புதிய பாரி

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)

மணிமேகலை  சித்தமருத்துவம்,மூலிகை ஆராய்ச்சி என தன் மாணவர்களுடன்   காட்டுப் பகுதிகளில் போய் அரிய வகை மூலிகைகளை தேடி வருவாள். ஒருநாள் நெடுஞ் சாலையில் இருந்து கீழே காட்டுக்குள் நுழைய இருந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினார்கள். அங்கிருந்துதான் அதிவிரைவு ஆறுவழிச்சாலை  அமைக்க உள்ளார்கள். வனத்திலும், மலையிலும், விளைநிலத்திலும் அந்த சாலை போகிறது; வளமெல்லாம் அழியப் போகிறது. மணிமேகலை கண்களில் ஒரு மின்னல் வெட்டியது.  பட்டுப்போய் பாதி முறிந்திருந்த மரத்திலிருந்து ஒரு முலிகைக் கொடி பக்கத்தில் இருந்த மரத்தின் மீது படர்ந்திருந்தது. அந்தோ பரிதாபம் அந்த மரம் வெட்டப்படவேண்டும் என்ற குறியீடு செய்யப் பட்டிருந்தது; ஒரு கோடாரியும் அங்கிருந்தது. இதைப்பார்த்த மணிமேகலை தன்னையே அந்த கொடியாகப் பாவித்து வேதனை வசப்பட்டாள்.

மணிமேகலைக்கு ஐந்து வயதிருக்கும் போது எட்டு வயது அத்தை மகன் சின்னதம்பியுடன்  திருமணம் நடந்தது. புதுப் பட்டுப் பாவாடை சட்டையும், நகைகளும் அவளுக்கு மகிழ்ச்சியை வாரிக் கொடுத்தது; எல்லா சொந்தங்களும் அவளுக்கு சந்தனம் பூசி குங்குமம் இட்டார்கள்.

“இதெல்லாம் எதற்காக பாட்டி” ஒன்றும்  புரியாதவளாக பாட்டியைக் கேட்டாள்.

” உனக்கு இப்போ சொன்னா புரியாதுடா மணி; நான் பொறுமையா அப்பறம் சொல்றேன்” என்று பாட்டி பதில் சொன்னாள். திருமணத்தில் கட்டிய தாலியை ஒரு நகை என்ற அளவிலேயே அணிந்து கொண்டிருந்தாள்.

ஆற்று வெள்ளத்தில் சின்னத்தம்பி அடித்துச் செல்லப்பட்டதால் தன் எட்டாவது வயதில் வயதுக்கு வராமலேயே மணிமேகலை விதவையானாள்.

முற்போக்கு சிந்தனையுள்ள ஒரு உறவினர்  போராடி அவளை படிக்க அனுப்பினார். அவர் புண்ணியத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டாள். 

பொட்டில்லை, மஞ்சளில்லை, பூ இல்லை, வளையலில்லை என்பதற்கான காரணம் அவளுக்கு இப்போது நன்றாகவே தெரிந்திருந்தது. 

அவள் கற்ற கல்வி அவளுக்கு அவ்வூரில் இருந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை வாங்கித்தந்தது. கல்வி புகட்டும் வேலையை அவள் செய்து கொண்டிருக்கும் போது காலம் அவளுக்கு காதல் புகட்டிக் கொண்டிருந்தது. ஆமாம், இல்லத்தை ஆரம்பித்து நடத்திவந்த இளைஞனின் நற்குணங்கள் அவளை ஈர்த்தது. ஒருநாள் இருவரையும் மாலையும் கழுத்துமாகப் பார்த்த ஊர்மக்கள், “கலி முத்திப் போயிடுச்சு” என்று பேசினார்கள். சாதி, சம்பிரதாயம், சமூகக் கட்டுப்பாடு காக்க அவதாரம் எடுத்த சிலரால்  அந்த இளைஞன் கொல்லப்படவே அநாதையான மணிமேகலை இல்லத்தின் பொறுப்பை ஏற்றாள்.

‘ ஆண்கள் எல்லாரும் வள்ளல் பாரியாக இல்லாதவரை பெண்கள் கொடிகளாக இருப்பதில் பயனில்லை ‘ என்பாள்.

“தம்பிகளா, ஆண்கள் மட்டுமே சமுதாயம் இல்லை; அது போல  மரங்கள் மட்டுமே காடு இல்லை; இந்த செடி, கொடிகள், இங்கு வாழும் ஜீவராசிகள் எல்லாமும் சேர்ந்ததுதான் காடு” 

“அம்மா, இந்த மரங்களை வெட்டும் போது இதில் சுற்றியிருக்கும் கொடி அழிந்து விடுமே”
” வெட்டும் மரங்களுக்கு ஈடாக வேறு மரக் கன்று நடுவது போல கொடிகளுக்கு நடமாட்டார்கள்.
சமுதாயத்தில் நலிந்தவர்களை ஆதரிக்க இயக்கங்கள் உள்ளது போல நாம் இந்த ஆதரவற்ற கொடி செடிகளை காக்கும் இயக்கம் தொடங்குவோம்” 

“எப்படி  அம்மா”

“இந்த கொடியை வேரிலிருந்து அரையடி விட்டு நறுக்கி எடுத்து செல்வோம்;கொடியை சிறு சிறு துண்டுகளாக்கி பதியம் நட்டு பல கொடிகளை உண்டாக்குவோம். இந்த அரிய மூலிகையை பலருக்கும் கொடுத்து வீட்டுக் கொல்லையில் வளர்க்கச் சொல்வோம்”

படர்வதற்கு கொம்பில்லாத போது கொடியைக் காக்க இம்மாதிரி புதிய பாரிகள் உதயமாவார்கள்.

2 thoughts on “புதிய பாரி

Add yours

    1. கமென்ட்ஸ் வாங்குவது உண்மையில் மகிழ்ச்சியே.

      Like

Leave a reply to நடராஜன் Cancel reply

Create a website or blog at WordPress.com

Up ↑