உரை நடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்

புத்தகம்:- உரை நடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
ஆசிரியர்:- எம்.நாராயண வேலுப்பிள்ளை
வகை : பழந்தமிழ் இலக்கியம்

ஐம்பெரும் காப்பியங்களையும் ஒரு சேர ஒரே புத்தகமாக உரைநடை வடிவில் கொடுத்த ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. ஓய்வு பெற்ற  தமிழாசிரியர் + நூலின் ஆசிரியராகவும் (ஆசிரியர் ஸ்கொயர்)  இருப்பதால் காப்பியங்களை  விளக்கி, பிறகு அதனை ஆராய்ந்தும், அதன் நயங்களை  பாராட்டியும், பாடப்பகுதியில் வருவது போன்று காப்பியங்களை இயற்றியவரின் குறிப்பு, கதைச் சுருக்கம், கதை மாந்தர்கள், கதையில் ரசித்தவைகள் என்று தனித்தனியே கொடுத்து ஆரம்ப வாசிப்பாளர்களை முழு புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

சிலப்பதிகாரம்
ஆசிரியர்:- இளங்கோவடிகள்

முதல் காப்பியம் என்ற பெருமை பெற்றது.  தமிழகத்தில் சங்க காலத்தில் மன்னர்களும் வள்ளல்களும் மட்டுமே பாடற்குரிய  நாயக நாயகியாக போற்றப் பெற்றிருக்கின்றனர். சிலம்பு, மேகலையில் மன்னர்  பின்னோரான வணிகர்களின்  தகுதியையும் சிறப்பையும் வியந்து  கூறும் போக்கில் அமைந்துள்ளது என்கிறார் நூலின் ஆசிரியர்  நாராயணப்பிள்ளை அதனை அப்படியே பதிவிட்டிருக்கிறேன்.

சிலப்பதிகாரத்தின் மூன்று நீதிகளாக

“அரைசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்திவந்து ஊட்டும் என்பதூஉம்”

கதையின் நீதியாக இளங்கோவடிகள் சொல்லி சிலப்பதிகாரத்தை இயற்றினார். கதையின் சுருக்கமும் இதுதான்.

கண்ணகி மதுரையை தீயிட்டு  எரித்ததன் வெம்மை தாளாமல் மதுராபதி தெய்வம் கண்ணகி முன் தோன்றி  “பாண்டிய மன்னர்கள் எவரும் கொடுங்கோண்மை உடையவர் அல்லர். நெடுஞ்செழியனும்  செங்கோண்மை உடையவனே! இவ்வாறு நிகழ்ந்ததற்கு ஊழ்வினையே காரணம். கோவலன் முற்பிறப்பில் பரதன் என்ற பெயரோடு இருந்தான். நகை விற்பனை செய்துவந்த நீலியின் கணவன் சங்கமனை ஒற்றன் என்று மன்னனிடம் சொல்லி கொல்வித்தான். நீலி இது முறையோ என்று அலறி சாபமிட்டாள். அதுவே உன் கணவன் இறக்கக் காரணம்”  என்று கூறியது. சேர மன்னன்செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்து கற்பரசிக்கு சிலை வைத்தான்.

மணிமேகலை
ஆசிரியர்:- மதுரை கூலவாணிகன் சாத்தனார்

கோவலன் மாதவின் மகளான மணிமேகலையைப் பற்றியதான காப்பியமாகும். கணிகையர் குலத்தில் உதித்தாலும் கற்பரசியாக வாழ்ந்தவள் மாதவி. அவள் மகள் மணிமேகலையோ அதையும் தாண்டி புத்த துறவியாக வாழ்நாள் முழுமையும் வாழ்கிறாள். இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருக்கும் முற்பிறவியில் யாராக இருந்தவர்கள்?  அவர்கள்  வாழ்வில் நடந்தது என்ன?  என்று சொல்லப்படுகிறது.

முற்பிறவியில் இலக்குமி என்ற பெயரில்  இராகுலன் என்பவனின் மனைவியாக இருந்திருக்கிறாய் ராகுலன்தான் உதய குமாரனாக இப்பிறவியில்உன்னைத் தேடி வந்திருக்கிறான் என்று மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவில் மணிமேகலைக்குச் சொல்கிறது. அந்த தீவிற்கு வரும்  தீவ திலகை எனும் நங்கை அமுத சுரபி என்ற அட்சய பாத்திரம் கிடைப்பதற்கான வழியைச் சொல்கிறாள்.

தானம் செய்தலை மேற் கொண்டு அதன் சிறப்பினால் பழம் பிறப்பின் உணர்ச்சியை அடைந்த மணிமேகலை
புத்தம் சரணம்கச்சாமி
தர்மம் சரணம்கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
என்று அறவண அடிகளை சரணடைகிறாள்.

“பிறவித் துன்பம்ஒழிவதாக” என்று காஞ்சியிலேயே நோற்றுக் கொண்டிருந்தாள்.

சீவக சிந்தாமணி
ஆசிரியர்:- திருத்தக்க தேவர்

ஏமாங்கத நாட்டின் சச்சந்த மன்னன் தன் மனைவி விசையையின் அழகில் மயங்கி தன் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கிறான். மனைவி கண்ட கனவின் பயனாய் வரப்போகும் தீமையை சச்சந்தன் உணர்கிறான். கட்டியங்காரன் மன்னனை சிறை பிடிக்க வர மனைவியை மயில் பொறியில் ஏற்றி அனுப்பிவிட்டு சண்டையிட்டு மாண்டு போகிறான். விசையைக்கு  சுடுகாட்டில்பிறக்கும் குழந்தையை கந்துக்கடன் என்பவன் தூக்கிச் சென்று சீவகன் என்று பெயரிட்டு வளரக்கிறான்.

பலகலைகள் கற்றதோடு தன் பிறப்பின் வரலாறையும் சீவகன் அறிகிறான். வீரம் ,கலை ,ஆண்மை, காதல்என்று ஒவ்வொரு   பெண்ணாக எட்டு  பேரை மணக்கிறான். தன் நாட்டை கட்டியங்காரனிடமிருந்து மீட்கிறான். குரங்கின் செயலால் தன் நிலை உணர்ந்து துறவு மேற்கொள்கிறான். ஒருத்தியை மணந்து தன் பொறுப்பை மறந்தான் தகப்பன். எண்மரை மணந்து தன்பொறுப்பை மறக்காமல் நிறைவேற்றுகிறான் மகன். இதுதான் சீவக சிந்தாமணியின் சாரம்.

வளையாபதி
ஆசிரியர்:-குறிப்பு இல்லை

நவகோட்டி நாராயணன் என்பவன் தன் குலத்தில் ஒருபெண்ணை மணந்ததோடு அயல்குலத்திலும் வேறோர் பெண்ணை மணக்கிறான். இதனால் அவனை அவன் இனத்தார் வெறுக்க கோழையாக அவளைக் கைவிட்டு ஓடிவிடுகிறான். கருவுற்றிருந்த அவள் காளி கோவிலில்  தஞ்சமடைகிறாள். மகன் ஐந்து வயதானதும் பள்ளியில்  சேர்க்க”தந்தையற்றவன்” என்று சக மாணவர்கள் பரிகாசம் செய்கின்றனர். அவன் தாயிடம் கேட்க அவள் உண்மையைச் சொல்கிறாள்.

மகன் தந்தையைக் கண்டுபிடிக்க தந்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறான். மகன் தாயைக் கூட்டி வருகிறான்.அப்போது காளி வானில் தோன்றி “வணிகனே! இவர்கள் உன்னைச் சேர்ந்தவர்கள்” என்று காளி எல்லோரும் அறிய உண்மையைச் சொல்கிறது.அவர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

இதைப்போல காளி இன்றும் நடந்தால்…பல பெண்கள் வாழ்வு காக்கப்படும்.

குண்டலகேசி
ஆசிரியர்:-நாதகுத்தனார்

கதாநாயகியின் பெயர் பத்தாதீசா, சத்துவன் எனும் வழிப்பறி  கொள்ளைக்காரனை அரசன் ஆணைப்படி கொல்வதற்காக அழைத்துச் சென்றனர். அதனைப் பார்த்த நாயகி கண்டதும் காதலாகி ‘அவனை மணப்பேன் இல்லையேல் உயிர் துறப்பேன்’ என்று கூற, தந்தை அந்த நாளிலேயே ஆயிரம்  பொன் கையூட்டாக  கொடுத்து வினனயை விலைக்கு வாங்குகிறான்.

திருட்டு புத்தி போகாதவன் அவளைக் கொன்றாதால்தான் நகையை பறித்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறான். (இந்த கதை மந்திரி குமாரி சினிமாவாக எடுக்கப்பட்டது). இதனை யூகிக்கும் அவள் திருப்பு முனையாக கணவனைக் கொன்று விடுகிறாள். அதனால் துறவியாக முடிவெடுத்து முடியை பனங்கருக்கால் பிடுங்க பிறகு முடி வளர்ந்து குண்டலம் போல் ஆனதால்  அவளுக்கு குண்டலகேசி என்று பெயராயிற்று.

ஐம்பெரும் காப்பியங்களை இயற்றியவர்கள் வேறுவேறாயினும்  ஒன்றுபோல  பெண்களின் பெயர்களை அவர்களின் ஆபரணங்களின் பெயரைச் சூட்டியிருப்பது வியப்புக்குரியது!!! பெண்களின்  பெருமை குன்றாமல் படைத்த புலவர்களின் புகழ் வாழ்க!

Good Reads Link

உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் by எம்.நாராயணவேலுப்பிள்ளை

View all my reviews

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: