காமிக்ஸ் பிறந்த கதை

படைப்பாளி: கிரிஸ்டி நல்லரத்னம், மெல்போன், ஆஸ்திரேலியா

“இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் அடிப்பட்டு மூர்ச்சையான இலக்குவன் மற்றும் வானர வீரர்களைக் காப்பாற்ற வாயு புத்திரர் அனுமன் இமயத்திலிருந்து பெயர்த்துத் தூக்கிவந்த அரிய மூலிகைகளைக்கொண்ட சிறிய மலையை இலங்கைக்கு வான் மார்க்கமாக எடுத்துச் சென்றார்……”

என்ன, காமிக்ஸைப்பற்றி எழுத வந்து இராமாயண கதா கலாட்சேபம் செய்கிறேன் என்ற குழப்பமோ?
காமிக்ஸ் எனும் வரைகதை  என்றதும் நினைவில் வருவது மீனாயகர் எனும் சூப்பர்ஹிரோக்கள்தான் என்பது உண்மை. எமது இதிகாசகக் கதைகளில்  அனுமான் போன்ற மீனாயகர்கள் கொட்டிக் கிடந்தாலும்  நவீன காமிக்ஸ்களின் ரிஷிமூலம் தேடுவது அத்தனை இலகுவானதல்ல.

எகிப்திய பிரமிட்களில் தொடங்கி கற்குகை சுவரோவியங்கள் உட்பட பல ஆதி  நாகரிகங்களில் ஒரு சம்பவக் கோர்வையை புரிய வைக்க மனிதன்  தொடர்  ஓவியங்களை (sequential art) ஒரு கருவியாகப் பாவித்தான். மொழி விருத்தியடையாத காலத்தில் இந்த ஓவியங்களே பேசும் படங்களாய் கதைகளை பல காலங்கள் கடந்தும் மக்களுக்கு சொல்லிற்று. மொழி கடந்த ஓவியக்கலையும் சிற்பக்கலையும் என்றும் பார்ப்பவர் மனதில் பசுமையாய் பதிந்து மன்னர்களின் சரித்திரங்களை ஆட்சிகள் கடந்தும் அறிவித்தது.

இந்தியாவின் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை துளிகளையும் ராஜஸ்தானின் காவட் (Kaavad) ஓவியக்கலை இராமாயண மகாபாரத கதைகளை தொடர் ஓவியங்களாய் மக்கள்  மத்தியில் பரப்பின. காவட் கதை சொல்லிகளின் காலம் இப்போது மலையேறிப்போய்விட்டது எனலாம்.

நம் ஊர் கோயில்களிலும் இவ்வகை தொடர் ஓவியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சித்தன வாசல் , தாராசுரம், கீழப்பமூர் கோவில் ஓவியங்களும் மகாவல்லிபுர மகிசாசுர மர்த்தினி அசுர வதை சிற்பங்களும் சில உதாரணங்கள்.

உலகப்புகழ் பெற்ற இத்தாலிய ஓவியஞானி மைக்கேலேஞ்சலோவால் வத்திக்கானின்  சிஸ்டைன் சேப்பலின் (Sistine Chapel)  உள்கூரையில்  வரையப்பட்ட ஒன்பது ‘ஆதாமின் ஜனனம் – இறுதித் தீர்ப்பு’  தொடர் ஓவியங்களும் இவ்வகைக்குள்ளேயே அடங்கும்.

முதல் நவீன காமிக்ஸ் எது, அது  எப்போது முதலில் பிரசுரிக்கப்பட்டது எனும் ஆதாரபூர்வமான சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில்  கிடைக்கும் ஆதாரங்களை வைத்தே இதை மதிப்பிடுவோம். வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலப் பகுதிகளில் பல மொழிகளில்  அவை தோன்றின. அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போமா?

அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஓவியர்கள் உலக வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் வரைகதைகளை படைத்தனர். அவற்றில் பல வரைகதைக்கான வரைவிலக்கணத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்ததாலும்  அவை துணி, மரப்பலகை, சுவர் போன்றவற்றின் மேல் வரையப்பட்டதாலும் முதல் ஸ்தானத்தை கண்டறிவது கடினமே.

1827ல் சுவிஸ் நாட்டில் ரோடால்ஃப் டாப் ஃபெர்(Rodolphe Topffer) வரைகதைகளுக்கு வித்திட்டார்.
1840 களில் பிரித்தானிய பத்திரிக்கைகளில் வெளிவந்த அரசியல் கார்ட்டூன்கள் வரைகதை கட்டமைப்பிற்கு வெளியே நின்றவை.

மஞ்சள் பையன் (The Yellow Kid) எனும் தொடர் ஓவியங்களை சித்தரிக்கும் கார்ட்டூன்கள்  நியூயோர்க் வேள்ட் எனும் ஞாயிறு பத்திரிகையில் 1895-1898 காலப்பகுதியில் வெளிவந்தன. இந்த கதாபாத்திரத்திற்கு தன் கோட்டோவியங்களால் உயிரூட்டிய றிச்சர்ட் ஓல்கட்தான் பதிப்புலக காமிக்ஸின் பிதாமகன் எனலாம்.

இதை தொடர்ந்து அமெரிக்க ஐரோப்பிய பத்திரிகைகளில் நான்கு அல்லது ஐந்து கட்டங்களுக்குள் அடங்குமாறு பல குறும் வரைகதைகள் வரத்தொடங்கின. இவற்றில் அனேகமானவை ஆரசியல் கலப்பற்ற கேலிச்சித்திரத்தொடராக வாசகர்களை சிரிப்பூட்டும் நோக்கத்துடனே நையாண்டித்தனமாக எழுதப்பட்டவை.

இவற்றின் பிரபலம் அதிகரிக்கவே  பத்திரிகைகளில் தொடராக வந்த பல தொடர்களை  ஒன்று திரட்டி 1933ல் பேமஸ் ஃபணிஸ் (Famous Funnies) என்ற பெயருடன் புத்தகமாக வெளியிட்டனர். இவை மறுபதிப்புகளின் திரட்டாக இருந்தாலும் இதுவே உலகின் முதல் காமிக்ஸ் புத்தகம் என நம்பப்படுகிறது. நாளடைவில் மறுபதிப்புகளை உதிர்த்து விட்டு ஒரிஜினல் கதைகளையும் கிறுக்கல்களையும் தன்னைத்தே  கொண்டு வரைகதைகள் வெளிவரத் தொடங்கின.

சமகாலத்தில் பிரித்தானியாவிலும் வரைகதைகளின் மவுசு அதிகரிக்கத் தொடங்கி ‘த பீனோ’, ‘த டாண்டி’ போன்ற பிரசுரங்கள் பதின்வயதோர் மத்தியிலும் பிரபலமடையத் தொடங்கின. விஞ்ஞான புனைகதைகளும் சித்திரக் கதைகளாக கடைகளை நிரப்பிய காலமிது.

பெல்ஜியத்தில் இக்காலங்களிலேயே பிரபல ‘டின்டின்’ காமிக்ஸ்சும் உதயமானது.

பேச்சுக்குமிழ்களுக்குள் (speech bubble)  உரையாடல்களை சிறைப்படுத்தி கதை சொல்லும் யுக்தியும் இக்கால கட்டத்திலேயே தோன்றி பிரபலமாயிற்று. இது ஓவியங்களை மட்டுப்படுத்தி கதை நகர்த்த உதவிற்று.

இரண்டாம் உலகப் போருக்கான முறுகல்கள் ஆரம்பித்த காலம் அது. ஹிட்லர் எனும் சூப்பர் வில்லன் தோன்றி உலக அமைதிக்கு பங்கம் வகுக்கும் செயல்பாடுகளை முடுக்கிவிட்டான். வில்லன் ரெடி……. ஆனால் ஹிரோவைத்தான் காணோமே என்று  மேற்குலகம் தவித்த நாட்கள் அவை.

‘கவலை வேண்டாம்,  இதோ வந்துவிட்டேன்!’ எனும் ஆர்ப்பரிப்புடன்  கம்பீரமாய் வந்திறங்கினான் சூப்பர் மேன்! முல்லைக்கு தேர் என வந்தவனை வாரி அணைத்தது மேற்கு உலகு!

காமிக்ஸ் புத்தகங்களின் பொற்காலம் இப்படி 1938ல் வெளியான சுப்பர் மேன் உடன் ஆரம்பமாகிற்று!  இக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பெருமை கனடாவின் ஜோ ஷஸ்டரையும் (ஓவியம்) இவரது சகாவான ஜெர்ரி சீகலையும் (எழுத்து) சாரும்.
அந்நாட்களில் வெளியான வரைகதைகளில் ஹிட்லரும் நாசிகளும் பிற்காலங்களில் ஜப்பானியர்களும்  வில்லர்களாக சித்தரிக்கப்பட்டனர். வாசகர் மனதில் தேசிய உணர்ச்சியையும் நாட்டுப்பற்றையும் இவை ஊட்டி வளர்த்தன என்பதில் ஐயமில்லை.

இவற்றில் ஹீரோக்களின் சாகசங்கள் அற்புதமான கதையோட்டம். எல்லாவற்றிக்கும் மேலாக நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் தரமான சித்திரங்கள் ஆகியன வாசகர்களை சுண்டி ஈர்த்தன.

இக்காலங்களில் ஐரோப்பாவில் வெளிவந்த காமிக்ஸ்கள் வாசகனின் தோள் மீது கை போட்டு நையாண்டித்தனத்துடன் எழுதப்பட்ட புனைகதைகள். டின் டின், ஆஸ்டரிக்ஸ், லக்கி லூக் போன்ற காமிக்ஸ்களை இப் பெட்டிக்குள் அடைக்கலாம்.

சூப்பர் மேனின் 75வது வருட நினைவை கொண்டாடும் வகையில்  2013ல் கனடா அரசு  தங்கம், வெள்ளி, நிக்கல் உலோகங்களால் ஆன 7 வகை நாணயங்களை வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
1938ல் வெளியான முதல் சூப்பர் மேன் ஒரி

ஜினல் காமிக்ஸ் புத்தகம் ஒன்று சில மாதங்களுக்கு முன் $3.25 மில்லியன்களுக்கு விற்பனையானது என்பது இன்னொரு செய்தி!

1940 களில் மேலும் பல மீநாயகர்களை அமெரிக்கா ஈன்றெடுந்தது. ப்ளாஷ் , கிரீன் லான்டர்ன் மற்றும் புளூ பீட்டில் போன்றோர் இதில் அடங்குவர்.

காமிக்ஸ் உலகிலும் ஆண் ஆதிக்கமா என நீங்கள் கேட்கு முன் 1941ல் வந்திறங்கினார் வொண்டர் வுமன்!
மகளீருக்கான அச்சம், மடம், நாணம்  போன்ற நற்குணங்களை  துடைத்தெறிந்து ஒரு வீரமும் துணிவும் உள்ள பெண் சமுதாயத்தை உருவாக்கும்  நோக்கத்தின் முதல் படியே இது என வொண்டர் வுமனை உருவாக்கிய வில்லியம் மாஸ்டன் சொன்னது பொருத்தமானதே.


அனேக கதைகளில் மாஸ்டன் தன் கதாநாயகி வொண்டர் வுமன் (பெண்ணடிமை எனும்) சங்கிலிகளால் கட்டப்பட்டு பின் அவர் தன் சுய சக்தியால் அவற்றை உடைத்தெறிந்து  வெற்றி பெறுவதாய் குறியீட்டுடன் எழுதியிருந்தார்.
சூப்பர் மேனை பிரசவித்த DC காமிக்ஸின் குடும்பத்தை சேர்ந்தவர்  இவர்.

இவர்கள் இருவரின் பூர்வீகம், எப்படி மீநாயகரானார்கள் என்பது பற்றி பெரும் துணைக் கதைகள் உண்டு. எல்லா மீநாயகர்களுக்கும் இது உண்டு. பரம ரசிகர்களுக்கு இக் கதைகள் அத்துபடி என்பது மட்டுமல்லாமல் உறவு முறைகளை  மாற்றிச் சொன்னால் இவர்கள் நக்கீரனாகிவிடுவார்கள்!

1936ல் லீ ஃபால்க் உருவாக்கிய வேதாளன்(The Phantom) காமிக்கையும் நாம் மறக்க முடியாது. இவரே வரைந்து கதையமைத்த வேதாளன் முதலில் பத்திரிக்கைகளில் காமிக்ஸ் வரித் தொடராக 5 அல்லது 6 கட்டங்களுக்குள் வெளிவந்து பின்னர் தனிப் புத்தகங்களாக ஏஸ் காமிக்ஸினால் வெளியிடப்பட்டது. எந்த சூப்பர் சக்தியும் இல்லாத ஆனால் அதி பலம் வாய்ந்த ஒரு கதாநாயகனாக காடுகளில் சுற்றித் திரிந்த இவரின் ஒரே குத்தில் வில்லனின் முகத்தில் மண்டையோட்டுச் சின்னம் முத்திரை பதிக்கும். இயற்கையோடு உறவாடும் வேதாளனுக்கு தமிழ் வாசகர்களிடையே எப்போதும் ஒரு தனிமதிப்பு உண்டு.

The Phantom

பொதுவாக காமிக்ஸ் கதைகளில் அதை உருவாக்கிய கதாசிரியரின் சமூக, இன, தேசிய உணர்வுகள் கசிந்து மையோடு கலந்து காகிதத்தை நனைப்பதுண்டு.  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாசிகளுக்கு எதிரான சூப்பர் மேனின் நிலைப்பாடுகள் இதற்கு ஒரு உதாரணம். கதாசிரியரின் மத, இன அரசியல் துவேசங்கள் தான் உருவாக்கிய ஹீரோக்களூடே வலிந்து நஞ்சாய்  திணிக்கப்படுவதும் உண்டு.  கறுப்பின மக்களையும் பிற கீழைநாட்டு மக்களையும் ஐரோப்பிய அமெரிக்க கதாசிரியர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே பல கதைகளில்   சித்தரித்தது சோகமே.  டின் டின், வேதாளன், டார்ஜான் போன்றவர்களின் பாத்திரப்படைப்புகள் இதற்கு நல்ல சான்று. ஆனால் வளரும் உலகம் இவர்களை படிப்படியாக நிராகரித்து ஒரு விடிவை நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. புகை பிடிக்கும் காமிக்ஸ் நாயகர்கள் கூட இன்றில்லை. மார்வெல் ஸ்டூடியோவினால் 2018ல் திரையிடப்பட்ட கருஞ்சிறுத்தை (Black Panther)  படத்தில் சூப்பர் ஹீரோ முதல் எல்லோரும் கறுப்பினத்தவர்களே. கதைக்களமும் அப்படியே. ஆனால் இப்படம் வசூலில் சக்கை போடு போட்டு பணத்தை அள்ளிக் குவித்தது!  மனிதன் மாறிவிட்டானா?

Black Panther

“சூப்பர் ஹீரோ” எனும் சொல்லைப் பற்றி ஒரு சுவாரசியமான செய்தியையும் இங்கு சொல்லியாக வேண்டும். “சூப்பர் ஹீரோ” எனும் சொற்பதத்தை டிசி காமிக்ஸ்சும் மாவல் காமிக்ஸ்சும் கூட்டாக இணைந்து தங்களுக்கு மட்டுமான ஏகபோக வியாபாரச் சின்னமாக 1960ல் சட்டரீதியாக பதிவு செய்துள்ளன. எனவே இச்சொல்லை வியாபார ரீதியாக ஒரு திரைப்படத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பாவித்தால் சட்டத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும்!
பாவித்த சிலருக்கு தீக்குள் விரலை வைத்த அனுபவம் கிடைத்திருக்திறது என்பது உண்மை!
Zombie எனும் சொல்லையும் 1975ல் மார்வல் காமிக்ஸ்  காப்பிரைட் எடுத்திருந்தது என்பதும் இன்னொரு துணுக்குச் செய்தி.

இரண்டாம் உலகப்போரின் வெற்றி தோல்விகளில் கைகோர்த்து பயணித்த காமிக்ஸ் பல நாட்டவருக்கு அதிலும் விசேடமாக  போரின் கொடுமையால்  பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளின் சோகத்தின் வடிகாலாக அமைந்தது என்பது உண்மை. மின்சாரத் தடை, அகதி வாழ்க்கை, நோய், பசி போன்ற வாதைகளால் அல்லலுற்ற இவர்களின் ஒரே தோழன் காமிக்ஸ்களின் பக்கங்களில்  உறங்கிய சூப்பர் ஹீரோக்கள்தான். அவர்களின் கனவுலகக் காவலர்கள்!

இவர்களைப்போல் அனேக சூப்பர் ஹீரோக்கள் இக்கால கட்டத்தில் தோன்றினார்கள். இந்த மீநாயகர்களின் பெயர்களை இங்கு நான் பட்டியலிடப் போவதில்லை. ஆனால் பேட் மேன், காப்டன் அமெரிக்கா, சுப்பர் போய், அக்குவா மேன், பிளாஷ் போன்றோர் இவர்களுள் முக்கியமானவர்கள்.

வருடங்கள் பல உருண்டோடின…….

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து  மக்கள் தம் வீடுகளையும் குடும்பங்களையும் கட்டி எழுப்புவதில் முழுக்கவனத்தையும் செலுத்தும் நாட்கள் அவை. எங்கும் அமைதி பற்றிய பேச்சு. போர் என்ற சொல்லையே வெறுக்கும்  புதிய மனிதர்கள்!
பொழுதுபோக்கிற்கு கறுப்பு – வெள்ளை தொலைக்காட்சிகள் வேறு வீடுகளில் தலை காட்டிய காலங்கள் அவை.
சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களும்  வில்லனுக்கெதிரான சண்டைகளும் இப்புதிய மனிதர்களை கவரவில்லை. சண்டையை வெறுக்கும் சமூகம்.

காமிக்ஸின் பொற்காலம் ஒரு முடிவுக்கு வந்தது!
இப்புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய வெளியீட்டு நிறுவனங்கள் கையை பிசைந்துகொண்டு  அடுத்து என்ன செய்வதாம் என யோசித்தன.  அச்சுக்கூடங்களுக்கு தீனி போட்டாகவேண்டுமே?
சூப்பர் ஹீரோக்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை காதல், திதில், மர்மம், நையாண்டி நிறைந்த கதைகளை உள்ளடக்கிய காமிக்ஸ்கள் வெளிவந்து நிரம்பத்தொடங்கின.  இவற்றிற்கு பலத்த வரவேற்பும் இருந்தது.
அப்போது வால்ட் டிஸ்னி வேறு தன் படைப்புக்களான மிக்கி மவுஸ், மினி மவுஸ் போன்ற கதாபாத்திரங்கள் அடங்கிய காமிக்ஸ்களை  வெளியிட்டு  லாபம்  தேடிக்கொண்டார். 
இதனிடையே வெஸ்டேர்ண் எனும் வகுப்பில் ‘கெளபாய்ஸ்’ – நம் ஊர் ‘மாட்டுக்கார வேலன்’- கதைகளும் விஞ்ஞான கதைகளும் தலைதூக்கின.
இப்படித்தான் சுபமாக ஆரம்பித்தது காமிக்ஸின் ‘வெள்ளி ஆண்டுகள்’.

சுபமாக ஆரம்பிக்கும் எந்த விடயமும் சோதனைகளையும் சந்தித்தாகவேண்டும் என்பது உலக நியதியாயிற்றே!
திகில், மர்மம், கொலை கலந்த காமிக்ஸ்கள் பதின்வயது நிரம்பியவர்களை வன்முறைகளிலும் சிறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட வைக்கின்றன எனும் ஒரு சமுதாய எதிர்ப்பு அமெரிக்காவில் எழுந்தது. இதன் எதிரொலியாக  1954ல் காமிக்ஸ் குறிபீட்டு ஆணயம் (Comics Code Authority)  எனும் அமைப்பை எல்லா அமெரிக்க காமிக்ஸ் வெளியீட்டாளர்களும் ஒன்று கூடி அமைத்து ஒரு சுய கட்டுப்பாட்டில்  (self regulated)  தம்மை ஆட்படுத்திக் கொண்டன. இந்த ஏற்பாட்டின் கீழ்  “ஆரோக்கியமானது ”  எனும் அங்கீகார CAC முத்திரையை அட்டையில் குத்திய அனேக காமிக்ஸ்கள் வெளிவரத்தொடங்கின. பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இப்படிப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலையில் மீண்டும் சூப்பர் ஹீரோக்களை மீள அறிமுகப்படுத்தினால் என்ன என டிசி காமிக்ஸ் ஸ்தாபனத்திற்கு எழுந்த எண்ண அலையின் பிரதிபலிப்புத்தான்  1960ல் வெளிவந்த மறுசீரமைக்கப்பட்ட ‘த  ஃபிளாஷ்’.
மார்வல் காமிக்ஸ் மட்டும் சும்மா இருக்குமா என்ன? அவர்கள்  தங்கள் நட்சத்திர கதாசிரிய- ஓவிய ஜாம்பவன்களான  ஸ்டான் லீ – ஸ்டீவ் டிற்கோ  உருவாக்கிய ஸ்பைடர் மேன் எனும் ஒரு மகத்தான இளம் சூப்பர் ஹீரோவை 1962ல் உலகிக்கு  அறிமுகப்படுத்தினார்கள். இன்றும் இவர் வரைகதைகளிலும் திரைப்படங்களிலும்  கம்பியூட்டர் விளையாட்டுகளிலும்  பல கோடிகளை மார்வலுக்கு அள்ளி வீசுகிறார்.
இதே வருடமே ஸ்டான் லீயின் கற்பனையில் ஹள்க் எனும் உருமாறும்  பச்சை நிற அரக்கனும் தோன்றினான்.

அமெரிக்காவின் பல காமிக்ஸ் பதிப்பகங்கள் புத்தக வெளியீடுகளுடன் நின்று விட்டாலும் 1939ல் தொடங்கப்பட்ட மார்வல் பதிப்பகம்தான் திரைப்பட துறையில் தன் வெற்றிக் கொடியை முதலில் நாட்டியது.

மார்வல் பதிப்பகம் மார்வல் என்டர்டேய்ன்மண்ட் ஆக வளர்ந்து பின் 2009ல் வால்ட் டிஸ்னி கம்பனியால் விழுங்கப்பட்டு மார்வல்  ஸ்டூடியோஸ் எனும் முத்திரையின் கீழ் பல சூப்பர் ஹீரோஸ்களின் வெற்றிப்படங்களை வெளியிட்டு இன்றும் எம்மை மகிழ்விக்கிறது.

அதே சமயம் சோனி பிக்சர்சுடன் இணைந்து ஸ்பைடர் மேன் திரைப்படங்களையும் யூனிவர்சல் ஸ்டூடியோவுடன் இணைந்து ஹள்க் திரைப்படங்களையும் தயாரித்து வழங்குகிறது. இக் கம்பெனியின் ஆதிக்கம் அனேக பொழுதுபோக்கு துறைகளில் ஒரு சிலந்தி வலைபோல் பரந்து இருப்பதால் அவற்றை இக்கட்டுரைக்குள் அடக்க முடியாது.

காமிக்ஸ் உலகின் டைனேசர்தான் 1934ல் தொடங்கப்பட்ட டிசி காமிக்ஸ்!  காமிக்ஸின் பொற்காலத்தில் அனேக முன்னணி சுப்பர் ஹீரோக்களின் உரிமையாளர்களாகவும் மிக சிறந்த ஓவியர்களையும் கதாசிரியர்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு சாம்ராஜ்ஜியத்தையே அமைத்தவர்கள்.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் பல மாற்றங்களுக்குள்ளாகி 2009ல்  வார்னர் பிரதர்ஸ் திரைப்பட கம்பனியால் விழுங்கப்பட்டு  அதன் ஒரு அங்கமாக இன்று இயங்கி வருகின்றனர்.

டிசி காமிக்ஸ்க்கும் மார்வல் காமிக்ஸ்க்கும்  பலத்த வியாபாரப் போட்டி இருந்தாலும்  1996ல் இருவரும் இணைந்து ‘அமல்கம் காமிக்ஸ்’ என்ற பெயரில் பல புத்தகங்களை வெளியிட்டனர்.

ஆம், சூப்பர் மேன் Vs ஸ்பைடர் மேன்!

இரு களங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒரே கதையில் சந்திப்பது வாசகர்களுக்கு ஒரு சுவாரசியமான அனுபவத்தை தந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யைப் போல் இந்த உறவும் அதிக வருடம் நீடிக்கவில்லை.

எந்தப்படைப்பையும் போல் காமிக்ஸ்சும் ஒரு முதிர்ச்சி நிலையை அடைந்து 1970க்குப் பின் பல சமூக அக்கறையுள்ள கருத்துக்களை வாசகர்களுக்கு வழங்கத் தொடங்கியது. போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிலைப்பாடு, இனத்துவேஷம், சுற்றாடல் மாசுபடுதல், பெண்ணடிமை, சிறுவர் துர்பிரயோகம் போன்ற சமூக இடர்களை எதிர்க்கும் கருத்துக்களை உள்ளடக்கிய உரையாடல்களை கதைக்குள் நாசுக்காக புகுத்தின.
இதே வருடங்களில்தான்  ‘கிராஃபிக்’  காமிக்ஸ் எனும் இரத்தம் தோய்ந்த திதில் மற்றும் குரூரம் நிறைந்த சித்திரங்களுடன்  வெளியீடுகள் வயது வந்தவர்களை கவரும் வண்ணம் பிசுரிக்கப்பட்டன. இதுவே காமிக்ஸின் பித்தளை வருடங்கள் (Bronze Age) எனலாம்.

மேற்தத்திய நாடுகளில் மேற்கூறப்பட்ட திரிபுகளுடன் காமிக்ஸ்கள்  வெளிவந்த வேளையில் ஜப்பானில் முற்றிலும் வேறுபட்ட  மங்கா எனும் ஒரு வகை வரைகதை 18ம் நூற்றாண்டுகளில் பிறந்து 1950களில் மிகப் பிரபலமாகிற்று. வண்ணங்கள் கோட்டுருவ சித்திரங்களின் எழிலை பாதிக்கும் என கருதி இவை கறுப்பு – வெள்ளை நிறங்களிலேயே வெளிவந்தன.
பாரம்பரியமாக மங்கா வெளியீடுகள் மேல் இருந்து கீழ் மற்றும் வலது இருந்து இடம் நோக்கி பக்கங்களில் கதை நகர்த்தும். ஆம், வாசகர்கள் கடைசிப் பக்கத்தில் இருந்து தொடங்கி முதல் பக்கம் நோக்கி பக்கம் திருப்புவார்கள்!
1970களில் மேற்குலகமும்  ஆங்கில மொழிபெயர்ப்புடன் ‘ஆஸ்ட்ரோ பாய்’  போன்ற மங்காக்களுடன் காதல் கொண்டன. சினிமாப்படமாக்கப்பட்ட மங்காக்கள் ‘அனிமே’ எனும் பெயருடன் வெளிவரத் தொடங்கின.

சினிமா என்றதும் சூப்பர் ஹீரோ படங்களைப்பற்றியும் சொல்லியாக வேண்டுமே. சிறுவர்களை மட்டுமே கவர்ந்த சூப்பர் ஹீரோ கார்ட்டூன் குறும்படங்கள் நாளடைவில் வளர்ந்தவர்களை கவரும் வண்ணம் மெகா பட்ஜெட்டுடன் வெளிவந்து  ஸ்டூடியோக்களின் கஜானாக்களை நிரப்பின.
ஜேம்ஸ்  பாண்ட் பட திரைக்கதை அமைப்பை போல் இப் படங்களிலும் வில்லனை அதி கொடியவனாகவும் ஹிரோவை விட மிக பலம் பொருந்திய சூப்பர் வில்லனாக காண்பித்து எப்படி அவனை தன் தனித்துவ சக்தியாலும் சாமர்த்தியத்தாலும்  ஹீரோ வெல்கிறான் என்பதே மூலக்கதை. CGI என்றழைக்கப்படும் (computer-generated image), கணனி உருவாக்கிய உருவங்களையும் சாகச காட்சிகளையும் அபிரமிதமாக பாவித்து ரசிகர்களை மாயக் கயிற்றினால் கட்டி வேறு உலகத்திற்கே அழைத்துச்சென்று காதில் பூச்சொருகி காசை கறந்துவிடுவதில்  இவர்கள் மன்னர்கள்!

தமிழில் இத்தரத்தில் சூப்பர் ஹிரோ திரைப்ப்டங்கள் இதுவரை வெளிவராவிட்டாலும் கந்தசாமி (2009), முகமூடி (2012), ஹீரோ(2019) போன்ற சில தமிழ்  சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளியாகி எம்மை மகிழ்வித்தன.

எங்கெங்கேயெல்லாம் சுற்றி தமிழ் உலகுக்கு வந்துவிட்டோம்!
தமிழ் காமிக்ஸ் சரித்திரமும் அது வளர்ந்த கதையும் சுவாரசியமானது. அதை இன்னெரு முறை பார்ப்போமா?

(முற்றும்)

இலங்கையின் ‘அக்கினிக் குஞ்சு’ 09.08.21 இதழில் பிரசுரமானது. ‘கதைசொல்கிறேன்’ அன்பர்களுக்காக வழங்கப்படுகிறது

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: