வாசித்தது:-தண்ணீர்
ஆசிரியர்:- அசோகமித்திரன்
பதிப்பகம்:- காலச்சுவடு
சராசரி குடும்பத்தை விட சற்று குறைந்தவர்கள் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ கதாபாத்திரங்கள்.
அக்கா ஜமுனா, சினிமாவின் கதாநாயகி ஆசையில் பாஸ்கர்ராவ் (திருமணமாவன் என தெரியாமல்) என்பவனை நம்பி வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறாள்.
தங்கை சாயா, ராணுவத்தில் வேலை செய்பவனை மணக்கிறாள். அம்மா, பாட்டி (வாய்க்குப் பயந்து) யுடன் இருக்கும் மாமா, மாமியிடம் தன் குழந்தையை விட்டு ஜமுனாவுடன் தங்கிக் கொண்டு வேலைக்குச் செல்கிறாள். தண்ணீர் பிடிக்கும் இடத்தில் ஜமுனாவும் டீச்சரம்மாவும் தோழியாகிறார்கள். ஜமுனாவை தேடிவந்து பாஸ்கரராவ் அவ்வப்போது அவளின் கதாநாயகி ஆசையைத் தூண்டி(லாக்கி) அழைத்துச் செல்கிறான். இதெல்லாம் ஒருபிழைப்பா என்ற கோபம் தன் அக்காவை மோசம் செய்தவன் என்ற ஆத்திரத்தில் சாயா சண்டைபோடுகிறாள். இதுபோன்ற நிகழ்வில் ஒருமுறை பெண்கள் விடுதியில் தங்கிக் கொள்கிறேன் என்று சாயா கோபித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறாள்.
சண்டையிட்டு தங்கை பிரிந்து சென்ற தனிமையில், மனச்சாத்தான் ஜெயித்துக் கயிறு கழுத்தை ‘சுருக்க’ முடியாதபடி வீட்டுக்காரம்மா கதவைத் தட்ட ஜமுனாவின் ஆயுள் நீடிக்கப்படுகிறது. டீச்சரம்மாவிடம், ஜமுனா, தான் சாகவேண்டுமென்று சொல்லி அழ, 15 வயதில் 45 வயது இருமல்காரனுடன் திருமணம். அன்றைய இரவு என்னிடம் மூர்க்கமாக நடக்க முயன்ற அவன் தரையில் விழுந்து தாறுமாறாய் கிடந்து துடிப்பதைப் பார்த்து எனக்கு சாகத்தோணலை. இனி ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருக்கப் போகிறதா? என்றுதான் யோசித்தேன். இதைவிட கொடுமையான நாட்களை அனுபவித்தேன்.
உன் தங்கை வேலைக்குச் சென்றாலும் கூட சம்பளத்திற்காக அடுத்தவரிடத்தில் முதல் தேதி கையேந்தி நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. நானும் அப்படித்தான் இருக்கிறேன். உன்னைப்பற்றியும் ஐயோ இப்படி விடிவில்லாமல் மாட்டிக் கொண்டிருக்கிறாளே என்று யோசித்திருக்கிறேன். நீ உன்னைப்பற்றி மட்டும்தான் கவலைப்படுவாயா? ஏழையானால் என்ன மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படக்கூடாதா? எனக்கு எல்லாவற்றுக்கும் நீ பதில் சொல்ல வேண்டாம். நீயே யோசித்துப்பார். அப்படி யோசிக்கும் போது மீண்டும் சாகவேண்டும் என்ற நினைப்பு வராதபடி யோசி என்று டீச்சரம்மா தன்னைப் பற்றியும், சாயா, ஜமுனாவின் வாழ்க்கைப்பற்றியும் புதிய கோணத்தைக்காட்டுகிறாள்.
ஜமுனாவுக்கு மனம் இலேசாகிறது. தன் தங்கையை விடுதியிலிருந்து அழைத்து வந்துவிடுகிறாள்.
சாயாவின் கணவனிடமிருந்து தான் எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கவில்லை எனக் கடிதம் வர சாயா வருத்தப்பட்டு அழுகிறாள். இந்த நிலையில் மறுபடி பாஸ்கரராவ் வர, ஜமுனா அவனிடம் தான் 3 மாத கர்ப்பம் வரமுடியாது என உறுதியுடன் கூறிவிடுகிறாள்.
முன்னமே பொங்கிக் கொண்டிருந்த சாயா மேலும் கோபமாக வார்த்தைகள் எகிறி பாஸ்கராவைக் குடையால் அடிக்க ஜமுனா அவனை ஓடிப்போகச் சொல்லிவிடுகிறாள். அதன்பிறகு இருவரும் முன்னமே திட்டமிட்டபடி வெளியில் கிளம்புகின்றனர்.
ரசித்தது:-ஆசிரியையின் (வாழ்க்கை)பாடம் கேட்டு ஜம்(மு)னா (திடமாக) மாறிவிடுகிறாள்.
தன்கணவனுக்கு மாற்றல் கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்தில் அழும் தங்கையை எதுவும் இன்றோடு முடிவதில்லை நாளை என்று ஒன்றிருக்கிறது என்று ஆசிரியையின் பாடத்தைத் தனக்காகவும், தங்கைக்குமாகவும் மாற்றிச் சொல்லி அவளுக்கு
நம்பிக்கை அளிக்கிறாள்.
தண்ணீர் (பம்ப்)அடிக்கும் நேரத்தில் ‘பகவானே வந்தாலும் இப்படி கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கள்’ என்று சொல்வோம் என ஜமுனா சொல்வது. சாக்கடை கலந்த நீர் என்று தெரிந்ததும் ‘இதுக்குக்கூட பகவான் காத்திருக்கணுமில்ல?’ என்று சாயா சொல்வது வலியே வாழ்க்கை என்பவருக்கு வார்த்தையில் ஆறுதல். மாசமாக இருக்கும் அக்காவிடம் இப்படி மாட்டிக்கொண்டாயே? எனஅவளைக் கட்டிக்கொண்டு அழ இருவரும் ஒருவருக்கொருவர் தாயாக மாறித் தேற்றிக்கொள்வது.
தன் அன்னையைப் பார்க்க விரும்பி தங்கையை விடுப்பு எடுக்கச் சொல்கிறாள். அதற்குக் காரணம் தான் அன்னையானதுதான் என்பதை ஆசிரியர் அழகாகக் கையாண்டிருக்கிறார். கதையில் சின்ன ஔியாக அவர்களின் மாமா, அம்மா இருக்கும்போதே செட்டில்மெண்ட் பண்ணிவிடலாம் என்கிறார். நிச்சயம் அவர்கள் வாழ்வார்கள் என்பதை இருவரும் கையைப்பற்றிக் கொண்டு வாழ்க்கையின் சவாலை எதிர்கொள்ளத் தயார் என்பதாக (நண்பனாக)மித்ரன் முடித்திருப்பார்.
தண்ணீரைப் பற்றி:-
சாலைகளின் பள்ளங்கள், தேங்கிநிற்கும் தண்ணீர், வாகனங்கள், காலணிகள் மாட்டிக்கொள்வது, தண்ணீர் அடிப்பதெற்கென்று ஆட்களை வைத்திருப்பது, இவ்வளவு நேரம் மட்டுமே தண்ணி தரமுடியும் என்று சொல்லி பம்பை பூட்டுவது, வராத தண்ணீர் வந்ததாக நினைத்து, அடித்து பிடிக்க, அது சாக்கடை கலந்த நீராக இருக்க, என்று தண்ணீர் இல்லாத கஷ்டம், தண்ணீர் (மழை நீர்) இருப்பதால் கஷ்டம் என்று தண்ணீரைப் பற்றி அசோமித்திரன் தன் பேனாவின் வழியே வழியவிட்டிருக்கிறார். நதிகளுக்கு பெண்களின் பெயர். நதியைப் போல ஓடிஓடி வீட்டுக்கான தண்ணீரைக் கொண்டு வருவதும் பெண்கள்தானே!!
நதிகளுக்கு பெண்களின் பெயர். நதியைப் போல ஓடிஓடி வீட்டுக்கான தண்ணீரைக் கொண்டு வருவதும் பெண்கள்தானே!! ….. அழகான வரிகள்….
LikeLike
நன்றிகள் அண்ணே
LikeLike