வாசித்தது: அழகின் ஆராதனை
ஆசிரியை: லெஷ்மி
பதிப்பகம்:பூங்கொடி பதிப்பகம்
வகை: நாவல்
பக்கங்கள்: 208
விலை: ரூபாய் 100
ஆசிரியை லெஷ்மி அவர்களின் கதைகளில் பெரும்பாலும் பெண்கள் குடும்ப வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் அதனை அவர்கள் கையாளும் விதமும் பற்றியே அமைந்திருக்கும்.பூக்கள் அ த்தனையுமே அழகுதான் இருப்பினும் சில பூக்கள் மட்டுமே சிறப்பானதாகிறது. பூக்களின் ராஜா எனஅழைக்கப்படும் ரோஜாவை விரும்பாதவர் யாருமில்லை. அதில் முள் இருக்கிறதென யாரும் வெறுப்பதுமில்லை.
பெண்ணுக்குக் கணவன் என்ற உறவும் அதுபோலவே எத்தனை உறவுகள் பூக்களாய் இருந்தாலும் ரோஜாவாக கணவன் உறவு அவ்வப்போது முள்ளாய் குத்தினாலும் மற்றவர்களிடமிருந்து மனைவியைக் பாதுகாக்கும் முள்ளாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்தத் தொகுப்பில் உள்ள இருகதைகளில் (ஒரேகல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தாற்போல) அழகாக விளக்கியுள்ளார்.
முதல் கதை ‘உன்னை விடவா ரம்யா’ இதில் நாயகி ரம்யா கறுப்பு ,படிப்பு குறைவு ,சிறுவயதில் தாயை இழந்தவள் என்று இத்தனை தகுதி இழப்பு கொண்டவளாக ஆனால் பணக்கார குடும்பத்தின் ஒரேபெண் என்ற தகுதியினால் இவையெல்லாம் அடிபட்டு போகும்படி, மிகவும் நடுத்தர குடும்பத்தின் முதல் பையனாக நாயகன் கோதண்டம் அம்மா கௌ (டௌ)ரி ஆசைக்கும் வசதியான வாழ்க்கை என்று அப்பா சபேசனின் தூபத்திற்குமாக ரம்யாவை மணமுடிக்கிறான்.
திருமணச் சீராக கார் , பங்களாவுடன் ரம்யாவுக்கு வைர நெக்லஸ் வளையலுடன் வாக்களித்தபடியே தந்தை நீலகண்டன் திருமணம் செய்து கொடுக்கிறார்.
கௌரி பந்தாவாக ரம்யாவுக்கு தான் வைரத்தோடு போடுவதாக சொல்லிவிட்டு பின்பு அதற்கான பணத்தை நீலகண்டனிடமே கேட்க அவரோ கறாராக மறுத்து விடுகிறார். ஏமாளி ரம்யாவை வீட்டின் மொத்த வேலையையும் செய்ய வைத்து கௌரி தன்கோபத்தை வெளிப்படுத்துகிறாள்.
ஒரு திருமண நிகழ்வில் கௌரியும் நாத்தனார் மாலதியும் ரம்யாவின்
வைர நகைகளைப் போட்டிருக்க, மகள் ஒற்றைச்செயினுடன் இருப்பதைக் கண்ட நீலகண்டன் கோபமாகி அவற்றைக் கொண்டுவரச் சொல்லி தன் லாக்கரில் வைத்துவிடுகிறார்.
மாலதியின் திருமணத்திற்கு ஆகுமென நகைகளை வாங்கிவரச் சொல்லி, ரம்யாவை கௌரி தூண்ட , கோதண்டம், அதனை மறுத்து நம்அந்தஸ்த்துக்கு ஏற்ப மாப்பிள்ளை பார்ப்போம் என்னால் வைர நகை போட இயலாது என்றிட,கௌரியோ விடாப் பிடியாக நிற்க ,கோதண்டம் ரம்யாவுக்கு அவள் அப்பா கொடுத்தது அதை நாம் கேட்பது முறையில்லை என இ(உ)றுதியாக கூறிவிடுகின்றான்.
வீட்டின் வெறுமை தனிமை உணர்வில் நீலகண்டன் குடித்து வீதியில் தடுமாறி போது அவரைக் காத்த ரேவதி என்ற பெண்ணுடன் பழக்கமாக , மகள் மருமகனிடம் கூறி விட்டு முறைப்படி அவளை திருமணம் செய்துகொள்கிறார்.
வரவேற்பில் ரேவதி, ரம்யாவின் வைர நகைகளை அணிந்திருப்பதைப் பார்த்த கௌரி பத்ரகாளியாகி வீட்டிற்கு வந்ததும் ரம்யாவை நகையை வாங்கி வரும்படி மிரட்ட அவள் மறுக்க அதனால் அவளை கீழே தள்ளிவிட, கோதண்டம் , தண்டமாகி மாமனார் செய்தது தவறுதான் .அவர் நகையைத் தராவிட்டாலும் பரவாயில்லை.எனக்கு நல்ல பெண்ணை மனைவியாகத் தந்திருக்கிறார். இந்த வீடு , வசதியான வாழ்க்கை வேண்டிதானே அவளை திருமணம் செய் (என்னை)வித்தீர்கள். என்மனைவியை நல்ல படியாக பாசமாக வைத்திருப்பதானால் இருங்கள் ,இல்லாவிட்டால் தனிக்குடித்தனம் செல்லுங்கள் ,நான் அதற்கான பணத்தைத் தருகிறேன். என்று வார்த்தைகளை சுழற்றிய வேகத்திலேயே உனக்கு நானிருக்கிறேன் என ரம்யாவுக்கு ஆறுதலும் கூறுகிறான்.
இதை எதிர்பாரா கௌரி மகனிடம் குரல் மெலிய என்ன இப்படி
என்று ஆரம்பிக்க சொன்னதெல்லாம் கேட்டுக் கொண்டு தானே இருந்தீர்கள் என்று முற்றுப்புள்ளி வைக்கிறான்.
வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டுமென்பார்கள் அதுபோல வைரத்தால் தொடங்கிய பிரச்சனையை வைரத்தாலேயே வைரமாக முடிக்கிறார் லெஷ்மி.
ரசித்தது:
ஒருமுறை கௌரிதன்தோழியிடம் கறுப்பு எனத் தன்னை சொல்ல கேட்டு வருந்தும் ரம்யா ஒருநாள் கணவனுடன் காரில் செல்லும்போது ‘உங்களுக்கு என்னை வெளியில் அழைத்துச்செல்ல வெட்கமாக இருக்கிறதா ?.என ஆற்றமாட்டாது கேட்க
ஏன் இப்படி கேட்கிறாய்?. என் மனைவியை அழைத்துச்செல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்றிட கறுப்பாக இருக்கிறேனே எனத் தயங்கிக்கூற அதற்குக் கணவன்,
இந்தப் பணக்காரப் பெண்ணை இந்த பரதேசி எப்படிக் கல்யாணம் பண்ணிக் கொண்டான் ?. என்று கூட ஊரார் பேசி சிரிக்கமாட்டார்களா ?.எனக்கு உன்னையும் , உன்னை எனக்கும் பிடித்திருக்கிறது மற்றவர்கள் அபிப்பராயம் நமக்கெதற்கு? இனி இப்படிபேசாதே என்கிறான்.
கருத்தை கவர்ந்தவள் அழகில் சிறந்தவள் என்பார்கள். தன் வெள்ளை மனதால் கணவன் மனதில் என்றும் வைரமாக ஔிர்வாள் ரம்யா.
Leave a comment