Image Credits: https://ta.wikipedia.org/wiki/
நண்பர்களே,
தீவுக்கோட்டை, சதுரங்கப்பட்டினம் கோட்டையைத் தொடர்ந்து தரங்கம்பாடிக் கோட்டை பற்றி நான் தேடியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், பொறையார் வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை ஊர்தான் தரங்கம்பாடி. இது காரைக்காலில் இருந்து13 கிமீ,மயிலாடுதுறையில் இருந்து 31கிமீ தொலைவில் உள்ளது. காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் அருகில்தான் உள்ளது. இது உப்பனாறு முகத்துவாரத்தில் உள்ளது. காரைக்கால், மயிலாடுதுறை இரண்டும் அனுகக்கடிய தொடர் வண்டி நிலையங்கள்.
தரங்கம் என்றால் ‘அலை’ என்று பொருளாம். கரையில் மோதி அலை எழுப்பும் ஒலி பாடுவது போன்றது என்ற பொருளில் ‘தரங்கம்பாடி’என்ற பெயர் வந்ததாம். இதை ஆங்கிலத்தில்’ Place of Singinging Waves’ என்பர்.
Image Credits: http://www.flickr.com/photos/ajaime/
1306 இல் சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் அளித்த நிலத்தில் கட்டிய மாசிலாமணிநாதர் ஆலயம் இன்றும் இங்குள்ளது.
கிமு 3ஆம் நூற்றாண்டிலிருந்தே சோழமண்டலக் கடற்கரை என்ற கிழக்குக் கடற்கரை பண்ணாட்டு வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. ஐரோப்பியர்களான பிரிட்டன்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய கடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்களை நிறுவினார்கள். 1616ஆம் ஆண்டு டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேக்கனில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.டென்மார்க்கின் மன்னர் நாண்காம் கிரிஸ்தியன் இந்திய வர்த்தகத்தை மிகவும் விரும்பியதால் இதற்கு ஆதரவளித்தார். 1618ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஒரு கப்பலை அனுப்பினார்கள். நாகைப்படினதிலிருந்து வர்த்தகம் செய்துவந்த போர்ச்சுக்கீசியர்கள், ‘தங்களுக்கு போட்டியாக ஒரு ஐரோப்பியரா’ என அக்கப்பலை மூழ்கடித்துவிட்டார்கள். ஆனால் அதே ஆண்டில் மன்னரின் தூதுவன் என்ற சிறப்புப் பெற்ற அட்மிரல் ஓவ் ஜெட்டே தலைமையில் இரண்டு போர்க் கப்பல்களும்,மூன்று வணிகக் கப்பல்களும் இலங்கையின் கண்டிக்கு வந்தன. 1620 ஆம் ஆண்டு அக்டோர் 30ஆம் நாள் தஞ்சைக்கு அட்மிரல் வந்தார்; நவம்பர் 7 இல் மன்னர் ரகுநாத நாயக்கரை சந்தித்தார். நவம்பர் 19ஆம் நாள் நாயக்க மன்னருடன் போர்சுகீசிய மொழியில் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது தங்க இலையில் எழுதப்பட்டது; இது இன்றும் கோபன்ஹேகன் அருங்காட்சியகத்தில் உள்ளது.
Image Credits: http://www.flickr.com/photos/deepasubbaraman/
இந்த ஒப்பந்தப்படி ஐந்துமைல் நீளமும் இரண்டரை மைல் அகலமும்(8கிமீ *4கிமீ) கொண்ட நிலம் ஆண்டு குத்தகை ரூ3111க்கு
இரண்டாண்டுகள் டேனிஷாகாரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்த இடம் டேனிஷ் மன்னனின் சொந்தமானது. அங்கு கோட்டை கட்டிக் கொள்ளவும்,மக்கள் வசிப்பதற்கும் அனுமதி வழங்கியது. இரண்டாண்டுகள் பின்னர் தரங்கம்பாடி சுற்றி உள்ள 15 கிராமங்களும் குத்தகைக்கு கொடுக்கப்பட்டு வரி வசூல் அதிகாரமும் வழங்கப்பட்டது.

Image Credits: https://www.flickr.com/photos/sridharraochaganti/
இயற்கையில் மீனவ கிராமமான தரங்கம்பாடி, பருத்தி, துணிவகைகள்,மிளகு ஏற்றுமதி செய்யும் வணிகத்தலமானது.
நாயக்கர் ஆட்சி முடிந்து மராட்டியர் ஆட்சி வந்தபோதும் இதில் மாற்றமின்றி தொடர்ந்தது.
1920 -21ஆம் ஆண்டுகளில் ‘டேன்ஸ்பர்க்’ கோட்டை கட்டப்பட்டது.கோட்டையில் 36பீரங்கிகள் நிறுவப்பட்டன. கோட்டை பாதுகாப்பு ஹென்றிக்ஹஸ் என்ற தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்கோட்டை டேனிஷ் பாணியில் வடிவமைக்கப்பட்டாலும் கட்டியது எல்லாம் உள்ளூர் தொழிலாளர்களே.
டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரையை ஒட்டி உள்ள கோட்டையின் நீளம் 200அடியாகவும்( 60மீ), அகலம் 36 அடியாகவும்(11மீ) உள்ளது. டேனிஷ் பாணியில் பெரிய அரங்குகள், உயர்ந்த கூறைகள் கொண்டதாக உள்ளது. சுவர்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஒருபக்கம் உப்பனாறும், ஒருபக்கம் கடலும் அரணாக உள்ளன.
கோட்டை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கு திசையிலும் கடலைப் பார்த்தவாறு ஒரு வாயில் உள்ளது. கோட்டையின் மத்தியில் தேவாலய அறை உள்ளது; தற்போது இது அருங்காட்சியகமாக உள்ளது.
கோட்டையை ஒட்டிய வதரைதளம் கிடங்காகவும், படையினரின் ஓய்வு அறையாகவும் இருந்துள்ளது. சரிவக அமைப்புள்ள கட்டடத்தின் கிழக்கு சிறகில் மூன்று அறைகள் காணப்படுகின்றன; இவைஆளுனரின் அலுவலகமாக இருந்துள்ளது. வலப்பக்க மூலையில் வணிக இயக்குனரின் வசிப்பிடம் உள்ளது. இதன் அடுத்த தளம் ஆளுனர், மற்றும் மத குருமார்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. இரண்டாவது மாடியில் பாதுகாவலர்களின் அறைகளின் தொகுதி இருந்துள்ளது.
டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை இதுவேயாகும். முதலாவது கோட்டை ‘ ஹேம்லெட் ‘ நாடகம் எழுத ஷேக்ஸ்பியருக்கு ஊக்கமளித்த ‘க்ரோன்போர்க்’ கோட்டையாகும்.
தரங்கம்பாடியில் குறிப்பிடத்தக்க கட்டடங்கள்:
13 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட மாசிலாமணி நாதர் ஆலயம்
1701இல் கட்டப்பட்ட சீயோன் தேவாலயம்
1718இல் கட்டப்பட்ட புதிய ஜெருசலோம் ஆலயம்
1792இல் கட்டப்பட்ட நகர நுழைவு வாயில்
1784இல் கட்டப்பட்ட ஆளுனர் பங்களா
கேட் ஹவுஸ், முகில் ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிய் மாளிகை ஆகும்.
கோட்டையில் உள்ள குடியிருப்புகளின் வாயில்கள் மரக்கதவுகளுடன் கூடிய சிறிய ஐரேப்பிய சிற்றூர் போல உள்ளது.
1705 இல்இங்கு குடியேறிய சீசென் பர்க் என்பவர் ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டுவந்து முதன் முதலில் பைபிளின் பழைய ஆகமத்தை தமிழில் அச்சேற்றினார். பிறகு 1714இல் புதிய ஆகமத்தை அச்சேற்றினார்.

1845இல் கோட்டை மற்றும் ஊர்களையும் சேர்த்து ஆங்கிலேயர்களுக்கு விற்கப்பட்டது.டேனிஷ்காரர்கள் விடைபெற்றனர்; அதன் பின்னர் தரங்கம்பாடி முக்கியத்துவத்தை இழந்தது.
கடல் உப்புக்காற்றில் சேதமடைந்த கோட்டையை டென்மார்க் மன்னரின் உதவியுடன் ஒருமுறையும், சுற்றுலாத்துறை உதவியுடன் ஒருமுறையும் செப்பனிடப்பட்டுள்ளது. தொல் பொருள் ஆய்வுத்துறை வசம் உள்ளது இக்கோட்டை; காலை10மணி முதல் மாலை 5மணிவரை பார்வையிடலாம்; வெள்ளிக்கிழமை விடுமுறை.
கோட்டை கட்டும் போது கடலில் இருந்து மிகவும் தள்ளித்தான் கட்டப்பட்டது. பின்னர் கோட்டையைச் சுற்றி சுற்றுச்சுவர் , அகழி கட்டப்பட்டது. கடல் மேலெழுந்து வந்ததால் அகழி காணாமல் போய் விட்டது; சுற்றுச்சுவரும் சிதிலமாகி சொற்ப எச்சங்களே காணப்படுகின்றன.
Leave a Reply