ஆசிரியர்:-நாஞ்சில் நாடன்
பதிப்பகம்:-விஜயா
தமிழ்பாட்டி ஔவையின் பாடல்வரியான பாடுக பாட்டே என்பது புத்தகத்தின் தலைப்பு. அவருடனான நெல்லிக்கனியை (உள்ளங்கை) உதாரணமாக்கி சொன்னால் இந்த புத்தகம் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சில பாடல்களின் தொகுப்பு என்பதை தலைப்பு உணர்த்தும். பள்ளியில் படித்தபோது “தண்டலை மயில்களாட” வும், நாராய் நாராய் செங்கால் நாராய் என்றபாடலும் சமீப காலமாக( 2வருடங்கள்) மனதுக்குள் ஓடி ..ஓடிக் கொண்டிருந்தது. கடைசி வரி நினைவிலில்லை.
இந்த புத்தகத்தில் நிறைய என்னைப் புதுப்பிக்கும்படியான பாடல்களுடன் மனதுக்குள் ஓடிய பாடலும் கிடைத்து சந்தோஷப்பட வைத்தன. ஒளவையார் ஒருவரல்ல பல்வேறு காலங்களில் பல்வேறு ஓளவையார்கள் இருந்திருக்கிறார்கள் என 1897ம் ஆண்டு ஔவையார் சரித்திரம் எழுதிய ஐயம்பதி தா. வேதாசல முதலியார் குறிப்பிடுவதாக இந்தநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட உலகத்தின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட எக்காலத்திற்கும் பொருந்துகின்ற. பொது நீதியை சொன்ன உலகப்பொதுமறையில் படைச் செருக்கில் “கைவேல் களிற்றோடு போக்கி” என்ற குறளில் எதிரிநாட்டு யானை மீது தன் கைவேலை வீரனொருவன் எறிய, யானை தப்பிவிட, நிராயதபாணியாகிறான். அப்போது இவனை நோக்கி எதிரிவீரன் எறியும் வேல் இவன் நெஞ்சை குத்தி நிற்கிறது . வேலற்றவன் முகத்தில் வேல் கிடைத்ததென புன்னகை வருகிறது.
காலமாற்றத்தில் கருவிகள் மாறுமே தவிர தாய்நாட்டு பற்றும் வீரமும் எக்காலத்தும் எங்கும் மாறாத உண்மைதானே.. வேலுக்கு பதில் துப்பாக்கியின் நவீன ரகம்! பிரிவுத் துயருக்காக “செல்லாமை உண்டேல் எனக்குரை”என்ற குறளில் காதலனோ, கணவனோ பொருளீட்ட நான் வெளிநாட்டுச் செல்கிறேன் என்றால் (ஒருவேளைமட்டும் கூட உண்டு வாழ முடியும்) உன்னையன்றி உயிர் வாழ முடியாது இங்கிருக்கும் வேலையை செய்துகொண்ட உடனிருக்க வேண்டுமென்பது பொருள்.
பெண் தன் இதயத்திற்கு இதமான துணை தன்னைப் பிரிந்து செல்வதை விரும்புவதில்லை. பெண் சொல்லும் வார்த்தைகள் பேசும்மொழிகள் வேறுபடலாம். அன்பு நிலை மாறாதுதானே! கம்பர், கோவூர்கிழார், கடலுள் மறைந்த இளம்பெருவழுதி, அரிசில்கிழார், காளமேகம், வீரை வெளியனார், காரைக்காலம்மையார், திரிகூடராசப்ப கவிராயர் என்று புலவர்கள் பலரின் பாடல்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மகாகவி பாரதி இன்னும் பல அறிஞர்களாலும் கொண்டாடிய புலவர் பெருமக்கள், காட்டில் வந்து சந்தித்த புலவருக்கு தன் தலையை கொய்து (விலை வைத்த) தம்பியிடம் கொடுத்து புலவரின் வறுமையை போக்கிக் கொள்ளச் சொன்ன தமிழுக்காக தன் உயிரையும் கொடுக்க துணிந்த குமணன் போன்ற அரசர்களும் வளர்த்த தமிழை என்போன்ற சிறுமி?! (படிப்பில்) படித்ததில் ரசித்தது என்று தனிப்பட போடுவது…..
நெருடியது: ‘திருக்குறள் இலக்கியம் இல்லை, அது நீதி நூலே என்று புலம்பியவர் பலருண்டு தமிழ்நாட்டில்’ என்பதும், இலக்கியங்களை பேசும் நூலில், அரசியலைச் சேர்த்திருப்பதும், திருஷ்டி பொட்டாக இருந்தால் ரசிக்கலாம், கன்னம் முழுக்க இருந்தால்?? கவிச்சுவையை முழுமையாக சுவைக்க முடியாமல் செய்துவிடுகிறது.
அதி நவீன உடை (ஹைக்கூ), நவீன உடை (புதுக் கவிதை), எக்காலத்திற்கும் ஏற்றதான பருத்திஆடை(மரபுக்கவிதை), கம்பீரமும் அழகும் கொண்ட பட்டாடைகள் (பழந்தமிழ் இலக்கியங்கள்) வண்ணங்களின் கலவை – வரிகளாக, வேலைப்பாடு – உவமான உவமேயங்களாக, நெய்பவராக புலவர்களின் (பட்டாடை) படைப்புகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை!
தமிழாசியராக வந்த 2 வருடத்தில் சத்தி முத்தப்புலவரின் கையது கொண்டு, கம்பரின் தண்டலை மயில்களாட என்ற பாடலையும் 100 முறையாவது வகுப்பில், இலக்கிய மன்றத்தில், பட்டிமன்றத்தில் என தன் குரலின் ஏற்ற இறக்கத்தாலும் உடல்மொழியாலும் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிய தமிழாசிரியருக்கு, உயர்தனிச் செம்மொழி என ஊட்டி வளர்த்த தந்தைக்கு (அவரும்ஆசிரியர்), தன் புத்தகங்களை படிக்கக் கொடுத்த அண்ணனுக்கும்(ஆசிரியர்) ஆசிரியர் தினத்தில் இந்த பதிவை சமர்பித்து வணங்குகிறேன்! ஆரம்ப கல்வியை அளித்த முதல் 5 வகுப்பு ஆசிரியர்கள் பால சுப்ரமணியன், பாலகிருஷ்ணன், வைத்தியலிங்கம், கஸ்தூரிபாய் ரத்தினம் ஆகியோருக்கு அன்புமொழியின் வணக்கங்கள்.
திறனாய்வுப்பார்வை சிறப்பு . உடையோடு இலக்கிய வகைப்பாட்டை ஒப்புமைப்படுத்தியிருப்பது அபாரம், அரசியல் கருத்துகள் வாசகரது இலக்கிய ரசனைக்கு இடையூறாக இருப்பதையும் நயம்பன உரைத்திருப்பது நன்று.
LikeLike
புரிந்துணர்வுக்கு நன்றிகள்
LikeLike
ஆசிரியர் தினத்தில் அருமையான பதிவு.
LikeLiked by 1 person