேயே   முழிக்காது  வேறு எங்கேனும் சென்று வாழலாம் என்கிறாள்.

                அண்ணனயைும் அப்பாவையும்  மட்டுமே அனுப்பி  நிலத்தை விற்று  வந்த  பணம் , துணைக்கு  தன் சிறுவயது முதலே  பண்ணையாளாக  இருக்கும் குப்பன், களிகிளற கேழ்வரகு மாவு,  பானை மற்ற பொருள்களுடன்   ‘நம்வாழ்வே இதில தான்யா இருக்கு,’ என்ற பெருமாவின் சொல்லோடும் வாழ்வதற்கு வேற்றுத் தடம்  தேடி  முத்து வண்டிகட்டி  புறப்படுகின்றான்.

மரம் கண்ட பறவை:
            பாரவண்டி இழுத்தபோது கூட  படுக்காத மாடு ஓரிடத்தில் படுத்துவிட  எத்தனை முயன்றும்  மாடு எழாதிருக்க இதுதான் நமக்கான இடமாக சாமி காட்டுகிறார் என முத்துகூற  குப்பனும் அதை ஒப்ப ,  அவன் எதிர்பார்ப்பைவிட அதிகமான நிலம் குறைந்த விலையில் பேசி முடித்து வாங்கிவிடுகின்றான்.

கூடுகட்ட:
              நிலம் வாங்க வைத்திருக்கும்   பணத்தை  பாதுகாக்கும் முறையும்,தன் சாப்பாட்டைச்  சுருக்கினாலும் வாயில்லா ஜீவன்களை   பட்டினி போடக் கூடாதென்ற மனமும்,  இன்னும் பலவும்….அப்பப்பா அவன் படும்பாடு.

கூடு:
                   முத்து நிலம் வாங்கியதை  பெருமாவிடம் வந்து சொல்ல ,    உதவிக்கு தன் சின்ன மகளை  அனுப்புவது,  பலகாலமாக பயிர் செய்யப்படாத நிலத்தை திருத்திட தானே உடன் வரும் பெருமாவின் பாட்டி , அவரால் வரும் சுவாரசியமான ஊர்ச்சண்டையும் ,அதை அவன் சமாளிப்பதும், திருவிழாவுக்கு மலைக் கோயிலுக்கு படி அமைத்துத் தருகிறேன் என்று சொல்லி அந்த ஊர்க்காரனாவது என    ஒருகிராமத்தில்  ஊருக்குப் புதிதாக வந்து குடியேறுபவனின் அனுபவங்களை   நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தும்  அழகியல் அருமை.

  சுப்பு (வாஸ்து)கொடுக்கன்:
                 நிலத்திலேயே  வீடுகட்டி குடியிருக்கப் போவதாக  கூறும் முத்துவிடம்  ஊர்க்காரர்கள் பலரும்  அவனிடம்   சுப்பு கொடுக்கன் என்றொரு பக்கா திருடன்  சிறையிலிருந்து வரப்போவதைக் கூறி ஊருக்குள் வந்து  இருக்கும்படி கூறுகின்றனர்.  ஆனால் முத்து தன் (உறவின் சூடுகண்ட பூனையல்லவா?.) முடிவில் உறுதியாக  இருக்கின்றான்.
 சுப்புகொடுக்கன்  வந்தானா?
 இல்லையா  என்பதை  ஆசிரியர் கூறாது விட்டிருக்கிறார்.
 சுப்புகொடுக்கன் வந்தால்  சந்தேகமின்றி முத்து அவனக்கு காதுகுத்தி (வாஸ்து)கடுக்கன் மாட்டிட அவன் பெயர் சுப்புகடுக்கன்   என்றாகும் சரிதானே!. 

  ரசித்தது  :
 குப்பன் நிலங்களுடன் பயிர்களுடன் அனுபவமுள்ளவனாலால்  ஊர் மற்றும்  வாங்கிய நிலத்தைப் பற்றி அவனது எண்ணத்தை அறிய முத்து பேச்சு கொடுக்க, குப்பன் முத்துவிடம் செடிகொடிகள் பற்றி கூறுவதை அப்படியே தருகிறேன்.

 ‘ செடி கொடி பயிர்பச்சையெல்லாம்  பேசும்னு சொன்னாச் சிரிக்கிறாங்க சாமீ இந்த பங்குனி மாசத்துல  காத்தால எந்திரிச்சி  காட்டுக்குள்ள போய்ப்  பாருங்க  பனி சொட்ட சொட்ட  ஒடம்பெல்லாம் கழுவிக்கிட்டு  அதுங்க நம்பளைப் பாத்து  அட அழுக்குப்பய மவனேன்னு சொல்லிச் சிரிக்கும்  பாத்துக்குங்க.எனக்குன்னா வெக்கமா போயிரும்’ . (இதற்கும் அடுத்து அவர் சொல்வதுதான் இன்னும்  உச்சம்).

 மனுசனாட்டம் நெனைச்சிராதீங்க  ஒரு புல் பூண்டுக்குக்கூட  அழிவு கெடையாது .மழ இல்லாதப்ப  மண்ணுக்குள்ள  போயி ஔிஞ்சிக்கும். நாலு துளி உழுந்துட்டா அப்படியே எட்டிப் பாக்கும் பாருங்க. கொழந்தைங்க  ஔிஞ்சிக்கிட்டுப் பாக்குறாப்பபலேயே  இருக்கும் பாத்துக்கங்க.’ என்பார்.

 இதைப் படித்த நாள் முதலாய் தினமும்  வீட்டில் உள்ள செடிகொடிகள் ஐய இன்னும் குளிக்கலையா?. என்று கேட்பதாக  நான் மட்டுமல்லஇனி நீங்களும் புன்னகையுடன் நினைப்பீர்கள் தானே!

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑