பாசன நீர் நிர்வாகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணைகள் அமைத்து நீரின் பயனை அந்தப் பகுதி மக்களுக்கு அளித்தனர். சங்கிலித் தொடராகக் குளங்களை அமைத்தனர். பெரிய குளங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து அவற்றிற்கு ஆற்றில் இருந்து தண்ணீர் அளித்து, உபரி நீர் மீண்டும் ஆற்றுக்கே வந்து சேரும் வழி அமைத்தனர்.
காவிரியில், மாயனூரில் இருந்து உய்யக்கொண்டான் கால்வாயை வெட்டி, வழியில் ஆயிரம் ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்தான் ராஜராஜசோழன். காவிரி நீர் வீணாகாமல் சேமிக்க வீராணம் ஏரியை வெட்டியவன் பராந்தகச்சோழன்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் பெரிய ஏரிகளில் குமிழித் தூம்பு என்ற நீர் ஒழுங்கு அமைப்பை நிறுவித் திறம்படப் பாசன நீர் மேலாண்மை செய்து வந்தவர்கள் தமிழர்கள். இந்த குமிழித் தூம்பு அமைப்பு மூலம் பாசனத்திற்குத் தண்ணீர் அளித்தது மட்டுமின்றி, ஏரிகள் வண்டல் படிந்து தூர்ந்து போகாமலும் தடுத்தனர்.
மேற்கோள் :
1.குடவாயில் பாலசுப்ரமணியன் (2009அக்டொபெர் 12) “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாசன முறை முறை”
2.குள. சண்முகசுந்தரம் (2015 சூலை 16) “அலையடித்த ஏரியில் புழுதிப் புயல் வீசும் பரிதாபம்” கட்டுரை
ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை நீர் , வாய்க்கால், ஓடைகளின் வழியே வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வருவதே நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு முக்கியமான காரணம்.
மதகுகள் நீரை வெளியேற்றும் வேலையைச்செய்யும். குமிழிகள், நீரை வெளியேற்றுவதோடு, ஏரி, குளம், கண்மாய்களுக்குள் வந்துவிழும் வண்டல்களையும் அகற்றிவிடும்.
பாசனக்கால்வாய்களுக்கு தண்ணீரைத்திறந்துவிடும் “குமிழி”. குமிழிகள் ஏரிக்கரையில் மதகுகளைப்போல அமைக்கப்படுவதில்லை. ஏரிக்கரையிலிருந்து 200-300 அடிகள் தள்ளி ஏரிக்குள்ளே அமைக்கப்படுவது குமிழி. இன்னும் உள்ளே இருந்தாலும் வியப்பில்லை. ஏரியின் அமைப்பைப்பொறுத்தது இது. ஒவ்வொரு பாசனக்கால்வாய்க்கும் ஒரு குமிழி இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப்பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடவும் இருக்கும்.
ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கற்தளம் அமைத்து, அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டியை வடிவமைப்பார்கள். தொட்டியின் மேற்பாகத்தில் நீர் போவதற்கான பெரிய “நீரோடித்துளை” இருக்கும். தொட்டிக்கடியில் அதே அளவில் துளைபோட்டு, அதனை சுரங்கக்கால்வாயால், ஏரிக்கு வெளியில் இருக்கும் பாசனக்கால்வாயோடு இணைத்துவிடுவர்.
தொட்டிக்குள் நீர்போவதற்கான துளையை மூடவும், தேவையான அளவு திறக்கவும் பயன்படும் தூம்புக்கல்லை (conical stone valve) மேலும் கீழும் இயக்குமாறு கற்சட்டகம் உண்டு.

படத்தில், அந்தக்கற்தொட்டியின் பக்கவாட்டிலே உள்ள மூன்று சிறுதுளைகளுக்கு “சேரோடித்துளை” என்று பெயர்.
நீர் நிறைந்த ஏரிகளில் நீந்திச் சென்று, மூழ்கி தூம்புக்கல்லை தூக்கும் வேலையை செய்ய போர் வீரர்கள் போன்ற நல்ல உடல் வலிமை படித்தவர்களை பணிக்கமர்த்தி இருப்பார்கள்.
பாசனக்கால்வாய்க்கு நீர் திறக்கும்போது தொட்டியின் மேலேயுள்ள நீரோடித்துளையை அடைத்துக்கொண்டிருக்கும் தூம்புக்கல்லை தூக்குவார்கள். நிறைய வேண்டுமெனில் முழுதாகவும்,குறைவாக நீர் அனுப்பும்போது சிறிய அளவிலும் தூம்பை தூக்குவார்கள். ஏரிக்கடியில் இருக்கின்ற இந்த அமைப்பில், ஏரியின் நீர்மட்டத்திற்கேற்ற அழுத்தத்தில் நீரோடித்துளைவழியே நீர் சுழித்துக்கொண்டு ஓடும். ஏரிக்கடியில் நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும்; கற்சட்டகத்தில் உள்ளே அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் சேரோடித்துளை வழியே வண்டல் , களிம்பு நிறைந்த நீர் வேகமாக உட்புகும்; எரித்தண்ணீரோடு அடித்து செல்லப்படும். சுரங்கக்கால்வாய் வழியே ஏரிக்குவெளியே உள்ள பாசனக்கால்வாயை நீர் சென்று சேர்ந்துவிடும். ஏரியிலிருந்து நீரோடி துளை வழியாக 80 சதவீத நல்ல தண்ணீர் வெளியேறும் போது சேரோடி வழியாக 20 சதவீத கூழ் தண்ணீர் வெளியேறும். நல்ல தண்ணீர் அடித்துச் செல்லப்படும் வேகத்தில் மண் கூழும் அடித்துச் செல்லப்பட்டுவிடும்.
கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது. மதகை அடைத்துள்ள மூடுகல்லை பிணைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும். கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும். அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும். “நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது” என்கிறார் முனைவர்-குடவாயில் பாலசுப்ரமணியன்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது கண்டராதித்தம் கிராமம். இங்குதான் செம்பியன் மாதேவி பேரேரி அமைந்திருக்கிறது. பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் தனது இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியின் விருப்பத்தை ஏற்று இவன் வெட்டிய ஏரிதான் செம்பியன் மாதேவி பேரேரி. ஆவணங்களில் இதற்கு கண்டராதித்தம் ஏரி என்றும் குறிப்புகள் உள்ளன. இதன் மதகு ஒன்றுக்கு, தான் சீராட்டி வளர்த்த ராஜராஜனின் பெயரால் ராஜராஜன் தூம்பு என்று பெயர் வைத்திருக்கிறான் கண்டராதித்தன்.
இலக்கியங்களில் குமிழித்தூம்புகள்:
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், “பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப்
போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது’
(வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.
இதைப்போல, மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான “அறவணர் தொழுத காதை’ என்னும்
பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,
”பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்” (1384-87)
என்கிறார். “சுருங்கை’ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய்.
அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை
வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில்
பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச்
சென்றடையும் என்பதே இதன் பொருள்.
1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து
நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே
“குமிழித்தூம்பு’ என்பதாகும்.
மாமன்னர் ராஜராஜன் காலத்தில் அமைக்கப்பட்ட குமிழிதும்பில் மன்னனின் கல்வெட்டுகள் இடம் பெற்றிருக்கும் . அதனால் அது அரசின் சொத்து , சேதப்படுத்துபவர்கள் அரசின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்பதாம். இத்தகைய குமிழித்தூம்பை பராமரிப்பவர்களின் பாத மணலை தான் தலைமேல் கொள்வேன் என ராஜராஜன் கல்வெட்டு வாயிலாக அறிவித்திருக்கிறான்.
பழங்காலந்தொட்டு நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைக்கு பயன்பட்ட இவ்வகை குமிழித்தூம்புகள் தற்பொழுதுள்ள சூழலில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாய் காட்சியளிக்கிறன.
படத்திலிருக்கும் குமிழிக்கல் கொடும்பாளூர் அருகேயுள்ள ஓர் ஊரணியிலிருந்தது. #கொடும்பாளூர்
#குமிழிக்கல்
நன்றி: திருச்சி பார்த்தி


ஓசூர் ராமநத்தம் ஏரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குமிழித் தூம்பின் பெயரே `ராஜராஜன்’ எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. திருநெல்வேலி திருக்குறுங்குடி ஏரியில் உள்ள குமிழித் தூம்பின் தூண்கள் இரண்டிலும் சங்கு, சக்கரம், முதலை, ஆமை போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. அந்தக் குமிழித் தூம்பினை திருமாலின் அம்சமென மக்கள் போற்றியதால் சங்கு சக்கரம் ஆகியவற்றைப் பொறித்துள்ளனர்.
இந்திய கலைமரபில் கங்கையின் வாகனமாக முதலையையும் யமுனையின் வாகனமாக ஆமையையும் காட்டுவது மரபு. இங்கு ஏரிநீரை கங்கை, யமுனை நீராக மக்கள் கருதியதால் முதலையையும் ஆமையையும் சிற்பங்களாகக் காட்டியுள்ளனர். தூம்பும் நீரும் மிகவும் புனிதமுடையவை என்பதைக் காட்டும் வகையில் இக்குமிழித்தூம்பு அமைந்துள்ளது.
“ஏரிகளில் பொது மராமத்து தூர்வாருதல் என்ற பணியால் இத்தகைய குமிழித் தூம்புகளை பொக்லைன் இயந்திரங்கள் அழித்துவிடும் அபாயநிலை உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது இதன் மூலம் அறிய முடிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளைப் பாதுகாக்கப்பெற்ற வரலாற்றுச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும். இதைக் காப்பது நமது கடமையாகும்” என்கிறார்.
Podcast
Leave a Reply