எம்மதமும்….. 

படைப்பாளி: கிரிஸ்டி நல்லரத்னம், மெல்போன், ஆஸ்திரேலியா

செபாஸ்டியன் அன்று அதிகாலையிலேயே எழும்பி விட்டான். எழும்பாமல் என்ன செய்வதாம்? வீடா குடும்பமா அவனுக்கு….. நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலய மணி வேறு ‘டாங்… டாங்…’ என்று அடித்து அவனுக்குள் குடியிருந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் விரட்டிக் கொண்டிருந்தது.

அங்குதான் அவன் சயன சுகம் காணும் அந்த பெரிய ஆலமரம்  கிளை பரப்பி கூரையாய் விரிந்து நின்றது. ஆலய வளவிற்குள் இருந்த நடேசர் கோவிலுக்கும் நாகதம்பிரான் கோவிலுக்கும் இடையே இருந்த அந்த விருட்சத்தின் கீழ் ஒரு காட் போட் துண்டையே தன் பஞ்சணையாக்கி வாய் திறந்து தூங்குவான் செபாஸ்டியன்.

ஆறு வருடங்களாக இதுவே அவன் துயிலும் இடம். குருக்களுக்கு பெரிய மனது. “செபாஸ்டி, உன்னட சமயம் சாதி பாக்காம படுக்க இடம் தாறன்…. ஆனா விடிய எழும்பி கோவிலடியையும் மடப்பள்ளியையும் கூட்டி பெருக்கி தண்ணி தெளிக்க வேணும் கண்டியோ?….. அதுதான் வாடக  “என்ற குருக்களின் வார்த்தைகளை வேதவாக்காக்கி  இத்தனை வருடங்களாக இதையே செய்கிறான் அவன். 

 மழை நாட்களில் மட்டும் கோயில் மண்டபத்தில் படுக்க அவனுக்கு பதவி உயர்வு கிட்டும்.
நீர்கொழும்பில் குழந்தைவேல் செட்டியாரும் அருணாச்சல செட்டியாரும் கட்டி வைத்த முதல் கோயில் செபஸ்டியானுக்கு வீடானது.

ஏன் நடுத்தெருவிற்கு வந்தோம் என அவன் ரிஷிமூலம் தேடி நாட்களை ஒரு போதும் கழித்ததில்லை.  கோயில் மணி அடித்ததும் எழுந்து கழுத்தில் தொங்கும் சிலுவையை பக்தியுடன் உயர்த்தி உதட்டருகே வைத்து ஒரு முத்தமிட்டு ‘மாதாவே’  என மெதுவாய் ஜெபத்தொனியில் சொல்லி வைப்பான்.

அவனின் அந்த ஜெபம் குருக்கள் காதுகளுக்கும் கேட்பதுண்டு.  அவன் பக்தி மார்க்கத்தில்  குறுக்கிட அவர் என்றும் நினைத்ததில்லை.

குருக்கள் சொன்ன வேலைகளை முடித்து கோயில் கிணற்றில் இரண்டு வாளி தண்ணீரில் ஒரு காக்காய் குளிப்பு குளித்து தலையை துவட்டிக் கொண்டு கோயில்  மூலஸ்தானத்திற்கு வெளியே பயபக்தியாய் நிற்பான்.

குருக்கள் உரத்த குரவில் மந்திரங்கள் ஜெபித்து தேவாரங்கள் பாடி தெய்வங்களை மகிழ்வித்து ஆசி வேண்டி உதயபூஜையை முடிப்பார்.

செபாஸ்டியனுக்கும் குருக்கள்  பாடும் தேவாரங்களின் சரணங்கள் அரை குறையாய் தெரியும்….. கேள்வி ஞானம். அவன் ‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி..’ என முணுமுணுத்துக் கொண்டே காலையில் கோவில் முற்றத்தை கூட்டிப் பெருக்கும் போது இவனும் ஒரு சாஸ்திரியனோ என பார்ப்பவர்களுக்கு எண்ணத் தோன்றும்.

பூஜை முடிந்தது குருக்கள்  மூலஸ்தானத்தை விட்டு ஒரு தட்டுடன் வெளியேறி சுற்றும் முற்றும் பார்ப்பார். காலை பூஜைக்கு வருவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். எல்லோரும் வயதான சைவப்பழங்கள். நீர்கொழும்பு ஒரு கத்தோலிக்க சமூகத்தின் பிறப்பிடம் என்பதும் இந்த நிலைக்கு ஒரு காரணம்.

இந்த சமூக சமய வலைப்பின்னல்களைப் பற்றி செபாஸ்டியன் அலட்டிக்கொள்வதில்லை. அவன் குறி குருக்களின் தட்டில் உள்ள நைவேத்தியங்கள் மீதே. குருக்களின் மனைவி நேற்றே உறவைத்து அவித்து கடுகு போட்டு தாளித்து தேங்காய் சொட்டு துருவலுடன் பிரட்டிய கடலை அவனுக்கு தேவார்மிதமாய் சுவைக்கும்.  அதுவே அவன் காலை ஆகாரம் .
அன்று ஆடி அமாவாசை.  தட்டில் வழமையாக இருக்கும் மோதகங்களும் நறுக்கிய கரும்புத்துண்டுகளும்  இன்று இல்லை.  ஆடி அமாவாசை விரதமே இதற்கான காரணம். ஆனால்,  நிச்சம் மதிய அல்லது மாலை பூஜையின் பின் வடை பாயாசத்துடன் விசேஷ படையல்கள் உண்டு என்பது அவனுக்கு தெரியும்.

சைவ சமய சித்தாந்தங்களை அவன் என்றும் புரிந்தவனல்ல. அவை பற்றி அவனுக்கு கவலையும் இல்லை. தட்டை நிரப்பும் பண்டங்களின் செழிப்பு அவனுக்கு நாட்களின் விசேஷத்தை வெளிப்படுத்தும்.

சித்தி விநாயகர் ஆலயம் இருந்ததோ நீர்கொழும்பு-மீரிகம பிரதான வீதியில். செபாஸ்டியன் தோளில் ஒரு ‘பஞ்சாபி’  துணிப்பையை மாட்டிக் கொண்டு வீதியில் இறங்கி உடையார் தோப்பை தாண்டி மேற்கில் திரும்பி பரி. செபத்தியார் ஆலயத்தை நோக்கி நடந்தான். அங்கு அவன் போய் சேரும் போது காலை எட்டு மணிப்பூசை ஆரம்பித்து ஜேம்ஸ் பாதிரியார் தேவநற்செய்தியை பீடத்தில் நின்று வழங்கிக் கொண்டிருந்தார். ” வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் “. பாதிரியார் விவிலியத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து ‘பாரம் என்றால் என்ன?’  என்று  வியாக்கியானம் செய்து முடித்து தேவ நற்கருணைக்கு ஆயுத்தமானார்.

ஆறு வருடங்கஞக்கு முன் செபாஸ்டியான் பாதிரியாரிடம் இரவில் ஆலயத்தில் தங்க இடம் கேட்டபோது அங்கு ஏன் தங்க அனுமதிக்க முடியாது என்பதற்கான காரணங்களை பட்டியல் போட்டு விபரித்தது அவன் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒரு வேளை வருத்தப்பட்டு அவன் சுமக்கும் பாரத்தின் சுமை கர்த்தரின் ‘கருணை தராசை’  சரிக்க போதவில்லையோ என அவன் எண்ணியதுண்டு. ஆனால்,  குருக்கள் அவனுக்கு இடமளித்து ஆதரித்ததை நினைத்து ‘ஒவ்வொரு சமயத்திற்கும் ஆண்டவன்  சுமையின் அளவுகோலை வெவ்வேறாக நிர்ணயித்து வைத்தானோ’ என அவன் எண்ணியதுண்டு.

அன்று ஆலயத்தில் கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது. ஆலயம் கடலை ஒட்டி இருந்ததால் இரவு முழுதும் படகோட்டி காலையில்  கரை சேர்ந்த மீனவர்கள் பலர் முளித்துக்களைத்த கண்களுடனும் புதிதாய் வெளித்தள்ளிய பம்மிக்காய் முக ரோமத்துடனும் தேவநற்கருணை எடுக்க ஆராதனையின் அரைவாசியிலேயே இணைந்து கொண்டனர்.

அவன் ஏனோ தேவ நற்கருணையில் பங்குபற்றுவதில்லை. ‘தேவன் மாமிசமானார்’  என பாதிரியார் தேவ அப்பத்தை வானுக்கு உயர்த்தி சொல்வது அவனுக்கு ஒரு சடங்காகவே பட்டது. தெரியாமையின் துவக்கப்பள்ளியில் உள்ள ஜீவன்களுக்கு  எல்லாமே ஒரு புதிர்தானே?

மேலும் அதன் தார்ப்பரியத்தை கேட்டு விளங்கிக் கொள்ளும் ஆவல் என்றும் அவனுக்கில்லை. அவன் எண்ணமெல்லாம் வேறு.
தேவாலய  வாசலில் வரிசையாக உட்கார்ந்து இருக்கும் பிச்சைக்காரர்களின் வரிசையில்  தனக்கும் ஒரு இடத்தை தேடியாக வேண்டும். ஆலய மதில் அருகே உள்ள நிழலில் இருந்த ஒரு சீமேந்து பீடமே அவன் ஆஸ்தான பூமி.  அனேகமான நாட்களில் அவன் அதை ஆக்கிரமித்தாலும் சில வேளைகளில் அவ்விடத்தை கோட்டை விட்டு விடுவதுண்டு.  அன்று கலெக்ஷன் கம்மிதான்.
பாதிரியார் சபையோரை தேவ வசனத்தில் தாளித்து இளகிய மனதுடன் அவர்களை ஆலயத்தை விட்டு வெளியே ‘தர்மதுரைகளாக’  அனுப்பி வைப்பார்.

அவர்கள் மனங்கள் கல்லாக மாறும் முன் செபாஸ்டியானும்  அவன் சகாக்களும் இந்த தேவ மைந்தர்களிடம் இருந்து சில்லறயை கறந்தாக வேண்டும்.  எனவே எங்கு ‘கடை விரிப்பது’  என்பது இந்த பிசினஸின் வெற்றிக்கு முதல் படி!

புற்றீசல்களாய் சபையோர் இரு மருங்கிலும் அமர்ந்திருந்த ‘பாரம் சுமப்பவர்களை’ கடந்து சென்றனர். இந்த சமூகக் கும்பலுள் சிலரின் கருணை காசாய் மாறி கைகளை நிரப்பிற்று. அமர்ந்திருப்போரின் தனி மனித சோகங்களை கேட்டறிய எவருக்கும் ஆர்வமில்லை.
செபாஸ்டியானின் முன் விரித்திரிந்த துண்டில் விழுந்திருந்த சில்லறைகளையும் இரண்டு இருபது ரூபா நோட்டுக்களையும் கவனமாய் தோளில் தொங்கிய பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த தேவராஜன் தன் சாறனை உயர்த்தி உள்ளே அணிந்திருந்த கற்சட்டைக்குள் அவனுக்கு கிடைத்த ‘தர்மத்தை’  திணித்துக் கொண்டு ” அப்ப, பஸ் ஸ்டாண்டுக்கு போவமா?”  என்றான். இருவரும் புறப்பட்டு மீண்டும் நீர்கொழும்பு – மீரிகம வீதியை குறுக்கறுத்து அந்த சுடும் வெய்யிலில் நடந்தனர்.

பரிசுத்த மேரி மாதாவின்  ஆலயத்திலும் காலை ஆராதனை முடிந்து சபையோர் வீதியை  நிரப்பிக் கொண்டிருந்தனர்.  ஞாயிறு ஆராதனைக்கு  செபாஸ்டியான் அங்கு கடை விரிப்பதுண்டு.

இன்று காலை, ஆடி அமாவாசையின் நிமித்தம், குருக்களின் படையலை சுவைக்க கொடுத்து வைக்காததினால் பரிசுத்த  மேரி மாதாவின்  ஆலயத்திற்கு முன்னால் உள்ள சந்திர விலாஸ் சைவ ஹோட்டலில் இருவரும் வடையும் வாழைப்பழமும் டீயும் சாப்பிட்டு  காலையாகாரத்தை முடித்துக் கொண்டனர்.

அன்று கொழும்பில் ஒரு பெரிய கிரிக்கட் மெட்ச் நடக்க இருப்பதால்  கடையின் முன்னால் பொருத்தியிருந்த பெரிய டீவி யில் ஒளிபரப்பை பார்க்க கூட்டம் சேரத்தொடங்கியிருந்தது.  தேவராஜ் ஒரு கிரிக்கட் பைத்தியம். அவன் செபாஸ்டியான் பக்கம் இரும்பி  ‘செபாஸ்தீ,  நான் இந்த மட்ச்சை பாத்திட்டு புறகு வாறன். நீ போற எண்டா போ’  என்று கழட்டி விட்டான்.

என்ன சுதந்திரமான வாழ்க்கை!

கிறீன்ஸ் ரோட் டவுனை குறுக்கறுத்து ஓடும் அகலமான வீதி. அவ்வீதி பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும் ‘ஆண்டகை நிக்கலஸ் மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தை’  என பெயர் மாற்றி தன்னை நவீனப்படுத்திக் கொண்டாலும் செபஸ்டியானுக்கு  அதுவும் கிறீன்ஸ் ரோட்தான். இந்த பெயர் மாற்றங்கள் அவனுக்கு அன்னியமாய் தோன்றிற்று.
பெயரில் என்ன கெளரவம் இருக்கிறது என்பது அவன் வாதம். ‘ நீர்கொழும்பு சென்றல் பஸ் ஸ்டேஷன்’ என்று பெரிய கொட்டை எழுத்துக்கள் பறைசாற்றினாலும் அவனுக்கு அது ‘பஸ் ஸ்டாண்ட்,’ தான்.
அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

ஆலயத்தில் இருந்து நேராக தினமும் வரும் இடம் கிறீன்ஸ் ரோட் –  பரி. ஜுட்  ரோட் சந்தியில் இருக்கும் ‘பேருவள சாப்பாட்டுக் கடைக்கே’. அந்த ஹோட்டலுக்கு  ‘கஸ்டமஸ்’ வைத்த பெயர் இது. கடைக்கு பெயர் பலகை இல்லாவிட்டால் எப்படித்தான் அழைப்பதாம்?

எம்மதமும்

அந்தக் கடையின் முதலாளி மரைக்கார் நானா தொடக்கம் எல்லோரும் பேருவளையில் இருந்து குடிபெயர்ந்து நீர்கொழும்பை இரண்டாம் வீடாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் வந்த ஊரில் கால் பதித்தாலும் மனமோ வளர்ந்த ஊரில் தான். ஹஜ்ஜி பெருநாள் பேருவள மசூதியில்  வெகு விஷேடமாய் நடக்கும். மூன்று நாள் கொண்டாட்டம். அந்நாட்களில் மரைக்கார் நானா சாப்பாட்டுக் கடையை இழுத்து மூடிவிட்டு கடை ஊழியர்களுடன் பேருவளைக்கு பஸ் ஏறி விடுவார்.  கடை மீண்டும் எப்போது திறக்கும் என ஒரு ‘போர்ட்’ எழுதி வைக்கும் வாடிக்கை அவருக்கு இல்லை. கடைக்கே ‘போர்ட்’ இல்லாத போது,  இது என்ன கேடா? ‘வந்தால் கண்டு கொள்ளுங்கள்’  என்பது அவர் நம்பிக்கை. இல்லை… இல்லை…. அவர் படைக்கும் உணவின் மீதுள்ள நம்பிக்கை அது!
‘கோழிப்பாட்ஸ்’, ‘மூளைக்கறி’, ‘ஆட்டுக்கால் சூப்’, ‘மீன் தல கறி’ எனும் உணவு வகைகள் அந்த டவுனில் நானாவின் கடையில் மட்டுமே கிடைக்கும். அப்போது கஸ்டமர் வேறு எங்கு போவார்கள் எனும் ஒரு ‘படைப்பாளியின் திமிர்’  அவருக்கு!

செபாஸ்டியானுக்கும் கடையின் மதிப்பில் ஒரு பங்குண்டு. காலையில் ஆராதனை முடிந்ததும் நேராய் நானா கடைக்கு வந்து தண்ணி இழுத்து குசினிக்கு பக்கத்தில் இருந்த ‘பக்கை’ நிரம்பி அத்தோடு  பெரிய கிடாரங்களையும் தாச்சிகளையும் அலம்பி தண்ணி நிரப்பி வைப்பது அவன் வேலை.
அவ்வேளைகளில் குசினியில் இருந்து எழும் வாசம் அவன் மூக்கில் புகுந்து வாயை உமிழ்நீரால் நிரப்பும். ‘இண்டைக்கு ஒரு பிடி பிடிக்கோணும்’ என்ற நினைப்பு அவனுக்கு ஒரு புது சக்தியை அளிக்கவே மேலும் வேகமாக தண்ணீர் இறைப்பான்.

பகல் பன்னிரண்டு மணியளவில் தான் கடை களை கட்டும். ஜிஃப்றியும் மஹறூபும் தான் இரு வெயிட்ட ர்கள். கால்களில் இறக்கை கட்டிக் கொண்டு  அவர்கள் குறுக்கும் மறுக்குமாக  ஓடியோடி கஸ்டமர்களுக்கு பரிமாறுவதை  செபாஸ்டியான் பார்த்து வியந்ததுண்டு.

அவர்கள் இருவரும்  ‘ஆடர்களை’  உரத்த குரலில் கூ.வுவது கடையின் பின்னால் நிற்கும் செபாஸ்டியானுக்கும் கேட்கும். “ஐயாவுக்கு மூள ஒண்டு ” “ஐயாட கால உட” போன்ற சொற்பதங்களில் புதைந்துள்ள நகைச்சுவையை அவன் ரசித்துச் சிரித்துக் கொள்வான்.

கோக்கியார் இஸ்மாயிலுக்கு வசனத்தில் முள்ளெடுத்து வார்த்தைகளில் பொதிந்துள்ள ‘பகிடி’ களை  சுவைக்கும் மனநிலை இல்லை. கொதிக்கும் தாச்சிக்குள் விழிபிதுங்க  குழம்புக் கூட்டில் மிதக்கும் மீன் தலைகளை கரண்டியால் புரட்டிப் போட்டு கணக்கெடுப்பார். வர இருக்கும் கஸ்டமர்களுக்கு இவை போதுமா என்பதே அவர் கவலை.

இரண்டு மணியளவில் சனசந்தடி அடங்கியதும் கோக்கியார் ‘செபஸ்டி, இஞ்சால வந்து குந்து’ என பந்திக்கழைப்பார். குசினியில் போடப்பட்டிருந்த நீண்ட வாங்கில் செபாஸ்டியானும் கோக்கியாரும் அமர்ந்து அலுமினிய தட்டில் பரிமாறி சோற்றில் கை வைப்பார்கள். ஏற்கனவே செபஸ்டியானின் இரைப்பையில் பாதி நிரம்பியிருக்கும் உமிழ்நீர் வந்து விழும் சோற்றையும் கறிகளையும் ஜீரணிக்கும் முனைப்பில் வேலையை தொடங்கும். இவர்களுடன் இரு வெயிட்டர்களும் சேர்ந்து கொள்வார்கள்.

என்னதான்  பசி என்றாலும் செபஸ்டியானுக்கும் பிடிக்காத கறி வகைகள் உண்டு. அது இஸ்மயிலுக்கும் தெரியும். பொரித்து ஆக்கிய பாவக்காய்  பால்கறி அவனுக்கு நஞ்சு. இஸ்மயில் சொல்வார்: ” என்ன செபஸ்டி, பாவக்கா கறிட ருசி  உனக்கு எங்கடா தெரியும்? மாத்துக் கறி தரட்டா?”

“என்ன மாத்துக் கறி இரிக்கி?”

“போஞ்சி தாளிச்சி தலப்பால் போட்டு வதக்கி வச்சிக்கன்.  போடட்டா?”

ஆம் என்று தலையை பலமாக ஆட்டி பணிவுடன் ஆமோதிப்பான் செபாஸ்டியான்.

‘மாத்துக்கறி’ என்றும் விசேஷமே.  பொன்னாங்காணி சுண்டலும் கீரை கடையலும் பல கஸ்டமரின் தொண்டைக்குள் இறங்காது. இதனாலேயே இந்த ‘மாத்துக் கறி’  ஏற்பாடு. இது ஒரு இரகசிய ஏற்பாடு. ஆனால்,  நீங்கள் ‘பேருவள’  கடையின் பல வருட கஸ்டமரானால் ஜிஃப்றி உங்களிடம் “சேர் நல்ல மாத்துக் கறி இரிக்கி….. கொண்டரட்டா?”  என மெதுவாக குனிந்து ஒரு பரம இரகசியத்தை சொல்வது போல் சொன்னால் ஆச்சரியப்படாதீர்கள். நீங்கள் ஒரு உயர் கஸ்டமர் ஸ்தானத்தை அடைந்து விட்டீர்கள் என பெருமைப்படுங்கள்!

மூன்று மணி முதல் ஐந்து மணி வரை கடை மூடியே இருக்கும். மரைக்கார் நானா சோற்றில் ஒரு பிடி பிடித்து விட்டு கடைக்குப் பின்னால் இருந்த அறைக்கு சயனிக்க சென்று விடுவார். போகுமுன் கல்லாப் பெட்டியில் இருந்து இரு பத்து ரூபா நோட்டுகளை எடுத்து செபாஸ்டியானின் கைகளுக்குள் திணித்துவிட்டு செல்வார்.

சில வேளைகளில்  செபாஸ்டியான் ஹோட்டலின் இரு மேசைகளை இழுத்து ஒன்றாக்கி மேல் ஏறி ‘உண்ட களைப்பு தீர’  ஒரு குட்டித் துாக்கம்  போடுவதுண்டு. அன்று  ஏனோ அந்த அசதி வரவில்லை.

ஆண்ட்ரூ  சினிமாவில் ஒரு படம் பார்த்தால் என்ன எனும் முடிவுடன்  ‘பஞ்சாபி’ பையை தோளில் மாட்டிக் கொண்டு கடையை விட்டு வெளியேறினான்.

கிறீன்ஸ் ரோட்டில் எறி  வலது பக்கம் மடங்கி கிறிஸ்றோப்பர்  ரோட்டில் இறங்கினால் வருவது ஆண்ட்ரூ சினிமா. தியேட்டர் வாசலில் அதிக சனமில்லை. மணி வேறு இரண்டு நாற்பது ஆகிவிட்டதால் இப்போது ‘சைட் ரீல்ஸ்’  காட்டிக் கொண்டிருப்பார்கள்…. படம் தொடங்கியிருக்காது.  இரண்டரை மாட்னி காட்சிக்கு கூட்டம் வேறு குறைவுதான் அங்கு. பெரிய கட் அவுட்டில் மக்கள் திலகம் சிரித்துக் கொண்டிருந்தார்.

எம்மதமும்

“சும்மா இருடி…… சனியன்”  குரல் வந்த திசையில் அவன் பார்வை திரும்பியது. றோசாப்பூ  கலர் சாறியில் தன் இரண்டு வயது மதிக்கத்தக்க மகளை ஏசியவாறு தன் பர்சை திறந்து எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள் அவள். அவள் கண்கள் ஒரு கருவண்டு போல் துரு துரு என்று இருந்ததை அவன் வாலிபமுறுக்கு கண்டு கொண்டது.

எப்போதும் பஸ் ஸ்டாண்ட், கோயில், ஆலயம் என்று ஊர் கற்றும் செபாஸ்டியானுக்கு இவள் நம் ஊர்காரியல்ல என முடிவு செய்ய அதிகம் நேரம் செல்லவில்லை.
கையில் சில்லறையை எடுத்துக் கொண்டு கலரி டிக்கட் ஒன்று வாங்க தியேட்டர் படியேறினான் செபாஸ்டியான்.

குழந்தையுடன் மல்லுக்கட்டிய அவள்  ‘டிக்கற் வாங்கவா போற?’  என்று ஒருமையில்  அவனை கேட்டாள். அவள் குரலில் இருந்த தயக்கமும் வேதனையும் அவனுக்கு புரிந்தது.

‘ஓம்…. ஏன்?’

‘இல்ல. நா இரவு பஸ்ஸில மன்னார் போகோணும்…. அது வர றோட்டுல திரியாம  இஞ்ச காலாற இருப்பம் எண்டுதான் படம் பாக்க புள்ளேயாட வந்தநான்.  இந்த சனியன் தியட்டருக்குள்ள லைட்ட நூத்தின உடனே கீருட்டு கத்துது. படம் பாத்து அதுக்கு பளக்கமில்ல.  அடக்கவும் ஏலாது. மத்த ஆக்களும் புள்ளய வெளியில கொண்டு போ எண்டு கத்துறாங்க. அதான் வெளியில நிக்கிறம். பின்னேரம் ஆறரைக்குத் தான் மன்னார் பஸ்’  என தன் இரண்டும் கெட்டான் நிலையை அவனிடம் சொல்லித் தீர்த்தாள்.

‘நீ எண்ட் டிக்கட்ட எடுத்திட்டு போய் படத்த பாரு. காசி வேணாம்’  என்று அவள் சொல்லிக் கொண்டு கையிலிருந்த டிக்கட்டை அவனிடம் நீட்டினாள்.

அது ‘செக்கண்ட் கிளாஸ்’ டிக்கட் .

என்ன செய்வதாம்?

அவள் முகம் நாளெல்லாம் வெய்யிலில் அலைந்து களைத்தும் கறுத்தும் இருந்தது. அவள் சோர்வு அவனுக்கு புரிந்தது.
அவள் சோகத்திற்கு சுமை சேர்க்கும் கைக்குழந்தை வேறு.

இவர்களை வெளியே விட்டு விட்டு தான் மட்டும் படம் பார்ப்பதா? அவன் உள்ளே போனாலும் உள்ளம் வெளியேதானே அலையப் போகிறது?

 “எனக்கு இப்ப படம் பாக்க மனசில்ல…. படமும் தொடங்கியாச்சி….. உனக்கு விருப்பமெண்டா அந்தா முன்னால் இருக்கிற கூல் பாரில  ஏதாவது சாப்பிடுவம். புள்ளைக்கு ஐஸ்கிறீம் வாங்கேலும்  “ என ஒரு மாற்று ஐடியாவை முன்வைத்தான்.

“உனக்கு கஸ்டமில்லையா?

 “ எனக்கேன்ன கஸ்டம் ….. இண்டைக்கு இல்லாட்டி நாளைக்கு படம் பாக்கலாம்.  “

அவள் குழந்தையை அணைத்தவாறு அவனுடன் அந்த கூல்பாரை நோக்கி நடந்தாள்.

மூவரும் ஒரு வசதியான மூலை மேசையில் அமர்ந்து ஒடர் செய்து கேக், ஐஸ்கிரீம் பலூதா என சுவைக்கத் தொடங்கினர்.

அவள் தன் கதையை கண்களை விரித்து கைகளை மேலும் கீழும் அசைத்து ஒரு நாடகக்காரியின் நளினத்துடன் சொன்னாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் பல சமயங்களில் அருவியாய் கொட்டி மூக்கையும் நனைத்தது.
தன் தாயின் சோகத்தில் பங்குகொள்ளாமல் குழந்தை ஐஸ்கிரீமை நக்கிச்சுவைத்து.

அவள் கணவன் மன்னாரில் இருந்து மீன்பிடி தொழிலுக்காய் நீர்கொழும்பிற்கு மூன்று மாதங்களுக்கு முன் வந்தவனாம். இது போல் வேவ்வேறு சீசனில் மீனவர்கள் இடம்பெயர்ந்து இலங்கையின் பல்வேறு கடல் பிரதேசங்களுக்கும் தற்காலிகமாக குடிபெயர்வது ஒன்றும்  புதிதல்ல.
ஆனால்,  அவனிடம் இருந்து எந்தத்  தகவல்களும் வராததால் அவனைத் தேடித்தான் அவளின் இந்த விஜயம்.

இப்படி தொழில்தேடி வந்து,  வேறு உறவுகளில் மாட்டிக் கொண்டு  வீடு செல்லாத பல கதைகளை செபஸ்டியான் கேட்டிருக்கிறான்.

 “ பயப்படாத…… உண்ட புருசன் எங்க போகப் போறான்…… எப்பிடியும் இந்த புள்ளயப்பாக்கவாவது வருவான்….. நீ கவலப்படாம உருக்கு போ புள்ள….. இஞ்ச இருந்து என்ன பணியாரத்த பண்ணப் போறா?” 

அவள் கதை அவன் நெஞ்சை அடைத்தது உண்மை. என்ன தான் அவனால் செய்ய முடியும்? 
இவள் கணவன் வேறு ஒரு பந்தத்தை தேடி அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கலாம். இவள் வேண்டாம் என்று அவன் இவளை நிராகரித்து இருக்கலாம்.

நூலறுந்த பட்டம் போல் ஒரு உறவுக்காய் அலையும் இவளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நிலையிலா அவன் இருக்கிறான்?

இந்துவாய் உறங்கி,  கிறிஸ்தவனாய் எழுந்து ஒரு இஸ்லாமியனாய் வயிறு நிரப்பும் அவனுக்கு எந்த உறவும் சொந்தமில்லை.

இந்த சமூகம் தன்னை தாங்கிக்கொள்ளும் என்ற ஒரே நம்பிக்கையே அவன் வாழ்வாதாரம்!

அவளையும் குழந்தையையும் அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது. ஆனால்,  தன் வாழ்க்கையின் அடுத்த அடி என்ன என நிதானித்து கணித்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவனிடத்தில் இல்லை,

இருட்டும் நேரம் நெருங்கி விட்டது.
அவன்,  அவளை மன்னார் பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு ஒரு வெற்று மனிதனாய் நடைப்பிணமாய்  சித்தி விநாயகர் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவனுக்காக குருக்கள் தட்டில் ஆடி அமாவாசை விசேஷ படையல்களை எடுத்து தனியே வைத்து விட்டு கோயில் விளக்குகளை அணைக்கத் தொடங்கினார்.

ஞானம்”  கலை இலக்கியச் சஞ்சிகை ஒக்டோபர் 2021 இதழில் வெளிவந்த கதை.

Advertisement

One thought on “எம்மதமும்….. 

Add yours

  1. ‘எம்மதமும்.,,,, ‘ ஈழத்து நாட்டு வழக்கில் எழுதப்பட்டது. ஆனால் தனிமனித சோகம் மொழி கடந்தது அல்லவா?
    படைப்பாளி பாராட்டுக்குரியவரே !

    கோவில்,சர்ச், மரைக்காயர் கடை இவற்றுக்குப்பின், செபாஸ்டியன் திரையரங்கில் வெளிப்படுத்தும் மனிதநேயம் மனதில் நிலைக்கிறது. எதிர் பார்ப்போடு இருக்கும் பெண்ணின் நிலை மனதைப் பிசைகிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: