(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
அலுவலகத்திலிருந்து திரும்பிய தாமோதரன் ஏதோ ஒரு படபடப்புடனே இருந்தார்.
“மீனா எத்தனை மணிக்கு ஆபீஸிலிருந்து வருவா ” மனைவி சிவகாமியிடம் கேட்டார்.
காபியைக் கொண்டு வந்து அவர் கையில் கொடுத்த படியே சிவகாமி,
“ஏழு மணிக் கெல்லாம் வந்திடுவா; ஏன் என்ன சமாச்சாரம்” எனக் கேட்டார்.
“மீனா வந்திடட்டும், செல்றேன்”
அதற்கு மேல் என்னதான் கேட்டாலும் மனிதர் ஒருவார்த்தையும் உதிர்க்க மாட்டார். அதனால் சிவகாமி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்; இரவு சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைக்கவேண்டும்.
நேற்று இரவு ஏழு மணிக்கு நடந்தவற்றை மீண்டும் நினைவில் ஓட்டிப் பார்த்தாள்.
“அம்மா இப்போ நீங்கள் பார்த்திருக்கற மாப்பிள்ளை வேண்டாம்”
“என்னடி மீனா குண்டைத் தூக்கிப் போடறே”
“இப்போ என்ன நிச்சயமா நடந்திடுச்சு”
“இல்லைதான்,ஆனா அப்பா ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்த்துட்டாங்களே”
“ஜாதகத்துல பார்த்து ஒரு ஆளப்பத்தி முழுசா எல்லாம் தெளிவா சொல்லிடுவாங்களா”
“ரெண்டு பேர் ஜாதகமும் பொருந்துதான்னுதான் சொல்வாங்க”
“அவ்வளவுதானா அம்மா; வேறொன்னும் பார்க்க வேனாமா”
“நீ என்னத்த பார்த்த இப்ப இந்த மாதிரி பேசற”
“நான் எதையோ பார்த்தேன்; எனக்கு இந்த பையன் வேண்டாம்;சொல்லிட்டேன்”
சிவகாமி திகைத்துப் போய் சிலையாகிப் போனாள். ஏதோ நடந்திருக்கனும்; அதான் இந்த குதி குதிக்கறா. இதை எப்படி தன் கணவனிடம் சொல்வது என்பதுதான் அவள் கவலை. எல்லார் வீட்டிலும் இதே கதைதான்; யாரும் அப்பாவிடம் போய் கத்துவது கிடையாது; இதற்கெல்லாம் இளிச்சவாய் அம்மாதான் அகப்படுவாள். அவள்தானே குடும்பத்தில் குடிதாங்கி; இரண்டு பக்கமும் அடிவாங்கும் மத்தளம்.
மீனா தூங்கிய பின் தன் கணவரிடம் தயங்கித் தயங்கி செய்தியைச் சொன்னாள் சிவகாமி. நெற்றியைச் சுருக்கிய படியே தாமோதரன் கேட்டார்; செல்ல மகளை கோபிக்க மாட்டார்.
“சிவகாமி கோபமில்லாமல் தன்மையாகக் கேள்; அப்போதுதான் உண்மைக் காரணத்தை சொல்லுவா”
” ஏன் உங்க செல்ல மகளிடம் நீங்க கேட்க மாட்டீங்களாக்கும்”
“…………….”
தாமோதரனிடம் இதற்கு பதிலில்லை; மகள் மனம் புண்படும்படி பேசமாட்டார். சிவகாமி மட்டும் தனக்குத்தானே முனுமுனுத்துக் கொண்டே படுக்கைக்குப் போனாள். ஆனால் தாமோதரன் மட்டும் காரணம் என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் நெடுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார்; அதிகாலையில்தான் தூங்கியிருப்பார்.
தனக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதை பற்றி மீனா தன் உடன் பணியாற்றும் அமுதாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.”பையனை நீ பார்த்து விட்டாயா, மீனா””இல்லை, ஜாதகம் தான் பார்த்து பொருத்தம் இருக்கிறது என்று அப்பா கூறினார்””அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒருவர்க்கொருவர் பார்த்து மனதுக்கு பிடிக்க வேண்டும்; உருவப் பொருத்தம் வேண்டும்; எண்ணவோட்டத்தில் பொருத்தம் வேண்டும்.””அடேயப்பா, இதெல்லாம் வேற இருக்கா””இன்னொன்னும் இருக்கு””அது என்ன””பையனின் பழக்க வழக்கங்களைப் பற்றின ஆராய்ச்சி””டிடெக்டிவ் எங்கேஜ் பண்ணணுமா””அதெல்லாம் எதுக்கு செலவு ? வேறவழி இருக்கு””அதென்ன வழி””நம்ம மாலாவோட கல்யாணம் எங்கேஜ்மென்ட் ஆனப்புறம் நின்னு போனது தெரியுமில்ல””நல்லாவே தெரியுமே””அது எப்படி நின்னிச்சு; எல்லாம் ஃபேஸ்புக் புண்ணியம்தான். அதில போய் அவனோட ஐடியில தேடினப்ப அவனப்பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சு””என்னா உண்மை” “அவன் பல பெண்களோட தொடர்பிலிருந்தது அவன் ஸ்டேடஸ் அப்டேட்டிலிருந்து வெட்டவெளிச்சமாயிட்டது; அதனால கல்யாணம் நின்னு போச்சு””அப்போ எனக்கு பார்க்குற இந்த பையனைப் பத்தியும் தேடிப் பார்ப்போமா”
தன் அப்பாவுக்கு மெயிலில் வந்திருந்த பையனின் பயோ டேட்டா விபரத்தை பிரிண்ட் எடுத்து, அதை வைத்து ஃபேஸ் புக்கில் தேடினார்கள். நீண்டநேர தேடுதலுக்குப் பின் பையனின் புகைப்படத்துடன் ஒரு ஐ டி கிடைத்தது; அதை லாக் செய்திருந்தான். அவனின் நண்பர்களின் ஐடிக்களை அராய்ந்தார்கள். அதில் ஒருவன் இவனின் ஸ்டேடஸ் படத்தைப் போட்டு அதில் பின்னூட்டம் போட்டிருந்தான். அதைப் பார்த்தவர்கள் அதிர்ந்தே போனார்கள். காரணம் வீட்டில் உள்ள அறையில் பார் செட்டப் செய்து அதன் முன் அமர்ந்து ஊற்றிக் குடிப்பது போன்ற அந்த ஸ்டேடஸ் படத்தை பார்த்ததுதான்.அதன் கீழிருந்த வாசகம் இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது.’மதுவும் மாதுவும் தட்டில்லாமல் தரும்படிக்கு வேண்டினேன்;கண்ணன் தந்தான் எனக்கே’ கண்ணதாசனின் கவிதை வரிகளை எடுத்தாண்டிருந்தான். மேலும் தானும் ஒரு கண்ணதாசனே என்று குறிப்பிட்டு இருந்தான்.இதைப்பார்த்த தோழிகளிருவரும் சிலையானார்கள். மேற்கொண்டு தேடிட தேவையற்றுப் போய்விட்டது; ஒரு சோறு பதமே போதுமென்றானது. இதையெல்லாம் அம்மாவிடமோ, அப்பாவிடமோ மீனா சொல்லவில்லை. இவன் வேணடாம் என்ற ஒற்றைசொல்லை மட்டுமே அம்மாவிடம் சொல்லி வைத்தாள்
மறுநாள் தாமோதரன் அலுவலகம் சென்ற பின்பும் கூட வேலையில் கவனம் செலுத்த முடியாமல்தான் இருந்தார். அலுவலகத்தில் அவரிடம் நெருக்கமாக இருக்கும் பரசுராமனிடம் கூட வழக்கம் போல பேச முடிய வில்லை.
இரண்டு பேருமே நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் ராயப்பேட்டை அலுவலத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். தாமோதரன் தெற்கு மண்டலம்,பரசுராமன் வடக்கு மண்டலம். இரண்டு பேருமே சுப்பரின்டென்டென்ட் பதவியில் உள்ளார்கள்; எல்லா நேரத்திலும் ஒருவருக் கொருவர் ஒத்தாசையாக இருப்பார்கள்; நீண்டநாள் நட்பு.
பதினோரு மணிக்கு கேன்டீனில் டீ , மசால் வடை சாப்பிடும் போதுதான் இன்றைக்கு பேச வேண்டும் என்று தாமோதரன் முடிவு செய்து கொண்டார்;ஆனால் அது நடக்க வில்லை.
கேன்டீனை நோக்கி போகும் போது பரசுராமன் யாரிடமோ பேசியபடி டீ குடிப்பது தெரிந்தது. உற்றுப் பார்த்தால் அது இரண்டுநாள் முன் மீனாவை பெண் பார்க்க வந்த பையன். பார்வையில் பட்டதும் சரேலெனத் திரும்பி தன் இருக்கைக்கு திரும்பிவிட்டார். நல்ல வேளை தூரத்திலிருந்தே பார்த்ததால் அங்கு சென்று அவர்களை சந்திப்பதை தவிர்க்க முடிந்தது. ‘நிச்சயமா என்னைப் பத்தியும் என் பெண்ணைப் பத்தியும் விசாரிக்கத்தான் வந்திருப்பான்.’
தினமும் மதியம் பரசுராமன் வந்து விடுவார்; இரண்டு பேரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.
“இன்றைக்கு தெரிந்தவர் ஒருவர் வந்ததால் டீ டைம்ல சந்திக்க முடியல” பரசுராமன் பேச்சை ஆரம்பித்தார்.
“எனக்கும் வயிறு ஒரு மாதிரியா இருந்திச்சி; மத்யான சாப்பாடு கெடக் கூடாதுன்னு டீக்கு கூட நான் வரலை” தாமோதரன் சமாளித்தார்.
“வந்தது எனக்கு தூரத்து சொந்தக்காரப் பையன். அவனுக்கு பல இடங்கள்லயும் பெண் பார்க்கிறாங்களாம்; அதுல ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஜுனியர் அசிஸ்டென்டா சேர்ந்து நம்ம ஆபிஸ் பேமென்ட செக்சன்ல இருக்கிற கமலாவையும் பேசிக்கிட்டு இருக்காங்களாம்; அதப்பத்தி விசாரிக்க வந்தான். இவனைப்பத்தி யாரும் விசாரிச்சா இவனுக்கு பெண்ணே குடுக்கமாட்டாங்க”
அதிர்ச்சிய வெளிக்காட்டிக்காம, ” அப்படி என்ன கெட்டவனா” எனக் கேட்டார்.
“கெட்டவனில்லை; கேடு கெட்டவன். இவன் கைவிட்டதால ஒரு பெண் தற்கொலையே செய்ஞ்சுகிட்டா; எல்லாரும் சேர்ந்து அத மறைச்சிட்டாங்க; மகா பாவி அவன்”
“நீங்க அப்பறம் என்ன சொன்னீங்க”
“எனக்கும் அந்த டிபார்ட்மென்டுக்கும் தொடர்பில்லை; விசாரிக்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். கையோடு கமலாவையும் பார்த்து அவனைப் பற்றி சொல்லி எச்சரித்து விட்டேன்”
சாப்பிட்டு முடித்து தன்னோட இருக்கைக்கு வந்தும் தாமோதரன் மனக் கொதிப்பு அடங்கவில்லை. ‘ஐயோ எத்தனை பெரிய தப்பு செய்ய இருந்தேன்; நல்லவேளை என் செல்ல மகள் தப்பினாள்’ என்று திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தார்.
மாலை வீட்டுக்கு வந்த கணவனைப் பார்த்த சிவகாமிக்கு ஒன்றும் புரிய வில்லை. காலையில் வேலைக்கு போகும் போது இருந்த மூஞ்சி எப்படி இப்படி தெளிவான மூஞ்சியா மாறியது. மகளின் வருகிற நேரத்தை மனைவியிடம் கேட்டவர் அவள் வருகைக்காக காத்திருந்தார்.
மீனா வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டு இயல்பாக ஆன பின்பு மகளை கூப்பிட்டார்.
“மீனாக்கண்ணு, இந்த பையன் வேண்டாம் , வேற தேடலாம்”
பையனைப் பற்றிய உண்மையைக் கூறினால் அதனால் மீனாவுக்கு அதிர்ச்சி ஏற்படலாம் என்று சொல்லாமல் மறைத்தார்.
மீனா சொன்னாள், ” அப்பா நீங்க எதனால செல்றீங்கன்னு தெரியல; ஆனா அவன் நல்லவனில்ல, அவன் பேஸ்புக் அப்டேட்ஸைப் பார்த்ததுல நல்லாவே தெரிஞ்சிடுச்சு”
தன்னுடைய தர்மசங்கட நிலையிலிருந்து விடுபட்ட தாமோதரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். எவ்வளவு பெரிய ஆபத்து வரவிருந்தது தன் மகளுக்கு.இரவு உணவுக்குப் பின் நடந்தது எதையும் ஜீரணிக்க முடியாமல் படுக்கைக்கு சென்றார்; இன்றைக்கும் தூக்கம் வருமா என்பது கேள்விக்குறியே.
சிவகாமிக்கு மீனா பக்கத்து கேள்விக்கு விடை கிடைத்து விட்டது; தாமோதரன் பக்கத்து கேள்விக்கு மீனா தூங்கிய பின்தான் விடை கிடைக்கும்.
நன்றி
Sent from my iPhone
>
LikeLike