நல்லிணக்கம் இல்லாரோடு இணங்கவேண்டாம்

அது ஒரு அழகிய சிற்றூர். ஆனாலும் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு அதுதான் பல வகையிலும் ஆதாரமான ஊர்.அந்த ஊரில் ஒரு காவல் நிலையம் உண்டு. அந்த காவல் நிலையத்துக்கு உதவி ஆய்வாளர் ஒருவர் மாறுதலில் வந்தார். அந்த ஊரில் எல்லா வசதிகளும் நிறைந்த வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அவர் குடும்பம் அங்கு குடியேறியது. உதவி ஆய்வாளருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருந்தான்.

அவன் பெயர் பாஸ்கர். அவனை அவ்வூரின் நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். அந்த பள்ளிதான் சுற்றிலும் உள்ள இருபது ஊர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியாக இருந்தது. அங்குதான் சாதி மத பேதமில்லாமல் எல்லா தரப்பு பிள்ளைகளும் படிக்க வேண்டிய கட்டாயம்.

உதவி ஆய்வாளர் வீட்டுக்கு அடுத்த வீட்டிலேயே கண்ணையன் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் படித்துவந்தான்.பள்ளி தொடங்கிய இரண்டாம் நாளே கண்ணையன் பாஸ்கருக்கு நண்பனானான். இருவரும் அடுத்தடுத்த வீடு என்பதால் பள்ளி செல்லதும் வீடு திரும்புவதும் ஒன்றாகவே சென்றுதிரும்புவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாணவர்களிடமும் பாஸ்கர் பழகத் தொடங்கினான். இது கண்ணையனுக்கு பிடிக்கவில்லை.

சில மாணவர்களை இசுலாமியர்கள், சிலரை கிருத்துவர்கள்,வேறு சிலரை தாழ்ந்தவர்கள் என்று கூறி, அவர்களோடு நட்பாகப் பழகாதே என்று பாஸ்கருக்கு அறிவுறை கூறினான்.

“யாராயிருந்தால் என்ன, ஒரே பள்ளியில்தானே படிக்கிறோம்,பழகுவதில் என்ன தவறு ” என்று கேட்டான் பாஸ்கர்.

வீட்டிலும் கண்ணையன் பற்றி அம்மா அப்பாவிடம் கூறினான். அவர்களும் “அப்படியெலலாம் பேதம் பார்க்கக்கூடாது;எல்லாரோடும் நல்லிணக்கமாகவே பழக வேண்டும். நம்மை ஒருவர் ஒதுக்கி வைத்தால் நாம் என்ன துன்பம் படுவோமோ அதைப்போலத்தான் அவர்களும் வேதனைப்படுவார்கள். அதனால் நீ எல்லாரோடும் சமமாகப் பழகவேண்டும்” என்று கூறினார்கள்.

 அடுத்தடுத்த நாட்களிலும் கண்ணையன் பாஸ்கரிடம் சிலரது நட்பை துண்டிக்கும்படி வற்புறுத்தினான். பாஸ்கர் அதற்கு இணங்கவே இ்ல்லை.

அன்றைய வகுப்பில் தமிழாசிரியர் உலகநீதியைப் பாடமாக நடத்தினார்.

நல்லிணக்கம் இல்லாதவருக்கு இணங்கக்கூடாது; அவர் நட்பு கெட்டாலும் அதைப் பொருட்படுத்தக் கூடாது என்று விளக்கம் கூறினார்.அவ்வாறு பேதம் பார்ப்பவர்கள் மக்கள் மத்தியிலே புற்று நோயைப் பரப்புபவர்கள் ஆவார் என்று தமது கருத்தையும்  கூறினார்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑