செங்கல்பட்டு மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் உள்ள கோட்டை அமைந்துள்ள ஊர்தான் சதுரங்கப்பட்டினம். இதை வெள்ளைக்காரர்கள் ‘சட்ராஸ்’ என்று அழைத்தார்கள்.
பல்லவர்களின் தலைநகரான மாமல்லபுரத்திலிருந்து 11கி.மீ தொலைவில் உள்ளது. பல்லவர் அட்சியில் இது துணை துறைமுக நகராக விளங்கியது. இந்நகர் பல பெயர்களைக் கொண்டிருந்தது.1359 ஆம் ஆண்டு கல்வெட்டின்படி இது ராஜநாராயணன் பட்டினம் என்றும் விஜயநகரப் பேரரசர் காலத்தில் சம்பூர்வராயர் பட்டினம், சதிரவாசகன் பட்டினம் என்ற பெயர்களைக் கொண்டிருந்தது. சதிரவாசகன்பட்டினம் என்பதே மருவி சதுரங்கப்பட்டினம் என்றானது எனலாம். சென்னை – கல்பாக்கம் வழித்தடத்தில் செங்கல்பட்டு நகரிலிருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் 28 வது கி மீ யில் அமைந்துள்ளது.
முதன்முதலில் பழவேற்காடு (புலிக்காட்) பகுதியில் 1606ஆம் ஆண்டில் வந்து தங்கிய நெதர்லாந்து நாட்டு வணிகர்கள் ஆடை மற்றும் நறுமண பொருள்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டார்கள். அங்கு செங்கல்லால் ஆன கோட்டையைக் கட்டி வர்த்தகத்தைக் கவனித்தார்கள். பின்னர் 1622 இல் சதுரங்கப்பட்டினத்தில் கோட்டையமைத்தார்கள்.
சென்னைக்குத் தெற்கே 70 கிமீ தொலைவில் சதுரங்கப்பட்டினம் உள்ளது. இந்த கடலோர நகரத்தை நெதர்லாந்து நாட்டினரான டச்சுக்காரர்கள் 17 ஆம் நூற்றாண்டில் அமைத்தார்கள். அவர்களின் வணிகக் காரணத்திற்காக மட்டுமே ஒரு கோட்டையை நிறுவினார்கள். இதனுள்ளே பெரிய தானியக் கிடங்கு, குதிரை லாயம்,யானை கட்டுமிடம், வசிப்பிட அறைகள்,சமையற் கூடம், உணவு உண்ணும் அறை, நடனக்கூடம், பார்வை மாடம், சுரங்க அறை, வடிகால் மற்றும் கழிவு நீர்க்கால்வாய் என இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய மதில்களை உடையதாக இருந்தது. நாற்புறமும் மதில் மேல் பீரங்கிகள் நிறுவப்பட்டிருந்தன. எல்லாம் அழிந்த நிலையில் வசிப்பட அறையையும், தானியக்கிடங்கையும் தொல்லியல் துறை புதுப்பித்துள்ளது.

டச்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் வியாபாரப் போட்டி மிகுந்திருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி போர் தவிர்க்கமுடியாத ஒன்றானது.
1670 இல் டச்சுக்காரர்கள் சாந்தோம் பகுதியில் நுழைந்தார்கள். இதற்கு ஆங்கிலேயர் எதிர்த்து இடையூறு செய்தார்கள். 1673 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பழவேற்காட்டலிருந்தும், சதுரங்கப் பட்டினத்திலிருந்தும் படைவீரர்கள் 1100 பேர் வந்து திருவல்லிக்கேணி கோவிலில் தங்கி சில மாதங்களில் ஆங்கிலேயரிடமிருந்து சான்தோம் பகுதியை கைப்பற்றினார்கள். இவ்வாறு வியாபாரப் போட்டியே இவர்களுக்கிடையே போர் நடைபெறக் காரணமாக இருந்தது.
சதுரங்கப்பட்டினத்தை டச்சுக்காரர்கள் தாவர எண்ணெய், முத்து ஏற்றுமதிக்கும், மெல்லிய ஆடைகள் நெசவு செய்யும் இடமாகவும் பயன்படுத்தினார்கள். இங்கு உற்பத்தியான சுட்ட செங்கல் , உலகத்தரமான மஸ்லின் துணி வகைகள் ஐரேப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. இன்றும் சதுரங்கப்பட்டினம் சுற்றிலும் நெசவுத் தொழில் செய்பவர்கள் வாழ்கிறார்கள்
இந்த வணிகத்தை கைப்பற்றும் நோக்கில் ஆங்கிலேயர்கள் 12.02.1782 அன்று ஆங்கிலேய கப்பற்படைத் தளபதி சர்.எட்வர்டு ஹியூஸ் தலைமையில் 9 கப்பல்களில் வந்து தாக்குதல் நடத்தினார்கள். டச்சுக்காரர்கள் பிரஞ்சுப் படைத் தளபதியான பெய்லி-டி-சஃரான் தலைமையில் 11 போர்க் கப்பல்கள் கொண்டு திருப்பித் தாக்கினார்கள். ஆங்கிலேயர் பக்கம் பாதிப்பு அதிமானதால் அவர்கள் தோற்றனர். மீண்டும் 1796 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் கடல் வழியே கோட்டையைத் தாக்கினார்கள். போர் 1818 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போது டச்சுக்காரர்கள் தோல்வியைத் தழுவினார்கள். ஆங்கிலேயரின் தொடர் தொல்லையைத் தாங்க முடியாத டச்சுக்காரர்கள் கோட்டையை விட்டு வெளியேறினார்கள். 1854 ஆம் ஆண்டு சதுரங்கப்பட்டினம் ஆங்கிலேயர் வசமானது.
சதுரங்கப்பட்டினம் கோட்டை டச்சு ராணியின் ஆணைக்கிணங்க கட்டப்பட்டதாகக் கூறுவர்.
400 ஆண்டுகள் பழைமையான மதில் சுவர்களுடன் இக்கோட்டை விளங்குகிறது. நாண்கு சுவர்களின் மூலைகளிலும் பீரங்கிகள் எதிரிகளை மூன்று பக்கமும் தாக்கும் வண்ணம் அமைக்கப்ப்டுள்ளன.

இங்கு பயன்படுத்தப்பட்ட சீனா, ஜெர்மன் நாட்டு சுடுமண் பாத்திரங்கள் , புகைக்கும் குழாய், பீங்கான் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
1620 க்கும் 1769 க்கும் இடைப்பட்ட காலத்தில் வசித்து இங்கு இறந்தவர்களின் கல்லறைகள் உள்ளன. கல்லறைகளின் மேற்பகுதியில் அரசு முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கப்பல்,சூலம், ருத்திராட்சம், புலி, மீன் என வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்லறைகளின் வெளிப்புறம் உள்ள அறைகளில் ஒன்றின் தரையில் ‘ஆடு-புலி ஆட்டம்’ என்ற பெயருடன் செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் விரும்பி கற்றுக் கொண்ட ஆட்டம்.
அவர்களின் கிடங்குகள் டச்சு கட்டுமானப் பொறியியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் தூண்களில் மழைநீர் சேகரிக்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது அண்மை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டமும் கண்டறியப் பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டை 2003 ஆம் ஆண்டுக்குப்பின் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் உள்ள கட்டுமானங்களை அழியவிடாமல் காப்பது நம் கடமைதானே.
References: சதுரங்கப்பட்டினம் – தமிழ் விக்கிபீடியாTamilnadu tourism ( Tamilnadu-favtourism.blogspot.com), shanthiraju.wordpress/around-chennai-south/subatraval.blogspot.com
Leave a Reply