வாசித்தது: குறிஞ்சித்தேன்
ஆசிரியர்: ராஜம் கிருஷ்ணன்
வகை : நாவல்
பதிப்பகம்:செண்பகா பதிப்பகம்
பக்கங்கள்: 366
விலை:325 ரூபாய்
மலைவாழ் மக்களின் அன்புறவான வாழ்வில் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக வர, வாழ்வியல் மாற, மூன்று தலைமுறையிலும் நடக்கும் மாற்றங்களை, மூன்று குடும்பங்களின் உறவு முறையில் நடக்கும் நிகழ்வுகள், மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் என்று கதையை அருமையாக படைத்துள்ளார். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு பாணியைப் பின்பற்றுவர். ராஜம் கிருஷ்ணன் தான் எழுதும் நாவலுக்கு அந்த இடத்திற்கே சென்று ஆராய்ந்த பின்னரே எழுதுவது அவரின் பாணி.
கதை :
மாதைய்யனும் லிங்கைய்யாவும் அண்ணன் தம்பிகள். மாதைய்யன் தன் தந்தையின் மூத்த தாரத்தின் மகன். தம்பிலிங்கைய்யா இளையாளின் மகன். தம்பி லிங்கய்யா அண்ணன் மாதைய்யன் மற்றும் அண்ணி நஞ்சம்மை ,குழந்தை ரங்கன் மீதும் அதிக அன்பும் பாசமும் கொண்டவர் நில நல்லாள் பெருமைபடும்படி உழைக்கக்கூடியவர். ஒரு கிளை துளிர்த்திருக்க ஒரு கிளை காய்ந்திருப்பதா என சமைத்த, சமைக்காத உணவுப் பொருளையும் அண்ணன் குடும்பத்திற்கு கொடுக்கிறார். மனைவி மாதி அவ்வப்போது முணுமுணுத்தாலும் கணவன் சொல்லை மீறாதவள். மகன் ஜோகியும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றே நடப்பவன்.
மாதைய்யன் குடிப்பதும் திருவிழாவிலோ அல்லது இறுதி ஊர்வலத்திலோ பாடி ஆடுவதுமாக மட்டுமே இருப்பவன். அண்ணன் பாட்டுக்கு தம்பி தீவீர ரசிகர். முதல் தாரத்தின் மகனென்பதால் அவர் குடும்பத்துடன் ஒட்டாதிருக்கிறாரோ என நினைக்கிறார்.
அதேபோல் மாதைய்யனின் முதல் மனைவி (இறந்துவிட)யின் குழந்தைகளான ரங்கனையும், அவன் தங்கையையும் இரண்டாவதாக வந்த நஞ்சம்மை வசவுகளால் வறுத்தெடுக்கிறாள். ரங்கனின் சின்ன சின்ன திருட்டையும் மறைத்து மன்னித்து அன்பு காட்டும் சிற்றப்பாவை அவன் வில்லனாகவே பார்க்கிறான்.
காட்டில் இருக்கும் தெய்வத்திற்கு பூசை செய்ய விடலைப் பையனாக இருக்கும் ஒருவன் தன்திருமண வயது வரும் வரை (சுமாராக ஏழு எட்டு ஆண்டுகள் ) கோயிலுக்கு வருபவர் கொடுக்கும் பால் பழமும் ,தானே சமைக்கும் உணவையும் ஒருவேளை மட்டுமே உண்டு அங்கேயே தங்கியிருக்க வேண்டும் இடையில் எக்காரணம் கொண்டும் வீட்டுக்கு வரக்கூடாது.
ரங்கனை நல்வழிப்படுத்த ஒரு வாய்ப்பாக எண்ணி பூசை செய்ய தம்கனவில் ரங்கனை தெய்வம் அடையாளம் காட்டியதாக கூறுகிறார்.
(உண்மையில் கனவில் வருவது ஜோகி)
மலையடிவாரத்தில் இருக்கும் ஊருக்குச் சென்றால் எப்படியோ சம்பாதித்து நல்ல உணவும் உடையும் கிடைக்கும் என்ற ரங்கனின் நினைப்புக்கு ,தன்னை பூசாரியாக தேர்ந்தெடுத்தது தெரியவர சிற்றப்பா வீட்டிலிருந்தே பணத்தை திருடிக்கொண்டு ஓடிவிடுகிறான்.
ஜோகி பூசாரியாக சென்றுவிட, தந்தை உடல்நலம் பாதித்து படுத்துவிட குடும்பம் வறுமையுகிறது.
காலங்கள் ஓட, ஊருக்கு திரும்பவரும் ரங்கனை தவறான வழியில் பணக்காரனாகியிருப்பதை ஊகித்து லிஙக்கைய்யா அடித்துவிடுகிறார். ஜோகிக்கும் ரங்கனுக்கும் முறைப்பெண் பாரு. பாருவின் அண்ணன் ரங்கனுக்கு கொடுக்க வாக்களிக்க, ஊர்பெரியவரான கரியமல்லரின் பட்டதாரிபேரன் கிருஷ்ணனும் பாருவும் விரும்புகிறார்கள்.
மாதி தன்மகன் ஜோகிக்கு பாருவை மணமுடிக்க நினைக்க, (மும்முனைப் போட்டியாக மாறவே)உருண்டைக்கல் தூக்கி நடக்கும் போட்டியில் வெற்றி பெறுபவனுக்கு பாரு என்று பெரியவர்கள் முடிவு செய்ய , பாருவை ரங்கனுக்கு விட்டுத்தரச்சொல்லி தந்தை ஜோகியிடம் சத்தியம் வாங்க, பாருவின் விருப்பத்தை அறிந்ததால் தன் தந்தைக்கு மருந்து வாங்கச் செல்லும் ஜோகி ,மந்திர தந்திரங்களில் தேர்ந்தவர்கள் என நம்பும் குறும்பர் இன பூசாரியிடம் (கிருஷ்ணனுக்கு வெற்றி கிடைக்க நினைத்து) மந்திரித்த வேரொன்றை வாங்கிவந்து பாருவிடம் கொடுத்து உன் மனங்கவர்ந்தவன் மணாளனாக வருவான் இதை நீவைத்துக்கொள் என்று மனமாரக் கொடுக்கிறான். போட்டியில் தோற்றாற்போல் தோற்றம் காட்டி ஜோகி விலக, கிருஷ்ணன் (மலையைத் குடையாகத் தூக்கிய பகவான் கிருஷ்ணனா?கரியமல்லரின் பெயரன்தானே!)தோற்க , ரங்கனை வெற்றிபெற வைக்கவே ஜோகி வேரை கொடுத்ததாக தவறாக பாரு நினைக்கிறாள்.
பாரு ரங்கன் திருமணம் மட்டுமல்லாது கிருஷ்ணன் ,ஜோகிக்கும் கூட திருமணம் முடிகிறது.
மீண்டும் ரங்கன் திருந்தியது போல நாடகமாடி. கடனை அடைக்க வேண்டி பணம் தேவையென சித்தப்பாவிடம் நாடகமாட, மாதி ஜோகியின் மறுப்பையும் மீறி வீட்டிலிருக்கும் சொற்ப பணத்தையும் கொடுத்ததுடன், படுக்கையிலிருந்து எழுந்து வந்து மனநிறைவுடன் ரங்கன் ஜோகியுடன் அமர்ந்து உண்ட உணவே அவருக்கு கடைசி உணவாகிறது.
அடுத்த நாள் அவரின் இறுதிச்சடங்கில் நடக்கும் நிகழ்வுகளால் பொறுமையின் எல்லை கடக்கும் ஜோகியின் பேச்சால் ஊர் இரண்டாகிறது.
அடுத்தடுத்த மாற்றங்களால் கதை என்பதைவிட மலைவாழ்மக்களின் வாழ்வுடன் நம்மையும் வாழவைத்திருக்கிறார் ஆசிரியர்.
கிருஷ்ணன் படிப்பினாலும் பண்பான செயல்களினாலும் ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற, ரங்கன் பொறாமை தீயினால் பலவழிகளிலும் காழ்ப்புணர்வால் வலுவில் போட்டி போட்டு (கிருஷ்ணன் அவ்வாறு நினைக்கவில்லை.) கொண்டே …..டே…முடிவில்லா நீண்ட போராட்ட முடிவைப் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.
குறிஞ்சி மலைத்தேன் அல்லவா ? சுவைக்குக் கேட்க வேண்டுமா?
ரசமாக ராஜம் கிருஷ்ணன் படைத்திருக்கிறார்.
ரசித்தது:
கதை ஆரம்பத்தில் சிறுவர்களாக ஜோகி, ரங்கன், கிருஷ்ணன் பேசிக்கொண்டு எழுப்பும் கேள்விக்கு இறுதியில் காட்சியாக விடை கொடுத்திருப்பார் ஆசிரியர். அதையும் படித்தேத் தெரிந்துகொள்ளுங்களேன்.
Leave a comment