பங்குச்சந்தை அனாலிஸிஸ்

வாசித்தது:பங்குச்சந்தை அனாலிஸிஸ்
ஆசிரியர்:சோம .வள்ளியப்பன்
பதிப்பகம்:கிழக்கு பதிப்பகம்
வகை: கட்டுரை
விலை: 220
பக்கங்கள்:205

முகநூலில்  பலரும் பங்குச்சந்தை பற்றி நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் எழுதிய கட்டுரைகளைப் பற்றிய பதிவுகளைப் படித்ததால்    அவரது நூலை வாசிக்கும் ஆவலில்  வாங்கிய புத்தகம் இது.

இன்றைய வேகமான உலகில் பணம் பணம்  என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில்  மூன்றே நிமிடத்தில்  பல வேலைகள் செய்து பணக்காரனாக  ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில்  முடியாதென்பதை  உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு  இது சாத்தியமாகலாம்.

பங்குச் சந்தை:
பலரும் இருந்த இடத்திலிருந்து எளிதில் பணம் பண்ண நினைக்கும் இடமாக பங்குச்சந்தையை நினைக்கின்றனர்.    உண்மையில்  பங்குச்சந்தை   என்பது கடல்போன்றது. அதில் பணம் பண்ணுவது என்பது முத்துக் குளிப்பது போன்றது.   எந்த இடத்தில், எந்த நேரத்தில்  , எந்தவிதமான அலையடிக்கும் போது  ,  கடலுக்குள் சென்றால் பாதுகாப்பாய்  முத்தெடுக்கலாம்  என்பது அதனை  தொழிலாக  செய்பவர்க்கு  (கடல்) தண்ணி பட்டபாடாகிறது.  

நூலாசிரியர்  கிட்டதட்ட அத்தனை  நுட்பங்களையும் ஒரு சிறந்த ஆசிரியர் போன்று  விளக்கியுள்ளார். பங்குச்சந்தையின்  ஆரம்பம் முதல்  அதன் ஒவ்வொரு நிலையையும் குறிக்கும் சொற்கள் , அந்த  சொற்களுக்கான பொருள்,   அதற்கான விளக்கம்  மேலும் அதனை நாம்  புரிந்து கொள்ள  நடைமுறையில், பேச்சு வழக்கில்  சாதாரணமாக பயன்படுத்தும்  எளிய உதாரணங்களைக்   கொண்டும் விளக்கியுள்ளார்.

ஒரு வகுப்பில் உள்ள நாற்பது மாணவர்களுக்கும்  ஒரே ஆசிரியர் தான் பாடம் நடத்துகிறார். இருப்பினும் ஒன்றிரண்டு மாணவர்களே நூறு என்ற முழு மதிப்பெண்கள்  பெறுகிறார்கள்.  இதற்குக் காரணம் மாணவனின்  கற்கும் திறன், ஆர்வம், முயற்சி, பயிற்சிக்கு ஏற்ப சிலர் ஐம்பது மதிப்பெண்களும்,சிலர்  தேர்வில் வெற்றி  பெறும் அளவிற்கு மட்டுமே மதிப்பெண் பெறுகின்றனர். அதுபோன்றதுதான் பங்குச்சந்தையும்  அதன் ஏற்ற இறக்கங்கள்,பங்குகள் உயர்வதற்கான காரணம்,பங்குகள் இறங்குமாகி வீழ்வதற்கான காரணிகள்,எப்போது வாங்கலாம் , எப்போது விற்கலாம் ,  அல்லது வெளியேறலாம் என்பது போன்ற  தகவல்களைத் தருவதுடன்  யார் எந்த அளவு முதலீடு செய்யலாம்  மற்றும் எந்தவகையிலெல்லாம்  நாம் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும் என விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாத்தில்  புத்தகம் முழுவதிலும்  விவரித்தவற்றை சுருக்கமாக, நினைவு கொள்ள வசதியாக ,மீள் பார்வைபோல்   அத்தனையும் தொகுத்து கொடுத்துள்ளார். பங்குச்சந்தையில் நுழைபவர்க்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

ரசித்தது:
              கணினி காலத்திற்கு முன்பு அனைத்துத் தகவல்களும்   பென்சில் கொண்டு கிராப் பேப்பர்களில்  எழுதி சார்ட்டுகளாக எத்தனை பங்குகள் பின்பற்றுகிறோமோ அத்தனையையும்   தினமும்  நடக்கும் பரிவர்த்தனைகள்… 
அய்யோடா!. என்றிருக்கிறார். உண்மையில் அய்யோடாதானே!.

      கணினி காலமான இப்போது எல்லாமே பேக்கேஜ்களில்  வந்தாயிற்று. நாம் வேண்டிய பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பஃண்ட் தொடர்பான  இணையதளங்களுக்குச் சென்று க்ளிக் செய்தால்  காஞ்சிபுரம் சேலை கணக்காக   கேட்கும் கலரில் விதவிதமான டிசைன்களில்  சார்ட்டுகள் புரளும்.

நாம்செய்ய வேண்டியதெல்லாம் கூர்மையாக கவனமாகப் பார்க்க வேண்டியது .புரிந்துகொண்டு முடிவுகள் எடுக்கவேண்டியது . அவ்வளவுதான் சாமி.  என்கிறார்.
இதனை மற்றொரு உதாரணமாக பழத்துடன் ஒப்பிட்டும்  சுவையாக கூறியுள்ளார்.
ஒருமரத்தின் பழத்தின் சுவைக்கு ஒன்று போதுமே!.படிப்பவர் மற்றவற்றை சுவைத்துப் பலன் பெற வாழ்த்துகள்!.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑