காணாமல் போனவர்கள்

(சித்திரம்: கிரிஸ்டி நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)

வித்தியாசமான அமைப்போடு அந்த கட்டடம் எழும்பிக் கொண்டு இருந்தது. . அது ஒரு வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடம், மொத்தம் இருபது மாடிகள். 

சைட்டில் அமைந்த அலுவலகத்தில் காண்டிராக்டர் ஸ்ரீதர் தன் நண்பர் ஆதிமூலத்திடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது , “இந்த கட்டடம் தொடங்கிய ஆறுமாதங்களுக்குள் ஐந்து தொழிலாளர்கள் காணாமல் போனது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. என்னதேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை; காவல்துறையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறது” என்றார்.

இங்கு வேலைசெய்யும் வடமாநிலக்காரர்கள் முகவரியும் சரியில்லை; சொந்தஊரும் தெரியவில்லை.
அந்த பேச்சை தவிர்ப்பது போல்,”தேடுவதை விட்டுவிட்டு கட்டட வேலையை முடி.” என்று ஆதிமூலம் அலட்சியமாக  ஆலோசனை சொல்லி விடைபெற்றார். அவரும் ஒருகாண்டிராக்டர், தொழிலாளர் தேவை அவருக்குமுண்டு.

அப்பாவும் , ஆதிமூலம் பேசியதைக் கேட்ட வெங்கட்  தீவிர சிந்தனையில் இருந்தான்.
நிச்சயம் அடுத்தபடியாக ஒரு  வடமாநில தொழிலாளி கணாமல் போகப் போகிறான் ; அவன் யாராக இருக்கும்?

அடுத்த நாள்  கட்டட தொழிலாளிகள் ஒருவருக்குப் பதில்  ஐந்து பேர் காணவில்லை. எல்லாரும் கட்டடம் அருகிலேயே ஷெட் அடித்து தங்கி இருந்தார்கள்; பெரிசா உடைமைகள் இல்லை; இரண்டு மூன்று செட் ஆடைகள்தான்;  ஆடைகள் எல்லாம் இங்குதான் கிடக்கின்றன. 

பொதுவாக  வேலை நடக்குமிடத்திற்கு வெங்கட் வருவதில்லை; இன்று  வந்து பார்வையிட்டான். இரண்டு தொழிலாளர்கள் ஒதுக்குப்புறமாக நின்று தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு இருந்தார்கள். வேலை நேரத்தில் என்ன வெட்டிப் பேச்சு என்று வெங்கட் கடுங்கோபமானான்.  சுப்பர்வைசர் ஓடோடி வந்து “இருவரில் ஒருவன்தான் அங்கு வேலை செய்பவன்; மற்றவன் அவனைப் பார்க்க வந்தவன் ” என்று சமாதானம் சொன்னார்.
“நமக்குத்தான் ஆள் குறைகிறுதே அவனை இங்கு வேலைக்கு கூப்பிடேன்”என்றான் வெங்கட்.
” நான் முன்னாடியே கூப்பிட்டு விட்டேன்; அவன் நாம் கொடுப்பதைவிட அரை மடங்கு கூடுதலாக சம்பளம் வாங்குகிறானாம் என்றார் சுப்பர்வைசர்.

காவல் ஆய்வாளராக உள்ள நண்பன் ரமேஷிடம் தொழிலாளர்கள் காணாமல்  போவது பற்றி கூறி ஆலோசித்தான். மீண்டும் மாலையில் சந்திக்கச் சொன்னான் ரமேஷ்.
அதன்படி மாலையில் சந்தித்த வெங்கட்டிற்கு ரமேஷ் கூறிய செய்தி அதிர்ச்சியாக இருந்தது; இந்த ஐந்து பேர் காணாமல் போன அதேநாளில் அம்பத்தூர்,கிண்டி,ஒரகடம், திருப்பெரும்புதூர், திருமுடிவாக்கம் பகுதிகளில் கட்டட வேலை செய்வதற்கு வந்த வேறு ஐந்து பேர்கூட காணாமல் போயிருக்கிறார்கள் என்பதுதான் அந்த செய்தி.

அசோக் நகரில் இரண்டாம்கை இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிலையத்தி்ல் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில்  ஐந்து காணவில்லை என்ற புகாரும் பதிவாகியுள்ளது. இது எல்லாவற்றையும் ஒரு முடிச்சில் கொண்டுவர ரமேஷ் முயன்றான்.   

மறுநாள் ஸ்ரீதரின் கட்டுமான இடத்தில் இருந்து நாண்கு தொழிலாளிகள் காணவில்லை. இதையும் வெங்கட் ரமேஷிடம் தெரவித்தான். அது விசயமாக காவல்துறை தனிப்படைகள் அமைத்து தேடுவதாக ரமேஷ் கூறினான். மேல் விவரம் அறிந்து கூறுவதாகவும், அதுவரை பொறுமையாக இருக்கச் சொன்னான்.
மதியம் ரமேஷ் அவசரமாக வெங்கட்டை  விமானநிலையம் வரச் சொன்னான். விமான நிலையத்தில்  வடமாநிலக்காரர்கள் ஐந்து பேரை பிடித்து வைத்திருந்தார்கள். அவர்களில் இருவர் முன்தினம் வெங்கட் தங்கள் சைட்டில் பார்த்தவர்கள்.

ரமேஷ் சொன்ன செய்தி தூக்கி வாரிப் போட்டது,
“இவர்கள் ஐந்து பேரும் நேற்று இரவு வழிப்பறி வெவ்வேறு இடங்களில் செய்து விட்டு, அசேக் நகரில் திருடிய  வாகனங்களை எங்கேயோ போட்டுவிட்டு இன்று சொந்த ஊர் செல்ல இங்கு வந்திருக்கிறார்கள். இதேபோலத்தான் முன்பு காணாமல் போனவர்கள் எல்லாரும் செய்திருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் கட்டட வேலை செயவதற்கு இங்கு வரவில்லை. வழிப்பறி மற்றும் கொள்ளை செய்யவே வந்திருக்கிறார்கள்.”
இதைக் கேட்ட வெங்கட் தலைசுற்றுவதாக உணர்ந்தான்.

“சென்னையைப் போலவே கோவை,திருப்பூரிலும் இவர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். தங்கள் மீது சந்தேகம் வராதிருக்கவே கட்டடவேலை செய்ய வந்ததாக நடிக்கிறார்கள். இன்னும் எத்தனைபேர் இதுபோல இங்கு வந்திருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ” என்றான் ரமேஷ்.

“குறைந்த கூலியில் அதிக வேலை வாங்கலாம் என்ற எண்ணத்தில்  இவர்களை ஆராயாமல் வேலைக்கு வைக்கும் நம்மவர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். அரசு இந்த வேலையாட்கள் இங்கு வந்து வேலை செய்வது பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்” என்று வெங்கட், ரமேஷிடம் கூறிக் கொண்டிருந்தான்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑