வாசித்தது:-நல்லதோர் வீணை
ஆசிரியர்:-லஷ்மி
பதிப்பகம்:-பூங்கொடி
பக்கங்கள்:-280
உடற் பிணியைப் போக்கும் ஓயாத மருத்துவ பணி. அதற்கு இணையாக மகளிரின் உள்ளத்திற்கு உரமூட்டும் வகையில் எழுத்துப் பணி இரண்டையும் சிறப்புறச் செய்த லெஷ்மி அவர்களுக்கு முதலில் என் வணக்கங்கள்.
“நல்லதோர் வீணை”, “என் பெயர் T.G.கார்த்திக்” என இரண்டு கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. முதல் கதையான ‘நல்லதோர் வீணை” நாயகி அகிலா தன் தந்தையின் குதிரை பந்தய பழக்கத்தால், முதலாளியின் பணத்தை களவாடி பந்தயத்தில் தோற்றுப்போய் தவறு செய்தோமே என்று தடுமாறி நிற்க, அதே நேரத்தில் தொழில் முறை நண்பனால் தன் மகளுக்கு பணமும் நகையும் தந்து மணம் பேச வரும் வரனைப் பற்றி விசாரியாமல் அடுத்த தவறாக பெண்ணை திருமணம் செய்துகொடுக்கிறார்.
பொறுப்பற்ற அப்பாவை நம்பி, தம்பி தங்கைகளை விட்டுச் செல்ல மனமின்றியும், தாய் உயிரோடு இருந்தபோது தன் தம்பி ராமுவை(தாய்மாமா) மணந்துகொள்ளச் சொன்னது, இந்த திருமணம் சரியில்லை என்ற உள்ளுணர்வு எல்லாவற்றையும் நினைத்து மனம் கனக்க கிளம்புகிறாள் நாயகி.
அகிலா, கட்டியவனைப் பற்றிய உண்மையையும், புகுந்த வீட்டில் தன்னை படுத்திவைக்கும் கொடுமையையும், பக்கத்து வீட்டு தாத்தா சுவாமிநாதன் உதவியோடு, தன் மாமா வேலை செய்யும் மெக்கானிக் ஷெட்டிற்கு கடிதம் எழுதிவிடுகிறாள்.
ஒருநாள் அவளை அடித்து காயப்படுத்தி அறையில் வைத்து பூட்டிவிட, அதைப்பார்க்கும் சாமிநாதன், ராமுவுக்கு தகவலை தந்தியடித்து தெரிவித்துவிடுகிறார் . அதன் பிறகு நடப்பதை திரைப்படத்தின் இறுதி காட்சி போல விறுவிறுப்பாக கதையை முடித்திருப்பார்.
புராணத்தில் ராமன் கால்பட்டு கல்லான அகலிகை பெண்ணாகிறாள். லஷ்மி அவர்கள் அகிலாவை மீட்ட ராமு (மெக்கானிக்) பழுதுபார்க்க வேண்டிய அவசியமில்லாமல் நல்லதொரு வீணையாகவே சேர்த்துவிடுகிறார் ஆசிரியருக்கு நன்றிகள்.
என் பெயர் T.G.கார்த்திக் “இந்தக் கதையில் நாயகி சகுந்தலா, தன்னுடன் மருத்துவமனையில் பணிபுரியும் தன்னை விரும்பும் கோவிந்தராஜனை, தாய் தந்தையைப் போல் வளர்த்த அண்ணன் அண்ணியிடம் கூட சொல்லாமல் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்கிறாள்.
கோவிந்தராஜன் திடீரென்று மருத்துவமனைக்கு வராதிருக்கிறான். சகுந்தலாவிற்கு வரன் பார்க்கத்தொடங்க, அவள் தனக்கு திருமணமானதுடன், தான் தாய்மை அடைந்திருப்பதையும் சொல்ல , கோவிந்தராஜனின் வீட்டுக்கே அண்ணன் அண்ணியுடன் வருகிறாள்.
கோவிந்தராஜன் தன் அப்பாவின் போதனையால் துஷ்யந்தனாக மாறி சகுந்தலாவை தெரியாதென்று சாதித்துவிடுகிறான். மருத்துவப்படிப்பில் உடன் பயின்ற, திருமணத்திற்கு துணை நின்ற, ஆப்பிரிக்க நாட்டுத் தோழியான நிம்மி குடும்பத்தின் உதவியாலும் முயற்சியாலும் ஆப்பிரிக்காவிலேயே மருத்துவமணை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறாள். எட்டு வருடங்கள் கழித்து அண்ணன் மகளின் திருமணத்திற்காக மகன் கார்த்திக்குடன் சகுந்தலா மூன்று மாத விடுப்பில் வருகிறாள்.
எதிர்பாராவிதமாக திருமண மண்டபத்தில் உண்மை தெரியாமல் கோவிந்தராஜனும் கார்த்திக்கும் சந்திக்க, அங்கிள் என்று சொல்லி பழக இருவரும் நட்பாகிறார்கள்.
தன் மகன் என்று தெரிந்ததும் பாசத்தில் ஏங்கி, தந்தை என காட்டிக் கொள்ளாமலும், மனைவியின் அனுமதியுடன் தினமும் வந்து குழந்தையை வெளியில் கூட்டிச் செல்வது என்று, ஏமாற்றத்தை மறைக்க பழகியிருந்த புகை தண்ணியை ஏமாற்றி , மகிழ்வோடு குழந்தையுடன் சுற்றி வருகிறான்.
தனக்கு பணக்காரகுடும்பத்து பெண்ணோடு திருமணம் செய்ய முயன்றதும் , அதனால் தன் குடும்பத்தில் தொடர்ந்த இழப்புகள், திருமணம் நின்றது பற்றியும் சகுந்தலாவிடம் சொல்லி மகனோடு சேர்ந்து வாழ விரும்புகிறேன் நீ ஏற்பாயா? என்று கேட்கிறான்.
சகுந்தலா செய்யும் முடிவு நாம் ஒப்புக்கொள்ளக்கூடியதே!
என்ன செய்தாள்?
ரசித்தது:- பெண்கள் தன்னுடைய வலியை, ஏமாற்றங்களை, ஏழ்மையை பொறுத்துக் கொள்வார்கள். தன்னுடைய பெண்மையை இழிவுபடுத்துவதை சகிக்க முடியாது பொங்கிவிடுவார்கள். இரண்டு கதையிலுமே இதுபோன்ற சூழலில் “பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரி” என்று பெண்மையின் சிறப்பை தூக்கி நிறுத்தியிருப்பார்.
Leave a Reply