Image Credits : South Asian Art Gallery
பொய்க்கால் குதிரை ஆட்டம்.
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஒன்றாகும். கரகம், காவடியைப் போல வழிபாட்டுக் கலையாக அல்லாமல் பொதுமக்கள் கண்டுகளிக்கும் பொருட்டு ஏற்பட்ட ஆட்டமாகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் விளங்குகிறது
குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு.
இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கூறினாலும் உண்மை வேறாக உள்ளது.
பொய்க்கால் குதிரை ஆட்டத்தை சித்தரித்து சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள சிலை

இப்பொய்க்கால் குதிரையாட்டம் முற்றிலும் பொழுதுபோக்கின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாகவே வழங்கி வந்துள்ளது. தமிழ்நாட்டில் பன்னெடுங் காலமாக மரக்காலாடல் வழக்கில் இருந்து வருகிறது. ஆனால் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஓடியதற்கான சான்றுகள் தொல்காப்பியத்தில் உள்ளன. தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் பெருந்திணைக்கு இலக்கணம் கூறும் நூற்பாவில் தலைமகன் தான் விரும்பிய பெண்ணை மணக்கப் பெண்ணின் பெற்றோர் தடை விதித்த போது, பனை ஓலையில் குதிரை போல் உருவம் செய்து அதனை உடலில் தாங்கிக் கொண்டு ஊர்த் தெருக்களில் வந்து தான் விரும்பும் பெண்ணைத் தனக்குக் கட்டி வைக்கக் கோரிய செயல் “மடலேறுதல்” என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. இது தொல்காப்பியத்தில் “ஏறிய மடல் திறம்” என்று பேசப்படுகிறது. ஆனால் காலில் கட்டை கட்டிப் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து ஆடலாக ஆடப்பட்டதற்கான சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இப்பொய்க்கால் குதிரையாட்டம் ஆடப்பட்டுவந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றில் வாழ்ந்த இராமகிருட்டினன் என்பவர் முதன்முதலில் பொய்க்கால் குதிரையாட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தார்.
சிலப்பதிகார மாதவி ஆடிய மரக்காலாட்டம்
கி.பி .இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில், முன்பு துர்க்கை ஆடிய மரக்காலாடல் ஒன்றாகும்.
சிவன் திரிபுரம் எரித்த உடன் பார்வதியோடு சுடுகாட்டில் ஆடிய ஆட்டம் ‘கொடிகொட்டி’ எனப்பட்டது.
கலைமகன் பிரமன் காணத் தேர்முன் சிவன் ஆடியது ‘பாண்டரங்கம்’ எனப்பட்டது.
கம்சனைத் துவம்சம் செய்த கண்ணன் அவனைக் குத்தி வீழ்த்திய நிகழ்ச்சி ‘அல்லியத் தொகுதி’ எனப்பட்டது.
கண்ணன் தன்னை எதிர்த்த வாணா சூரனை எதிர்த்து அவனைக் களத்தில் வீழ்த்திய செய்தி ‘மல்லின் ஆடல்’ எனப்பட்டது.
கடலில் சூரபதுமனை எதிர்த்து முருகன் போர் தொடுத்தான். அதைச் சித்திரித்துக் காட்டியது ‘துடிக்கூத்து’ எனப்பட்டது.
அவுணரோடு போர் செய்த முருகன் அவர்களை வெற்றி கொண்டு குடைபிடித்து ஆடியது ‘குடைக் கூத்து’ எனப்பட்டது.
வாமணன் பேரூர்த் தெருக்களில் நீள்நிலம் அளந்த திருமால் ஆடிய கூத்து ‘குடக் கூத்து’ எனப்பட்டது.
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தில் மன்மதன் ஆடிய கூத்து ‘பேடிக்கூத்து’ எனப்பட்டது.
அசுரர்கள் தாம் தாங்கிய போர்க் கோலத்தைத் தவிர்த்து ஒடத் துர்க்கை வெற்றி கொண்ட செய்தி ‘மரக்கால் ஆடல்’ எனப்பட்டது.
அதேபோல அவுணரை எதிர்த்துத் திருமகள் வெற்றி கொண்ட செய்தியைச் செப்புவது ‘பாவைக் கூத்து’ எனப் பட்டது.
வாணன் ஊரில் வடக்கு வாயிலில் இந்திராணி வெற்றி கொண்ட செய்தி ‘கடையம்’ எனப்பட்டது.
மரக்கால் ஆடல் தான் பொய்க்கால் நடனம்
துர்க்கையை கொல்ல அவளின் எதிரிகளானவர்கள் கொடிய விஷமிகு பாம்பாகவும், தேளாகவும் உருமாறி வந்த போது, அவர்களை அழிக்க தன் கால்களில் மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடியதாகவும், அந்த கணமான கட்டையினால் தாக்கப்பட்டு அந்த நச்சு உயிர்கள் மடிந்ததாகப் புராணக் கதைகள் வழங்குகின்றன.
பொய்க்கால் நடனம் என்ற பெயரும் துர்க்கை ஆடிய இந்த மரக்காலாடல் என்ற நடனத்தின் பின்புலனே என்பதும் தெரியவருகிறது. அந்த வகையில் இந்நடனம் சேர சோழ பாண்டிய காலத்திலிருந்தே தொன்று தொட்டு வருகிறது எனும் கூற்றினை நாம் உண்மையென கொள்ளலாம்! ஒருவேளை, மராட்டியர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்தப்பின் இந்நடனம் பரவலாக புகழ் பெற்றிருக்கவும் கூடும்
குதிரை வடிவமைப்பு
மூங்கில் தப்பைகளாலும், காகித அட்டையாலும் வடிவமைக்கப்பட்டு, எடுப்பான வர்ணங்களாலும்
பட்டுத் துணிகளாலும் மற்றும் குஞ்சலம் போன்ற அலங்கார பொருட்களாலும் அழகு செய்யப்பட்ட குதிரை கூடே பொய்க்கால் நடனத்துக்கு பிரதானம். இக்கூடினைமாட்டிக்கொண்டு ஆடும் இந்நாட்டியத்தின் சிறப்பே, கலைஞர்கள் பொய்கால்களை தங்கள் காள்களோடு இணைத்துக் கொண்டு ஆடுவதுதான். உற்று கவனித்தால் அப்பொய்க்கால்கள் குதிரையின் குளம்பினை ஒத்திருப்பதை அறியலாம். இதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது!
இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியை பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள்.நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் ஆகும். ஊர்வலம் செல்கிற எல்லா பகுதிகளிலும், கோவிலின் முற்பகுதியும் ஆகும். இந்து சமயக் கோவில் விழாக்களிலும், இசுலாமியர்களின் விழாக்களிலும், கத்தோலிக்கரின் சவேரியார் கோவில் விழாக்களிலும் இவ்வாட்டம் பங்கு பெறுகிறது.
கால்களில் 1.25 அடி உயரமுள்ள கட்டையைக் கட்டிக் கொண்டு, உண்மையான கால்களில் நின்று ஆடாமல், பொய்யான கால்களில் நின்று கொண்டு, குதிரை போன்ற உருவத்தைச் சுமந்து கொண்டு ஆடுதல் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். மேலும் இந்த ஆட்டம் புரவியாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரைப் பகுதியில் காலில் கட்டையைக் கட்டிக் கொள்ளாமல் வெறுங்காலில் சலங்கை கட்டிக் கொண்டு பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஆடும் மரபு உள்ளது. இதனால் இந்த ஆட்டம் “பொய்க் குதிரையாட்டம்” என்று அழைக்கப்படுகிறது.
குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து கால்களில் கட்டையைக் கட்டிக்கொண்டு ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம். இதில் ஆடும் ஆணும் பெண்ணும் ராஜா ராணி போல ஒப்பனை செய்து நடனமாடுவது வழக்கம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை இப்பொய்க்கால் குதிரையாட்டம் முற்றிலும் பொழுதுபோக்கின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. இதில் 1.25 அடி உயரமுள்ள கட்டைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, 30 கிலோவிற்கும் மேலுள்ள எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும் போது ஒரே நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டே ஆடுவர். இதனால் நிற்கும் பொழுதும் ஏதேனும் தூண் அல்லது ஆளைப்பிடித்துத் தான் நிற்க முடியும். பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன் புறம் செல்லுதல், பின் புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே உட்கார்ந்து எழுதல் அனைத்தும் கீழே விழாமல் சமன் செய்து ஆடுவர்
இசைக்கருவிகள்
பொய்க்கால் குதிரை யாட்டத்திற்குக் கோந்தளம் எனப்படும் இரட்டை முகத்தோல் கருவி பக்க இசையாகப் பயன்படுகிறது. மேலும் இரு தவில்கள், இரு நாகசுரங்கள், பம்பை, கிடுகிட்டி போன்ற இசைக் கருவிகள் இவ்வாட்டத்திற்குப் பக்க இசையாகப் பயன்படுகின்றன.
அடவுகள்
பொய்க்கால் குதிரையாட்டத்தில் அரசனும் அரசியும் உலா வருவது போன்ற நிலையில், ஆடுகளத்தைச் சுற்றி அரசனும் அரசியும் கம்பீரமாக மூன்று முறை நடந்து வருவர். ஆண், பெண் இருவரும் தனியாகவும் சேர்ந்தும் அடவுகளை ஆடுவர். காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு 30 கிலோவிற்கும் மேலுள்ள எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும் போது ஒரே நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டே ஆடுவர். இதனால் நிற்கும் பொழுதும் ஏதேனும் தூண் அல்லது ஆளைப்பிடித்துத் தான் நிற்க முடியும். பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன் புறம் செல்லுதல், பின் புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே உட்கார்ந்து எழுதல் அனைத்தும் கீழே விழாமல் சமன் செய்து ஆடுவர். மேலும் குதிரையை அடக்குவது போலவும் செய்வர். இருவரும் நேருக்கு நேர் அடவுகள் செய்தும், வட்டமாகவும் அடவுகளைச் செய்வர். பெண் ஆட்டக் கலைஞர் பல நளினமான கால் அடவுகளைச் செய்வர். மேலும் காலில் அடவுகளைச் செய்து கொண்டு, குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து முன்னும் பின்னும் அசைந்து ஆடுவர்
கொக்கலி ஆட்டம்

“கொக்கலி ஆட்டமென்ற உயரக்கால் ஆட்டத்தில் பொய் கால்களைப் பூட்டி கொக்கின் கால் போல் நீண்ட கட்டையோடு ஆறடி உயரம் வரை ஆகாயத்தில் நின்றாடும்ஆட்டமிது .”
இசைக்கேற்ப ஆண் நடன கலைஞர் பெண் கலைஞரை நோக்கி முன்னேறவும், பெண் கலைஞர் தள்ளி தள்ளி போவதுமாக, பார்ப்போரை மயங்க வைக்கும் அசைவுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந் நடனம் கோயில் திருவிழாக்களில் தேருக்கு முன்பு ஆடப்படுவதாலும்,பொதுமக்களை மகிழ்விப்பதாலும் இஃது “பொதுமக்கள் கலை”யெனவும் வழங்கப்படுகிறது தற்போது மதுரை கோவிந்தராஜ் என்பவர் இக்கலையில் சிறந்து உலகப் புகழ் பெற்றவராக விளங்குகிறார்
இப்படி காலத்தைத் தின்று காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது பொய்க்கால் குதிரை நடனம்.
மலேசிய புரவியாட்டம்
கூடா கேப்பாங் எனும் பெயரில் புரவியாட்டம், மலேசியா, மலாயாவாக அறியப்படுவதற்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது .
கூடா கேப்பாங்
வாலி சோங்கோ என்பவரால் பதினைந்தாம் நூற்றாண்டில் ஜாவாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது இக்கலை. ‘வாலி சோங்கோ” இசுலாமிய மதத்தை பரப்பும் முயற்சியில் பொதுமக்களை கவர்வதற்காகவே,
மிருகங்களின் தோல், மற்றும் மூக்கில்களால் ஆன குதிரை பொம்மைகளை வடிவமைத்து இக்கலையினை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.
இந்த கூடா கேப்பாங் பற்றிய இன்னொரு கதையும் உண்டு.தனது துணையை இழந்த தேவலோக குதிரை ஒன்று, (kuda sembrani) துணையைத் தேடி மத்திய ஜாவா பகுதிக்கு வந்ததாகவும், துணையைத் தேடி கண்டடைந்ததும் ஜோடியாக நடனம் புரிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும், அதன் பின்னரே இக்கலை வெளிப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது
ஒரு குதிரை போல மூங்கில் அல்லது மிருகங்களின் தோலால் உருவமைக்கப்பட்டு, வர்ணங்களால்அழகூட்டப்படும் இந்த பொம்மைகளுக்கு, கால்கள் கிடையாது. இடுப்பின் பக்க வாட்டில் கட்டிக்கொண்டு, ஒரு கையால் அந்த குதிரையை பிடித்தபடியே நடனமணிகள் ஆடுவர்.
பழந்தமிழர் வாழ்வும், கலையும் இயற்கையோடு இணைந்தது என்பதை அறிய பெரு மகிழ்வுதான் ஏற்படுகிறது.
Leave a Reply